Tuesday, March 2, 2021

மணிமேடை


நாகர்கோவிலின் மணிமேடையும் கடிகாரமும். . 

இக்கருப்புவெள்ளைப் படத்தில் நீங்கள் பார்ப்பது 1894ம் ஆண்டு வெளிவந்த செய்தி. . 

குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னரான திருமூலம் திருநாள் இராமவர்மாவின் ஆட்சியின்போது, கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அமைக்கப்பட்டு, இன்றும் தன் பழமையை பறைசாற்றி நிற்கும், சிறந்த கட்டுமானங்கல் மூன்று. அவை:- 

௧) சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் கோபுரம் (1888) 

௨) நாகர்கோவில் மணிமேடை (1893) 

௩) பேச்சிபாறை அணைக்கட்டு (1906) . 

சுசீந்திரம் கோவில் கோபுரம் முழுமையாக கட்டி முடித்து ஐந்து ஆண்டுகளில், நாகர்கோவில் மணிமேடை கட்டி முடிக்கப்பட்டது. 1852ல் திட்டமிடப்பட்டு, 1894ல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 1906ல் கட்டி முடிக்கப்பட்ட பேச்சிபாறை அணைக்கட்டின் வடிவமைப்பில் ஈடுப்பட்ட ஐரோப்பிய பொறியாளர்களான கேப்டன் ஆர்சுலி மற்றும் ஆசியார்ப் ஆகியோரே, மணிமேடை வடிவமைப்பை உருவாக்கியவர்கள். . 

1893ல் நாகர்கோவிலுக்கு வருகை தந்த திருவாங்கூர் மன்னர் திருமூலம் திருநாள் இராமவர்மாவுக்கு சிறந்த வரவேற்பு அளித்து, ஊருக்கென்று ஒரு கடிகாரமணிமேடை அமைக்கவேண்டும் என அப்போதைய பெருமக்கள், எழுப்பிய கோரிக்கையின் விளைவே இந்த மணிமேடை. நாகர்கோவில் மிசனரியை சேர்ந்த சேம்சு டதி, திருவிதாங்கூர் அரசுப் பொறியாளர்களான ஆர்சுலி மற்றும் ஆசியார்ப், திருவாங்கூர் அரசதிகாரிகளான ஆர். கிருஷ்ணன், இரத்தினசுவாமி ஆகியோர் அடங்கிய மணிமேடை அமைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. . 

சேம்சு டதியின் மனைவி துவக்கியிருந்த டதி மிசனரி பள்ளிக்கூடத்திற்கென்று, இங்கிலாந்திலுள்ள டெர்பி நகரத்தைச் சேர்ந்த சான் சுமித் & சன்சு எனும் நிறுவனத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட கடிகாரமானது, மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்காக மணிமேடையில் பொருத்தப்படத் திட்டமிடப்பட்டது. மணிமேடைக்கு கடிகாரத்தை வழங்கிடும்போது, அது நாகர்கோவிலிலுள்ள கல்கோவில் தேவாலயத்தை நோக்கிய திசையில் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, தேவாலயத்துக்கு வழிபட வருவோர்க்கு பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக டதி தெரிவித்திருந்தார். மணிமேடை மற்றும் கடிகாரத்துக்கு மொத்தமாகத் தேவைப்பட்ட 3258 ரூபாய், 9 சக்ரம், 12 காசு என்பதில், கடிகாரத்தின் விலையான 1117 ரூபாயை மன்னரும் 164 ரூபாயை சேம்சு டதியும் மீதமுள்ள தொகையான 1977 ரூபாய், 9 சக்ரம், 12 காசை பொதுமக்களிடமும் நன்கொடையாக பெறப்பட்டது. . 



அன்று பெரிய கட்டிடங்கள் ஏதும் கல்கோவிலுக்கும் மணிமேடைக்கும் இடையே இருந்ததில்லை. கடிகாரத்தின் மணியோசையானது அன்று மூன்று கிமீ சுற்றளவு வரைக்கும் கேட்கும். கே கே குருவிலாவின் மேற்பார்வையில் மணிமேடையும் கட்டப்பட்டு அதில் கடிகாராமும் பொருத்தப்பட்டது. அதன் பணிகள் 1891 சூலையில் துவங்கி 1893 பெப்ருவரி 15 தேதி மன்னர் திருமூலம் திருநாள் இராமவர்மாவால் திறக்கப்பட்டது. மன்னரை மரியாதை செய்யும்வண்ணம் மணிமேடையில் RV (இராமவர்மா) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. . 

மணிமேடையில் பொருத்தப்பட்ட கடிகாரத்தினுள், கப்பியில் தொங்கும் 60 அடி நீளமுள்ள சங்கிலியில் பளு பொருத்தப்பட்டு, அதன் இழுவிசையானது பல் உருளிகளை நகர்த்துவதனால் இயங்கும் தன்மை கொண்ட புவியீர்ப்பு விசைக் கடிக்ரமாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. பத்மநாபபுர அரண்மனை முகப்பின் மோட்டில் இருக்கும் கடிகாரமும் இதே தொழிநுட்பத்தில்தான் இயங்குகிறது. . 

1893ல் மணிமேடையைச் சுற்றி எந்த சாலையும் கிடையாது. மணிமேடையின் மேற்குப் பகுதியில் ஆண்டியப்பன் குண்டு என்ற குளம் இருந்தது. மணிமேடையின் வடமேற்கு பகுதியும் குளமிருந்த பகுதியும் இணைந்து அனந்த சமுத்திரக் கிராமம் என்று அழைக்கப்பட்டது. இன்று இப்பகுதி நாகர்கோவில் கிராமம் என அழைக்கப்படுகிறது. 1920ல் குளம் நிரப்பப்பட்டு அப்பகுதியில் 1930ல் கோல்டன் தியேட்டர் எனும் திரையரங்கம் தொடங்கப்கப்பட்டது. அப்பகுதில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. மணிமேடையின் கிழக்கு பகுதியானது என்றுமே ஒரு குடியிருப்புப் பகுதியாகும். தென்கிழக்கு பகுதில் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டது. அது இப்போது நகர அஞ்சல் நிலையமாக உள்ளது. அதன் அருகில் அமைந்திருந்த குதிரை நிலையம் 1955 வரை இயங்கியது. அதன் அருகில், திருநெல்வேலி செல்லும் கணபதி, பயோனியர் என்ற தனியார் பேருந்துகள் நிற்கும் நிலையமானது 1913ல் இருந்து இயங்கியது. . 

மணிமேடையைச் சுற்றி மெல்லமெல்ல தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியதால் கோட்டாறை விட இப்பகுதி முதன்மை பெறத்தொடங்கியது. இதன் விளைவாக நாகர்கோவில் ஒரு நகரமாக பரிணமிக்கத் தொடங்கியது. 1900களில் மணிமேடையைச்சுற்றியுள்ள பகுதிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியிருந்தன. அப்பகுதி கோடை காலத்திலும் குளிர்ச்சியாகவே இருந்ததால் ஐரோப்பியர்கள் இப்பகுதியில் கல்விநிறுவனங்களையும், தேவாலயங்களையும், அவர்களின் குடியிருப்பையும் அமைத்தனர். திருவிதாங்கூர் அரசு, நீதிமன்றத்தையும் அமைத்தது. திருவிதாங்கூர் அரசால் இராமவர்மபுரத்தில் கோடைகால மாளிகை ஒன்று அமைக்கப்பட்டது. . 



14-7-1972ல் மணிமேடையின் அரகில் கலைவாணர் சிலை நிறுவப்பட்டது. 127 ஆண்டுகளுக்கு மேலாக இம்மணிமேடையானது, ஊரின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாக இருப்பதனால், நாகர்கோவில் மாநகரச் சின்னத்திலும் இது இடம்பெறுகிறது.

 

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...