Tuesday, March 2, 2021

 ஃ ! .. ஃஃ ! 

ழந்தமிழர்கள், .அஃகேனம் எனப்படும், தமிழின் சிறப்பெழுத்தான ஆய்தத்தை, எந்த அளவுக்கு பயன்படுத்ததிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது, நாம் அதனை முறைப்படி தெரிந்துவைத்துக்கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்ச்சியோடான ஐயமும் ஏற்படுகிறது. சில காட்டுகளைப் பார்ப்போம்: . 

௧} யாப்பருங்கலக் காரிகையில்:

கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச், 
சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை, 
எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர், 
வெஃஃகு வார்க்கில்லை வீடு, 
விலஃஃகு வீங்கிரு ளோட்டுமேமாத ரிலஃஃகு முத்தினினம் . 

௨} திருக்குறளில்:- 

அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும், வெஃகி வெறிய செயின் . 

௩} சில சொற்களும் அதன் பொருள்களும்:- 

அஃகல் = சிறிதாதல் / வறுமை / குறைதல் / குறுகுதல் / நெருங்குதல் 

அஃகி = நுண்ணியதாய் 

அஃதை =  ஏதிலி / சோழமகள்

அஃகம் = கூலம் (எ.கா: அரிசி, உளுந்து, கோதுமை)

அஃகரம் = வெள்ளெருக்கு

அஃகு = ஊற்று[நீர்] 

அஃகுல்லி = உக்காரி/உக்காரை எனும் தின்பண்டம்

அஃகுள் = அக்குள் 

அஃகேனம் = ஃ, ஆய்தம் 

அஃகாத = வற்றாத / குறையாத / மாறாத 

அஃகாவே = அகன்றோடி

அஃறிணை = மாந்தரல்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருள்களும் (அல்+திணை)

இஃகுதல் = இழுத்தல் 

எஃஃகு / எஃகு = போர்க்கலன் / வேல் / இரும்பு_உருக்கு 

எஃகம் = கூர்மை [யான போர்க்கலன்] 

எஃறு = ஈறு / பல் (யானை, காட்டுப்பன்றி கொம்பு/வெளிப்பல்) / ஈறுநிறம் (வெளிர்சிவப்பு) 

ஒஃகல் = ஒதுங்கல் / பின்வாங்குதல் 

கஃசு = கைசா அ| கால் பலம் = ~10.2 கிராம். (பழந்தமிழ் அளவை முறை) 

கஃடு = கள் 

கஃஃறு / கஃறு = கறுத்தது 

கஃபு = கிளை

கஃது = ? 

சஃகுல்லி = ஒரு சிற்றுண்டி வகை 

சுஃஃறு / சுஃறு = பனை ஓலை எரியுப்போது ஏற்படும் ஒலிக்குறிப்பு 

பஃது = பத்து 

பஃறி = படகு / காட்டுமரம் 

பஃதி = பகுதி 

பஃறலை / பஃறாழ் / பஃறுளி .= பல + (தலை / யாழ் / துளி)  - குமரி மாவட்டத்தில் ஓழுகிச்செல்லும் ஒரு ஆற்றின் பெயர் பஃறுளி அ| பறளி

மஃகி = ? 

வெஃஃகல் / வெஃகல் = விரும்புதல் / பேராசைப்படுதல் 

வெஃகா = காஞ்சிபுரம் 

[அ/இ/உ/ஒ/ம/ய/வ/ல/ற/ன]ஃகான் = [அ/இ/உ/ஒ/ம/ய/வ/ல/ற/ன]கரம்

இன்றளவில், அஃகேனமானது, தமிழின் அடிப்படைப் பயன்பாட்டுக்கு அல்லாது, பிற மொழிச் சொற்களை தமிழில் ஒலிபெயர்ப்பதற்கான ஒரு குறியீடாக, இலக்கண வழுவலாய், தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. காட்டு: ஃப 

அஃகேனத்தை தன்னுள் கொண்டுள்ள சொற்களை, எடுத்துக்காட்டுகளாக இல்லாமல், வாக்கியங்களிலேயே, மாணவர்களுக்கு சிறு அகவை முதலேயே அறிமுகப்படுத்தி அவற்றை பொதுப்பயன்பாட்டுக்குள் மெல்லமெல்ல கொண்டுவரவேண்டும்!..

தமிழ்ச்சொல்லாய்வு பேசுபுக்கு.குழுவில் திரு கு.இராமகிருட்டினன், அது-அஃது பற்றியான கீழ்காணும் செய்தியை பகிர்ந்திருந்தார்.

ஒரு, ஓர் எனுஞ்சொற்கள் பயன்படுவதைப் போன்று அது, அஃது முதலாய சொற்கள் எழுதப்படும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை. காரணமென்னவென்றால், அறியாமையும் விழைவின்மையும். முற்காலத்தில் தவறாது பயன்படுத்தினர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் அவர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் தவறாது பயன்படுத்தினர். இன்னும் தமிழறிஞர் சிலர் எழுதுகின்றனர்.

அது என்பது முற்றியலுகரம்.அஃது என்பது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம். ஆனால் இரண்டுக்கும் பொருள் ஒன்றே. இரண்டும் சுட்டுகள். ஆனால் பயன்படுத்தும் முறை வெவ்வேறு.

''முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான'' (தொல்.எழு.423, குற்றிய்.18)

அல்வழியில் உயிரெழுத்துக்குமுன்பு அஃது, இஃது, உஃது, எஃது எனவாகும் அஃது அணில், ஆடு. இலை என்றும் இஃது அணில். உலகம், ஓடம் என்றும் எஃது ஆறு, ஈ. ஏரி, ஒட்டகம் என்றும் ஆகும்.

'' ஏனைமுன் வரினே தானிலை யன்றே (தொல்.எழு.424. குற்றிய. 19)

உயிரல்லாத எழுத்து வந்தால் இயற்கை ஆகும். அது மாடு, இது வீடு, உது பசு, எது தோட்டம் எனவாகும்.

''அது'' வேற்றுமையில் உயிரோடு புணரும்போது அதை(குற்றியலுகரம்போல்)அல்லது அதனை, அதால்,அதனால்..... என்று புணரும். இவ்வாறே மற்றச்சுட்டுகளான இது,உது( இப்போது வழக்கத்தலில்லை) என்பனவும் புணரும். வினாவான எது என்பதுவும் இவ்வாறே புணரும்.

யாதெ னிறுதியும் சுட்டுமுத ஆகிய வாய்த விறுதியும் உருபிய னிலையும் (தொல்.எழு. 422. குற்றிய 17)

''அஃது'' உயிரோடு புணரும்பொழுது , குற்றியலுகரமாதலின், உகரம் கெட்டு, ஆய்தம் கெட்டு அன் பெற்றுப் புணரும். அதன், அதனை எனவாகும். அதன் கோடு, இதன் கோட்டம், யாதன் கோடு எனவாகும்.

படிக்க:-

* https://valavu.blogspot.com/2009/07/blog-post.html?m=1



1 comment:

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...