Sunday, April 24, 2022

திரிந்த பழமொழிகள்

திரிந்த பழமொழிகள்

நம்மிடையே புழக்கத்தில் உள்ள பல பழமொழிகள் காலத்தால் வாய்வழிப் பயன்பாட்டால் பலவாறு வேடிக்கையாகத் திரிந்துள்ளன. 
"அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்"

விளக்கம்: நன்நெறி நூல்களில் உள்ள அடிகள்(வரிகள்) நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதுபோல வேறு யாரும் நம்மை உதவமாட்டார்.

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்தராத்திரியில் குடை பிடிப்பான்"

விளக்கம்: 'அற்பணித்து வாழ்ந்துவந்தால் அர்தராத்திரியிலும் கொடைகொடுப்பான்'

"அரசனை நம்பி புருசனை கைவிட்டதுபோல"

விளக்கம்: "அரச (மரத்தை) சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பதை நம்பி கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கும் பெண் போல"

"ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"

விளக்கம்: 'ஆயிரம் (வகையான மருத்துவ) வேர்களைக் கொண்டவன் (வைத்து மருத்துவம் செய்ய வல்லவன்) அரை வைத்தியன்'

"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்"

விளக்கம்: 'ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி கல்யாணம் பண்ணவேண்டும்'

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"

விளக்கம்: நன்மைகள் ஆவதும் பெண்களே தீமைகள் அழிவதும் பெண்ணாலே

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"

விளக்கம்: "இது கர்ணன் தன் தாயாரான குந்தியிடம் கூறியது. அதாவது, கர்ணன் பாண்டவர்களோடு சேர்ந்து அறுவர் அனாலும் கௌரவர்களோடு இருந்தாலும் அவனுக்கு இறப்பு உறுதி என்பதே அது."

"ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும்"

விளக்கம்: "யார் எக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும்"

"உண்டிக் குறைத்தல் பெண்டிர்க்கு அழகு"

விளக்கம்: இங்கு 'உண்டி' என்பது (உணவு தயாரிக்க) சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறிக்கிறது.  உண்டிக்குறைத்தால் (தங்களுக்கான) பிற வேலைகளில் செலவிடலாம்.

"உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கும் மிஞ்சாது"

விளக்கம்: "உழுதவன் கணக்குப்பார்த்தால் உழைப்பும் மிஞ்சாது"

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"

விளக்கம்: ஊர் மக்கள் குழுக்கள் ஏதோ ஒரு காடணத்தால் சண்டையிட்டு இரண்டுபட்டால், ஒரு கூத்தாடியைக் கூட்டிவந்து கொண்டாடவிட்டால், வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒன்றுபடுவர்.

"ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்"

விளக்கம்: ஊரான் வீட்டுப் பிள்ளை: என் மனைவி, மகனின் மனைவி.  தன் பிள்ளை: என் பிள்ளை, மகன்

"எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார் படிச்சவர் பாட்டைக் கெடுத்தார்"

விளக்கம்: "அறிஞர்கள் தாங்கள் எழுதிவைகளை ஏடுகளாக்கிக் கொடுத்துள்ளனர். அவற்றை படித்தவர்கள் பாடமாகக் கற்றுக்கொடுப்பார்கள்"

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது"

விளக்கம்: "பேட்டுச் (பேடு - உள்பக்கம் காய்ந்த) சுரைக்காய் கறிக்கு உதவாது.  சுரைக்குடுக்கை செய்யத்தான் உதவும்".

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

விளக்கம்: ஆடம்பரமாக வாழக்கூடிய தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற துணை, ஏமாற்றும் உடன்பிறப்புகள், சொல்பேச்சு கேளாத பிள்ளைகள் எனும் "ஐந்தையும் பெற்றால் அரசனும் ஆண்டி" ஆவான்.

"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே"

விளக்கம்: கள்ளனை(கண்ணனை) நம்பினாலும் குள்ளனை(மாவலியை நயவஞ்சகமாக அழித்த வாமனனை) நம்பக்கூடாது

"களவும் கற்று மற"

விளக்கம்: 'களவும் கத்தும் மற'. களவு - திருட்டு; கத்து - சூது/பொய்

"குரைக்கின்ற நாய் கடிக்காது"

விளக்கம்: குழைகின்ற நாய் கடிக்காது

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல"

விளக்கம்கழு(மரம்) (காலத்தால் துருப்பிடித்துத்) தேய்ந்து கட்டிரும்பு (அதாவது, பழைய இரும்பு) ஆனது போல.

"கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை"

விளக்கம்: கழு (என்ற புல் வைத்து பாய்) தைக்கத் தெரியுமா(ம்) கற்பூர வாசனை.

"கண்டதையும் படிப்பவர் பண்டிதர் ஆவார்"

விளக்கம்: "கண்ணால் காணும் கலைகளைக் கற்பவர் அறிஞர் ஆவார்"

"கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை"

விளக்கம்: "நாயகர்" என்பது நாய் என மருவியுள்ளது.  இங்கு நாயகர் என்பது கடவுளைக் குறிக்கிறது.  கற்சிலையை கடவுளாக வைத்து வழிபடும்போது கல்லாகப் பார்த்தால் அது கடவுளாகத் தெரியாது.  அதேநேரம் கடவுளாக நம்பிவிட்டால் வெறும் கற்சிலையாகத் தெரியாது.

"காக்கா பிடிச்சாவது காரியத்த நடத்து"

விளக்கம்: "பிறர் காலயும் கையையும் பிடித்துவிட்டு அவர்களை உளங்குளுரச்செய்தாவது வேண்டிய செயலை செய்துமுடி" என்பதே பழமொழி.

"குருவிக்கு ஏற்ற இராமேசுரம்"

விளக்கம்: "குறி வைப்பதற்கு ஏற்ற இராம சரம் (அம்பு).  அதாவது, செய்து முடிக்கவேண்டிய செயலை செய்யவல்ல கருவி/செயல்முறை/திட்டம் கிட்டியபோது சொல்வது"

"கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?"

விளக்கம்: "கைப்பூண் (கையில் அணியும் அணிகலன்கள்) தனைக் காண எதிரொளிக்கும் கண்ணாடி தேவையில்லை.  நேராகவே பார்த்துவிடலாம்.  எளிதாகச் செய்யவேண்டியதை யாராவது சுற்றிவளைத்துச் சிக்கலாகச் செய்ய முற்பட்டால் இப்பழமொழியைக் கூறுவர்"

"சேலைகட்டிய மாதரை ஒருபோதும்  நம்பாதே"

விளக்கம்: 'சேல் ஆகட்டிய மாதரை ஒருபோதும்  நம்பாதே'. (சேல்) கெண்டைமீன் போன்ற கண்களை (அகட்டிய) அலைபாயவிடும் பெண்களிடம் கவனமாக இருக்கச்சொல்கிறது இப்பழமொழி

"சோழியன் குடுமி சும்மா ஆடுமா"

விளக்கம்: சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா.  சும்மாடு - தலைமீது பாரம் சுமக்க தலைப்பாகை போன்ற துணியாலான பொருள்.

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்"

விளக்கம்: "வாழைத் தையின் (கன்றின்) வேரானது எட்டடி வரை சுற்றி ஊன்றும், அதுபோல தென்னம் பிள்ளையின் வேரானது பதினாறு அடி வரை சுற்றி ஊன்றும்."

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"

விளக்கம்: "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு; நல்ல மாந்தருக்கு ஒரு சொல்" என்பதே பழமொழி.  மாட்டின் கால் சுவடை வைத்தே அதன் அகவையையும் உடல்நலத்தையும் கணித்திடும் பழக்கம் படைய மாந்தர்களிடம் இருந்தது.

"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து"

விளக்கம்: இதில் பந்தி அல்லது பட்டி என்பது போர்களில் முன் செல்லும் படைப்பிரிவு.  ஒவ்வொரு பந்தியிலும் ஒரு யானையும் ஒரு தேரும் மூன்று குதிரைவீரர்களும் ஐந்து காலாட் படை வீரர்களும், மோத்தமாக பத்து வீரர்கள் இருப்பர்.  இப்படை வீரர்கள் விரைவாக முன்சென்று முதற்கட்ட அதிரடித் தாக்குதலை நிகழ்த்தவேண்டும்.  இப்பழமொழியில் படை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பின்னால் வரும் பெருந்திரளான காலாட் படை வீரர்களையே.  இது தொடர்பாக மாபாரதக் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற படைப்பிரிவுகளைப் பற்றி இங்கு காண்க.

"பாத்திரம் அறிந்து பிச்சை பொடு; கோத்திரம்  அறிந்து பெண்ணைக் கொடு"

விளக்கம்பா(டும்) திறம் அறிந்து பிச்சை(கொடை) போடு(கொடு) ; கோ(அரசனின்திறமையை அறிந்து பெண்ணைக் கொடு.

"பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும்"

விளக்கம்: இதிகாசக் கதைகளில் வரும் போர்க் காட்சிகளில் பாம்பு வடிவம் கொண்ட அம்புகள் (நாக அத்திரம்) மிக ஆற்றல் உடையவைகளாகக் காட்டப்படுகிறது.   பாம்பு அம்புகளை ஏவிவிடும்போது எதிரிப் படையினர் அஞ்சி ஓடுவர் என நம்பப்படுகிறது.

"புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்று"

விளக்கம்: புண்பட்ட நெஞ்சை (நல்ல செயல்களில்) புகவிட்டு ஆற்று

"பூனை இல்லாத வீட்டில் ஏலி துள்ளி விளையாடும்"

விளக்கம்: "பூநெய் (தேன்) இல்லாத வீட்டில் கலி (நோய்->துன்பம்) வரும்"

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"

விளக்கம்: "இங்கு புதன் (கோள்) என்பது கல்வியையும் அறிவையும் குறிக்கிறது.  பொன் என்பது பொருட்செல்வத்தைக் குறிக்கிறது.  'எவ்வளவுதான் பொருள் இருந்தாலும் வளமான கல்விக்கும் நுட்பமான அறிவுக்கும் அது ஈடாகாது' என்பதே அதன் பொருள்  "

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா"

விளக்கம்: "மண்குதிர் தனை நம்பி ஆற்று வெள்ளத்தில் இறங்கலாமா.  மண்குதிர் என்பது ஆற்றினுள் ஏற்படும் மணல் மேடு.  ஆற்றுவெள்ளத்தில் கரைந்துவிடும் அல்லது அது புதைமணலாக இருக்கும்."

"மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்"

விளக்கம்: 'மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்; மருமகள் உழைத்தால் பொன்னுக்கு உரம்'. இங்கு பொன் என்பது 'செல்வத்தைக்' குறிக்கிறது.  இது உழவர்களிடையேயான பழமொழி.

"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல.."

விளக்கம்: முயலான்(சோம்பேறி) மரத்தின் உச்சியில் இருக்கும் தேன்கூட்டிலுள்ள கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல..

"யானைக்கு ஒரு காலம்வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்"

விளக்கம்: 'ஆ நெய்க்கு என்று ஒரு காலம் இருந்தால் பூ நெய்க்கு என்று ஒரு காலம் வரும்'.  ஆநெய் - மாட்டுப்பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்;  பூநெய் - தேன்; ஆநெய்க்கான காலம் - இளமைப்பருவம்; பூநெய்க்கான காலம் - முதுமைப்பருவம். அல்லது, இனிப்பான நெய்ப்பண்டங்களை நிறைய  உண்டால், கசப்பான மருந்தை தேனில் குழைத்து உண்ணவேண்டிய காலம் வரும்.

"வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்"

விளக்கம்: வரவர மாமியார் கைதை போல ஆனாளாம். கைதை என்றால் ஊமத்தை.  ஊமத்தை பூக்கும்போது பார்க்க அழகாகவும் அதுவே காயாகும்போது முள்நிறைந்ததாகவும் இருக்கும்.

"வக்கற்றவர் வாத்தியார் வேலைக்குப் போவார்"

விளக்கம்: "வாக்கு கற்றவர் வாத்தியார் வேலைக்குப் போவார்"

"விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்"

விளக்கம்: விருந்து(போல்) உண்பதற்கான நாட்கள் ஞாயிறு, திங்கள், புதன்; மருந்துபோல் அளவாக உண்ணவேண்டிய நாட்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி; சனி - நோன்பு

பல இடங்களிலிருந்து சேகரித்தது.... 


 

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...