Wednesday, May 29, 2024

கல்வியின் தரம்

கல்வியின் தரம்


நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் படிப்பைப்  பயின்றுவரும் நான்கு இறுதியாண்டு மாணவர்களை தொலைகாணொளிக்காட்சி வாயிலாக நேர்முகம் காணும் வாய்ப்பை நான் பணிபுரியும் அலுவலகம் வாயிலாகப் பெற்றேன்.  அவர்கள் அனைவரும் இறுதியாண்டுக்கான திட்டப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் பைத்தானில் சாட்-சீப்பீட்டி தொடர்பான எதையோ செய்கிறார்கள். ஆனாலும் ஒருவனுக்கும் கணினியியலின் நிரலியக்கத்தின் அடிப்படைகள் தொடர்பான எந்த ஒரு எளிய கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.  மேலும் தரவுக் கட்டமைப்பு தொடர்பாகவும் நான் கேட்ட எந்த ஒரு அடிப்படைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத்தெரியவில்லை.  

சரி, இந்த நான்காண்டுப் படிப்பில் என்னென்ன நிரலாக்க மொழிகளை பயிற்றுவிக்கிறார்கள் எனக் கேட்டதுக்கு 'சி' மற்றும் 'சாவா' மொழிகளின் அடிப்படைகள் மட்டுமே  கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றார்கள்.  அதிலிருந்து நான் கேட்ட எந்த ஒரு அடிப்படைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.  இம்மொழிகளில் என்னென்ன நிரல்கள் எழுதப் பயிற்சியளிக்கப்படுகிறது எனக் கேட்டதுக்கு 'அணியில் ஒரு எண்ணைத் தேடுவது', 'அணியை ஏறுவரிசையாக அடுக்குவது', 'இருபடி சமன்பாடு' போன்றவை என்றார்கள்.  
இயக்கமுறைமை தொடர்பான நினைவகமேலாணாமை, செயலாக்கமேலாண்மை, இளைகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டதுக்கு பேந்தப்பேந்த விழித்தார்கள்.
நாட்டில் கல்வித்தரத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

1995 இல் கணினியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை (பொறியியல் கூட இல்லை) நான் படித்துமுடித்தபோது,  எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட  'பேசிக்', 'போர்ட்டிரான்', 'கோபால்', 'பாசுக்கல்', 'சி', 'சி++' போன்ற நிலாக்க மொழிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது முப்பது நிரல்களை செய்துபார்த்து அந்த நிரலாக்கத்தின் அடிப்படை அறிவை ஓரளவு பெற்றிருந்தோம்.  இவை போக பலர் தனியார் பயிற்சியகங்களில் 'விசுவல் பேசிக்', 'ஆரக்கிள்' போன்றவைகளையும் படிக்கத்தொடங்கியிருந்தோம்.  ('சாவா' அப்போது வந்திருக்கவில்லை)

இப்போது எல்லாரும் 'பைத்தான்' அல்லது 'சாவா' என்பவைகளில் மட்டுமே இணையத்தில் கிட்டும் நிரல்களைவைத்தே எதையாவது செய்ய முற்படுகிறார்கள்.  நிரலாகமொழிகள் தொடர்பான அறிவைப் பெறுவதைப்பற்றி நான் இங்கு பேசவில்லை, மாறாக இம்மாணவர்கள் மூன்று-நான்கு ஆண்டுகளாகக் கற்ற தொழில்நுட்பத்தில் எந்த வகையான அறிவையும் அது தொடர்பான தேடுதலையும் பெற்றுள்ளார்கள் என்பதைப் பற்றியே.

என்றாலும் இரக்கத்தின் அடிப்படையில்  அவர்களில் சில கேள்விகளுக்குப் பதிலளித்த இரு மாணவர்களை தேர்ந்தெடுத்தேன்.

No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...