Saturday, April 2, 2022

நாற்காலி பூதம்

நாற்காலி பூதம்

ஓடிவந்த குழந்தை நாற்காலியில் தட்டி கீழே தடபடோல் என விழுந்து ஓவென அழுதபொழுது, மற்ற பெரியவர்கள் "அழாதே அழாதே" எனத் தேற்றினார்கள்.  குழந்தையோ அழுகையை நிறுத்தியபாடில்லை.  நாற்காலியைக் சுட்டிக் காண்பித்துக் காண்பித்து விண்விண்ணென்ற வலியாலும் எதிர்பாரா வீழ்ச்சியின் அதிர்ச்சியாலும் பெருத்த குரலில் அழுதுதது.  கடைசியில் விரைந்து வந்த ஆச்சி, குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு நாற்காலியின் அருகே போய் குழந்தையைத் "தடுக்கிவிட்ட" அந்த 'நாற்காலி பூதத்தை', "குழந்தைய கீழே தள்ளிவிடுவியா.. தள்ளிவிடுவியா.. ம்ம்ம்ம்.. எவ்வளவு தைரியம் உனக்கு.. ம்ம்ம்.. பிச்சுப்புடுவேன் பிச்சு" என்று பொய்ச்சினம் கொண்டவாறே, நாற்காலியை நான்கு தடவை ஓங்கி அடித்தார்...  என்ன வியப்பு, குழந்தை அழுகையை லேசாக நிறுத்தி, விசும்பலூடே மெல்லிய புன்னகையும் உதிர்க்க ஆரம்பித்தது.. இதைக் கவனித்த ஆச்சி, குழந்தைக்கு முத்தம் கொடுத்து குளமான கண்களை தன் முந்தானையால் துடைத்துவிட்டு, அந்த 'நாற்காலி பூதத்திற்கு' மேலும் நான்கு அடிகளை, "செய்வியா.. குழந்தைய தடுக்கிவிடுவியா.." என்றவாறே கொடுத்தார்.  இதைக்கண்ட குழந்தை, கிட்டத்தட்ட தன் அழுகையை நிறுத்தி, கண்கள் மலர, சிரித்தவாறே தானும் அந்த நாற்காலியை அடிக்கவேண்டும் என தன் சிறு கைகளை நீட்டி ஆட்டியது.

நம்மில் பெரும்பாலானோரும் நம் மழலைப்பருவத்தில் இந்த "நாற்காலி பூதத்தை" நைய்யப்புடைத்திருப்போம்.  அகவை வளர வளர, 'நாற்காலி பூதத்தின்' வடிவமும் பொருளும் மாறியதே தவிர அழிந்துவிடவில்லை என்பதை கவனிக்கவும்.  அது, புளியமர பூதமாகவும் கல்லறை பூதமாகவும் நிழல் பூதமாகவும் கொலுசு பூதமாகவும் சுண்ணாம்பு கேட்கும் இருட்டு பூதமாகவும் தப்பு செய்தால் உறங்கும்போது கண்ணைக் குத்தும் பூதமாகவும்  நன்மை செய்யும் பூதமாகவும் தன்னை அழித்துக்கொள்ளும் பூதமாகவும் தண்டனை பெற்ற பூதமாகவும் வணங்கப்படவேண்டிடும் பூதமாகவும் கொண்டாடப்படவேண்டிய பூதமாகவும் பாவங்களைப் போக்கும் பூதமாகவும் தூண்துரும்பு பூதமாகவும் அவதார பூதமாகவும் விண்வெளி பூதமாகவும் ஒற்றை பூதமாகவும் தந்தை-தாய்-மகன்-மகள் பூதமாகவும் இன்னும் பலவகை பூதங்களாகவும் நாம் கற்கும் கல்விக்கும் நாம் கேட்கும் செய்திகளுக்கும் நம் கற்பனைகளுக்கும் ஏற்படி நம் மூளைக்குள் பரிணமித்திருக்கிறது.

அடிப்படையில் மாந்தர்களின் மூளைக்கு, ஒரு 'நாற்காலி பூதமானது' ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் தேவைப்படுகிறது.  காட்டு விலங்குகளின் இடையேயும் கொடுமையான எதிரிகளின் இடையேயும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அஞ்சி அஞ்சி வாழ்த மாந்தரினக் குரங்கிற்கு, நகரமயமாக்குதலின் விளைவாக, மிகக்குறுகிய அண்மைக்காலமாகத் தான், ஓரளவு நிம்மதியான உறக்கமும் வாழ்க்கையும் கிடைக்கப்பெற்றுள்ளது.  இன்றளவும் உங்களை சுற்றிப்பாருங்கள் நிம்மதியாக உறங்கமுடியாத இலட்சக்கணக்கான மக்கள் தென்படுவர்.  ஒரு மாந்தருக்கு, அவரை நிம்மதியாக வாழவிடாமலும், உறங்கவிடாமலும் செய்வதானது, ஒரு 'நாற்காலி பூதத்திலிருந்து' பரிணமித்த சிலவகை பூதங்களே என நம்புவதை நோக்கிச் செல்வதைவிட வேறு வழியில்லாமல் அமைந்திருக்கிறது, அம்மாந்தரின் மூளையின் பக்குவப்பாடும் பழக்கப்பாடும்.   இப்பக்குவப்பாடும் பழக்கப்பாடும், அம்மாந்தரின் அறிவு வளர்ச்சிக்கு தடையாக அமையும் வாயிலில்லா திண்கற்காரைச் சிறைச்சுவர்கள்களும் கூரையும் தரையுமாக ஆகின்றன.  அதனை உடைத்தெறிவது சற்று கடினமே.  உடைத்தெறிந்து வெளிவந்தால், விடுதலைபெற்ற பருந்துபோல் எல்லைகளில்லாத எண்ணங்களில் உயரப்பறந்து பரந்துபட்ட அறிவுக்காட்சியக் கண்டுகளிக்கலாம்..  

உடைத்தெறிந்து வெளியேறுங்கள்..

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...