படிப்பாட்டு
படிப்பாட்டு (சங்கதத்தில் "சோபான சங்கீதம்") என்பது ஒரு கேரளக் கலைவடிவமாகும். கேரளக் கோவில்களில் கருவறையின் வாயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் படிகளின் பக்கத்தில் நின்றுகொண்டு ஓதுவார் பாடுவதுபோலப் பாடிடும் இசைக்கலையாகும் இது. இக்கலைஞர்கள் பாடிடும்போது இடக்கை (இடய்க்கா) எனும் உடுக்கை போன்றொரு தாளக்கருவியை கொட்டிக்கொண்டே பாடிடுவது வழக்கம். அதனால்தான் இதனை கொட்டிப்பாடி எனவும் அழைத்திடுவர். இவர்கள் பாடும் பாடல்கள் முற்காலத்தில் மலையாளத்திலும் தமிழிலும் இருந்தாலும் பிற்காலங்களில் சங்கதமும் மிகையாகச் சேர்க்கப்பட்டது. தற்போது மலையாளத்திலும் சங்கதத்திலுமே பாடப்படுகிறது. 16-17ம் நூற்றாண்டுகளில் கட்டமைப்பு பெற்ற கருநாடக இசைவடிவமானது கேரத்திற்குள் வருவதற்கு முன்னர் உயிர்ப்பில் இருந்த இக்கலைவடிவத்தில், சில மெட்டமைப்புகள் (இராகம்) பயன்படுத்தப்பட்டது. 'சாமந்த மலகரி' எனப் பின்நாளில் அறியப்பட்ட இராகமே அவற்றுள் முதன்மையானது. படிப்பாடகர்களுக்கு தாளக்கருவியாக அமையும் இடக்கையானது தாளத்திற்காக மட்டுமல்லாது சுருதிக்காகவும் மெட்டுக்கள் இசைத்திடவும் பயன்படுகிறது. கொட்டில் இருக்கும் இருபக்கத் தோலை இழுத்து கட்டப் பயன்பட்டிருக்கும் கயிற்றை விரல்களால் அழுத்திப்பற்றி இழுவையை கூட்டிக்குறைத்து, கட்டுப்படுத்தினால் தோலின் இழுவையும் மாறும். அதனால் விரல்களின் அழுத்ததிற்கேற்ப கொட்டும்போது எழும் ஒலியின் அதிர்வும் மாறிடும். இந்த விரல் அழுத்தக்கட்டுப்பாட்டில் தேர்ச்சிபெற்றவர்களால் ஒரு முழுப்பாடலை இந்தத் தாளக்கருவியிலேயே இசைத்துவிடலாம் (பார்க்க: 2வது காணொளியில் 8:20ல் இருந்து). சிவன் கோவில்களுக்கு உள்ளே மட்டும் முற்காலங்களில் இசைக்கப்பட்ட "சோபான சங்கீதம்", பின்நாட்களில் மற்ற வகை கோவில்களிலும் பாடத்தொடங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சாதியினயினருக்கே படிப்பாடல் பாடுவதற்கும் இடக்கை இசைப்பதற்கும் உரிமை இருந்த காலம் மாறி இன்று சாதிசமய வேறுபாடில்லாமல் கோவில்களுக்கு வெளியேயும் சமயம் சாராத மேடைகளிலும் தனியாகவும் பிற இசைகருவிகளுடனும் பல புதுமைகள் புகுத்தப்பட்டும் இசைக்கப்படுகிறது.
கேட்க:-
௧) https://youtu.be/HO4NlWchpDQ
௨) https://youtu.be/kaozNblda54
No comments:
Post a Comment