Thursday, November 5, 2020

தன்மானத்தமிழர்களே!!

 நேற்று மதியம், நான் நெல்லைக்குச்செல்லும் தொடர்வண்டியில் வீரவநல்லூர் நிலையத்திலிருந்து ஏறிக்கொண்டேன். அது ஒரு பொதுப்பயணிகள் வண்டி. கூட்டம்னாகூட்டம் அவ்வளவுகூட்டம். சிறிது நேரத்தில் மூச்சுவிடக்கூட இடமில்லை எனபதை உணர்ந்துகொண்டேன். கதிரவர் தன் கொடூரக்குசும்பை சிறப்புர செய்துகொண்டிருந்தார். முகம் கைகால் முதுகு என அனைத்து வெளி உறுப்புகளிலும் வியர்வையாறு ஊற்றெடுத்து கீழ்திசையை நேக்கி ஓடி கால்களை எட்டும்முன் அனல்க்காற்றுடன் கலந்திருந்தது. சிலசில பெண்களைத்தவிர பெரும்பாலும் ஆண்களே என் பெட்டியில் நிறைந்திருந்தனர். காலையிலிருந்து திருப்புடைமருதூர், வீரவநல்லூர், தாமிரபரணி எனச்சுற்றியதால் கால்கள் என்னிடம் மண்டியிட்டு கெஞ்சிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்த நிறுத்தங்களில் பெட்டிகளில் மேன்மேலும் மக்கள் சாக்குமூட்டையில் உப்பை குலுக்கி அடைப்பதைப்போன்று ஏற்றிக்கொண்டிருந்தார்களே தவிர யாருக்கும் இறங்க மனம் இருப்பதாகவே தெரியவில்லை. கூட்ட நெரிசலில் என்னை நான் ஒரு எஸ்பிரசோ குளம்பிக்கருவியில் மிகையாக பிழியப்படும் குளம்பிப்பொடியாகவும் கேரளாவுக்கு ஏற்றிச்செல்லப்படும் அடிமாடாகவும் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். என் இடதுபுறத்தில், கையி்ல் உறைபோட்ட பைபிள் வைத்து மேல் தலையை தன் சீலைத்தலைப்பால் மூடிக்கொண்டிருந்த நடுத்தர அகவை கொண்ட மாமி, வெகுநேரமாக ஆழ்ந்த செபத்தில் இருந்தார். அவர் தலையை லேசாக ஆட்டியாட்டி உள்ளத்தினுள் பாடிக்கொண்டிருந்த தோத்திரப்பாடல்கள் என் காதுகளுக்கு கேட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வண்டி வேகமாகச்சென்றுகொண்டிருந்தது. அவ்வப்போது ஒரு குழந்தை அழுகுரல் வேறு கேட்டுக்கொண்டிருந்தது. என் வலதுபுறம், ஒரு முழு வெள்ளை சிப்பாவும் குல்லாவும் போட்டுக்கொண்டிருந்த குறுந்தாடி மாமா, வாயில் வெற்றிலைபாக்கை விடுவதில்லை என வெகுநேரமாக கொதப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது வானத்தைநோக்கி வாய்பிளந்து களகள என ஓசை எழுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு உமிழும் நேரமாகிவிட்டது என எண்ணிக்கொண்டேன். சாளரம்வேறு சற்று தொலைவில் இருந்தது. அவர் சளைக்காமல் குதப்பிக்கொண்டிருத்தார். "ஒருவேளை திடீரென தும்மல் வந்தால் என்ன செய்வார்" என திரடீரென எனக்கு ஒரு கேள்விவேறு உள்ளத்தில் எழும்பியநேரம் அந்தமாமா தன் கண்களை அகலவிரித்தவாறு டக்கென என்னை திரும்பிப்பார்த்தார். என் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டேன். என் உள்ளத்தின் உரையாடல் அவருக்கு கேட்டிருக்குமோ? வண்டியின் வேகம் குறைந்தது. என்ன நிறுத்தம் என எட்டிப்பார்த்தேன். 'பேட்டை'. அடுத்ததற்கடுத்த நிறுத்தம் நெல்லை சந்திப்பு, என்ற நினைப்பு நிம்பதிப்பெருமூச்சு விடச்செய்தது. வெளியே, நிறுத்தத்திற்கு பின்புறம் சிறிதுதொலைவில் ஒரு நியாயவிலைக் கடையில் மிகையான கூட்டம் நின்றுகொண்டிருப்பது சாளரம் வழியாக தெளிவாக தெரிந்தது. வண்டி நின்றதுதான் தாமதம், தபதபவென ஆண்கள் பெட்டியை விட்டு முண்டியடித்துக்கொண்டு இறங்கலாயினர். இதைப்பார்த்ததும் எனக்கு ஒருநொடி பக் என்றது, ஏதேனும் கலவரமாக இருக்குமோ என்று. இது கலவர பூமியாச்சே! இவ்வூரில் 20 ஆண்டுகளுக்குமுன் நடந்த இரு கலவரங்களை நேரில் கண்டவன் நான். இன்னும் சில வினாடிகளில் மொத்த பெட்டியும் கிட்டத்தட்ட காலியாகிவிடும் போலிருந்தது. உடனே பக்கத்தில் இருந்த குல்லா மாமாவிடம் "என்ன" என வினவினேன். அவர் என்னிடம் வாயை ஒ-வெனக்குவித்து ஏதோ சொல்லவந்து, பின்னர் உதட்டை உள்மடித்து வாய்மூடி வெளியே அந்த நியாயவிலைக்கடையை கைநீட்டிக் காண்பித்தார். திரும்பவும் குனிந்து சாளரம் வழியாகப்பார்த்தேன். வண்டியிலிருந்து இறங்கிய அத்தனைபேரும் அந்த கடையைநோக்கி முண்டியடித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தனர். பலர் தங்கள் வேட்டி லுங்கி முடிப்புகளை பிடித்தவாறே ஓடிக்கொண்டிருந்தனர்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் அந்த மாமாவிடம் என் புருவம் சுழித்து 'என்ன இது?' என் கைச்சைகையில் கேட்டேன். இம்முறை அவர் தன் வாயைத்திறக்க முயற்சிக்காமல், விரல்கள் மடக்கி கட்டைவிரல் நீட்டி தண்ணீர் குடிப்பதுபோல் காண்பித்தார். அப்போதுதான் எனக்கு பொறிதட்டியது. ஆகா, இவர்களெல்லாம் நம் தங்கத்தமிழ்நாட்டுத்தன்மானத்தமிழ்குடிமக்கள் எனபதும் தொலைவில் தென்பட்டது நியாயவிலைக்கடை எனபதும் விளங்கிற்று. ஆனால், இவர்கள் தத்தங்கள் ஊரிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்தாமல் தொடர்வண்டி ஏறி, ஏன் இந்த 'பேட்டை'க்கு அருந்த வந்திருக்கிறார்கள்? என்று எனக்குள் ஏற்பட்ட ஐயம் பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கும் எழுந்து, அவர் தன்னெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் வினவிவிட்டார். அவர் உரக்க அளித்த விளக்கம் இதுதான்: சுற்றுவட்டாரங்களில் அத்தனை டாஸ்மாக் கடைகளும் நெடுஞ்சாலைகளின் அருகாமையிலேயே அமைந்திருந்தன என்றும், சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் ஆணையால் அத்தனையும் மூடப்பட்டுவிட்டன என்றும் பேட்டையிலிருந்து 40-50 கி.மீ.யில் தொடருந்துப்பாதையில் இருக்கும் எந்த ஊரின்அருகிலும் தற்போது டாஸ்மாக் கடைகள் இல்லை என்றும் அவர் கூறினார். நெல்லை சந்திப்புக்கு பேட்டையிலிருந்து மிகச்சில பயணிகளுடனே புறப்பட்டது. அதனை நெல்லை சந்திப்பிலும் உணர்ந்தேன். நிலையம் விட்டு வெளியே வருவதற்காக நடைமேடையில் நடந்துகொண்டிருந்தபோதுதான், நம் குல்லா மாமாவை மீண்டும் கவனித்தேன். அவர் அங்கிருந்த கைகழுவும் குழாயடியில் வாயை கழுவி, ஆள்காட்டி விரலால் கொதகொத என தன் பற்களைத்தேய்த்து தூய்மையாக்கிக்கொண்டிருந்தார்.....

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...