Sunday, March 14, 2021

தமிழ் இலக்கியத்தில் கணக்கு -- வட்டம் 

தமிழ் இலக்கியத்தில் கணக்கு - வட்டம் 



குறிப்பு:-
தமிழ் எண்கள்: 0-௦ ; 1-௧ ; 2-௨ ; 3-௩ ; 4-௪ ; 5-௫ ; 6-௬ ; 7-௭ ; 8-௮ ; 9-௯ ; 10-௰ ; 100-௱ ; 1000-௲ 
விட்டம் ➔ `வி`  
ஆரம் ➔ `ஆ` 


வட்டத்தின் சுற்றளவு:

விட்டமோர் ஏழு செய்து 
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின் 
திகைப்பன சுற்றுத்தானே
                       - காக்கைப் பாடினியம்?? 

விட்டம் ஓரேழு செய்து ➔ `வி × ௧ / ௭` 
திகைவர நான்கு சேர்த்து ➔ `வி + ௪ × வி / ௭ `
குறிப்பு: திகைவரம் = விட்டம் 
சட்டென இரட்டி செயின் ➔ `௨ × ( வி + ௪ × வி / ௭ )` 
➔ ` ௨ × வி + ௮ × வி / ௭` 
➔ `( ௧௪ × வி + ௮ × வி ) / ௭ 
➔ `௨௨ / ௭ × வி`

இதுவே தற்போது வழங்கப்பட்டுவரும்  சுற்றளவுக்கான சூத்திரமான  `π × வி` அல்லது `π × ௨ × ஆ` ஆகும் 

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அழகான கணக்குச் செய்யுளானது 'காக்கைப் பாடினியம்' எனும் நூலில் வருவதாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 'காக்கைப் பாடினியம்' எனும் நூலானது முழுமையாகக் கிடைக்கபெறாத யாப்பிலக்கணச் சங்கத்தமிழ் நூல் எனத் தெரிகிறது . இணையத்தில் இச்செய்யுளைப் பற்றித் தேடிப்பார்த்தமட்டில் தரமான சான்றுகள் எதுவும் கிட்டவில்லை. 

எளிமைப்படுத்துதல்:- 

மேலே காக்கைப்பாடினியத்தில் உள்ளது துல்லியமான கணக்குக்குப் பொருந்தும். ஆனால் அன்றாடப்.பொறியியலில் இவற்றை பயன்படுத்த இந்த அளவையும் எளிமையாக்கி கூறுகிறது, கொறுக்கையூர் காரி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் இயற்றிய, 'கணக்கதிகாரம்' எனும் நூல்.

அப்பாடல்:- 

விட்ட மதனை விரைவா யிரட்டித்து 
மட்டு நான்மா வதினில் மாறியே - எட்டதினில் 
ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும் 
தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்
                        - கணக்கதிகாரம் (௫௦)
இதன்படி, 
 விட்டம் அதனை விரைவாய் இரட்டித்து ➔ `௨ × வி` 
மட்டு 'நான்மா'வதினில் மாறியே(பெருக்கல்) ➔ `௨ × வி × ௧ / ௫` 
குறிப்பு: நான்மா = `௧ / ௫` 
எட்டதினில் ஏற்றியே(பெருக்கல்) ➔ ௨ × வி × ௧ / ௫ × ௮` 
➔ வி × ௧௬ / ௫
➔ `௩.௨ × வி` ≈ `௨௨ / ௭ × வி` ஆகும்.  

நடைமுறை:-

வண்டித் தச்சர்கள் அச்சாணி செய்ய பயன்படுத்தப்படும் அளவையின் படி, விட்டத்தை மூன்றில் அரைக்கால் சேர்த்து அதை விட்டத்தோடு பெருக்கிக் கொள்கின்றனர். 
குறிப்பு: அரைக்கால் = `௧ / ௮` = ०.௧௨௫) 
இதன்படி, ( ௩ + ०.௧௨௫ ) × வி = ௩.௧௨௫ × வி ஆகும். 

இவை அனைத்தையும் ஒப்புநோக்கினால் துல்லியக் கணக்கிற்கும் நடைமுறை கணக்கிற்கும் தமிழர் பாகுபடுத்தி கணக்கியல் தந்ததனை அறிந்து கொள்ளலாம். 

வட்டத்தின் பரப்பளவு:- 

வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க 
சட்டெனத் தோன்றுங் குழி.
                     - கணக்கதிகாரம் (௫௬ - ௪௯)  
இதன்படி,,
வட்டத்தரை (அரைச்சுற்றளவு) = `( ௨௨ / ௭ × வி ) / ௨` 
விட்டத்தரை (அரைவிட்டம் = ஆரம்) = `வி / ௨` 
இதன்படி, 
வட்டத்தின் பரப்பளவு = `( ௨௨ / ௭ × வி / ௨ ) × ( வி / ௨ )` 
➔ `௨௨ / ௭ × வி ^ ௨ / ௪` 
➔ `௨௨ / ௭ × ௪ × ஆ ^ ௨ / ௪` 
➔ `௨௨ / ௭ × ஆ ^ ௨` 

Tuesday, March 2, 2021

மணிமேடை


நாகர்கோவிலின் மணிமேடையும் கடிகாரமும். . 

இக்கருப்புவெள்ளைப் படத்தில் நீங்கள் பார்ப்பது 1894ம் ஆண்டு வெளிவந்த செய்தி. . 

குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னரான திருமூலம் திருநாள் இராமவர்மாவின் ஆட்சியின்போது, கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அமைக்கப்பட்டு, இன்றும் தன் பழமையை பறைசாற்றி நிற்கும், சிறந்த கட்டுமானங்கல் மூன்று. அவை:- 

௧) சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் கோபுரம் (1888) 

௨) நாகர்கோவில் மணிமேடை (1893) 

௩) பேச்சிபாறை அணைக்கட்டு (1906) . 

சுசீந்திரம் கோவில் கோபுரம் முழுமையாக கட்டி முடித்து ஐந்து ஆண்டுகளில், நாகர்கோவில் மணிமேடை கட்டி முடிக்கப்பட்டது. 1852ல் திட்டமிடப்பட்டு, 1894ல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 1906ல் கட்டி முடிக்கப்பட்ட பேச்சிபாறை அணைக்கட்டின் வடிவமைப்பில் ஈடுப்பட்ட ஐரோப்பிய பொறியாளர்களான கேப்டன் ஆர்சுலி மற்றும் ஆசியார்ப் ஆகியோரே, மணிமேடை வடிவமைப்பை உருவாக்கியவர்கள். . 

1893ல் நாகர்கோவிலுக்கு வருகை தந்த திருவாங்கூர் மன்னர் திருமூலம் திருநாள் இராமவர்மாவுக்கு சிறந்த வரவேற்பு அளித்து, ஊருக்கென்று ஒரு கடிகாரமணிமேடை அமைக்கவேண்டும் என அப்போதைய பெருமக்கள், எழுப்பிய கோரிக்கையின் விளைவே இந்த மணிமேடை. நாகர்கோவில் மிசனரியை சேர்ந்த சேம்சு டதி, திருவிதாங்கூர் அரசுப் பொறியாளர்களான ஆர்சுலி மற்றும் ஆசியார்ப், திருவாங்கூர் அரசதிகாரிகளான ஆர். கிருஷ்ணன், இரத்தினசுவாமி ஆகியோர் அடங்கிய மணிமேடை அமைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. . 

சேம்சு டதியின் மனைவி துவக்கியிருந்த டதி மிசனரி பள்ளிக்கூடத்திற்கென்று, இங்கிலாந்திலுள்ள டெர்பி நகரத்தைச் சேர்ந்த சான் சுமித் & சன்சு எனும் நிறுவனத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட கடிகாரமானது, மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்காக மணிமேடையில் பொருத்தப்படத் திட்டமிடப்பட்டது. மணிமேடைக்கு கடிகாரத்தை வழங்கிடும்போது, அது நாகர்கோவிலிலுள்ள கல்கோவில் தேவாலயத்தை நோக்கிய திசையில் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, தேவாலயத்துக்கு வழிபட வருவோர்க்கு பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக டதி தெரிவித்திருந்தார். மணிமேடை மற்றும் கடிகாரத்துக்கு மொத்தமாகத் தேவைப்பட்ட 3258 ரூபாய், 9 சக்ரம், 12 காசு என்பதில், கடிகாரத்தின் விலையான 1117 ரூபாயை மன்னரும் 164 ரூபாயை சேம்சு டதியும் மீதமுள்ள தொகையான 1977 ரூபாய், 9 சக்ரம், 12 காசை பொதுமக்களிடமும் நன்கொடையாக பெறப்பட்டது. . 



அன்று பெரிய கட்டிடங்கள் ஏதும் கல்கோவிலுக்கும் மணிமேடைக்கும் இடையே இருந்ததில்லை. கடிகாரத்தின் மணியோசையானது அன்று மூன்று கிமீ சுற்றளவு வரைக்கும் கேட்கும். கே கே குருவிலாவின் மேற்பார்வையில் மணிமேடையும் கட்டப்பட்டு அதில் கடிகாராமும் பொருத்தப்பட்டது. அதன் பணிகள் 1891 சூலையில் துவங்கி 1893 பெப்ருவரி 15 தேதி மன்னர் திருமூலம் திருநாள் இராமவர்மாவால் திறக்கப்பட்டது. மன்னரை மரியாதை செய்யும்வண்ணம் மணிமேடையில் RV (இராமவர்மா) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. . 

மணிமேடையில் பொருத்தப்பட்ட கடிகாரத்தினுள், கப்பியில் தொங்கும் 60 அடி நீளமுள்ள சங்கிலியில் பளு பொருத்தப்பட்டு, அதன் இழுவிசையானது பல் உருளிகளை நகர்த்துவதனால் இயங்கும் தன்மை கொண்ட புவியீர்ப்பு விசைக் கடிக்ரமாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. பத்மநாபபுர அரண்மனை முகப்பின் மோட்டில் இருக்கும் கடிகாரமும் இதே தொழிநுட்பத்தில்தான் இயங்குகிறது. . 

1893ல் மணிமேடையைச் சுற்றி எந்த சாலையும் கிடையாது. மணிமேடையின் மேற்குப் பகுதியில் ஆண்டியப்பன் குண்டு என்ற குளம் இருந்தது. மணிமேடையின் வடமேற்கு பகுதியும் குளமிருந்த பகுதியும் இணைந்து அனந்த சமுத்திரக் கிராமம் என்று அழைக்கப்பட்டது. இன்று இப்பகுதி நாகர்கோவில் கிராமம் என அழைக்கப்படுகிறது. 1920ல் குளம் நிரப்பப்பட்டு அப்பகுதியில் 1930ல் கோல்டன் தியேட்டர் எனும் திரையரங்கம் தொடங்கப்கப்பட்டது. அப்பகுதில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. மணிமேடையின் கிழக்கு பகுதியானது என்றுமே ஒரு குடியிருப்புப் பகுதியாகும். தென்கிழக்கு பகுதில் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டது. அது இப்போது நகர அஞ்சல் நிலையமாக உள்ளது. அதன் அருகில் அமைந்திருந்த குதிரை நிலையம் 1955 வரை இயங்கியது. அதன் அருகில், திருநெல்வேலி செல்லும் கணபதி, பயோனியர் என்ற தனியார் பேருந்துகள் நிற்கும் நிலையமானது 1913ல் இருந்து இயங்கியது. . 

மணிமேடையைச் சுற்றி மெல்லமெல்ல தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியதால் கோட்டாறை விட இப்பகுதி முதன்மை பெறத்தொடங்கியது. இதன் விளைவாக நாகர்கோவில் ஒரு நகரமாக பரிணமிக்கத் தொடங்கியது. 1900களில் மணிமேடையைச்சுற்றியுள்ள பகுதிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியிருந்தன. அப்பகுதி கோடை காலத்திலும் குளிர்ச்சியாகவே இருந்ததால் ஐரோப்பியர்கள் இப்பகுதியில் கல்விநிறுவனங்களையும், தேவாலயங்களையும், அவர்களின் குடியிருப்பையும் அமைத்தனர். திருவிதாங்கூர் அரசு, நீதிமன்றத்தையும் அமைத்தது. திருவிதாங்கூர் அரசால் இராமவர்மபுரத்தில் கோடைகால மாளிகை ஒன்று அமைக்கப்பட்டது. . 



14-7-1972ல் மணிமேடையின் அரகில் கலைவாணர் சிலை நிறுவப்பட்டது. 127 ஆண்டுகளுக்கு மேலாக இம்மணிமேடையானது, ஊரின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாக இருப்பதனால், நாகர்கோவில் மாநகரச் சின்னத்திலும் இது இடம்பெறுகிறது.

 

 ஃ ! .. ஃஃ ! 

ழந்தமிழர்கள், .அஃகேனம் எனப்படும், தமிழின் சிறப்பெழுத்தான ஆய்தத்தை, எந்த அளவுக்கு பயன்படுத்ததிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது, நாம் அதனை முறைப்படி தெரிந்துவைத்துக்கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்ச்சியோடான ஐயமும் ஏற்படுகிறது. சில காட்டுகளைப் பார்ப்போம்: . 

௧} யாப்பருங்கலக் காரிகையில்:

கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச், 
சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை, 
எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர், 
வெஃஃகு வார்க்கில்லை வீடு, 
விலஃஃகு வீங்கிரு ளோட்டுமேமாத ரிலஃஃகு முத்தினினம் . 

௨} திருக்குறளில்:- 

அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும், வெஃகி வெறிய செயின் . 

௩} சில சொற்களும் அதன் பொருள்களும்:- 

அஃகல் = சிறிதாதல் / வறுமை / குறைதல் / குறுகுதல் / நெருங்குதல் 

அஃகி = நுண்ணியதாய் 

அஃதை =  ஏதிலி / சோழமகள்

அஃகம் = கூலம் (எ.கா: அரிசி, உளுந்து, கோதுமை)

அஃகரம் = வெள்ளெருக்கு

அஃகு = ஊற்று[நீர்] 

அஃகுல்லி = உக்காரி/உக்காரை எனும் தின்பண்டம்

அஃகுள் = அக்குள் 

அஃகேனம் = ஃ, ஆய்தம் 

அஃகாத = வற்றாத / குறையாத / மாறாத 

அஃகாவே = அகன்றோடி

அஃறிணை = மாந்தரல்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருள்களும் (அல்+திணை)

இஃகுதல் = இழுத்தல் 

எஃஃகு / எஃகு = போர்க்கலன் / வேல் / இரும்பு_உருக்கு 

எஃகம் = கூர்மை [யான போர்க்கலன்] 

எஃறு = ஈறு / பல் (யானை, காட்டுப்பன்றி கொம்பு/வெளிப்பல்) / ஈறுநிறம் (வெளிர்சிவப்பு) 

ஒஃகல் = ஒதுங்கல் / பின்வாங்குதல் 

கஃசு = கைசா அ| கால் பலம் = ~10.2 கிராம். (பழந்தமிழ் அளவை முறை) 

கஃடு = கள் 

கஃஃறு / கஃறு = கறுத்தது 

கஃபு = கிளை

கஃது = ? 

சஃகுல்லி = ஒரு சிற்றுண்டி வகை 

சுஃஃறு / சுஃறு = பனை ஓலை எரியுப்போது ஏற்படும் ஒலிக்குறிப்பு 

பஃது = பத்து 

பஃறி = படகு / காட்டுமரம் 

பஃதி = பகுதி 

பஃறலை / பஃறாழ் / பஃறுளி .= பல + (தலை / யாழ் / துளி)  - குமரி மாவட்டத்தில் ஓழுகிச்செல்லும் ஒரு ஆற்றின் பெயர் பஃறுளி அ| பறளி

மஃகி = ? 

வெஃஃகல் / வெஃகல் = விரும்புதல் / பேராசைப்படுதல் 

வெஃகா = காஞ்சிபுரம் 

[அ/இ/உ/ஒ/ம/ய/வ/ல/ற/ன]ஃகான் = [அ/இ/உ/ஒ/ம/ய/வ/ல/ற/ன]கரம்

இன்றளவில், அஃகேனமானது, தமிழின் அடிப்படைப் பயன்பாட்டுக்கு அல்லாது, பிற மொழிச் சொற்களை தமிழில் ஒலிபெயர்ப்பதற்கான ஒரு குறியீடாக, இலக்கண வழுவலாய், தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. காட்டு: ஃப 

அஃகேனத்தை தன்னுள் கொண்டுள்ள சொற்களை, எடுத்துக்காட்டுகளாக இல்லாமல், வாக்கியங்களிலேயே, மாணவர்களுக்கு சிறு அகவை முதலேயே அறிமுகப்படுத்தி அவற்றை பொதுப்பயன்பாட்டுக்குள் மெல்லமெல்ல கொண்டுவரவேண்டும்!..

தமிழ்ச்சொல்லாய்வு பேசுபுக்கு.குழுவில் திரு கு.இராமகிருட்டினன், அது-அஃது பற்றியான கீழ்காணும் செய்தியை பகிர்ந்திருந்தார்.

ஒரு, ஓர் எனுஞ்சொற்கள் பயன்படுவதைப் போன்று அது, அஃது முதலாய சொற்கள் எழுதப்படும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை. காரணமென்னவென்றால், அறியாமையும் விழைவின்மையும். முற்காலத்தில் தவறாது பயன்படுத்தினர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் அவர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் தவறாது பயன்படுத்தினர். இன்னும் தமிழறிஞர் சிலர் எழுதுகின்றனர்.

அது என்பது முற்றியலுகரம்.அஃது என்பது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம். ஆனால் இரண்டுக்கும் பொருள் ஒன்றே. இரண்டும் சுட்டுகள். ஆனால் பயன்படுத்தும் முறை வெவ்வேறு.

''முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான'' (தொல்.எழு.423, குற்றிய்.18)

அல்வழியில் உயிரெழுத்துக்குமுன்பு அஃது, இஃது, உஃது, எஃது எனவாகும் அஃது அணில், ஆடு. இலை என்றும் இஃது அணில். உலகம், ஓடம் என்றும் எஃது ஆறு, ஈ. ஏரி, ஒட்டகம் என்றும் ஆகும்.

'' ஏனைமுன் வரினே தானிலை யன்றே (தொல்.எழு.424. குற்றிய. 19)

உயிரல்லாத எழுத்து வந்தால் இயற்கை ஆகும். அது மாடு, இது வீடு, உது பசு, எது தோட்டம் எனவாகும்.

''அது'' வேற்றுமையில் உயிரோடு புணரும்போது அதை(குற்றியலுகரம்போல்)அல்லது அதனை, அதால்,அதனால்..... என்று புணரும். இவ்வாறே மற்றச்சுட்டுகளான இது,உது( இப்போது வழக்கத்தலில்லை) என்பனவும் புணரும். வினாவான எது என்பதுவும் இவ்வாறே புணரும்.

யாதெ னிறுதியும் சுட்டுமுத ஆகிய வாய்த விறுதியும் உருபிய னிலையும் (தொல்.எழு. 422. குற்றிய 17)

''அஃது'' உயிரோடு புணரும்பொழுது , குற்றியலுகரமாதலின், உகரம் கெட்டு, ஆய்தம் கெட்டு அன் பெற்றுப் புணரும். அதன், அதனை எனவாகும். அதன் கோடு, இதன் கோட்டம், யாதன் கோடு எனவாகும்.

படிக்க:-

* https://valavu.blogspot.com/2009/07/blog-post.html?m=1



பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...