ஐந்தாம் தமிழ்
"நான் ஏன் தமிழ் பயிலவேண்டும்?" என வினவும் மக்கள் ஒருபொழுதும் "நான் ஏன் பிரஞ்சு மொழி பயிலவேண்டும்?", "நான் ஏன் சப்பானிய மொழி பழகவேண்டும்?", "நான் ஏன் சீன மொழி பயிலவேண்டும்?" என வினவுவதில்லை. அதுக்குக் காரணம் இம்மொழிகள் பயின்றால் என்னென்ன வருமானம் சார்ந்த பயன்கள் உள்ளன, என இவ்வணிகமயமான உலகம் அவர்களுக்கு தெளிவாக விளக்கிவிடும். இணையத்திடமும் இயூட்டியூபிடமும் கேட்டாலே புள்ளிவிவரத்தோடே சொல்லிவிடும்.
ஆனால் "தமிழ் பயின்றால் என்ன வகையான பொருளாதாரப் பயன் இருக்கிறது?" என யாரும் எதுவும் சொல்லித்தரப்போவதில்லை. ஏனென்றால், அவ்வாறான ஒன்றை நம் முன்னோர்களும் அரசியலாளர்களும் உருவாக்கத் தவறிவிட்டனர். தமிழ் மட்டுமல்ல, இவ்வுலகில் இன்றைய 90% மொழிகளுக்கும் வணிகப்பயன் இல்லை. ஆனால், வணிகப்பயன் இல்லாத மொழியானது, இன்னும் அரை நூற்றாண்டுகூடத் தாக்குப்பிடிக்காது என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. எனவே, நம் தாய்மொழியாம் தமிழுக்கென்று ஒரு வணிக/வர்த்தக/பொருளாதாத் "தமிழ்" ஒன்றை உருவாக்குவதே தமிழர்களாகிய நமக்கு முதன்மையான பொறுப்பாக இருந்திடல் வேண்டும்.
சங்ககாலந் தொட்டு, நம்மொழி முத்தமிழ் மொழி (இயல், இசை, நாடகம்/கூத்து) என அழைக்கப்படுகிறது. இம்முதமிழுக்காகவும் ஏகப்பட்ட தமிழர்கள் காலங்காலமாக தங்கள் உழைப்பைக் கொட்டிய வண்ணம் உள்ளனர், என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. நான்காம் தமிழாக அறிவியலானது இந்நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது. அறிவியற்றமிழுக்காக சில தமிழ்பற்றுள்ள தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக தங்காளால் இயன்ற அளவுக்கு தொண்டுபுரிந்து வருகின்றனர். ஆனாலும் அவ்வாறானவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. அறிவியற்றமிழின் மேம்பாட்டிற்காக அரசாங்கங்களின் பங்களிப்பும் மிகமிகக்குறைவே. இதில் பெருவாரியான அறிஞர்களும் அறிவியலாளர்களும் அரசாங்களும் அரசியல்வாதிகளும் ஈடுபடாததற்குக்காரணமே, தமிழுக்கென்று இல்லாமல் போன ஒரு வணிக/வர்த்தக/பொருளாதார/வருமானம்சார்ந்த கோணமே.
ஆதலால் தான் இவ்வணிக-வர்த்தக-பொருளாதாரத்தை ஐந்தாம் தமிழாகச்சேர்த்துக்கொண்டு, அதன் பொருட்டு தமிழை கொண்டுசென்றால், தமிழைப்பயில எல்லாரும் விரும்புவர், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்ல அனைவரும் விழைவர்.
ஐந்தாம் தமிழ்க் கூறாக பல துறைகள் ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அறிவேன். என்றாலும், வணிக-வர்த்தக-பொருளாதாரமானது ஐந்தாம் தமிழ்க்கூறாக இருப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.
"வணிக-வர்த்தக-பொருளாதாரத்" தமிழ் என்பதற்கு ஒரு "சிறு" பெயரை யாராவது பரிந்துரைசெய்தால் பயனுள்ளதாக இருக்கும். வணிக-வர்த்தக-பொருளாதாரத் தமிழானது, தமிழை வைத்து வணிகம் செய்வதல்ல, மாறாக தமிழுக்கு வணிக-வர்த்தக-பொருளாதாரத் தன்மையை/மதிப்பை/உயர்வை அளிப்பது என்பது என் சிறு அறிவிற்க்கெட்டிய ஒன்று. இவ்வாறான ஒரு முயற்சிக்கு வணிக/வர்த்தக/பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment