உணவும் உடல்நலமும்
பொதுவான அறிவுரைகள்:
௧} காலை எழுந்தபின் காலைக்கடன்கள் முடிந்தபின் காலை உணவை உண்டுவிடவும். எழுவதற்கும் உணவு உட்கொள்வதற்கும் இடையே வேறு எதையும் கொறிக்கவோ (நீர் உட்பட எதையும்) குடிகவோ வேண்டாம்.
௨} காப்பி, கொக்கோ கலந்த உணவுகள், மது, மிகச் சூடான உணவுகளை தவிர்க்கவும். தேநீரைக் குறைத்துக்கொள்ளவும். மிகச் சூடான உணவுகளை வாய் தாங்கினாலும் வாய்க்கும் இரைப்பைக்கும் இடையே இருக்கும் உணவுக்குழாயால் பலநேரம் தாங்கிக்கொள்ள முடியாது.
௩} ஒவ்வொரு முறை உணவு உண்ட ஐந்து நிமிடத்துக்குப் பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயோ அலுவலகத்திலோ வேளியேவோ மிதமான வேகத்தில் நடை பயிலவும். (வேக நடையோ மெல்ல நடையோ வேண்டாம்). நடையானது உங்கள் உணவுச் செரிமானத்தை இயற்கையாகவே சீராக்கும். அப்படி நடக்கும்போது ஏப்பங்கள் வருவதை உணர்வீர்கள். இந்த நடைப் பயில்தலானது வேறுபல வகையிலும் உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
௪} உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரோ பின்னரோ மட்டுமே நீர் அருந்துங்கள். உண்ணும்போது நீர் அருந்துவதை தவிர்க்கவும். தேவைப்பட்டால் ஒன்றிரண்டு மடக்குகள் அருந்தலாம். பொதுவாகவே எந்தவேளையிலும் நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். இது இரைப்பை அமிலத்தை நீர்த்துப்போகச்செய்துவிடும். உண்ணும் உணவானது சீராகச் செரிமானமாக இரைப்பையில் இயற்கையாக ஊறும் நீர்மமாகாத (ஐதரோகுளோரிக்) அமிலம் நிறையத்தேவை. தாகத்தின்போது நீர் அருந்தியே ஆகவேண்டும். மேலும் ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தபிறகு ஒரு குவளை நீர் அருந்தலாம்.
௫} எண்ணையில்/பிறகொழுப்புகளில் பொரிக்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும்.
௬} நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும். அதிலும் இனிப்புகளை நொறுக்குத்தீனிகளாக உண்பதைத் தவிர்க்கவும். வேண்டுமென்றால் உணவொடு சேர்த்து அளவான நொறுக்குத்தீனிகளை உண்ணலாம். வெறுமனே நொறுக்குத்தீனி மட்டும் உண்ண நேர்ந்தால் 20 நிமிடம் நடக்கவும்.
௭} 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்தே இருக்கவேண்டாம். அப்படி இருக்க நேரிட்டால் இடையிடையே எழுந்து கழுத்தை கையை முதுகை அசைந்துத் திருப்பி நடந்தபின் அமரவும்.
௮} படுப்பதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு முன்பே உணவு அருந்திவிட்டு நடக்கவும் செய்திருக்கவேண்டும்.
௯} படுக்கும்போது இடதுபக்கமாகச் சரிந்தோ நிமிர்ந்தோ படுக்கவும். வலது பக்கமாகச் சரிந்தோ வயிறு அமுங்கியபடி கவிழ்தோ படுக்கவேண்டாம்.
௰} எந்த வகையான உடல்நலச் சிக்கலுக்கும் கை மருத்துவத்தை மட்டும் நம்பியிராமல் மருத்துவரை அணுகி பரிந்துரைகளைப் பெறவும்.