Tuesday, April 26, 2022

எடுகோள்

எடுகோள்

க்காலத்திலும், மாந்தர்கள் தங்கள் அறிவியல் வளத்தில் சிலபல எடுகோள்களை வைத்துக்கொண்டே அடுத்த நிலையை நோக்கிச் செல்வர்.  அவ்வாறான எடுகோள்களில் பல, ஞாலப்பருவத்திற்கேற்ப ஐயத்திற்கும் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டு அவைகளை நிறுவவேண்டுமா தொடரவேண்டுமா களையவேண்டுமா என அறிஞர்களால் முடிவுசெய்யப்படும்.  இது தொடர் அறிவியல் தேடலின் நிலைப்பாடு.

னால், சில எடுகோள்களாக கருதப்பட்டவைகளோ, ஐயத்திற்கு உட்படுத்தப்படாது உறுதியாக இறுதியாக மாந்தர்களால் நம்பப்பட்டுவிடுகின்றன.  இவை உறைந்துபோய்  சமயங்களாகவும் கடவுள்களாகவும் பேதைமைகளாகவும் குருட்டு நம்பிக்கைகளாகவும் ஆகிவிடுகின்றன.  ஆக, ஒவ்வொரு நம்பிக்கை சார்ந்த படைப்புகளை கூர்ந்து கவனித்தோமென்றால் அதில் நன்னெறிகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த கூறுகள் போக, அறிவியல் சார்ந்த சிலபல எடுகோள்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.  இது இயல்பான ஒன்றே.  இறைவனைப் பற்றியான படைப்புகளில், இறைவனின் படைப்புகளாக சமயங்களால் கருதப்படும், அக்காலத்தில் உண்மை என எடுத்துக்கொள்ளப்பட்ட அறிவியல் எடுகோள்களையும் குறிப்பிடுவது இயல்பே.  ஆனால் அவ்வகையான எடுகோள்களில் சில அதன்பின்னர் ஏற்பட்ட சில அறிவியல் முன்னேற்றத்தினால் காலாவதியாகிப்போயிருக்க வாய்ப்புண்டு.  மாந்தர்களிடையே புழங்கும் பல நம்பிக்கை சார்ந்த படைப்புகளிலுள்ள அறிவியல் எனக்கருதப்படும் எடுகோள்களில் பல காலாவதியாகிப்போய் சில நூற்றாண்டுகளே ஆகிவிட்டன.





















Sunday, April 24, 2022

திரிந்த பழமொழிகள்

திரிந்த பழமொழிகள்

நம்மிடையே புழக்கத்தில் உள்ள பல பழமொழிகள் காலத்தால் வாய்வழிப் பயன்பாட்டால் பலவாறு வேடிக்கையாகத் திரிந்துள்ளன. 
"அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்"

விளக்கம்: நன்நெறி நூல்களில் உள்ள அடிகள்(வரிகள்) நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதுபோல வேறு யாரும் நம்மை உதவமாட்டார்.

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்தராத்திரியில் குடை பிடிப்பான்"

விளக்கம்: 'அற்பணித்து வாழ்ந்துவந்தால் அர்தராத்திரியிலும் கொடைகொடுப்பான்'

"அரசனை நம்பி புருசனை கைவிட்டதுபோல"

விளக்கம்: "அரச (மரத்தை) சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பதை நம்பி கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கும் பெண் போல"

"ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"

விளக்கம்: 'ஆயிரம் (வகையான மருத்துவ) வேர்களைக் கொண்டவன் (வைத்து மருத்துவம் செய்ய வல்லவன்) அரை வைத்தியன்'

"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்"

விளக்கம்: 'ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி கல்யாணம் பண்ணவேண்டும்'

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"

விளக்கம்: நன்மைகள் ஆவதும் பெண்களே தீமைகள் அழிவதும் பெண்ணாலே

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"

விளக்கம்: "இது கர்ணன் தன் தாயாரான குந்தியிடம் கூறியது. அதாவது, கர்ணன் பாண்டவர்களோடு சேர்ந்து அறுவர் அனாலும் கௌரவர்களோடு இருந்தாலும் அவனுக்கு இறப்பு உறுதி என்பதே அது."

"ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும்"

விளக்கம்: "யார் எக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும்"

"உண்டிக் குறைத்தல் பெண்டிர்க்கு அழகு"

விளக்கம்: இங்கு 'உண்டி' என்பது (உணவு தயாரிக்க) சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறிக்கிறது.  உண்டிக்குறைத்தால் (தங்களுக்கான) பிற வேலைகளில் செலவிடலாம்.

"உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கும் மிஞ்சாது"

விளக்கம்: "உழுதவன் கணக்குப்பார்த்தால் உழைப்பும் மிஞ்சாது"

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"

விளக்கம்: ஊர் மக்கள் குழுக்கள் ஏதோ ஒரு காடணத்தால் சண்டையிட்டு இரண்டுபட்டால், ஒரு கூத்தாடியைக் கூட்டிவந்து கொண்டாடவிட்டால், வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒன்றுபடுவர்.

"ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்"

விளக்கம்: ஊரான் வீட்டுப் பிள்ளை: என் மனைவி, மகனின் மனைவி.  தன் பிள்ளை: என் பிள்ளை, மகன்

"எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார் படிச்சவர் பாட்டைக் கெடுத்தார்"

விளக்கம்: "அறிஞர்கள் தாங்கள் எழுதிவைகளை ஏடுகளாக்கிக் கொடுத்துள்ளனர். அவற்றை படித்தவர்கள் பாடமாகக் கற்றுக்கொடுப்பார்கள்"

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது"

விளக்கம்: "பேட்டுச் (பேடு - உள்பக்கம் காய்ந்த) சுரைக்காய் கறிக்கு உதவாது.  சுரைக்குடுக்கை செய்யத்தான் உதவும்".

"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே"

விளக்கம்: கள்ளனை(கண்ணனை) நம்பினாலும் குள்ளனை(மாவலியை நயவஞ்சகமாக அழித்த வாமனனை) நம்பக்கூடாது

"களவும் கற்று மற"

விளக்கம்: 'களவும் கத்தும் மற'. களவு - திருட்டு; கத்து - சூது/பொய்

"குரைக்கின்ற நாய் கடிக்காது"

விளக்கம்: குழைகின்ற நாய் கடிக்காது

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல"

விளக்கம்கழு(மரம்) (காலத்தால் துருப்பிடித்துத்) தேய்ந்து கட்டிரும்பு (அதாவது, பழைய இரும்பு) ஆனது போல.

"கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை"

விளக்கம்: கழு (என்ற புல் வைத்து பாய்) தைக்கத் தெரியுமா(ம்) கற்பூர வாசனை.

"கண்டதையும் படிப்பவர் பண்டிதர் ஆவார்"

விளக்கம்: "கண்ணால் காணும் கலைகளைக் கற்பவர் அறிஞர் ஆவார்"

"கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை"

விளக்கம்: "நாயகர்" என்பது நாய் என மருவியுள்ளது.  இங்கு நாயகர் என்பது கடவுளைக் குறிக்கிறது.  கற்சிலையை கடவுளாக வைத்து வழிபடும்போது கல்லாகப் பார்த்தால் அது கடவுளாகத் தெரியாது.  அதேநேரம் கடவுளாக நம்பிவிட்டால் வெறும் கற்சிலையாகத் தெரியாது.

"காக்கா பிடிச்சாவது காரியத்த நடத்து"

விளக்கம்: "பிறர் காலயும் கையையும் பிடித்துவிட்டு அவர்களை உளங்குளுரச்செய்தாவது வேண்டிய செயலை செய்துமுடி" என்பதே பழமொழி.

"குருவிக்கு ஏற்ற இராமேசுரம்"

விளக்கம்: "குறி வைப்பதற்கு ஏற்ற இராம சரம் (அம்பு).  அதாவது, செய்து முடிக்கவேண்டிய செயலை செய்யவல்ல கருவி/செயல்முறை/திட்டம் கிட்டியபோது சொல்வது"

"கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?"

விளக்கம்: "கைப்பூண் (கையில் அணியும் அணிகலன்கள்) தனைக் காண எதிரொளிக்கும் கண்ணாடி தேவையில்லை.  நேராகவே பார்த்துவிடலாம்.  எளிதாகச் செய்யவேண்டியதை யாராவது சுற்றிவளைத்துச் சிக்கலாகச் செய்ய முற்பட்டால் இப்பழமொழியைக் கூறுவர்"

"சேலைகட்டிய மாதரை ஒருபோதும்  நம்பாதே"

விளக்கம்: 'சேல் ஆகட்டிய மாதரை ஒருபோதும்  நம்பாதே'. (சேல்) கெண்டைமீன் போன்ற கண்களை (அகட்டிய) அலைபாயவிடும் பெண்களிடம் கவனமாக இருக்கச்சொல்கிறது இப்பழமொழி

"சோழியன் குடுமி சும்மா ஆடுமா"

விளக்கம்: சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா.  சும்மாடு - தலைமீது பாரம் சுமக்க தலைப்பாகை போன்ற துணியாலான பொருள்.

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்"

விளக்கம்: "வாழைத் தையின் (கன்றின்) வேரானது எட்டடி வரை சுற்றி ஊன்றும், அதுபோல தென்னம் பிள்ளையின் வேரானது பதினாறு அடி வரை சுற்றி ஊன்றும்."

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"

விளக்கம்: "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு; நல்ல மாந்தருக்கு ஒரு சொல்" என்பதே பழமொழி.  மாட்டின் கால் சுவடை வைத்தே அதன் அகவையையும் உடல்நலத்தையும் கணித்திடும் பழக்கம் படைய மாந்தர்களிடம் இருந்தது.

"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து"

விளக்கம்: இதில் பந்தி அல்லது பட்டி என்பது போர்களில் முன் செல்லும் படைப்பிரிவு.  ஒவ்வொரு பந்தியிலும் ஒரு யானையும் ஒரு தேரும் மூன்று குதிரைவீரர்களும் ஐந்து காலாட் படை வீரர்களும், மோத்தமாக பத்து வீரர்கள் இருப்பர்.  இப்படை வீரர்கள் விரைவாக முன்சென்று முதற்கட்ட அதிரடித் தாக்குதலை நிகழ்த்தவேண்டும்.  இப்பழமொழியில் படை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பின்னால் வரும் பெருந்திரளான காலாட் படை வீரர்களையே.  இது தொடர்பாக மாபாரதக் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற படைப்பிரிவுகளைப் பற்றி இங்கு காண்க.

"பாத்திரம் அறிந்து பிச்சை பொடு; கோத்திரம்  அறிந்து பெண்ணைக் கொடு"

விளக்கம்பா(டும்) திறம் அறிந்து பிச்சை(கொடை) போடு(கொடு) ; கோ(அரசனின்திறமையை அறிந்து பெண்ணைக் கொடு.

"பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும்"

விளக்கம்: இதிகாசக் கதைகளில் வரும் போர்க் காட்சிகளில் பாம்பு வடிவம் கொண்ட அம்புகள் (நாக அத்திரம்) மிக ஆற்றல் உடையவைகளாகக் காட்டப்படுகிறது.   பாம்பு அம்புகளை ஏவிவிடும்போது எதிரிப் படையினர் அஞ்சி ஓடுவர் என நம்பப்படுகிறது.

"புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்று"

விளக்கம்: புண்பட்ட நெஞ்சை (நல்ல செயல்களில்) புகவிட்டு ஆற்று

"பூனை இல்லாத வீட்டில் ஏலி துள்ளி விளையாடும்"

விளக்கம்: "பூநெய் (தேன்) இல்லாத வீட்டில் கலி (நோய்->துன்பம்) வரும்"

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"

விளக்கம்: "இங்கு புதன் (கோள்) என்பது கல்வியையும் அறிவையும் குறிக்கிறது.  பொன் என்பது பொருட்செல்வத்தைக் குறிக்கிறது.  'எவ்வளவுதான் பொருள் இருந்தாலும் வளமான கல்விக்கும் நுட்பமான அறிவுக்கும் அது ஈடாகாது' என்பதே அதன் பொருள்  "

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா"

விளக்கம்: "மண்குதிர் தனை நம்பி ஆற்று வெள்ளத்தில் இறங்கலாமா.  மண்குதிர் என்பது ஆற்றினுள் ஏற்படும் மணல் மேடு.  ஆற்றுவெள்ளத்தில் கரைந்துவிடும் அல்லது அது புதைமணலாக இருக்கும்."

"மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்"

விளக்கம்: 'மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்; மருமகள் உழைத்தால் பொன்னுக்கு உரம்'. இங்கு பொன் என்பது 'செல்வத்தைக்' குறிக்கிறது.  இது உழவர்களிடையேயான பழமொழி.

"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல.."

விளக்கம்: முயலான்(சோம்பேறி) மரத்தின் உச்சியில் இருக்கும் தேன்கூட்டிலுள்ள கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல..

"யானைக்கு ஒரு காலம்வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்"

விளக்கம்: 'ஆ நெய்க்கு என்று ஒரு காலம் இருந்தால் பூ நெய்க்கு என்று ஒரு காலம் வரும்'.  ஆநெய் - மாட்டுப்பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்;  பூநெய் - தேன்; ஆநெய்க்கான காலம் - இளமைப்பருவம்; பூநெய்க்கான காலம் - முதுமைப்பருவம். அல்லது, இனிப்பான நெய்ப்பண்டங்களை நிறைய  உண்டால், கசப்பான மருந்தை தேனில் குழைத்து உண்ணவேண்டிய காலம் வரும்.

"வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்"

விளக்கம்: வரவர மாமியார் கைதை போல ஆனாளாம். கைதை என்றால் ஊமத்தை.  ஊமத்தை பூக்கும்போது பார்க்க அழகாகவும் அதுவே காயாகும்போது முள்நிறைந்ததாகவும் இருக்கும்.

"வக்கற்றவர் வாத்தியார் வேலைக்குப் போவார்"

விளக்கம்: "வாக்கு கற்றவர் வாத்தியார் வேலைக்குப் போவார்"

"விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்"

விளக்கம்: விருந்து(போல்) உண்பதற்கான நாட்கள் ஞாயிறு, திங்கள், புதன்; மருந்துபோல் அளவாக உண்ணவேண்டிய நாட்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி; சனி - நோன்பு

பல இடங்களிலிருந்து சேகரித்தது.... 


 

Saturday, April 2, 2022

நீர்

பழந்தமிழரின் ஐம்பது வகையான நீர்நிலைகள்

நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்

௧. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

௨. அருவி - (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

௩. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

௪. ஆறு - (River) பெருகி ஓடும் வெள்ள ஓழுக்கு.

௫. இலஞ்சி - (Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

௬. உறை கிணறு - (Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

௭. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

௮. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

௯. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

௧०. ஓடை - (Creek)  ஊற்று எடுக்கும் நீர் சிறு வாய்க்கால்களில்  ஓடுபவை - ஆழம் குறைந்தவை - நடந்தே கடந்துவிடலாம்.

௧௧ கட்டு கிணறு - (Built-in well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

௧௨. கடல் - (Sea) நிலப்பரப்புக்கு அருகே உள்ள ஆழிநீர்நிலை.

௧௩. கம்வாய்/கம்மாய் - (Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

௧௪. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

௧௫. கால் - (Channel) நீரோடும் வழி.

௧௬. கால்வாய் - (Supply channel to a tank) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு/இவற்றை நீர்-ஊட்டும்/இணைக்கும் வழி.

௧௭. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை.

௧௭. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

௧௯. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

௨०. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

௨௧. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

௨௨. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

௨௩. குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

௨௪. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

௨௫. கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

௨௬. வாளி - (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

௨௭. கேணி - (large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

௨௮. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

௨௯. சுனை - (Mountain Pool) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

௩०. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

௩௧. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

௩௨. தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

௩௩. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

௩௪. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

௩௫. தெப்பக்குளம் - (Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

௩௬. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

௩௭. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

௩௮. நீராவி/நீராழி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

௩௯. பிள்ளைக்கிணறு - (Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

௪०. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

௪௧. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

௪௨. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

௪௩. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

௪௪. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

௪௫. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

௪௬. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

௪௭. வாய்க்கால் - (Small water course out from a reservoir) ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கால்கள். 

௪௮. சிற்றாறு - (Brook) பல ஓடைகளும் கால்களும் ஒன்றிணைந்து சிற்றாறுகளாகும்.  சிற்றாறுகள் பெரு ஆற்றில் கலக்கு.

௪௯. பெருங்கடல் - (Ocean) நிலப்பரப்புகளிநின்று தொலைவில் உள்ள ஆழிநீர்நிலை.

௫०.. காயல் - (Backwater) கடல் ஓதத்தினால் கடல்நீர் நிலத்தினுள் புகுந்து குளமாக்குவது. 

ஐம்பது வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக ஏதோ ஒருவகையில் அழித்துவருவதால் மாந்தர்களின் எதிர்காலம்  ஒரு கேள்விக்குறியாகியுள்ளது.

பகிர்வு: சேசன்_ஏழுமலை@சொல்லாய்வு


நாற்காலி பூதம்

நாற்காலி பூதம்

ஓடிவந்த குழந்தை நாற்காலியில் தட்டி கீழே தடபடோல் என விழுந்து ஓவென அழுதபொழுது, மற்ற பெரியவர்கள் "அழாதே அழாதே" எனத் தேற்றினார்கள்.  குழந்தையோ அழுகையை நிறுத்தியபாடில்லை.  நாற்காலியைக் சுட்டிக் காண்பித்துக் காண்பித்து விண்விண்ணென்ற வலியாலும் எதிர்பாரா வீழ்ச்சியின் அதிர்ச்சியாலும் பெருத்த குரலில் அழுதுதது.  கடைசியில் விரைந்து வந்த ஆச்சி, குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு நாற்காலியின் அருகே போய் குழந்தையைத் "தடுக்கிவிட்ட" அந்த 'நாற்காலி பூதத்தை', "குழந்தைய கீழே தள்ளிவிடுவியா.. தள்ளிவிடுவியா.. ம்ம்ம்ம்.. எவ்வளவு தைரியம் உனக்கு.. ம்ம்ம்.. பிச்சுப்புடுவேன் பிச்சு" என்று பொய்ச்சினம் கொண்டவாறே, நாற்காலியை நான்கு தடவை ஓங்கி அடித்தார்...  என்ன வியப்பு, குழந்தை அழுகையை லேசாக நிறுத்தி, விசும்பலூடே மெல்லிய புன்னகையும் உதிர்க்க ஆரம்பித்தது.. இதைக் கவனித்த ஆச்சி, குழந்தைக்கு முத்தம் கொடுத்து குளமான கண்களை தன் முந்தானையால் துடைத்துவிட்டு, அந்த 'நாற்காலி பூதத்திற்கு' மேலும் நான்கு அடிகளை, "செய்வியா.. குழந்தைய தடுக்கிவிடுவியா.." என்றவாறே கொடுத்தார்.  இதைக்கண்ட குழந்தை, கிட்டத்தட்ட தன் அழுகையை நிறுத்தி, கண்கள் மலர, சிரித்தவாறே தானும் அந்த நாற்காலியை அடிக்கவேண்டும் என தன் சிறு கைகளை நீட்டி ஆட்டியது.

நம்மில் பெரும்பாலானோரும் நம் மழலைப்பருவத்தில் இந்த "நாற்காலி பூதத்தை" நைய்யப்புடைத்திருப்போம்.  அகவை வளர வளர, 'நாற்காலி பூதத்தின்' வடிவமும் பொருளும் மாறியதே தவிர அழிந்துவிடவில்லை என்பதை கவனிக்கவும்.  அது, புளியமர பூதமாகவும் கல்லறை பூதமாகவும் நிழல் பூதமாகவும் கொலுசு பூதமாகவும் சுண்ணாம்பு கேட்கும் இருட்டு பூதமாகவும் தப்பு செய்தால் உறங்கும்போது கண்ணைக் குத்தும் பூதமாகவும்  நன்மை செய்யும் பூதமாகவும் தன்னை அழித்துக்கொள்ளும் பூதமாகவும் தண்டனை பெற்ற பூதமாகவும் வணங்கப்படவேண்டிடும் பூதமாகவும் கொண்டாடப்படவேண்டிய பூதமாகவும் பாவங்களைப் போக்கும் பூதமாகவும் தூண்துரும்பு பூதமாகவும் அவதார பூதமாகவும் விண்வெளி பூதமாகவும் ஒற்றை பூதமாகவும் தந்தை-தாய்-மகன்-மகள் பூதமாகவும் இன்னும் பலவகை பூதங்களாகவும் நாம் கற்கும் கல்விக்கும் நாம் கேட்கும் செய்திகளுக்கும் நம் கற்பனைகளுக்கும் ஏற்படி நம் மூளைக்குள் பரிணமித்திருக்கிறது.

அடிப்படையில் மாந்தர்களின் மூளைக்கு, ஒரு 'நாற்காலி பூதமானது' ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் தேவைப்படுகிறது.  காட்டு விலங்குகளின் இடையேயும் கொடுமையான எதிரிகளின் இடையேயும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அஞ்சி அஞ்சி வாழ்த மாந்தரினக் குரங்கிற்கு, நகரமயமாக்குதலின் விளைவாக, மிகக்குறுகிய அண்மைக்காலமாகத் தான், ஓரளவு நிம்மதியான உறக்கமும் வாழ்க்கையும் கிடைக்கப்பெற்றுள்ளது.  இன்றளவும் உங்களை சுற்றிப்பாருங்கள் நிம்மதியாக உறங்கமுடியாத இலட்சக்கணக்கான மக்கள் தென்படுவர்.  ஒரு மாந்தருக்கு, அவரை நிம்மதியாக வாழவிடாமலும், உறங்கவிடாமலும் செய்வதானது, ஒரு 'நாற்காலி பூதத்திலிருந்து' பரிணமித்த சிலவகை பூதங்களே என நம்புவதை நோக்கிச் செல்வதைவிட வேறு வழியில்லாமல் அமைந்திருக்கிறது, அம்மாந்தரின் மூளையின் பக்குவப்பாடும் பழக்கப்பாடும்.   இப்பக்குவப்பாடும் பழக்கப்பாடும், அம்மாந்தரின் அறிவு வளர்ச்சிக்கு தடையாக அமையும் வாயிலில்லா திண்கற்காரைச் சிறைச்சுவர்கள்களும் கூரையும் தரையுமாக ஆகின்றன.  அதனை உடைத்தெறிவது சற்று கடினமே.  உடைத்தெறிந்து வெளிவந்தால், விடுதலைபெற்ற பருந்துபோல் எல்லைகளில்லாத எண்ணங்களில் உயரப்பறந்து பரந்துபட்ட அறிவுக்காட்சியக் கண்டுகளிக்கலாம்..  

உடைத்தெறிந்து வெளியேறுங்கள்..

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...