Tuesday, February 1, 2022

தமிழ் - நாம்

ஆலமரத்தாண்டி

கரிசல் மண்ணும் புழுதியும் பறக்கும் ஒரு வானம் பார்த்த விவசாயச் சிற்றூரில் ஒரு பிச்சைக்காரன் இருந்துவந்தான்.  அவன் அந்த ஊரிலேதான்  பிறந்ததும் வாழ்ந்தும் வந்தான்.  அங்கு, சாலை ஓரம் வளர்ந்திருக்கும்  அரசமரத்தின் அடியிலேதான் அவன் எப்போதும் இருப்பான்.  அவ்வழியாக போகிற வருகிற அவ்வூர்க்காரர்களிடம் கை நீட்டி அவன் இரக்கையில், அவனுக்கு  உண்ண, உடுக்க, வாங்கக் ஏதாவது கொடுப்பர்.  அவனும் கிடைக்கிற சொற்பத்தை வைத்துக்குக்கொண்டு  வாழ்ந்துவந்தான்.  அவன் அம்மரத்தின் அடியிலேயே பலகாலம் வாழ்ந்துவருவதால், அவ்வூரிலுள்ள ஒவ்வொருவருக்கும் அவன் ஆலமரத்தாண்டி என்ற பெயரில் நன்கு பழக்கப்பட்டவனாகவே இருந்தான்.  அந்த இடம் தான் அவனது வாழ்விடமாக இருந்தது.  அவனுக்குக் கிடைக்கும் உணவும் பொருளும் பெரும்பாலான நாட்களில் அரை வயிற்றுக்கு மட்டும்தான் இருக்கும். வாழ்நாள் முழுவதும் பழைய கந்தல் உடைகளை மட்டுமே உடுத்திவந்த அவன்,   உணவோ பொருளோ கொடுப்பவர்களை கண்மூடி "குறைவின்றி வாழ்க" என உளமாற வாழ்த்துவான்.   
ஆண்டுகள் செல்லச்செல்ல அவனும் மூப்பெய்தினான்.  ஒரு மார்கழி பனி இரவில் திடீரென இறந்துவிட்டான்.   அவ்வூர்மக்கள் அதை நினைத்து மிகவும் வருந்தினர்.   ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூடி, அவன் உடலை எரிக்காமல், அவன் வாழ்ந்த மரத்தடியிலிலேயே புதைத்து, அவனை மரியாதை செய்யும் விதமாக அதில் ஒரு சிறிய சமாதிக்கல்லும் நட்டுவைக்க முடிவெடுத்தார்கள்.  அதன் தொடர்ச்சியாக, அவன் உடலைப்புதைக்க, அவன் இருந்த இடத்தில் ஒரு குழி தோண்டலாயினர்.  ஒரு அடி கூட தோண்டியிருக்கமாட்டார்கள், "ணங்" என்று உலோகம் தட்டுப்படும் ஓசை கேட்டது.  அது என்னவென்று இழுத்தெடுத்துப் பார்க்கையில், அது ஒரு செப்புப்பானை.  தட்டித்திறந்துபார்த்தால், முழுவதும் தங்கக்குமிழிகள் கோர்க்கப்பட்ட வைர அணிகலன்களும்,  இரத்தினங்களும் இருந்தன....  
அங்கு இருந்த ஒரு ஊர்க்காரர்  இப்படிச்சொன்னார்: "இந்த பிச்சைக்காரன், எல்லா பக்கமும் கை நீட்டினான், அவன் அமர்ந்த இடத்தின் கீழே தவிர

இப்போது!, 
அந்த செல்வவளம் நிறைந்த செப்புப்பானை தான் தமிழ்....
பிச்சைக்காரன் - நாம்...!!

  :கதை
கம்பவாரிதி திரு. இலங்கை செயராசு



.

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...