Sunday, January 23, 2022

'கெடும்' பற்றி வள்ளுவம்

 "கெடும்" பற்றி வள்ளுவர்:

௧} "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டாலும் அழிவு உறுதி. 
௨} "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்"
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவரின் குடும்பமானது, உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலைந்து திரியும்.
௩} "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவர், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவார்.
௪} "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்"
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
௫} "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
௬} "செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்"
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்துவைத்திருப்பவருடைய செல்வம், எவருக்கும் பயனளிக்காமல் இல்லாமல் அழிந்துபோகும்.
௭} "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
௮} "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்
பிறருடன் உள்ளங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவர் விரைவில் அழிவார்.
௯} "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்'
தன் செல்வத்தின் மதிப்பறிந்து அதற்கேற்ப வாழாதவரின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து, இல்லாமல் அழிந்துவிடும்.
௧०} "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்" 
தனது பொருளாதார நிலையை உணராது பிறர்க்குச் செய்யும் அளவில்லாத உதவிகளால் ஒருவரது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
௧௧} "எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்
எளியவராக காட்சியளிக்காமலும் ஆராய்ந்து நீதி முறை செய்யாதவராகவும் இருக்கும் மன்னர், தானே கெடுவார்.
௧௨} "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்" 
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளர் தன் பதவியை விரைவில் இழப்பார்
௧௩} "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு, விரைவில் அழியும்.
௧௪} "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
௧௫} "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
௧௬} "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்"
முன்னமே  அரண் செய்துகொள்ளாத மன்னர் போர் வந்த காலத்தில்  அஞ்சியே அழிவார்.
௧௭} "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்
பிறந்த குடிப்பெருமை  ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
௧௮} "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்.மடியாண்மை மாற்றக் கெடும்" 
ஒருவர் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவரது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
௧௯} "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்" 
முயற்சி செய்யாதவரை, உதவியாளராக வைத்துக்கொள்வது என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, பேர்க்களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
௨०} "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவர், தன் உள்ளத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்
௨௧} "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்
பாம்பென துணிச்சலுடன் நிற்கும் சிறுபடை முன், கடல் என வீரர்கள் எலியென அஞ்சி திரண்டிருந்தாலும், பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
௨௨} "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்
உயர்ந்த கொள்கையில் உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
௨௩} "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
௨௪} "கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்" 
இல்லாதவரைக் கண்டபின் இருப்பதை மறைத்துக்கொள்ளும் நோய் கொண்டவர்களுக்கு, இல்லாமை எனும் நோய் தொற்றி அவர் செல்வம் மொத்தமாக அழியும்.
௨௫} "இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது. 

 



No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...