Friday, March 1, 2024

பாலு

 பாலு


"நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே
உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."

 அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்படியான வரிகள் மிக மெல்லிதாக ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்படிப்பட்ட பாடல் வரியை முதன்முதாய்க் கேட்கிறேன்.. ஏதோ புதுப்பாடல் என எண்ணிக்கொண்டிருக்கும்போதே "ஒற்றைமுறைக் கடவெண்?" என்றார் ஓட்டுனர்.  திறனியை துழாவி 6790 என்று "காற்பதனி எனக்குத் தேவையில்லை.  உங்களுக்கு வேண்டாமென்றால் அணைத்துவிடுங்கள்" என்று நான் கூறுவதற்குள்..

"உன்னைத்தாண்டி வாவா வெளியே
உன்மீ தெனக்கேன் கோபம் பெண்ணே..."

என்ற வரிகளும் தெளிவ்க மிக மெல்லியதாகக் கேட்டது.. என் உள்ளம், 'யாரிந்த கவிஞர்? இவ்வளவு கொசாசைத்தமிழில் பாடலை எழுதியுள்ளார். அந்த வரிகளை செந்தமிழிலேயே அழகாக எழுதியிருக்கலாமே..' என்றெல்லாம்  அசைபோடத்தொடங்கியிருந்தது.  வண்டி அசோக்நகர் வளைவில் சல்லெனத் திரும்பியதில் அந்நினைவுகளிலிருந்து மீண்டும் இயல்நினைவுக்கு வந்தேன்.. 

"உனை நித்தம் நினைக்குமென் தலைமேலே
உன் காதல் தீயை வைத்தாயே.."

ஆமாம், பாடுவது யார்? அப்படியே பாலு போலவே பாடுகிறாரே.  யாராக அருக்கும்? ஆ, அவரது மகன் சரண்.  அருமையாகப் பாடுகிறாரே.. ஓட்டுனரிடம் "ஒலியளவை சற்று கூட்டிடுங்கள்" என்றேன்..

"நாள் காட்டித் தாளாய் எனைக் கிழித்தாலும்
நான் வாழ்த்துப் பாடுவேன் கண்ணே.."

ச்ச.. அப்படியே அப்பாவின் குரலிலேயே இம்மியளவும் பிசகாமல் பாடியுள்ளாரே.. அருமை, அவரின் திறமையில் நல்ல முன்னேற்றம்.  முன்னொரு முறை ஒரு நேர்காணலில் தனது மகனைப்பற்றி பாலு கூறிடும்போது, "அவர் இன்னும் நிறைய பயிற்சிபெறவேண்டும்.  பாடும்போது அவருக்கு கவனகுறைவு இருக்கிறது.  சிலநேரம் அதிரவலை பிறழலும் ஏற்பட்டுவிடுகிறது.. இன்னும் இன்னும் கவனம் தேவை...".  ஆமாம், அதை நானும் சில மேடைநிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன்.  அப்போது இப்பாடலை...

"என் காதல் பற்றி என்ன சொல்ல
அந்த நினைவே என்னை மெதுவாய்க் கொல்ல..."

இது நம்ம பாலுவே தான்..  பாலுவே தான்..  பாலுவே தான்..  அனைவரையும் ஏங்கவைத்துவிட்டு இப்படிச் செத்துப்போயிட்டியேடா..  பெருந்தொற்றில் எவன் வேணுன்னாலும் செத்துப்போயிருக்கட்டும், ஆனா நீ...

"நான் மண்ணுக்குள்ளே போகும் முன்னே
என் காதல் மேய்தான் சொல் என் கண்ணே..."

என் கண்கள் இரண்டும் என்னை அறியாமல் குளமானது.  கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.  வரிகளின் பொருள்களை அதன்பிறகு நான் கவனிக்கவே இல்லை.  அந்த முழங்கும் குரலும் சிரித்த முகமும் அகவை பாராது அனைவரிடமும் பணிவோடுப் பழகும் பண்பும் தொலைக்காட்சிகளில் வரும் பாட்டுப்போட்டிகளில் அக்குழந்தைகளை அன்போடு ஊக்குவிக்கும் அழகும்... நல்ல மாந்தர்.. 
வண்டி வீட்டருகே வந்திருந்தது.  பணத்தை கொடுத்துவிட்டு வீட்டைநோக்கி நடக்கலானேன். என் கண்ணில் மீண்டும் ஈரம். மெதுவாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டே நடந்தேன்..

"என்னை விட்டு எங்கே நீ சென்றாய்
என்னுள் கொண்ட காதலை நீ கொன்றாய்..."

இசை: ஆரிசு செயராசு
வரிகள்: கபிலன்
திரைப்படம்: தேவ் (2019)
குரல்: சி.ப.பாலசுப்பிரமணியம்




பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...