சிலபல ஆண்டுகளுக்கு முன் பணி நிமித்தமாக சான்-பிரான்சிசுக்கோவுக்கு சென்றிருந்தபொது, அங்குள்ள ஒரு "எரித்திரியா" நாட்டு உணவகத்தில் "இஞ்சேரா" எனும் ஆப்பம் போன்றொரு உணவு கிடைக்கும் என்றும் அது மிகவும் சுவையாக இருக்குமேன்ரும் எனது அத்தையின் மகன் சொன்னான். அவன் கூறிய விளக்கத்திலிருந்தே என் நாக்கில் ஒரு சிற்றாறு ஓட ஆரம்பித்துவிட்டது.
ஞாயிறானது பகல் முழுதும் அனலொளியை உமிழ்ந்துவிட்டு மாலையில் ஊர்முழுக்க மஞ்சள் வெயில் பரப்பியிருந்த வேளையில் மிகவும் செங்குத்தான சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த அந்த சிறிய எரித்திரிய உணவகத்துக்குச் சென்றிருந்தோம். அது சாயலில் நம் ஊரிலுள்ள ஆந்திரா உணவகம் போன்றொரு தோற்றத்திலேயே இருந்தது.
கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சண்டையிட்டுப் பிரிந்து விடுதலை அடைந்த சிறிய நாடு எரித்திரியா. என்றாலும் எத்தியோப்பியா, சோமாலியா, எரித்திரியா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பண்பாடு தான் புழக்கத்தில் உள்ளது, உணவு முறை உட்பட. அப்படி ஒரு உணவு தான் இந்த "இஞ்சேரா".
மெலிந்த உடல்வாக்கு உள்ள எரித்திரியக் கறுப்பினத்தவர்கள்தான் அந்த உணவகத்தில் முதலாளியாகவும் வேலையாட்களாகவும் இருந்தனர். எதோ ஒரு புரியாத ஆபிரிக்க மொழி நாட்டுப்புற பாடலும் மெல்லிதாக ஒலிக்கவிட்டிருந்தார்கள்.
"இஞ்சேரா"வுக்கு வருவோம். நம்மில் எத்தனைபேருக்கு இது பழக்கப்பட்ட உணவு என தெரியவில்லை. எனக்கு அது முதல் அனுபவம் என்பதால், மேலும் எழுதுகிறேன். டேப்(teff) எனும் தினை போன்றொரு ஆபிரிக்கச் சிறுகூலத்தின் மாவிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. ஆப்பமாவு செய்வதுபோல் ஓரிரு நாட்கள் முன்பே தண்ணீரில் நன்கு கரைத்து புளிக்கும் வரை ஊறவைத்த டேப் மாவுக் கரைசலை மிகப்பெரிய சுடும் தோசைக்கல்லில் ஊற்றி மூடிவைத்து (ஆப்பம் செய்வது போலவே) இஞ்சேரா வெந்தவுடன் அதனை சுருட்டி எடுத்து பெரிய தட்டத்தில் பரிமாறி உங்களுக்கு பிடித்தமான எந்த கூட்டு/கறிகளுடனும் சேர்த்து வாயில் போட்டால், அமுதத்தின் சுவையும் இதுதானோ என எண்ணத்தொன்றும்.
சுருக்கத்தில், நம்ம ஊர் தோசை, ஆப்பம் போன்ற ஒரு உணவு. ஆனால் நம் அரிசி உளுந்து கோதுமை போன்ற சுவை இல்லாமல் ஊறவைத்து புளிக்கவைக்கப்பட்ட டேப் கலக்கலான ஒரு சுவையை இஞ்சேராவிற்கு கொடுக்கிறது.
அதனால் ஞெலுவர்களே, ஏதோ ஒரு பேரூரில் எத்தியோப்பியா, சோமாலியா, எரித்திரியா போன்ற எந்த ஒரு நாட்டின் உணவகத்தை நீங்கள் காண நேர்ந்தால் அங்கு "இஞ்சேரா" கிடைக்குமானால் சுவைக்காமல் வந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment