Friday, March 1, 2024

பாலு

 பாலு


"நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே
உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."

 அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்படியான வரிகள் மிக மெல்லிதாக ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்படிப்பட்ட பாடல் வரியை முதன்முதாய்க் கேட்கிறேன்.. ஏதோ புதுப்பாடல் என எண்ணிக்கொண்டிருக்கும்போதே "ஒற்றைமுறைக் கடவெண்?" என்றார் ஓட்டுனர்.  திறனியை துழாவி 6790 என்று "காற்பதனி எனக்குத் தேவையில்லை.  உங்களுக்கு வேண்டாமென்றால் அணைத்துவிடுங்கள்" என்று நான் கூறுவதற்குள்..

"உன்னைத்தாண்டி வாவா வெளியே
உன்மீ தெனக்கேன் கோபம் பெண்ணே..."

என்ற வரிகளும் தெளிவ்க மிக மெல்லியதாகக் கேட்டது.. என் உள்ளம், 'யாரிந்த கவிஞர்? இவ்வளவு கொசாசைத்தமிழில் பாடலை எழுதியுள்ளார். அந்த வரிகளை செந்தமிழிலேயே அழகாக எழுதியிருக்கலாமே..' என்றெல்லாம்  அசைபோடத்தொடங்கியிருந்தது.  வண்டி அசோக்நகர் வளைவில் சல்லெனத் திரும்பியதில் அந்நினைவுகளிலிருந்து மீண்டும் இயல்நினைவுக்கு வந்தேன்.. 

"உனை நித்தம் நினைக்குமென் தலைமேலே
உன் காதல் தீயை வைத்தாயே.."

ஆமாம், பாடுவது யார்? அப்படியே பாலு போலவே பாடுகிறாரே.  யாராக அருக்கும்? ஆ, அவரது மகன் சரண்.  அருமையாகப் பாடுகிறாரே.. ஓட்டுனரிடம் "ஒலியளவை சற்று கூட்டிடுங்கள்" என்றேன்..

"நாள் காட்டித் தாளாய் எனைக் கிழித்தாலும்
நான் வாழ்த்துப் பாடுவேன் கண்ணே.."

ச்ச.. அப்படியே அப்பாவின் குரலிலேயே இம்மியளவும் பிசகாமல் பாடியுள்ளாரே.. அருமை, அவரின் திறமையில் நல்ல முன்னேற்றம்.  முன்னொரு முறை ஒரு நேர்காணலில் தனது மகனைப்பற்றி பாலு கூறிடும்போது, "அவர் இன்னும் நிறைய பயிற்சிபெறவேண்டும்.  பாடும்போது அவருக்கு கவனகுறைவு இருக்கிறது.  சிலநேரம் அதிரவலை பிறழலும் ஏற்பட்டுவிடுகிறது.. இன்னும் இன்னும் கவனம் தேவை...".  ஆமாம், அதை நானும் சில மேடைநிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன்.  அப்போது இப்பாடலை...

"என் காதல் பற்றி என்ன சொல்ல
அந்த நினைவே என்னை மெதுவாய்க் கொல்ல..."

இது நம்ம பாலுவே தான்..  பாலுவே தான்..  பாலுவே தான்..  அனைவரையும் ஏங்கவைத்துவிட்டு இப்படிச் செத்துப்போயிட்டியேடா..  பெருந்தொற்றில் எவன் வேணுன்னாலும் செத்துப்போயிருக்கட்டும், ஆனா நீ...

"நான் மண்ணுக்குள்ளே போகும் முன்னே
என் காதல் மேய்தான் சொல் என் கண்ணே..."

என் கண்கள் இரண்டும் என்னை அறியாமல் குளமானது.  கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.  வரிகளின் பொருள்களை அதன்பிறகு நான் கவனிக்கவே இல்லை.  அந்த முழங்கும் குரலும் சிரித்த முகமும் அகவை பாராது அனைவரிடமும் பணிவோடுப் பழகும் பண்பும் தொலைக்காட்சிகளில் வரும் பாட்டுப்போட்டிகளில் அக்குழந்தைகளை அன்போடு ஊக்குவிக்கும் அழகும்... நல்ல மாந்தர்.. 
வண்டி வீட்டருகே வந்திருந்தது.  பணத்தை கொடுத்துவிட்டு வீட்டைநோக்கி நடக்கலானேன். என் கண்ணில் மீண்டும் ஈரம். மெதுவாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டே நடந்தேன்..

"என்னை விட்டு எங்கே நீ சென்றாய்
என்னுள் கொண்ட காதலை நீ கொன்றாய்..."

இசை: ஆரிசு செயராசு
வரிகள்: கபிலன்
திரைப்படம்: தேவ் (2019)
குரல்: சி.ப.பாலசுப்பிரமணியம்




Monday, December 25, 2023

ஐந்தாம் தமிழ்

ஐந்தாம் தமிழ்

"நான் ஏன் தமிழ் பயிலவேண்டும்?" என வினவும் மக்கள் ஒருபொழுதும் "நான் ஏன் பிரஞ்சு மொழி பயிலவேண்டும்?", "நான் ஏன் சப்பானிய மொழி பழகவேண்டும்?", "நான் ஏன் சீன மொழி பயிலவேண்டும்?"  என வினவுவதில்லை.  அதுக்குக் காரணம் இம்மொழிகள் பயின்றால் என்னென்ன வருமானம் சார்ந்த பயன்கள் உள்ளன, என இவ்வணிகமயமான உலகம் அவர்களுக்கு தெளிவாக விளக்கிவிடும்.  இணையத்திடமும் இயூட்டியூபிடமும் கேட்டாலே புள்ளிவிவரத்தோடே சொல்லிவிடும்.

ஆனால் "தமிழ் பயின்றால் என்ன வகையான பொருளாதாரப் பயன் இருக்கிறது?" என யாரும் எதுவும் சொல்லித்தரப்போவதில்லை.  ஏனென்றால், அவ்வாறான ஒன்றை நம் முன்னோர்களும் அரசியலாளர்களும் உருவாக்கத் தவறிவிட்டனர்.  தமிழ் மட்டுமல்ல, இவ்வுலகில் இன்றைய 90% மொழிகளுக்கும் வணிகப்பயன் இல்லை.  ஆனால், வணிகப்பயன் இல்லாத மொழியானது, இன்னும் அரை நூற்றாண்டுகூடத் தாக்குப்பிடிக்காது என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று.   எனவே, நம் தாய்மொழியாம் தமிழுக்கென்று ஒரு வணிக/வர்த்தக/பொருளாதாத் "தமிழ்" ஒன்றை உருவாக்குவதே தமிழர்களாகிய நமக்கு முதன்மையான பொறுப்பாக இருந்திடல் வேண்டும்.

சங்ககாலந் தொட்டு, நம்மொழி முத்தமிழ் மொழி (இயல், இசை, நாடகம்/கூத்து) என அழைக்கப்படுகிறது.  இம்முதமிழுக்காகவும் ஏகப்பட்ட தமிழர்கள் காலங்காலமாக தங்கள் உழைப்பைக் கொட்டிய வண்ணம் உள்ளனர், என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே.  நான்காம் தமிழாக அறிவியலானது இந்நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.  அறிவியற்றமிழுக்காக சில தமிழ்பற்றுள்ள தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக தங்காளால் இயன்ற அளவுக்கு தொண்டுபுரிந்து வருகின்றனர்.  ஆனாலும் அவ்வாறானவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே.  அறிவியற்றமிழின் மேம்பாட்டிற்காக அரசாங்கங்களின் பங்களிப்பும் மிகமிகக்குறைவே.  இதில் பெருவாரியான அறிஞர்களும் அறிவியலாளர்களும் அரசாங்களும் அரசியல்வாதிகளும் ஈடுபடாததற்குக்காரணமே, தமிழுக்கென்று இல்லாமல் போன ஒரு வணிக/வர்த்தக/பொருளாதார/வருமானம்சார்ந்த கோணமே.

ஆதலால் தான் இவ்வணிக-வர்த்தக-பொருளாதாரத்தை ஐந்தாம் தமிழாகச்சேர்த்துக்கொண்டு, அதன் பொருட்டு தமிழை கொண்டுசென்றால், தமிழைப்பயில எல்லாரும் விரும்புவர், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்ல அனைவரும் விழைவர்.  

ஐந்தாம் தமிழ்க் கூறாக பல துறைகள் ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அறிவேன்.  என்றாலும்,  வணிக-வர்த்தக-பொருளாதாரமானது ஐந்தாம் தமிழ்க்கூறாக இருப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

"வணிக-வர்த்தக-பொருளாதாரத்" தமிழ் என்பதற்கு ஒரு "சிறு" பெயரை யாராவது பரிந்துரைசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.  வணிக-வர்த்தக-பொருளாதாரத் தமிழானது, தமிழை வைத்து வணிகம் செய்வதல்ல, மாறாக தமிழுக்கு வணிக-வர்த்தக-பொருளாதாரத் தன்மையை/மதிப்பை/உயர்வை அளிப்பது என்பது என் சிறு அறிவிற்க்கெட்டிய ஒன்று.  இவ்வாறான ஒரு முயற்சிக்கு வணிக/வர்த்தக/பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.   

Sunday, December 24, 2023

நிகண்டு

நிகண்டு

'நிகண்டு' என்ற சொல்லை சில இடங்களில் கேட்டிருப்போம்.  நிகண்டும் அகராதியும் ஒன்றா? இன்று நாம் பயன்படுத்தும் அகராதிகளானவை தமிழ் சொற்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்தும் திசைச் சொற்களுக்கும் சுருக்கமாக ஒரு பொருளையும் மாற்றுச் சொற்களையும் தந்திடும் வண்ணமாக அமைந்திருக்கிறது.  ஆனால் நிகண்டுகள் இதிலிருந்து சற்றே வேறுபட்டு, ஒவ்வொரு சொற்களுக்குமான பொருளையோ மாற்றுச் சொற்களின் தொகுப்பையோ ஒரு செய்யுள் வடிவில் அளித்திடும் வண்ணத்தில் அமைந்திருக்கிறது.  இதில் பலநேரம் தமிழ் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக சங்கதச் சொற்களையும் சங்கதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக தமிழ்ச் சொற்களையும் அளித்திருப்பர்.  இச்சொற்களின் பட்டியல்கள் பெரும்பான்மையாக கடவுளர் பெயர்கள், மாந்தர் பெயர்கள், விலங்கினப் பெயர்கள், மரப்பெயர்கள், இடப்பெயர்கள் பல்பொருட் பெயர்கள், செயற்கைவடிவப் பெயர்கள், பண்புப் பெயர்கள், செயற் பெயர்கள், ஒலிப்பெயர்கள், ஒருசொல் பல்பொருள் பெயர்கள் ஆகிய தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றன.    தொல்காப்பியத்தில் சிலபல சொற்களுக்கு விக்கம் கூறப்பட்டுள்ளன. இவைகள் உரிச்சொல் பனுவல் என அழைக்கப்படுகின்றன.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கம் அளித்த முதல் ஏடாகத் திகழ்வது திவாகர நிகண்டு.  தமிழில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நிகண்டுவகை நூல்கள்  அறியப்பட்டு அச்சிலும் ஏறியுள்ளன.  அவற்றுள் சில இங்கே:
01} திவாகரம் - 6ம் நூஆ - சேந்தன் திவாகரர் - 12 தொகுதிகள் - 112518 நூற்பாக்கள் - 9500 சொற்கள்
02} பிங்கலம்/பிங்கலந்தை - 9ம் நூஆ - பிங்கலர் - 4121 நூற்பாக்கள் - 14700 சொற்கள்
03} உரிச்சொல் நிகண்டு - 11/17ம் நூஆ - காங்கேயர் - 12 தொகுதிகள் - 285 வெண்பாக்கள் - 3200 சொற்கள்
04} கயதரம்/கெயாதரம் - 15ம் நூஆ - கெயதாரர் - 566 கலித்துறை செய்யுள்கள் - 11350 சொற்கள்
05} அகராதி - 1594 - இரேவணசித்தர் - 1301 நூற்பாக்கள் - அகர வரிசையில் இயற்றப்பட்ட முதல் நிகண்டு இதுவே
06} சூடாமணி - 10/16ம் நூஆ - வீரை மண்டலப் புருடர் - 12 தொகுதிகள் - 1187 விருத்தப்பாக்கள் - 1575 சொற்கள்
07} சூத்திரவகராதி - 1594 - புலியூர் சிதம்பர ரேவண சித்தர் - 3334 நூற்பாக்கள்
08} கைலாசம்/சூளாமணி - 16ம் நூஆ - கைலாசம் - 506 நூற்பாக்கள் - 15000 சொற்கள்
09} ஆசிரியம் - 17ம் நூஆ - ஆண்டிப் புலவர் - 11 தொகுதிகள் - 199 ஆசிரியவிருத்தச் செய்யுள்கள் - 12000 சொற்கள்
10} வடமலை/பல்பொருட்சூடாமணி - 17ம் நூஆ - ஈசுவர பாரதி - 1452 நூற்பாக்கள் - அமரகோசம் எனும் சங்கத நூலை பின்பற்றி இயற்றப்பட்டது
11} தமிழ்-போர்த்துகேய அகராதி - 17ம் நூஆ - ஆந்தரிக் அடிகளார் - ? - இந்த ஏடு இதுவரை கிடைக்கவில்லை
12} சதுரகராதி - 1732 - வீரமாமுனிவர் - 12000 சொற்கள்
13} அரும்பொருள் விளக்கம் - 1763 - அருமருந்தேய தேசிகர் - 740 விருத்தப்பாக்கள் - 3200 சொற்கள் 
14} பொதிகை - 18ம் நூஆ - சாமிநாதக் கவிராயர் - 496 விருத்தப்பாக்களும் 2228 நூற்பாக்களும் மொத்தம் 2326 செய்யுள்கள் - 14500 சொற்கள் - இது எதுகை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது
15} பாரதிதீபம் - 18ம் நூஆ - பரமானந்தத் திருவேங்கட பாரதியார் - 665 கலித்துறை செய்யுள்கள்
16} உசிதசூடாமணி - 1894 - சிதம்பரக் கவிராயர் - 184 ஆசிரிய விருத்தப்பாக்கள்
17} நாமதீபம் - 19ம் நூஆ - சிவசுப்பிரமணியக் கவிராயர் - 808 வெண்பாக்கள் - 1200 சொற்கள்
18} பொருட்டொகை - 19ம் நூஆ - சுப்பிரமணிய பாரதி  - 1000 நூற்பாக்கள் - 1000 சொற்கள்
19} நாநார்த்த தீபிகை - 1850 - முத்துசாமிக் கவிராயர் - 1102 விருத்தப்பாக்கள் - 5432 சொற்கள் -  நிறைய சங்கதச் சொற்களுக்கு பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
20} கந்தசுவாமியம் - 1844 - _சுப்பிரமணிய தேசிகர்_ - 2743 நூற்பாக்கள்
21} விரிவு - 1860 - அருணாச்சல நாவலர் - 1036 விருத்தப்பாக்கள்
22} சித்தாமணி - 1874 - யாழ் வைத்தியலிங்கம் - 400 விருத்தப்பாக்கள் 
23} அபிதான மணிமாலை - 1878 - திருவம்பலத்து இன்னமுதம் கோபாலசாமி - 2425 நூற்பாக்கள்
24} வேதகிரியர் சூடாமணி - 19ம் நூஆ - வேதகிரி - 11 தொகுதிகள் - 583 விருத்தப்பாக்கள்
25} நவமணிக்காரிகை - 19ம் நூஆ - அரசஞ் சண்முகனார் - ? - ?
26} தமிழுரிச்சொற் பனுவல் - 19ம் நூஆ - கவிராச இராம சுப்பிரமணிய நாவலர் - ? - ?
27} நீரரர் - 1984 - ஈழத்துப் பூராடனார் செலவராசகோபால் - 80 செய்யுள்கள்
28} மஞ்சிகன் ஐந்திண - ? மஞ்சிகன் - 122 நூற்பாக்கள்.- 122 சொற்கள் (மரஞ்செடிகொடிப் பெயர்கள்)
29} போகர் அட்டவணை - ? - போகர் - 116 சொற்கள்

மற்ற நிகண்டுகளான பொதியநிகண்டு, ஔவைநிகண்டு போன்றவற்றின் குறிப்புகள் மட்டும்தான் கிடைக்கின்றன.

Saturday, December 9, 2023

ஆந்திரிக் ஆடிகளார்

ஆந்திரிக் ஆடிகளார் 

இயேசுசபையைச் செர்ந்த புனித சவேரியாரின் உதவியாளராக இந்திய நிலப்பரப்புக்கு கிறித்துவ சமயம் பரப்ப வந்த ஆந்தரிக் ஆந்தரிக்கசு எனும் போர்த்துக்கேயர், 1546 இயேசுசபையினர் 'மதுரை சமையத் திட்டம்' என்ற ஒன்று வகுக்கப்பட்டதுக்கு ஏற்ப தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்.  கூடிய விரைவில் தமிழ் மொழியைக் கற்றிடவேண்டும் என்பது அவருக்கு புனித சவேரியார் இட்ட கட்டளை.  1548ல் புனித இலொயோலா இஞ்ஞாசிக்கு இவர் எழுதிய மடலில், தான் எவ்வாறு தமிழ் மொழியை விரைவாகக் கற்கிறேன் என மகிழ்ச்சிபோங்க விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  1578-86களில் தம்பிரான் வணக்கம், கிறித்தியானி வணக்கம், அடியார் வரலாறு, மலபார் இலக்கணம் மற்றும் தமிழ்-போர்துகேய அகராதி ஆகிய இரு 16-பக்க தமிழ் ஏடுகளை எழுதி கொல்லத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 




தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் அச்சிலேறிய முதல் ஏடுகள் இவையே.  இதற்கான தாள்கள் சீனத்திலிருந்து வரவழைக்கப்பட்டன.  அந்த காலகட்டத்தில் ஆவணங்களை எழுதுவதற்கு பனை ஓலையும் செப்புத்தகிடையும் கல்லையும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழி வழக்கானது, இன்னும் முழுமையான தனி அடையாளம் பெறாத அன்றைய மலையாளமான, மலபார் தமிழ் என 'தம்பிரான் வணக்கத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவர்  தனது பிற்கால வாழ்க்கை முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்திலேயே சமயப் பணிக்காகச் செலவழித்துள்ளார்.  அப்பகுதியில் வாழ்ந்த மீனவ மக்களையும் முத்துக்குளிப்பவர்களையும் கிறித்துவ சமையத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு இவருக்குப் பெரும்பங்கு உண்டு.  'ஆந்திரிக் ஆடிகளார்' என்ற பெயரில் கிறித்துவர்களிடத்தில் மட்டுமல்லாது பிற சமயத்தினரிடத்தும் பெருமதிப்பு பெற்றிருந்தார். தென் தமிழகத்தில் மட்டும் 58 ஆண்டுகள் வாழ்ந்துவந்த இவர், தனது 80ஆவது அகவையில் (1600ல்) புன்னைக்காயல் எனும் ஊரில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்தபோது, அப்பகுதியில் வாழ்ந்த அனைந்து சமயத்து மக்களும் காயல்பட்டினத்து இசுலாமியர்களும் துயரத்தில் கடைகளை அடைத்து இரு நாள்களாக உண்ணாநோன்பிருந்தனர் என 1601 ஆண்டுக்கான இயேசு சபை ஆண்டு மலர் தெரிவிக்கிறது.  அவரின் கல்லறையானது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் உள்ளது.  

தமிழில் முதல் ஏடுகளை அச்சிட்டு வெளியிட்டதால் தமிழ் அச்சுத்துறையின் தந்தை என கருதப்படுதிறார்.  தமிழில் முதல் உரைநடைகளை எழுதியவர் எனவும் இவர் கருதப்படுகிறார்.


Monday, November 13, 2023

வாழ்வெனும் சோலை

வாழ்வெனும் சோலை


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும். ம்ம்ம்.  

வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கும் விடிந்திருக்கும்.  நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கு விடிந்திருக்கும். 

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நான் அருகே இருப்பேன்.  நாம் இன்னும் நெருங்கி இருப்போம்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் நாம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

நான் அருகே இருப்பேன்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

எந்தன் சிறுதேனும் உங்கள் சிறுபூவும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


இவ்வளவு இனிமையான இசை கொண்ட 'சீவன் கி பகியா' என்ற.இந்திப் பாடலுக்கு காதுக்கு இனிய சொற்கள் (நமக்குப் பொருள் புரியாவிட்டாலும்) அமைத்து வரிகளும் எழுதி பாடலமைத்து இருக்கிறார்கள்.  சரி, அப்படி என்னதான் அந்த இந்தி வரிகளின் பொருளாக இருக்கும் என எனக்குள் ஒரே கேள்விகள்.  இருக்கவே இருக்கு கூகுள் மொழிபெயர்ப்பி.  அதிலிட்டுப் பார்த்துவிட்டேன்.  வந்த மொழிபெயர்ப்பை பட்டிட்டிங்கரிங் பண்ணி அப்பாடலின் சந்தத்துக்கு ஏற்ப பொருள் மாறாது சொற்களை அங்குமிங்கும் மாற்றியமைத்து மேலே நான் இட்டிருக்கும் கவிதைமை சமைத்துவிட்டேன்.  பாடலின் இசையுடன் பாடிப்பாருங்கள்.  எங்கேனும் இடறினால் அதைத் எனக்குத் தெருவியுங்கள். 


இந்தச் செயலால் எனக்குக் கிடைத்த பட்டறிவில் நான் உணர்ந்த சில செய்திகள்:-

  1. தமிழை முறைப்படி கற்காது ஆங்கில வழியிலேயே பாடங்களைக் கற்ற எனக்கே, தமிழ் இவ்வளவு ஞெகிழித்தனத்தை அளிக்கிறது என்றால் (கடந்த இரு நாட்களாக பத்துப் பதினைந்துமுறை, என்னால் சொற்களை மாற்றியமைத்து பொருளையும் சுவையையும் மெருகேற்ற முடிந்தது) , சிறிதேனும் ஆழமாகத் தமிழைக் கற்றவர்கள் இன்னும் மிளிர்வான பெருட்சுவை மிகாக கவிதையை எழுதிவிடுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
  2. இந்தியில் (நிறைய பாரசீகச் சொற்களும் இபாபாடலில் உளாளதால் இதனை உருது என்றுகூடச் சொல்லிவிடலாம்) இருந்த பாடலை கோபால்தாசு என்ன நீரசு என்பவர் எழுதியுள்ளார்.  இவர் பத்மசிறீ, பத்மவிபூசனம் போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளார்.  என்றாலும் அவர் எழுதியிருந்த இக்கவிதையில் சொற்சுவை இருக்கே தவிர பொருட்சுவை என்பது துளியும் இல்லை.  தமிழில் இப்படிப்பட்ட பாடல்வரிகளை டப்பாங்குத்துப் பாடல்களுகாகுத்தான் போடுவார்கள்.  ஆக அந்த இந்திக் கவிதையில் தரம் இல்லை என்பதே அடியேனின் கருத்து.  

Wednesday, November 8, 2023

மும்முடிச்சோழபுரம்

மும்முடிச்சோழபுரம்

நாகர்கோவில், வடிவீசுவரம் அழகம்மன் கோவிலில் உள்ள சிவன் கருவரையின் தெற்குச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டு.  - கன்னியாகுமரி கல்வெட்டுகள் தொகுதி 3. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை. 1972.  

யாரோ ஒருவர் கோவிலில் நாள்தோறும் பூசை செய்வதற்கு தேவையான பொருளுதவிக்காக, தோவாளை அருகே உள்ள பெரியகுளம் எனும் ஊரில் இரண்டு மா (0.46 ஏக்கர்) நிலத்தை தானமாகக் கொடுத்ததற்கான கல்வெட்டு.

இக்கல்வெட்டில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன:-
  1. பொறிக்கப்பட்ட ஆண்டு: கிபி 1488
  2. கல்வெட்டுக்கான ஓலை எழுதிய இடம்: 23ம் பண்ணையான திருவேங்கடமுடையார் வீடு, பொருந்தக்கரை, கல்லிடைக்குறிச்சி
  3. ஆவணப்படுத்திய பதிவாளர்: சுந்தரன் விக்கிரமன், கோட்டாறு
  4. நாகர்கோவிலின் அப்போதைய பெயர்: கோட்டாறு என்ற மும்முடிசோழபுரம் . ('தமிழகம் ஊரும் பேரும்'_ எனும் நூலில் இப்பகுதிக்கு மும்முடிச்சோழ நல்லூர் என்ற பெயர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்).  இதில் மும்முடிச்சோழன் என்பது இராசராசனையே குறிக்கும். இவர் கிபி 999ம் ஆண்டு நாஞ்சில் நாட்டைக் கையகப்படுத்தி கன்னியாகுமரிக்கும் இராசராசேச்சுரம் என்ற பெயரிட்டுள்ளார். மும்முடிசோழபுரம் போன்ற பெயர்கள் கொண்ட மற்ற ஊர்கள்: திண்டிவனம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சோழபுரம், ஆந்திராவிலுள்ள திருக்காளத்தி, குமரியிலுள்ள முட்டம் மற்றும் கடியப்பட்டினம், தஞ்சை அருகே உள்ள விண்ணணூர்ப்பட்டி.
  5. தோவாளையின் அப்போதைய பெயர்: அழகிய சொழநல்லூர்
  6. வடிவீசுவரத்தின் அப்போதைய பெயர்: வடிவினீச்சுரம்
  7. கோவிலின் இறைவனது அப்போதையப் பெயர்: வடிவினீச்சுரமுடைய நாயினார் (தற்போது: சுந்தரேசுவரன்)
  8. கோவிலின் இறைவியது அப்போதையப் பெயர்: அழகியமங்கை நாச்சியார் (தற்போது: அழகம்மன்)
  9. கருவறை: உண்ணாழி


Tuesday, November 7, 2023

தோய்க்வென்ம்பி

தோய்க்வென்ம்பி


என்ன அழகாகப் பாடுகிறார் திரு புவோங்ஙான்.  என்ன ஒரு எடுப்பான குரல் வளம்.  இவர் உலக அரங்கில் புகழ்பெற என் வாழ்த்துகள்.

இவர் பாடியிருக்கும் "தோய்க்வென்ம்பி..." என்ற அந்த முதல் பாடலை இங்கு தமிழில் அப்படியே எழுத்துப்பெயர்ப்பு செய்துள்ளேன்.  வியட்நாம் மொழி தெரிந்தவர்கள், அப்பாடலை மொழிபெயர்த்துப் பகிரவும்.

தோய்க்வென்ம்பி அங்சு மொன்னெம்தன்ங் திங்கு..

சன்காவங்து லூயி வங்வாய் கீயவன் மூசூயி..

திங்சில்ல தைங்லோயி திஙொங்ஙாயி திங்சாங் சோய்..

சோய் தாடாப்யொன் யௌவா சோ ஞௌவூடேனோ..

கோய் தௌ பங்லென் சேம் பன் தென்தஃம் ஐகும்..

பென்யௌ பூர்செய் நைசங்ஙை மைகக்ங் சான்யௌ..

சாகௌ தார்தூ பாசடூதெங் அனிலோர்ஙி..

கீதோழ்சேசிங் அங்னேயோ யூமிங்னே தன்லா..


சீன்யூடூந் துந்தூஞ்யோஞ்ய லா..

டூங் தோய் தேடேம் நைசோக்வில் லைம்பும்க்வாதீம்..

ஐம்டெம் தட் மூன்ம் கோடன் காங் சேங்மூங்..

ஞாஙையி தட்ந் ஞூடைங்ஙோய் தம்தேதோ...


தோயிதே ஊலோய் சூர்டேன் தன் நோய் மெங் ஏனோ..

ஓம் நைவூட்டம் ஙூய்ஙாய்ஙோங் தோய் டுங் சம் ஙைங்..

டோய்க்வாதங் சாலம் கங்போய் ஓய் சௌசீயே..

வா தோய்பூக் பங்க்வங்வீச்சு கைலங் தேத்தூ..

சொலாய் சங்காடோ தௌ தோயிதே மோட் மென்ங்..

பங்யீயு ஊக்மா டௌசீம்பௌ கன்னூச்சூய்மௌ..

தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙு எதெங்வாவ் தீயாந்தூ..


சீன்யூடூந் துந்தூஞ்யோஞ்ய லா..

டூங் தோய் தேடேம் நைசோக்வில் லைம்பும்க்வாதீம்..

ஐம்டெம் தட் மூன்ம் கோடன் காங் சேங்மூங்..

ஞாஙையி தட்ந் ஞூடைங்ஙோய் தம்தேதோ...


தோயிதே ஊலோய் சூர்டேன் தன் நோய் மெங் ஏனோ..

ஓம் நைவூட்டம் ஙூய்ஙாய்ஙோங் தோய் டுங் சம் ஙைங்..

டோய்க்வாதங் சாலம் கங்போய் ஓய் சௌசீயே..

வா தோய்பூக் பங்க்வங்வீச்சு கைலங் தேந்தூ..

சொலாய் சங்காடோ தௌ தோயிதே மோட் மென்ங்..

பங்யீயு ஊக்மா டௌசீம்பௌ கன்னூச்சூய்மௌ..

தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙு எதெங்வாவ் தீயாந்தூ..


தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙுயி எதெங்வாவ்... தீயாந்தூ..




பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...