சில நாள்களுக்கு முன்னர், இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு (ஆங்கிலப் பயிற்றுவிப்பு முறையில்) பயிலும் சில குழந்தைகளிடம் உரையாடிடும் வாய்ப்பு கிட்டியது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் "நான் 'மூன்' வரையப்போகிறேன்" என்றார். அது என கவனத்தை சுர்ர்ரென ஈர்க்கவே 'மூன்' என்பதற்கு தமிழில் என்ன சொல்வீர்கள் என வினவினேன். ஒருவருக்கும் தெரியவில்லை.
இது ஏதோ ஒரு பெருநகரத்தில் நடந்த ஒன்றாகக் கருதவேண்டாம். நாகர்கோவிலில் உள்ள கிட்டத்தட்ட சிற்றூர்ச் சூழலிலுள்ள ஒரு இடம்தான் அது. மூன்றாப்பிலலிருந்து நான்றாப்பு போகும் சில குழந்தைகள், சிறிது எண்ணியபிறகு 'சந்திரன்' என்றனர். அந்தநேரத்தில் சில அஞ்சாப்பு ஆறாப்பு குழந்தைகளும் என் கேள்விக்கு விடைகாண, சேர்ந்துகொண்டனர். அந்த எல்லா குழந்தைகளும் 'நிலா நிலா ஓடிவா'வைத் தாண்டித்தான் வந்திருப்பர். ஆனாலும் 'சந்திரனை'த்தாண்டி அவர்களால் வரமுடியவில்லை. நிலா, திங்கள் ஆகியவையே தமிழ்ச்சொற்கள் என்று நான் கூறியவுடன் கண்கள் அகலப்பார்த்தார்கள். பின்னர், 'சன்' என்பதற்கு என்ன தமிழ்ச்சொல் எனக்கேட்டேன். 'சூரியன்' என்றனர் அஞ்சாப்புக்குழந்தைகள். மூணாப்புக்குழந்தைகள் 'சன்' தமிழ்தானே என்றனர். சன்டிவி தாக்கம். கதிரவன், ஞாயிறு இவையே தமிழ் என்றேன். சந்திரன், சூரியன் எல்லாம் சங்கதச்சொற்கள் என்றேன். அவர்களுக்கு வியப்பு. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு குழந்தை 'சன்'னுக்கு தமிழில் 'ரவி' என்றுவேறு சொன்னார்.
பெற்றோர்களே!, நீங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலமோ சங்கதமோ பாரசீகமோ கூடக் கற்றுக்கொடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அம்மொழிச் சொற்களையெல்லாம் தமிழ்ச் சொற்களாகக் கற்றுக்கொடுக்கவேண்டாம். அதுபோல சில அடிப்படைச் சொற்களின் மொழிவேர் தெரிந்திருங்கள்.
No comments:
Post a Comment