Sunday, January 23, 2022

விந்தைக் கனவு - ௧

அது ஒரு தீபாவளி நாள்.  மதியம் மூன்று மணி இருக்கும்.  மீதம் இருக்கும் பிசிலிகளையும் புது காக்கி நிற நிக்கர் பாக்கட்டிலிலுக்கும் பத்துப் பதினைந்து ஓலை பட்டாசுகளையும் வாசல் படியில் உட்கார்ந்தவாறே வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.  வாசலின் முன்னே ஒரு நான்கைந்து தென்னை மரங்க்களோடு சிறு தோட்டம் இருக்கிறது. தோட்டத்தின் மறு முனையில் என் வீட்டுத்தோட்டத்தின் சுற்றுச் சுவரின் அழிக்கதவு வழியாக  தெருவின் சாலை தெரிகிறது.  தெருவில் பட்டாசு சத்தம் ஓய்ந்து காணப்படுகிறது. அனேகமாக மாலை ஐந்து மணிக்குத்தான் பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வேடிக்கத்துவங்குவார்கள் என்ற எண்ண ஓட்டம் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்போதே, "போருண்டா, வந்து சாப்பிடு, பாயாசமெல்லாம் இருங்கு" என்று தாழ்வாரத்திலிருந்து வரும் என் அம்மாவின் அழைப்பிற்கு என்னை அறியாமலே "அஞ்சுநிமிசம்மா!" என பதில் குரலெழுப்பி,  அடுத்தடுத்த பிசிலியை கையில் எடுத்து ஊதுபத்தியில் பற்றவைத்து காற்றில் வீசி வெடித்துக்கொண்டிருக்கிறேன்.

தெரு முனையில் பட்டாசு சத்தம் மீண்டும் கேட்க தொடங்குகிறது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என யோசிக்கமுனைக்கும்போதே சரவெடி ஓசை மாதிரி தொடர்ச்சியாக ஆனால் சிறிது சிறிது இடைவெளியோடு கேட்க ஆரம்பிக்கிறது. யார் இவ்வளவு சின்ன சின்ன சரவெடி வைக்கிறார்கள், அம்பது சரம் கூட இருக்காது போலிருக்கே, என் உள்ளம் சரக்கணக்கு போடுகிறது.  ஆர்வமிகுதியால் கையிலிருக்கும் பத்தியை வாசல் படி ஓரமாக வைத்துவிட்டு, தோட்டத்தின் வழியாக சுற்றுச்சுவர் வாசலை நோக்கி நடக்கிறேன்.

சுவர் அழிக்கதவை சர்ர் என்ற ஓசையுடன் திறந்து தெருக்கோடியை எட்டிப் பார்க்கிறேன். அங்கு யாரும் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்கவில்லை.  தெரு முனையில் குறுக்கிடும் மற்றொரு சாலையில் சிலர் தாறுமாறாக லுங்கியை கையில்பிடித்தவாறு குறுக்குமறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.  வெடிச்சத்தமும் அந்த சாலையில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது.

சிறு குழப்பத்தோடு என்னதான் நடக்கிறது என்று பார்க்க தெருக்கோடியை நோக்கி நடக்கலாகிறேன்.  ஐந்தாறு அடிகள் எடுத்து வைத்ததும், என் தோள்பட்டைக்கும் காதுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் எதோ கல்போன்ற ஒன்று அதிவேகமாக விர்ர் என்று சென்றதாக உணர்கிறேன். டக்கென்று திரும்பிப்பாற்பதர்க்குள் சிறிது தொலைவிலிருக்கும் மின்கம்பத்தில் மோதி குப்பை புல்லில் அது விழுகிறது.  அங்கு ஓடிச்சென்று குனிந்து பார்த்தால் அது ஒரு துப்பாக்கிக்குண்டு, ரவை.

அதிர்ச்சியில் எழுந்து தெருமுனையை பார்க்க நினைப்பதற்குள் மேலும் சில விர்ர்கள் தெருவை தாண்டி செல்வதாக உணர்கிறேன்.  ஓரளவு விபரீதத்தை உணர்த்து மீண்டும் என் வீட்டுச்ஸசுற்றுச்சுவர்  அழிக்கதவை நோக்கி தெருமுனையை திரும்பித் திரும்பி பார்த்தவாறே வேகமாக ஓடுகிறேன்.  அதற்குள் தெருமுனை குறுக்கு சாலையில் ராணுவ உடை போன்ற ஒன்ற அணிந்த ஒருவன் கனமான துப்பாக்கி ஏந்தி சாலையின் மறு பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிடுப்பதை பார்க்கிறேன்.  

வீட்டின் முன்னிருக்கும் தோட்டத்தை அடைந்துவிட்டேன். அங்கிருந்து மீண்டும் ஓட்டமெடுத்து பாதித்தொட்டம் வந்திருப்பேன், என் தலைக்குப்பின்னால் கடகட என ஒரு பழக்கப்பட்டதான ஒரு ஓசை கேட்க்கிறது.  நின்று திரும்பிப்பார்க்கிறேன், ஒரு பெரிய எலிக்காப்டர் ஒன்று தெருவில் இறங்கிகொண்டிருக்கிறது.  அதன் விசிறிகள் தென்னைமர ஓலையில் வேட்டுப்படுகிறதா எனக் லேகாகக் குனிந்து பார்த்தவாறே, ஒன்றும் புரியாமல் நிற்கிறேன். 

எலிக்காப்டர் தரை இறங்கியதுதான் தாமதம், உள்ளிருந்து ஒருசிலர் துப்பாக்கியும் கையுமாக சாதாரண பாண்டு சட்டை அணிந்து  தெருவில் குதிக்கிறார்கள்.  அவர்களில் ஒருவன் என் வீட்டு கேட்டுவாசலை நோக்கி ஓடி வருகிறான். அதைப்பார்த்த நான் மீண்டும் வீட்டை நோக்கி ஓட்டமேடுக்கிறேன்.  அதற்குள் அவன் அவன் என்னை விட வேகமாக ஓடி என் வீட்டுக்குள் போய்விட்டான்.  நான் வீட்டு வாசலை அடைவதற்குள், என் அப்பா அம்மா மற்றும் பலரோடு அவன் கரகரப்பான குரலில் இராணுவத்தோரணையில் எதோ மெல்லச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.  அவன் என் அப்பாவோடு எதோ பேசியவாறே வெளியே வந்துகொண்டிருக்கிறான்.  என் அப்பாவும் அவன் சொல்வதை ஆமோதிக்கும் முகபாவத்தோடு வந்துகொண்டிருக்கிறார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எல்லாரும் எலிக்காப்டரினுள் எற்றப்பட்டுவிட்டோம்.  என் அப்பா மட்டும் இன்னும் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.  எலிக்காப்டரின் விசிறி சுத்தும் ஓசையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்கவில்லை.  எலிக்காப்டர் புறப்படத்தயாராகிறது.  அதற்குள் அப்பா கதவருகே வந்து "நான் இங்கதான் இருக்கணும்.  இவங்களுக்கு மருத்துவ உதவி நறைய தேவைப்படும்போல. நீங்க கவலைப்படாம போங்க" என கூறி முடிப்பதற்குள் கதவுகள் டம்மெனச் சார்தப்பட,  எலிக்காப்டர் மேலெழ ஆரம்பிக்கிறது.  என் அம்மா என் கையை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்.  என் தாத்தாவும் பாட்டியும் பின்னிருக்கையின் ஓரத்தில் அமர்த்தப்பட்டிருப்பது ஓரக்கண்ணில் தெரிகிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை!

எலிக்காப்டர் அப்படியே செங்குத்தாக மேலெழுகிறது.  பின்னர் சிறிது முன்னோக்கிச்சென்று பின்னர் வளைந்து ஒரு சாலையின் மேலாக பறக்கிறது.  அந்த நெடுஞ்சாலையை எட்டிப்பார்க்கிறேன். வரிசையாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது.  கொஞ்சம் தூரம் சென்றதும் சாலையோரத்தில் ரயில் பாதையும் ஆரம்பிக்கிறது. அதில் நீளமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு ரயிலை பலர் மெனக்கெட்டு எரித்துக்கொண்டிருக்கிரார்கள்.

சிறிது நேரத்திலேயே எலிக்காப்டர் கீழிரங்கப்போவதாக வயிறுபிசைவதை  உணர்கிறேன்.  அதே நெடுஞ்சாலையின் மீதே அது இறங்கிக்கொண்டிருக்கிறது போல உணர்கிறேன்.  அதனாலு கீழே நன்றாக உற்றுப்பார்க்கிறேன்.  சற்று பழைமையான பங்களா போன்ற கட்டிடம்  ஒன்று தெரிகிறது.  அதன்  முகப்பு அரண்மனைகளின் முகப்பு போல இருக்கிறது.   ஒரு சில வினாடிகளுக்குள் அந்த கட்டிடத்துக்கு முன்னிருக்கும் திடலிலேயே இறங்குகிறது.  இறங்குபோது அக்கட்டிடத்தின் மேலிருக்கும் உடைபட்ட கூம்பு தான் முதலில் தெரிகிறது.  அதை இன்னும் சிலர் கடப்பாரையால் உடத்துக்கொண்டிருக்கின்றனர்.   எங்களை அக்கட்டிடத்தை நோக்கி கூட்டிச்சென்றுகொண்டிருக்கிரார்கள்.  எனக்கு முன் செல்கிறவர்கள் சிறு வாயில் வழியாக உள்ளே போய்க்கொண்டிருக்கிறார்கள்.  நான் வாயிலின் அருகே சென்றதும் தான் அதை காண்கிறேன்.  அந்த வாயிலிலிருந்து படிகள் கீழ்நோக்கி செல்கிறன.  வாயிலில் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை அணிந்த ஒரு முதியவர், உள்ளேவரும் எல்லாரையும் பார்த்து லேசாகச் சிரித்தவாறே "வரு வரு" என சொல்லிக்கிண்டிருக்கிறார். 

நான் அவரைப்பார்த்து "ஏன் இந்த அரண்மனையின் மேலே உள்ள கூம்பைச் சிலர் இடிக்கிறார்கள்?" எனக்கேட்கிறேன்.  அதற்க்கு அவர், "அரசாங்க இராணுவம் இடிந்த கட்டடங்களை மீண்டும் தாக்க மாட்டார்கள்". உடனே நான் "அரசாங்க இராணுவம் நம்மை ஏன் தாக்க வேண்டும்? ஏன் இந்த சண்டை நடக்கிறது?" என கேட்கிறேன். அவர் தலையிலிருந்து ததைப்பாகையை எடுத்தவாறே என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டு,  என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்முடியை அவர் விரல்களால் சற்று கலைத்துவிட்டு வேகமாகப் படியிறங்கி இரண்டுமூன்று மடிகள் முன்னே சென்றுவிட்டார். 

அந்த படிகள் அடித்தளத்தில் அமைந்திருக்கும் உள்விளையாட்டு மைதானம் போன்று இருந்த ஒரு பிரம்மாண்ட அரங்கத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது.  அந்த அரங்கத்தில் மின் விளக்குகள் நாலா பக்கமும் போடப்பட்டுள்ளன.  அதில் ஏன ஏற்கனவே ஒரு ஆயிரம் பேர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  சற்று தொலைவில் ஒருசிறு மேடையின் சுவரோரமாக வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒரு சாமியார் படத்தின்முன்பு ஒரு பேரிய கேரளக் குத்துவிளக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதை பார்த்து மலைத்துப்போயிருக்கும் நான், மீண்டும் அந்த முதியவரை அணுகிக்  "நீங்களெல்லாம் யார்? நீங்கள் ஏன் எங்களை பாதுகாக்கவேண்டும்?" எனக் கேட்கிறேன்

அவர் ஒரு கண்டிப்பான குரலில் என்னைப்பார்த்து "நாங்கள் பாபா ராம்தேவின் ஆட்கள்"

திடுக்கிட்டு கண்விழிக்கிறேன்......................


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...