Saturday, September 13, 2025

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும்


.........................................................இதழ்
ஒண் செம் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயம் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து, உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வால் பூ குடசம்,
எருவை, செருவிளை, மணி பூ கருவிளை,
பயினி, வானி, பல் இணர் குரவம்,
பசும்பிடி வகுளம், பல் இணர் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை மருதம், விரி பூ கோங்கம்,
போங்கம், திலகம், தேம் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெரும் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறும் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணி குலை, கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூ தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர் கொன்றை,
அடும்பு அமர் ஆத்தி, நெடும் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூ பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர் பூ தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைம் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நல்லிருள்நாறி,
மா இரும் குருந்தும், வேங்கையும், பிறவும்
அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்
- குறிஞ். 61 - 96

  • Angiosperms
    • Mangoliids🡲Mangoliales🡲Mangoliaceae
      • சண்பகம் - Mangolia Champaka
    • Nymphaeales🡲Nymphaeaceaea
      • ஆம்பல், அல்லி - Nymphaea pubescens
      • குவளை, வெள்ளையல்லி - Nymphaea odorata
      • மணிக்குலை, கருங்குவளை - Nymphaea rubra
      • நெய்தல், வெள்ளாம்பல் - Nymphaea nouchali
    • Monocots
      • Dioscoreales🡲Dioscoreaceae
        • வள்ளி - Dioscorea pentaphylla
      • Asparagales🡲Hypoxidaceae
        • நிலப்பனை, குறத்திநிலப்பனை - Curculigo orchioides
      • Alismatales🡲Aponogetonaceae
        • கொட்டி - Aponogeton natans
      • Commelinids
        • Areclaes🡲Arecaceae
          • பாளை, தென்னை - Cocos nucifera
          • வஞ்சி, பிரம்பு, சோத்துப்பிரம்பு, அரினி - Calamus rotang
        • Zingiberales🡲Musaceae
          • வாழை - Musa acuminata
        • Poales
          • Poaceae
            • உந்தூழ், பெருமூங்கில் - Dendrocalamus giganteus [OR] Bambusa bambos
            • வேரல், சிறுமூங்கில் - Dendrocalamus strictus [OR] Arundinaria weightiana
          • Cyperaceae
            • எருவை, கோரை - Cyperus rotundus
      • Lilales🡲Colchicaceae
        • காந்தள், செங்காந்தள், தோன்றி - Gloriosa superba
        • கோடல் வெண்காந்தள் - Gloriosa modesta
      • Pandanales🡲Pandanaceae
        • கைதை - Pandanus odorifer
        • தாழை - Pandanus fascicularis
    • Eudicots
      • Proteales🡲Nelumbonaceae
        • தாமரை, முளரி - Nelumbo nucifera
      • Santalales🡲Santalaceae
        • ஆரம், சந்தனம் - Santalum album
      • Caryophyllales
        • Amaranthaceae
          • குரீஇப்பூளை, பூளை, சிறுபூளை, சிறுபீளை, பூளாப்பூ, பொங்கப்பூ, கண்பூளை, கண்பீளை, சிறுகண்பீளை, காட்டுக்களைப்பூடு, தேங்காய்ப்பூ, பீளைசாறி, கற்பேதி, பாசாணபேதி - Ouret lanata
        • Plumbaginaceae
          • செங்கொடுவேரி, செங்கொடிவேலி - Plumbago indica
          • வேரி - Plumbagi rosa
      • Superasterids🡲Asterids
        • Solanales🡲Convolvulaceae
          • மணிச்சிகை - Ipomaea sepiaria
          • அடும்பு - Ipomaea pes-caprae
          • பகன்றை-2, கிலுகிலுப்பை-2 - Operculuma turpenthun
          • +கூதாளம், கூதளம், கூதாளி, கூதளி, வெண்கூதாளம், தாளி, வெண்டாளி, செங்கூதாளம், தாளிக்கொடி, தாளக்கொடி, வெண்டாளி - Ipomoea sepiaria
        • Asterales🡲Asteraceae
          • கண்ணி, மருக்கொழுந்து - Artamisia absinthium
          • கரந்தை - Sphaeranthus indicus
          • +கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை, கையாந்தகரை - Eclipta prostrata
        • Ericales
          • Lecythidaceae
            • மராஅம், மரவம், கடம்பு, செங்கடம்பு, அடம்பு, அடப்பு - Barringtonia acutangula
          • Primulaceae
            • அனிச்சம் - Anagal arvensis
          • Saporaceae
            • பாலை, உலக்கைப்பாலை, காணுப்பாலை - Manilkara hexandra
            • வகுளம், மகிழம், இலஞ்சி, மகிழ் - Mimusops elengi
        • Lamiids
          • Gentianales
            • Apocynaceae
              • புழகு, எருக்கு, நீல எருக்கு, வெள்ளெருக்கு - Calirtopis gigantea
              • குடசம், குடசப்பாலை மலைமுல்லை - Holarrhena pubescens [OR] வெட்பாலை - Wrightia tinctoria [OR] பூவரசு?? - Malvales🡲Malvaceae🡲Thespesia populbea???
              • நந்தி, நந்தியாவட்டை, நந்தியார்வட்டை - Tabernaemontana divaricata|coronaria
            • Rubiaceae
              • குரவம், குரவகம், குரா, மலைவசம்பு - Tarenna gaertn
              • வெட்சி, இட்டிலிப்பூ, தெட்சி, செச்சை, குல்லை, சேதாரம், செங்கொடுவேரி - Ixora saurei/coccinea/malabarica/lawsonii/johnsonii
              • பிடவம், பிடவு - Randia malabarica
              • தணக்கம், நுணா, நுணவு, நுணவம், மஞசணத்தி, மஞ்சள்நாறி, மஞ்சள்வண்ணா, மஞ்சலாட்டி - Morinda coreia
          • Lamialis
            • Bignoniaceae
              • பாதிரி - Stereospermum chelonoides
            • Acanthaceae
              • குறிஞ்சி, நீலக்குறிஞ்சி - Strobilanthes kunthiana
              • சுள்ளி, செம்முள்ளி, கருங்காலி, கருத்தாலி, தும்பி, ஆச்சா, மரா, சாலம் - Barleria prionitis
            • Lamiaceae
              • குளவி-1 - Pogostemon cablin
              • சிந்து, சிந்துவரம், நொச்சி - Vitex negundo
              • தும்பை, முடிதும்பை - Leucas aspera
              • துழாஅய், துழாய், திருத்துழாய், கருந்துளசி - Ocimum tenuiflirum|sanctum
              • வடவனம், செந்துளசி, திருநீற்றுப்பச்சை, நத்தைச்சூரி, நத்தைச்சுண்டி, குழிமீட்டான், தாருணி, கடுகம், தொலியாகரம்பை - Ocimum basilicum
            • Oroxyleae
              • குளவி-2 - Millingtonia hortensis
            • Oleaceae
              • கொகுடி - Jasminum pubescens|multiflorum
              • செம்மல், சாதிமல்லி - Jasminum grandiflorum
              • நள்ளிருணாறி, இருள்நாறி, இருள்வாசி, இருவாச்சி, அடுக்குமல்லி - Jasminum sambac
              • தளவம், சாமந்தி, செம்முல்லை - Jasminum polyanthum/elongatum
              • பித்திகம், காட்டுமல்லிகை - Jasminum augustifolium
              • முல்லை, நித்தியமல்லி - Jasminum auriculatum
              • மௌவல், மரமல்லி, பன்னீப்பூ - Jasminum officinale
              • சேடல், பவழமல்லி, பவளமல்லி, பாரிசாதம் - Nyctanthes arbortristis
      • Superrosids
        • Rosids
          • Cucurbitalis🡲Cucurbitaceae
            • பீரம், பீர்க்கு - Luffa aegyptiaca/acutangula
          • Sapindales🡲Anacardiaceae
            • புளிமா - Spondias pinnata
            • மா, தேமா - Mangifera indica
          • Calastrales🡲Celastraceae
            • வானி, ஏர்க்குளி - Euonymus divhotomys
          • Brassicales
            • Capparaceae
              • மாவிலங்கம், கூவிரம், மாவிலங்கு, மாவிலங்கம், குமரகம் - Crateva religiosa
            • Salvadoraceae
              • பாங்கர், உகாய் - Salvadora persica
          • Sapindales
            • Sapindaceae
              • +கொற்றான், உழிஞை, முடக்கொத்தான், எரிக்கொடி - Cardiospermum halicacabum
            • Meliaceae
              • +வேமாபு - Azadirachta indica
            • Rutaceae
              • குருந்தம், குருந்து, காட்டுகொளேஞ்சி, காட்டெலுமிச்சை, காட்டுநாரங்கம் - Atalantia monophylla
              • கூவிளம், வில்வம்(சங்) - Aegle marmelo
              • நரந்தம் - Citrus aurantium
              • நறவம், இலவங்கம்(சங்), கிராம்பு(போர்த்து) - Luvunga scandens
          • Rosales
            • Rhamnaceae
              • சூரல், சூரை, சூரையிலந்தை, சூரைமுள் - Ziziphus oenopolia
            • Moraceae
              • குருகிலை, குருகு - Ficus virens
              • +பலா - Artocarpus hetrophyllys
          • Malvids
            • Myrtales
              • Melastomataceae
                • காயா, காயாம், பூவை, குயம்பு, காசா, அஞ்சனி, பூங்காலி - Memecylon umbrllatum/ed
              • Lythraceae
                • குரலி, கருந்தாமக்கொடி - Trapa natans/bicornis/rossica
              • Combretaceae
                • எறுழம், எறுழ் - Getonia floribunda
                • மருதம், மருது, கருமருது, வெண்மருது, நீர்மருது, குலமருது - Terminalia elliptica/arjuna
            • Malvales
              • Thymelaeaceae
                • காழ்வை, அகில் - Aquilaria malaccensis
              • Bixaceae
                • கோங்கம், கோங்கிலவு - Cochlospermum religiosum
              • Dipterocarpaceae
                • பயினி, பின்னியாக்கம் - Vateria indica
              • Malvaceae
                • இலவம், இலவு - Bombax ceiba [OR] Ceiba pentandra??
                • பாரம், பருத்தி - Gossypium herbaceum
      • Fabids
        • Malpighiales
          • Malpighiaceae
            • குருக்கத்தி - Hiptage benghalensis|madabolta
          • Calophyllaceae
            • புன்னாகம் - Caliphyllum polyanthum/elatum
            • புன்னை - Caliphyllum inoplyllum
            • நாகப்பூ - Mesua ferrea
            • வழை, சுரப்புன்னை - Mammea suriga [OR] Ochrocarpos longifolius
          • Ochnaceae
            • செருந்து, செருந்தி, சிலந்தி - Ochna squarrosa
          • Clusiaceae
            • பசும்பிடி, பச்சிலை - Garcinia xanthochymus
          • Euphorbiaceae
            • காஞ்சி, ஆத்தரசு, ஆற்றுப்பூவரசு - Mallotus nudiflorus
            • தில்லை - Excoecaria agallocha
        • Fabales
          • Fabaceae
            • பிண்டி, அசோகம், அசோகு, ஆயில் - Saraca asoca/indica
            • Bauhinia
              • ஆர், ஆத்தி - Bauhinia racemosa/tomentosa
            • Caesalpinioideae
              • ஞாழல்-1, பொன்னாவரசு-1, புலிநகக்கொன்றை-1 - Caesalpinia cucullata
              • ஞாழல்-2, பொன்னாவரசு-2, புலிநகக்கொன்றை-2 - Senna sophera
              • வாரம், ஆவாரை, ஆவிரை, ஆவாரம், துவகை, மேகாரி - Senna auriculata
              • கொன்றை, சரக்கொன்றை, கொன்னை, அசராதி, கவுதி, கவுசி - Cassia fistula
              • திலகம், மஞ்சாடி, ஆனைக் குன்றிமணி, பெருங்குன்றி, குண்டுமணி - Adananthera pavonina
              • மாரோடம், செங்கருங்காலி - Senegalia catechu
              • போங்கம், புங்கை, புங்கு, புன்கு, பூந்தி, கிரஞ்சம் - Adananthera pavonina
              • வாகை - Albizia lebbeck
            • Faboideae
              • வேங்கை, போங்கம் - Pertocarpus marsupium
              • அதிரல், புனலி - Derris scandens
              • அவரை - Lablab purpureus
              • கருவிளை, கருவிளம், நீலச்சங்கு, காக்கணம், காக்கட்டான் - Clitoria ternatia typica
              • செருவிளை, வெண்சங்கு, வெள்ளைக்காக்கம், கரிசண்ணி - Clitoria ternatia albiflira
              • ஈங்கை - Acacia ceasia
              • பகன்றை-1, கிலுகிலுப்பை-1 - Pongamia pinnata
              • பலாசம், பலாசு, புரசு, பொரசு, புரசை - Butea monosperma|frondosa
              • குறுநறுங்கண்ணி, குன்று, குன்றி, குன்றிமணி - Abrus precatorius
              • +முருக்கு, முள்முருக்கு, முள்முருங்கை, கல்லியாண முருங்கை, கிஞ்சுகை, கவிர், புழகு, மலையெருக்கு - Erythrina veriegata

Wednesday, May 29, 2024

கல்வியின் தரம்

கல்வியின் தரம்


நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் படிப்பைப்  பயின்றுவரும் நான்கு இறுதியாண்டு மாணவர்களை தொலைகாணொளிக்காட்சி வாயிலாக நேர்முகம் காணும் வாய்ப்பை நான் பணிபுரியும் அலுவலகம் வாயிலாகப் பெற்றேன்.  அவர்கள் அனைவரும் இறுதியாண்டுக்கான திட்டப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் பைத்தானில் சாட்-சீப்பீட்டி தொடர்பான எதையோ செய்கிறார்கள். ஆனாலும் ஒருவனுக்கும் கணினியியலின் நிரலியக்கத்தின் அடிப்படைகள் தொடர்பான எந்த ஒரு எளிய கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.  மேலும் தரவுக் கட்டமைப்பு தொடர்பாகவும் நான் கேட்ட எந்த ஒரு அடிப்படைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத்தெரியவில்லை.  

சரி, இந்த நான்காண்டுப் படிப்பில் என்னென்ன நிரலாக்க மொழிகளை பயிற்றுவிக்கிறார்கள் எனக் கேட்டதுக்கு 'சி' மற்றும் 'சாவா' மொழிகளின் அடிப்படைகள் மட்டுமே  கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றார்கள்.  அதிலிருந்து நான் கேட்ட எந்த ஒரு அடிப்படைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.  இம்மொழிகளில் என்னென்ன நிரல்கள் எழுதப் பயிற்சியளிக்கப்படுகிறது எனக் கேட்டதுக்கு 'அணியில் ஒரு எண்ணைத் தேடுவது', 'அணியை ஏறுவரிசையாக அடுக்குவது', 'இருபடி சமன்பாடு' போன்றவை என்றார்கள்.  
இயக்கமுறைமை தொடர்பான நினைவகமேலாணாமை, செயலாக்கமேலாண்மை, இளைகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டதுக்கு பேந்தப்பேந்த விழித்தார்கள்.
நாட்டில் கல்வித்தரத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

1995 இல் கணினியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை (பொறியியல் கூட இல்லை) நான் படித்துமுடித்தபோது,  எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட  'பேசிக்', 'போர்ட்டிரான்', 'கோபால்', 'பாசுக்கல்', 'சி', 'சி++' போன்ற நிலாக்க மொழிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது முப்பது நிரல்களை செய்துபார்த்து அந்த நிரலாக்கத்தின் அடிப்படை அறிவை ஓரளவு பெற்றிருந்தோம்.  இவை போக பலர் தனியார் பயிற்சியகங்களில் 'விசுவல் பேசிக்', 'ஆரக்கிள்' போன்றவைகளையும் படிக்கத்தொடங்கியிருந்தோம்.  ('சாவா' அப்போது வந்திருக்கவில்லை)

இப்போது எல்லாரும் 'பைத்தான்' அல்லது 'சாவா' என்பவைகளில் மட்டுமே இணையத்தில் கிட்டும் நிரல்களைவைத்தே எதையாவது செய்ய முற்படுகிறார்கள்.  நிரலாகமொழிகள் தொடர்பான அறிவைப் பெறுவதைப்பற்றி நான் இங்கு பேசவில்லை, மாறாக இம்மாணவர்கள் மூன்று-நான்கு ஆண்டுகளாகக் கற்ற தொழில்நுட்பத்தில் எந்த வகையான அறிவையும் அது தொடர்பான தேடுதலையும் பெற்றுள்ளார்கள் என்பதைப் பற்றியே.

என்றாலும் இரக்கத்தின் அடிப்படையில்  அவர்களில் சில கேள்விகளுக்குப் பதிலளித்த இரு மாணவர்களை தேர்ந்தெடுத்தேன்.

Friday, March 1, 2024

பாலு

 பாலு


"நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே
உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."

 அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்படியான வரிகள் மிக மெல்லிதாக ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்படிப்பட்ட பாடல் வரியை முதன்முதாய்க் கேட்கிறேன்.. ஏதோ புதுப்பாடல் என எண்ணிக்கொண்டிருக்கும்போதே "ஒற்றைமுறைக் கடவெண்?" என்றார் ஓட்டுனர்.  திறனியை துழாவி 6790 என்று "காற்பதனி எனக்குத் தேவையில்லை.  உங்களுக்கு வேண்டாமென்றால் அணைத்துவிடுங்கள்" என்று நான் கூறுவதற்குள்..

"உன்னைத்தாண்டி வாவா வெளியே
உன்மீ தெனக்கேன் கோபம் பெண்ணே..."

என்ற வரிகளும் தெளிவ்க மிக மெல்லியதாகக் கேட்டது.. என் உள்ளம், 'யாரிந்த கவிஞர்? இவ்வளவு கொசாசைத்தமிழில் பாடலை எழுதியுள்ளார். அந்த வரிகளை செந்தமிழிலேயே அழகாக எழுதியிருக்கலாமே..' என்றெல்லாம்  அசைபோடத்தொடங்கியிருந்தது.  வண்டி அசோக்நகர் வளைவில் சல்லெனத் திரும்பியதில் அந்நினைவுகளிலிருந்து மீண்டும் இயல்நினைவுக்கு வந்தேன்.. 

"உனை நித்தம் நினைக்குமென் தலைமேலே
உன் காதல் தீயை வைத்தாயே.."

ஆமாம், பாடுவது யார்? அப்படியே பாலு போலவே பாடுகிறாரே.  யாராக அருக்கும்? ஆ, அவரது மகன் சரண்.  அருமையாகப் பாடுகிறாரே.. ஓட்டுனரிடம் "ஒலியளவை சற்று கூட்டிடுங்கள்" என்றேன்..

"நாள் காட்டித் தாளாய் எனைக் கிழித்தாலும்
நான் வாழ்த்துப் பாடுவேன் கண்ணே.."

ச்ச.. அப்படியே அப்பாவின் குரலிலேயே இம்மியளவும் பிசகாமல் பாடியுள்ளாரே.. அருமை, அவரின் திறமையில் நல்ல முன்னேற்றம்.  முன்னொரு முறை ஒரு நேர்காணலில் தனது மகனைப்பற்றி பாலு கூறிடும்போது, "அவர் இன்னும் நிறைய பயிற்சிபெறவேண்டும்.  பாடும்போது அவருக்கு கவனகுறைவு இருக்கிறது.  சிலநேரம் அதிரவலை பிறழலும் ஏற்பட்டுவிடுகிறது.. இன்னும் இன்னும் கவனம் தேவை...".  ஆமாம், அதை நானும் சில மேடைநிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன்.  அப்போது இப்பாடலை...

"என் காதல் பற்றி என்ன சொல்ல
அந்த நினைவே என்னை மெதுவாய்க் கொல்ல..."

இது நம்ம பாலுவே தான்..  பாலுவே தான்..  பாலுவே தான்..  அனைவரையும் ஏங்கவைத்துவிட்டு இப்படிச் செத்துப்போயிட்டியேடா..  பெருந்தொற்றில் எவன் வேணுன்னாலும் செத்துப்போயிருக்கட்டும், ஆனா நீ...

"நான் மண்ணுக்குள்ளே போகும் முன்னே
என் காதல் மேய்தான் சொல் என் கண்ணே..."

என் கண்கள் இரண்டும் என்னை அறியாமல் குளமானது.  கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.  வரிகளின் பொருள்களை அதன்பிறகு நான் கவனிக்கவே இல்லை.  அந்த முழங்கும் குரலும் சிரித்த முகமும் அகவை பாராது அனைவரிடமும் பணிவோடுப் பழகும் பண்பும் தொலைக்காட்சிகளில் வரும் பாட்டுப்போட்டிகளில் அக்குழந்தைகளை அன்போடு ஊக்குவிக்கும் அழகும்... நல்ல மாந்தர்.. 
வண்டி வீட்டருகே வந்திருந்தது.  பணத்தை கொடுத்துவிட்டு வீட்டைநோக்கி நடக்கலானேன். என் கண்ணில் மீண்டும் ஈரம். மெதுவாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டே நடந்தேன்..

"என்னை விட்டு எங்கே நீ சென்றாய்
என்னுள் கொண்ட காதலை நீ கொன்றாய்..."

இசை: ஆரிசு செயராசு
வரிகள்: கபிலன்
திரைப்படம்: தேவ் (2019)
குரல்: சி.ப.பாலசுப்பிரமணியம்




Monday, December 25, 2023

ஐந்தாம் தமிழ்

ஐந்தாம் தமிழ்

"நான் ஏன் தமிழ் பயிலவேண்டும்?" என வினவும் மக்கள் ஒருபொழுதும் "நான் ஏன் பிரஞ்சு மொழி பயிலவேண்டும்?", "நான் ஏன் சப்பானிய மொழி பழகவேண்டும்?", "நான் ஏன் சீன மொழி பயிலவேண்டும்?"  என வினவுவதில்லை.  அதுக்குக் காரணம் இம்மொழிகள் பயின்றால் என்னென்ன வருமானம் சார்ந்த பயன்கள் உள்ளன, என இவ்வணிகமயமான உலகம் அவர்களுக்கு தெளிவாக விளக்கிவிடும்.  இணையத்திடமும் இயூட்டியூபிடமும் கேட்டாலே புள்ளிவிவரத்தோடே சொல்லிவிடும்.

ஆனால் "தமிழ் பயின்றால் என்ன வகையான பொருளாதாரப் பயன் இருக்கிறது?" என யாரும் எதுவும் சொல்லித்தரப்போவதில்லை.  ஏனென்றால், அவ்வாறான ஒன்றை நம் முன்னோர்களும் அரசியலாளர்களும் உருவாக்கத் தவறிவிட்டனர்.  தமிழ் மட்டுமல்ல, இவ்வுலகில் இன்றைய 90% மொழிகளுக்கும் வணிகப்பயன் இல்லை.  ஆனால், வணிகப்பயன் இல்லாத மொழியானது, இன்னும் அரை நூற்றாண்டுகூடத் தாக்குப்பிடிக்காது என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று.   எனவே, நம் தாய்மொழியாம் தமிழுக்கென்று ஒரு வணிக/வர்த்தக/பொருளாதாத் "தமிழ்" ஒன்றை உருவாக்குவதே தமிழர்களாகிய நமக்கு முதன்மையான பொறுப்பாக இருந்திடல் வேண்டும்.

சங்ககாலந் தொட்டு, நம்மொழி முத்தமிழ் மொழி (இயல், இசை, நாடகம்/கூத்து) என அழைக்கப்படுகிறது.  இம்முதமிழுக்காகவும் ஏகப்பட்ட தமிழர்கள் காலங்காலமாக தங்கள் உழைப்பைக் கொட்டிய வண்ணம் உள்ளனர், என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே.  நான்காம் தமிழாக அறிவியலானது இந்நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.  அறிவியற்றமிழுக்காக சில தமிழ்பற்றுள்ள தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக தங்காளால் இயன்ற அளவுக்கு தொண்டுபுரிந்து வருகின்றனர்.  ஆனாலும் அவ்வாறானவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே.  அறிவியற்றமிழின் மேம்பாட்டிற்காக அரசாங்கங்களின் பங்களிப்பும் மிகமிகக்குறைவே.  இதில் பெருவாரியான அறிஞர்களும் அறிவியலாளர்களும் அரசாங்களும் அரசியல்வாதிகளும் ஈடுபடாததற்குக்காரணமே, தமிழுக்கென்று இல்லாமல் போன ஒரு வணிக/வர்த்தக/பொருளாதார/வருமானம்சார்ந்த கோணமே.

ஆதலால் தான் இவ்வணிக-வர்த்தக-பொருளாதாரத்தை ஐந்தாம் தமிழாகச்சேர்த்துக்கொண்டு, அதன் பொருட்டு தமிழை கொண்டுசென்றால், தமிழைப்பயில எல்லாரும் விரும்புவர், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்ல அனைவரும் விழைவர்.  

ஐந்தாம் தமிழ்க் கூறாக பல துறைகள் ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அறிவேன்.  என்றாலும்,  வணிக-வர்த்தக-பொருளாதாரமானது ஐந்தாம் தமிழ்க்கூறாக இருப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

"வணிக-வர்த்தக-பொருளாதாரத்" தமிழ் என்பதற்கு ஒரு "சிறு" பெயரை யாராவது பரிந்துரைசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.  வணிக-வர்த்தக-பொருளாதாரத் தமிழானது, தமிழை வைத்து வணிகம் செய்வதல்ல, மாறாக தமிழுக்கு வணிக-வர்த்தக-பொருளாதாரத் தன்மையை/மதிப்பை/உயர்வை அளிப்பது என்பது என் சிறு அறிவிற்க்கெட்டிய ஒன்று.  இவ்வாறான ஒரு முயற்சிக்கு வணிக/வர்த்தக/பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.   

Sunday, December 24, 2023

நிகண்டு

நிகண்டு

'நிகண்டு' என்ற சொல்லை சில இடங்களில் கேட்டிருப்போம்.  நிகண்டும் அகராதியும் ஒன்றா? இன்று நாம் பயன்படுத்தும் அகராதிகளானவை தமிழ் சொற்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்தும் திசைச் சொற்களுக்கும் சுருக்கமாக ஒரு பொருளையும் மாற்றுச் சொற்களையும் தந்திடும் வண்ணமாக அமைந்திருக்கிறது.  ஆனால் நிகண்டுகள் இதிலிருந்து சற்றே வேறுபட்டு, ஒவ்வொரு சொற்களுக்குமான பொருளையோ மாற்றுச் சொற்களின் தொகுப்பையோ ஒரு செய்யுள் வடிவில் அளித்திடும் வண்ணத்தில் அமைந்திருக்கிறது.  இதில் பலநேரம் தமிழ் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக சங்கதச் சொற்களையும் சங்கதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக தமிழ்ச் சொற்களையும் அளித்திருப்பர்.  இச்சொற்களின் பட்டியல்கள் பெரும்பான்மையாக கடவுளர் பெயர்கள், மாந்தர் பெயர்கள், விலங்கினப் பெயர்கள், மரப்பெயர்கள், இடப்பெயர்கள் பல்பொருட் பெயர்கள், செயற்கைவடிவப் பெயர்கள், பண்புப் பெயர்கள், செயற் பெயர்கள், ஒலிப்பெயர்கள், ஒருசொல் பல்பொருள் பெயர்கள் ஆகிய தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றன.    தொல்காப்பியத்தில் சிலபல சொற்களுக்கு விக்கம் கூறப்பட்டுள்ளன. இவைகள் உரிச்சொல் பனுவல் என அழைக்கப்படுகின்றன.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கம் அளித்த முதல் ஏடாகத் திகழ்வது திவாகர நிகண்டு.  தமிழில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நிகண்டுவகை நூல்கள்  அறியப்பட்டு அச்சிலும் ஏறியுள்ளன.  அவற்றுள் சில இங்கே:
01} திவாகரம் - 6ம் நூஆ - சேந்தன் திவாகரர் - 12 தொகுதிகள் - 112518 நூற்பாக்கள் - 9500 சொற்கள்
02} பிங்கலம்/பிங்கலந்தை - 9ம் நூஆ - பிங்கலர் - 4121 நூற்பாக்கள் - 14700 சொற்கள்
03} உரிச்சொல் நிகண்டு - 11/17ம் நூஆ - காங்கேயர் - 12 தொகுதிகள் - 285 வெண்பாக்கள் - 3200 சொற்கள்
04} கயதரம்/கெயாதரம் - 15ம் நூஆ - கெயதாரர் - 566 கலித்துறை செய்யுள்கள் - 11350 சொற்கள்
05} அகராதி - 1594 - இரேவணசித்தர் - 1301 நூற்பாக்கள் - அகர வரிசையில் இயற்றப்பட்ட முதல் நிகண்டு இதுவே
06} சூடாமணி - 10/16ம் நூஆ - வீரை மண்டலப் புருடர் - 12 தொகுதிகள் - 1187 விருத்தப்பாக்கள் - 1575 சொற்கள்
07} சூத்திரவகராதி - 1594 - புலியூர் சிதம்பர ரேவண சித்தர் - 3334 நூற்பாக்கள்
08} கைலாசம்/சூளாமணி - 16ம் நூஆ - கைலாசம் - 506 நூற்பாக்கள் - 15000 சொற்கள்
09} ஆசிரியம் - 17ம் நூஆ - ஆண்டிப் புலவர் - 11 தொகுதிகள் - 199 ஆசிரியவிருத்தச் செய்யுள்கள் - 12000 சொற்கள்
10} வடமலை/பல்பொருட்சூடாமணி - 17ம் நூஆ - ஈசுவர பாரதி - 1452 நூற்பாக்கள் - அமரகோசம் எனும் சங்கத நூலை பின்பற்றி இயற்றப்பட்டது
11} தமிழ்-போர்த்துகேய அகராதி - 17ம் நூஆ - ஆந்தரிக் அடிகளார் - ? - இந்த ஏடு இதுவரை கிடைக்கவில்லை
12} சதுரகராதி - 1732 - வீரமாமுனிவர் - 12000 சொற்கள்
13} அரும்பொருள் விளக்கம் - 1763 - அருமருந்தேய தேசிகர் - 740 விருத்தப்பாக்கள் - 3200 சொற்கள் 
14} பொதிகை - 18ம் நூஆ - சாமிநாதக் கவிராயர் - 496 விருத்தப்பாக்களும் 2228 நூற்பாக்களும் மொத்தம் 2326 செய்யுள்கள் - 14500 சொற்கள் - இது எதுகை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது
15} பாரதிதீபம் - 18ம் நூஆ - பரமானந்தத் திருவேங்கட பாரதியார் - 665 கலித்துறை செய்யுள்கள்
16} உசிதசூடாமணி - 1894 - சிதம்பரக் கவிராயர் - 184 ஆசிரிய விருத்தப்பாக்கள்
17} நாமதீபம் - 19ம் நூஆ - சிவசுப்பிரமணியக் கவிராயர் - 808 வெண்பாக்கள் - 1200 சொற்கள்
18} பொருட்டொகை - 19ம் நூஆ - சுப்பிரமணிய பாரதி  - 1000 நூற்பாக்கள் - 1000 சொற்கள்
19} நாநார்த்த தீபிகை - 1850 - முத்துசாமிக் கவிராயர் - 1102 விருத்தப்பாக்கள் - 5432 சொற்கள் -  நிறைய சங்கதச் சொற்களுக்கு பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
20} கந்தசுவாமியம் - 1844 - _சுப்பிரமணிய தேசிகர்_ - 2743 நூற்பாக்கள்
21} விரிவு - 1860 - அருணாச்சல நாவலர் - 1036 விருத்தப்பாக்கள்
22} சித்தாமணி - 1874 - யாழ் வைத்தியலிங்கம் - 400 விருத்தப்பாக்கள் 
23} அபிதான மணிமாலை - 1878 - திருவம்பலத்து இன்னமுதம் கோபாலசாமி - 2425 நூற்பாக்கள்
24} வேதகிரியர் சூடாமணி - 19ம் நூஆ - வேதகிரி - 11 தொகுதிகள் - 583 விருத்தப்பாக்கள்
25} நவமணிக்காரிகை - 19ம் நூஆ - அரசஞ் சண்முகனார் - ? - ?
26} தமிழுரிச்சொற் பனுவல் - 19ம் நூஆ - கவிராச இராம சுப்பிரமணிய நாவலர் - ? - ?
27} நீரரர் - 1984 - ஈழத்துப் பூராடனார் செலவராசகோபால் - 80 செய்யுள்கள்
28} மஞ்சிகன் ஐந்திண - ? மஞ்சிகன் - 122 நூற்பாக்கள்.- 122 சொற்கள் (மரஞ்செடிகொடிப் பெயர்கள்)
29} போகர் அட்டவணை - ? - போகர் - 116 சொற்கள்

மற்ற நிகண்டுகளான பொதியநிகண்டு, ஔவைநிகண்டு போன்றவற்றின் குறிப்புகள் மட்டும்தான் கிடைக்கின்றன.

Saturday, December 9, 2023

ஆந்திரிக் ஆடிகளார்

ஆந்திரிக் ஆடிகளார் 

இயேசுசபையைச் செர்ந்த புனித சவேரியாரின் உதவியாளராக இந்திய நிலப்பரப்புக்கு கிறித்துவ சமயம் பரப்ப வந்த ஆந்தரிக் ஆந்தரிக்கசு எனும் போர்த்துக்கேயர், 1546 இயேசுசபையினர் 'மதுரை சமையத் திட்டம்' என்ற ஒன்று வகுக்கப்பட்டதுக்கு ஏற்ப தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்.  கூடிய விரைவில் தமிழ் மொழியைக் கற்றிடவேண்டும் என்பது அவருக்கு புனித சவேரியார் இட்ட கட்டளை.  1548ல் புனித இலொயோலா இஞ்ஞாசிக்கு இவர் எழுதிய மடலில், தான் எவ்வாறு தமிழ் மொழியை விரைவாகக் கற்கிறேன் என மகிழ்ச்சிபோங்க விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  1578-86களில் தம்பிரான் வணக்கம், கிறித்தியானி வணக்கம், அடியார் வரலாறு, மலபார் இலக்கணம் மற்றும் தமிழ்-போர்துகேய அகராதி ஆகிய இரு 16-பக்க தமிழ் ஏடுகளை எழுதி கொல்லத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 




தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் அச்சிலேறிய முதல் ஏடுகள் இவையே.  இதற்கான தாள்கள் சீனத்திலிருந்து வரவழைக்கப்பட்டன.  அந்த காலகட்டத்தில் ஆவணங்களை எழுதுவதற்கு பனை ஓலையும் செப்புத்தகிடையும் கல்லையும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழி வழக்கானது, இன்னும் முழுமையான தனி அடையாளம் பெறாத அன்றைய மலையாளமான, மலபார் தமிழ் என 'தம்பிரான் வணக்கத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவர்  தனது பிற்கால வாழ்க்கை முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்திலேயே சமயப் பணிக்காகச் செலவழித்துள்ளார்.  அப்பகுதியில் வாழ்ந்த மீனவ மக்களையும் முத்துக்குளிப்பவர்களையும் கிறித்துவ சமையத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு இவருக்குப் பெரும்பங்கு உண்டு.  'ஆந்திரிக் ஆடிகளார்' என்ற பெயரில் கிறித்துவர்களிடத்தில் மட்டுமல்லாது பிற சமயத்தினரிடத்தும் பெருமதிப்பு பெற்றிருந்தார். தென் தமிழகத்தில் மட்டும் 58 ஆண்டுகள் வாழ்ந்துவந்த இவர், தனது 80ஆவது அகவையில் (1600ல்) புன்னைக்காயல் எனும் ஊரில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்தபோது, அப்பகுதியில் வாழ்ந்த அனைந்து சமயத்து மக்களும் காயல்பட்டினத்து இசுலாமியர்களும் துயரத்தில் கடைகளை அடைத்து இரு நாள்களாக உண்ணாநோன்பிருந்தனர் என 1601 ஆண்டுக்கான இயேசு சபை ஆண்டு மலர் தெரிவிக்கிறது.  அவரின் கல்லறையானது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் உள்ளது.  

தமிழில் முதல் ஏடுகளை அச்சிட்டு வெளியிட்டதால் தமிழ் அச்சுத்துறையின் தந்தை என கருதப்படுதிறார்.  தமிழில் முதல் உரைநடைகளை எழுதியவர் எனவும் இவர் கருதப்படுகிறார்.


Monday, November 13, 2023

வாழ்வெனும் சோலை

வாழ்வெனும் சோலை


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும். ம்ம்ம்.  

வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கும் விடிந்திருக்கும்.  நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கு விடிந்திருக்கும். 

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நான் அருகே இருப்பேன்.  நாம் இன்னும் நெருங்கி இருப்போம்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் நாம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

நான் அருகே இருப்பேன்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

எந்தன் சிறுதேனும் உங்கள் சிறுபூவும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


இவ்வளவு இனிமையான இசை கொண்ட 'சீவன் கி பகியா' என்ற. இந்திப் பாடலுக்கு காதுக்கு இனிய சொற்கள் (நமக்குப் பொருள் புரியாவிட்டாலும்) அமைத்து வரிகளும் எழுதி பாடலமைத்து இருக்கிறார்கள்.  சரி, அப்படி என்னதான் அந்த இந்தி வரிகளின் பொருளாக இருக்கும் என எனக்குள் ஒரே கேள்விகள்.  இருக்கவே இருக்கு கூகுள் மொழிபெயர்ப்பி.  அதிலிட்டுப் பார்த்துவிட்டேன்.  வந்த மொழிபெயர்ப்பை பட்டிட்டிங்கரிங் பண்ணி அப்பாடலின் சந்தத்துக்கு ஏற்ப பொருள் மாறாது சொற்களை அங்குமிங்கும் மாற்றியமைத்து மேலே நான் இட்டிருக்கும் கவிதைமை சமைத்துவிட்டேன்.  பாடலின் இசையுடன் பாடிப்பாருங்கள்.  எங்கேனும் இடறினால் அதைத் எனக்குத் தெருவியுங்கள். 


இந்தச் செயலால் எனக்குக் கிடைத்த பட்டறிவில் நான் உணர்ந்த சில செய்திகள்:-

  1. தமிழை முறைப்படி கற்காது ஆங்கில வழியிலேயே பாடங்களைக் கற்ற எனக்கே, தமிழ் இவ்வளவு ஞெகிழித்தனத்தை அளிக்கிறது என்றால் (கடந்த இரு நாட்களாக பத்துப் பதினைந்துமுறை, என்னால் சொற்களை மாற்றியமைத்து பொருளையும் சுவையையும் மெருகேற்ற முடிந்தது) , சிறிதேனும் ஆழமாகத் தமிழைக் கற்றவர்கள் இன்னும் மிளிர்வான பெருட்சுவை மிகாக கவிதையை எழுதிவிடுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
  2. இந்தியில் (நிறைய பாரசீகச் சொற்களும் இபாபாடலில் உளாளதால் இதனை உருது என்றுகூடச் சொல்லிவிடலாம்) இருந்த பாடலை கோபால்தாசு என்ன நீரசு என்பவர் எழுதியுள்ளார்.  இவர் பத்மசிறீ, பத்மவிபூசனம் போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளார்.  என்றாலும் அவர் எழுதியிருந்த இக்கவிதையில் சொற்சுவை இருக்கே தவிர பொருட்சுவை என்பது துளியும் இல்லை.  தமிழில் இப்படிப்பட்ட பாடல்வரிகளை டப்பாங்குத்துப் பாடல்களுகாகுத்தான் போடுவார்கள்.  ஆக அந்த இந்திக் கவிதையில் தரம் இல்லை என்பதே அடியேனின் கருத்து.  

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............