கருப்பு சூத்திரச்சி
1976
மாலை 4:10
அப்போது தான் மோர்க்கூழ் பருகிவிட்டு தாத்தா மடியில் அமர்ந்திருந்தேன். தாத்தா உள்திண்ணையில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாற்காலியில் எதிரே மச்சில் செல்லும் ஏணிப்படியின் வாசல் திண்டில் அப்பாமை நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார். நான் வாசலில் செல்வோரையும் அப்பாமையையும் மாறிமாறி பார்த்துகொண்டு புன்னகைத்தவாறே எதோ சொல்லிக்கொண்டிருந்தேன். மாலைநேரக் கதிரவன் தெருவெங்கும் பரப்பிவைத்திருந்த மஞ்சள் வெயில் மயக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. என் உடலெல்லாம் ஒரே குட்டிகூரா வாசம். தாத்தா என் பின்தலையை அவ்வப்போது முத்தம் கொடுத்தும் விரலால் நோண்டுவதுமாக இருந்தது எனக்கு குறுகுறுப்பாக இருந்தது.
4:15
அம்மா, கைகால்முகம் கழுவி தலைவாரி பவுடர் போட்டு போட்டுவைத்து கையில் வாரியலும் வாளியுமாக எங்ககளைக்கடந்து வாசல் திண்ணையை நோக்கி சென்றார். அதேநேரத்தில் பேபியக்காவும் இலதா அக்காவும் என் வீட்டுக்குள் துள்ளியவாறே வந்தனர். இலதா அக்காவின் ஒக்கலில் ஒரு குழந்தை இருந்தது. அக்குழந்தை ஒரு சிறிய கால்சட்டை மட்டுமே போட்டுக்கொண்டிருந்தது. எனக்கு சிரிப்பாக வந்தது. பேபியக்கா என்னை இருகைகளாலும் தாத்தா மடியிலிருந்து தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். "பார்த்து தூக்குடீ கொழந்தைய தாழ கீழ போட்டுராதே" என அப்பாமை அதட்டினாள். அப்போதுதான் அதைப் பார்த்தேன். எனக்கு எந்தவித சட்டையும் போட்டுவிட்டிருக்கவில்லை . மிகவும் வெட்கமாகிவிட்டது. பேபியக்காவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான். என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு "ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." என பாடிக்கொண்டிருந்தாள். வாசலில் அம்மா கோலம் போடுவதை பார்த்துக்கொண்டிருந்த இலதா அக்கா, பாட்டைக்கேட்டு உள்திண்ணைக்கு வந்து அவளும் பாட ஆரம்பித்தாள். இலதா அக்கா கையில் இருந்த குழந்தையும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. தாத்தாவுக்கு ஏனோ அக்காக்கள் பாடுவது துளியும் பிடிக்கவில்லை போல, "போங்க போங்க வெளில போய் ஆடுங்க" என்றார்.
4:30
நாங்கள் எல்லாரும் பக்கத்து பாம்படம் மாமி வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தோம். இலதா அக்கா கிழக்கே அத்தம் எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். பேபி அக்கா இன்னும் பாடிக்கொண்டுதான் இருந்தாள். பேபியக்கா மீது பாண்ட்சு மனம் வீசிற்று, பூபோட்ட பாவாடை சட்டை அணிந்திருந்தாள். இலதா அக்கா பச்சை நிற பாவாடையும் வெள்ளைநிற சட்டையும் தலையில் பச்சை நிற இரிப்பனுடன் பள்ளிச்சீருடையிலேயே இருந்தாள் .
"பேபி பாருடீ பாருடீ கிழக்கே அத்தம் பாருடீ" என இலதா அக்கா எதையோ கையை நீட்டி காண்பித்தாள். நான் உற்றுப்பார்த்தேன். அதற்குள் இருவரும் எழுந்துநின்று "யேஏஏஏ.." என கையசைக்கலாயினர். தொலைவில் மாட்டுக்கொளத்தையும் தாண்டி தொடரி வண்டியானது பெட்டி பெட்டியாகப் போய்க்கொண்டிருந்தது. நானும் கையை அசைத்தேன். எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
4:45
"டீ இலதா, வாடி உள்ள, வந்ததும் வராத்ததுமா கொழந்தைய கொஞ்சிண்டிருக்கே" என்று கையில் மாவரைத்த கையோடு மீனாட்சி மாமி அவர்வீட்டு திண்ணை கழிக்கொலை பிடித்தவாறே சொன்னார். "உள்ளவந்து கைகால் கழுவி சீருடைய மாத்துடி.... காப்பி கலந்து வெச்சேனே குடிச்சியா..." என வரிசையாக இலதா அக்காவைப்பார்த்து அடுக்கிக்கொண்டேயிருதார் மீனாச்சி மாமி. "போடீ போ, அம்மாவுக்கு சினம் வருவதுக்குள்ள போயிரு" என்றாள் பேபியக்கா. இலதா அக்கா எழுந்து அவர் வீட்டு வாசலுக்கு போகையில் "மொதல்ல கொழந்தைய அவவீட்ல கொண்டு கொடு. அவாள்ளாம் இன்னிக்கி சாயங்காலம் நாகராசா கோவிலுக்கு போகணும்னு சொல்லிண்டிருந்தா.. போ.. போ.." என்றாள் மீனாட்சி மாமி.
5:00
பெருமாள் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது, அம்மா வாசலில் வந்து எட்டிப்பார்த்தார். பின்பு திரும்பி எங்களைப்பார்த்து
"என்ன பண்ணறான், இலதா எங்கே?" .
"தேமேன்னு தான் இருக்கான்.. பராக்கு பாத்துண்டுருக்கன். இலதா சீருடை மாத்த போயிருக்கா".
"கொழந்தை?".
"ஏமாவோட அம்மாவும் பாட்டியும் நாகராசா கோவிலுக்கு போவாங்களாம். இலதா அவ வீட்ல கொண்டு விட்டுட்டா"
சிறிது தொலைவில் ஒரு சில அண்ணாக்கள் நிக்கர் அணிந்துகொண்டு பம்பரம் விளையாட ஆரம்பித்தனர். அப்போது பார்த்து இன்னொரு அக்கா அங்கு வந்து எங்கள் முன்னால் நின்றவாறு பேபியக்கவிடம் குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்த அக்கா எங்களுக்கு முன்னால் நிற்பதால் எனக்கு பராக்கு பார்க்க முடியவில்லை.
அந்த நேரத்தில் "போங்கமா போங்க.. இங்கெல்லாம் நீங்களெல்லாம் வரப்டாது.." என்ற ஓசை வரவே நாங்கள் எல்லாரும் கோவிலை நோக்கி திரும்பிப்பார்த்தோம். கோவில் பூசாரி கோவில் வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து சத்தம்போட்டு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணின் இடுப்பிலும் ஒரு பாவாடைசட்டை அணிந்த ஒரு குழந்தை இருந்தது.
"என்ன சொன்னேள்.. யாரப்பாத்து கோவிலுக்குள்ள வரப்டாதுனு சொல்லறேள்".. என்று அந்த பெண் பெருங்குரலெடுத்து கத்தலானார்.
"பிராமணன் யாரு சூத்தரன் யாருனு வித்தியாசம் தெரியாம நீங்கள்ளாம் எதுக்கு கோவில் குக்ளிக்கறேள்.."
"கோவில் நடத்தற இலச்சணம் இப்பிடியாயிருந்ததுனா உள்ளருந்து பகவான் வெளிய ஒடிப்போயிருவார் "
"எங்காத்து புருசாளுக்கு மட்டும் இது தெரிஞ்சிதுனா, ஒய், ஒம்ம நாக்கறுத்து ஊறுக்காய் போட்டுருவா..."
என்று சொல்லிவிட்டு விசும்பலானார், முந்தாணையால் கண்களை துடைத்துக்கொண்டார். பின்பு அப்படியே கோவில் வாசல் படியில் அப்படியே அமர்ந்துவிட்டார்.
நாங்கள்ளாம் அதிர்ச்சியில் சற்று திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம். எல்லார் வீட்டு வாசலிலும் மக்கள் கூடிவிட்டனர். இன்னொரு அக்கா, பேபியகாவைப் பார்த்து, "யாருடி அந்த மாமி. இதுக்கு முன்னாடி பாத்ததேயில்லையே" என்றாள். என்னுடைய அம்மாவும் பேபியகாவைப் பார்த்து அதே கேள்வியை கேட்டார். பேபியக்கா சிறிது யோசித்துவிட்டு, "பெரிய தெருவுல புதுசா யாரோ வந்துருக்கானு அப்பா சொன்னார்னு நினைக்கிறேன்.. அவாத்து மாமியா இருப்பாளோ?, எனக்கும் தெரியல்ல மாமி" என்று உதட்டை பிதுக்கினாள். அக்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான் என் உதட்டை அதுமாதிரியே பிதுக்கி பார்த்துக்கொண்டேன்.
வெலவெலத்துப்போன பூசாரி தன் குரல் தாழ்த்தியவாறு "மாமி மன்னிச்சிக்கோங்கோ. ஒங்கள இதுக்கு முன்னாடி முன்னப்பின்ன பாத்ததில்ல... சொல்லறேனேன்னு தப்பா நெனச்சுக்காதேங்கோ, நீங்க கொஞ்சம் நெறம் மட்டா தெரியறதுனால பிராமணாள் இல்லையோனு நெனச்சுட்டேன், என்ன மன்னிச்சுக்கோங்கோ, என்ன மன்னிச்சுக்கோங்கோ" என்றார்..
மறுபடியும் எழுந்து நின்ற அந்த மாமி, ஆவேசமாய், "டேய், என்ன கறப்புங்கறையா.. ஆமாண்டா நான் கறப்பு தான்.. அதுக்காக கோவிலுக்கு வரும்போது ஒனக்காக பூணூல் எல்லாம் போட்டுண்டு வரமுடியாது, தெரிஞ்சுக்கோ"
"மாமீ, கொஞ்சம் மரியாதையா பேசுங்கோ, நான் ஒங்கள விட வயசுல பெரியவனாக்கும், இதுவும் கொவிலாக்கும், தெருவுல வேற எல்லாரும் பாக்கறா"
"ஒனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை. போம்மனாட்டிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல்லை... இது கோவில்னு நீ சொல்லித்தான் தெரியணம்னில்லை, எல்லாரும் பாக்கட்டுமே ஒன்னோட சந்தத்த... இரு இரு இப்போ போய் எங்காத்துக்காரர கூட்டிண்டு வரேன். அவர்ட்ட பேசிக்கோ. நன்னா கொடகொடயா குடுப்பார் வாங்கிக்கோ"
அதற்குள் அம்மங்கார் பகவதி மாமியும் இன்னும் சில மாமா மாமிகளும் கிடுகிடு என்று கொவிலுக்கருகில் சென்றுவிட்டார்கள்.
"மாமி.. மீனா மாமி, அவர் செஞ்சது மகா தப்புத்தான், அவரும் மன்னிப்பு கேட்டுட்டார், நாங்களும் தெருக்காரா சார்பா மாப்பு கேட்டுக்கறோம். இனிமே இதுமாதிரி நடக்காது." என்றார் அம்மங்கார் மாமி.
பூசாரியைப்பார்த்து "என்ன ஓய், கொஞ்சம் கவனமா இருக்கண்டாமா "
கோவில் மாமாவின் முகம் கொவத்தாலும் அவமானத்தாலும் வியர்த்து சிவந்திருந்தது.
"வாங்கோ மாமி நாம எல்லாரும் கோவிலுக்கு போகலாம்", அழுது முகம் வீங்கியிருந்த மீனா மாமியின் கண்களை துடைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றார்.
பதட்டத்தில் நான் பேபியக்காவின் கழுத்தை இறுக்க பிடித்துக்கொண்டிருந்தேன். அம்மங்கார் பாகவதி மாமினா எனக்கு எப்பவுமே பயம் தான். நான் பார்த்த பெண்களிலே நல்ல உயரமும் பருமனும் ஆண்தன்மையும் கொண்டவர் அம்மங்கார் பாகவதி. சிறிதாக மீசையும் உண்டு.
6:00
தீபாராதனைக்கான மணி கேட்டது, நாங்கள் எல்லாரும் கோவிலின் நேரே உடைந்து போயிருந்த சாலையில் போய் உம்மாச்சியை பார்த்தவாறே கும்பிட்டுக்கொண்டு நின்றோம்.
தீபாராதனை முடிந்ததும் பேபியக்கா என்னை அம்மாவிடம் கொடுத்துவிட்டாள், வீட்டுப்பாடம் இருக்காம். அம்மா என்னை ஒக்கல்லேல தூக்கிக்கொண்டு வாசல் கல் படியில் காலை தேய்த்தவாறே நடந்து சென்றபோது, கோவில் பக்கமாய் மீண்டும் திரும்பிப்பார்த்தேன். மெல்லியதாக இருட்ட ஆரம்பித்திருந்தது.
கோவிலின் முன்னால் தெருவுக்குள் வரும் இரு பெரும் படிகளின் மீது நின்றவாறே அப்பாமையும் மீனாச்சி மாமியும் அம்மங்கார் பாகவதி மாமியுடன் எதோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதில் கதையின் கரு மட்டுமே உண்மை நிகழ்வு. மற்றவை என் கற்பனையே.
No comments:
Post a Comment