ஒண்ணுக்கு
11சே பேருந்து தக்கலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வில்லுக்குறி தொட்டிப்பாலம் தாண்டியாயிற்று. கிழட்டு யானை செல்வது போல ஆடி அசைந்து சென்றது பேருந்து. அத்தனை கூட்டம். ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் நான்கைந்து மடங்கு இருந்தனர்.
மாலை மூன்றரை மணிக்கே நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இப்பேருந்தில் ஏறியிருந்தேன். ஒரு சாளரத்தோர இருக்கை கிட்டியதில் எனக்கு சிறு மகிழ்ச்சி. சில நிமிடங்களிலே பேருந்துக்குள் கூட்டம் திமுதிமு என ஏறத்தொடங்கினர். பெரும்பாலா பெண்கள் பட்டுச்சேலையும் கழுத்தும் கைகளும் நிறைய நகைகளும் அணிந்திருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்கு போய்விட்டு வருபவர்கள் போல இருந்தனர். அவர்களுடன் நிறைய சிறு குழந்தைகளும் வாண்டுகளும் ஏறி நின்றிருந்த பேருந்தில் ஒரே சலசலப்பு. கூட்டம் மிகுந்ததால் காற்றோட்டம் குன்றி வியர்க்கத்தொடங்கியது. எப்போதுடா வண்டி எடுக்கப்போகிறார்கள் என்றாகிவிட்டது. சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடங்கள் விட்டு மாணவர்களும் மாணவிகளும் ஏறத்தொடங்கலாயினர்.
"டம்" என்ற ஓசையோடு பேருந்து சிறிது குலுங்கியது. இது ஓட்டுனர் ஏறியதன் அறிகுறி. சாளரத்தின் வழியாக சிறிது எட்டிப்பார்த்தேன். ஓட்டுனர் மீண்டுமுறை அவர் அருகிலிருக்கும் சிறு கதவை திறந்து இன்னும் வேகமாக "டம்" என அடைத்துக்கொண்டார். தன் இருக்கையில் அமர்ந்தவர், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் கால் சட்டை பையிலிருந்து கைலேஞ்சியை எடுத்து அதன் இரு எதிர் முனைகளை தன் இரு கைகளால் பிடித்து வேகமாகச் சுழற்றி கயிறு போலாக்கி கழுத்துக்குப் பின்னால் சொருகிக்கொண்டார். பின்பு கைகளை கட்டியபடி சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
"லேய் டைவறே.. வண்டிய எடுல.. நேலமாச்சில்லா.." என்றொரு உரத்த குரல் பின் இருக்கையிலிருந்து கேட்டது. மக்கள் பொறுமை இழந்துகொண்டிருந்தனர். ஓட்டுனர் திரும்பிப்பார்த்து "யோம்ப்ல அது... கண்டட்டற் இயேறண்டாமால.. ஒனக்க அப்பனா வந்து டிக்கட்டு கொடுப்பாங்... சும்மா கடுப்புகள இயேத்திட்டு..".
"அம்ம.. அம்ம.." எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த நல்ல பருமனான பெண்ணின் மடியில் ஒரு கைக்குழந்தை அழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர் அருகில் நான்கு அகவையில் ஒரு சிறுவன். அவன்தான் "யம்மா.. ஏ யம்மா.." என கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.
"என்னல.. என்ன வியேணு... அப்பலேலருந்து பிறாண்டிட்டே இருக்க..." சிறுவனின் முகம் சுருங்கிவிட்டது.
"வீ...வீ..." நடத்துனர் ஏறிவிட்டார்.. அதற்குள் பள்ளி மாணவர்கள் புளி மூட்டைபோல பேருந்தெங்கும் அடைத்து நின்றுகொண்டிருந்தனர். ஒருவழியாக வண்டி மெல்லக் கிளம்பியது. "டிகட்.. டிகட்..". வண்டி கோட்டாரைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த சிறுவன். சுற்றுமுற்றும் பார்த்தவாறு இருந்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கும் திரும்பிக்கொண்டிருந்தவன் சட்டென்று நான் பார்ப்பதை பார்த்துவிட்டான். நானும் சட்டென்று வெளியே பார்ப்பதுபோல பாவனை செய்து ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் சிறிதாகச் சிரித்துவிட்டு தன் அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொள்ள முற்பட்டான்.
"என்னல.. கொடஞ்சிட்டே இருக்க.. மடீல பிள்ள ஒறங்குவுல்லா.. அது முளிச்சிடிச்சினா ஓ-னு அளத்தொடங்கும்.. பேசாம பராக்கு பாத்துட்டுவா மக்களே.. சரியா..". பாவமாகத் தலை ஆட்டினான். "அம்ம.." என ஏதொ மெல்லவந்தவன், தன் இரு கைகளையும் இறுக்கக் கட்டிக்கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். சட்டன நிமிர்த்து திரும்பி நான் அவனைப் பார்க்கிறேனா என பார்த்தான். நானும் எனது கண்ணை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். மீண்டும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
பேருந்து பார்வதிபுரத்தைத் தாண்டி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. நிறுத்தங்கள் வரவர மாணவர் கூட்டம் குறைந்தவண்ணம் இருந்தது. முன்பக்க வாசலுக்கு அருகே இன்னும் நிறைய பள்ளி மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். மாணவிகள் முகத்தில் அத்தனை களைப்பு. நான் பள்ளி படிக்கும் காலங்களில், மாலையில் பள்ளி விட்டபிறகு, வீடு செல்வதற்கு முன்னர் முகம் கழுவி துடைத்து, சிறு பெட்டலமாக்கிக் கொண்டுவந்த பூசுத்தூளைப் பூசி பொட்டு வைத்துக்கொள்வர். இக்காலத்து மாணவிகளிடம் அப்பழக்கம் இல்லாமல் போனதோ!
என் முன் இருக்கையில் இருந்த பெண் மடியில் உறங்கும் குழந்தையோடு தானும் தூங்கியாடத்தொடங்கியிருந்தார். சிறுவன் என்ன செய்கிறான் என எட்டிப்பார்த்தேன். இருக்கையில் கால்களை சம்மணம் போட்டவாறு அமர்ந்து தன் இரு கை விரல்களை விரித்துவிரித்து மூடிக்கொண்டிருந்தான்.
"சுங்காங்கடை.." என அடித்தொண்டையில் கத்தினார் நடத்துனர். முன் இருக்கையில் உறக்கத்தில் இருந்த அப்பெண் பதறி விழித்து வெளியே பார்த்தார். பின்பு மடியில் உறக்கத்தில் இருந்த குழந்தையை சரிசெய்துகொண்டார்.
"இயம்மா.."
"என்ன மக்கா.."
"ஒண்ணுக்கு.."
"லேய்.. மண்டவத்ல வெச்சு கிளம்பதுக்கு முன்னால எத்தன தடவல கியேட்டேன்.. ஒண்ணுக்கு பேயிட்டுவா ணிட்டு.. அப்பல்லா வரல்லணுட்டு வண்டி பேயிட்ரிக்யும்போ ஒண்ணுக்கு வருதுணி சொன்னாக்க எப்பிடில.."
"இயம்மா.. முட்டுவுமா.."
"லே.. இன்னியூம் மூணு சிடாப் தாம்ல.. தக்கல வந்துரும்.. அங்கிண போயி மோண்டு உலுப்பு.. இப்ப சலம்பாம கட.."
பேருந்து வில்லுக்குறி தொட்டிப்பாலம் தாண்டியாயிற்று.
"அம்ம.. "
"என்னல.. முட்டுவா.."
"ஆமாம்மா.. ரெம்ப முட்டுவு.."
"லேய் மக்கா.. இங்கயே பேயிராதே.. நம்ம மானம் போயிரும்.."
"அம்மா.. " என சிறுவன் தன் கீழ் உதட்டைப் பிதுக்கி அழத்தொடங்கிவிட்டான். பார்க்க பாவமாக இருந்தது. பையனுக்கு கடுமையாக முட்டுகிறது..
உடனே நான் நடத்துனரை நோக்கி வண்டியை நிறுத்துமாறு கூறினேன். அவர் "இங்கெல்லாம் வண்டி நிக்காது" என விபரீதம் அறியாமல் கூறினார். உடனே சிறுவனுக்கு வந்துள்ள சிறுநீர் சிக்கல் பற்றிக் கூறியதும், உடனே "வீ....." என தன் உதட்டாலேயே சீட்டி அடித்தார். வண்டி சட்டென்று நின்றது. ஓட்டுனர் திரும்பிப்பார்த்தார். "சின்னப் பொடியனுக்கு ஓண்ணுக்கு வருதாம்.." என்றார் நடத்துனர். பொடியன் எழுந்து "அம்மா நீயும் வாமா.." என்றான் "நீ தைரியமா போயிட்டுவா மக்கா.. நான் இஙாகிணரிந்தே பாக்கேன்" என்றாள் அம்மா.. தன் நிக்கரை பிடித்தவாறே படியிறங்கி வெளியே ஓடினான். இறங்குமூன் ஓட்டுனரைப் பார்த்து "வண்டிய எடுத்துராதீங்க" என்று கூறிவிட்டு ஓடினான்.
வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் வரிசையாக ஒரே கடைகள். அவனுக்கு சிறுநீர் கழிப்பதற்கு ஏதுவான இடம் அங்கு இல்லை. அங்கும் இங்கும் ஓடினான். அத்தனை பயணிகளும் "லே.. அங்கின போல.. இங்கின போல.." என பேருந்தில் இருந்தவாறே இடம் காட்டிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக, பேருந்தின் முன்பக்கம் சாலை ஓரமாக இருந்த ஒரு சிறு மரத்தின் அருகே சிறுநீர் கழிக்க நின்றான். பேருந்தில் இருந்த அத்தனைபேரும் கடைகளில் இருந்த அத்தனைபேரும் சிறுவன் எவ்வாறு சிறுநீர் கழிக்கப்போகிறான் என்பதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் ஏவுகணை ஏவுவதுக்கு முன்பு எண்ணுவதைப்போல 9,8,7.. என்றெல்லாம் எண்ணத்தொடங்கிவிட்டனர். ஆனால் சிறுவன் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. அவ்வப்போது திரும்பித் திரும்பி பேருந்தை பார்த்தவாறு இருந்தான். முன்பக்க இருக்கையில் இருந்த மூதாட்டி "மக்கா பயறாம ஒண்ணுக்கிரு" என்றார். ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார்.. பக்கவாட்டு இருக்கையில் இருந்த வழுக்கை மாமா "பேடிக்காதே.. தாழ இருந்நு முள்ளிக்கோ.." என மலையாளத்தில் வேறு கூறினார். ஏவுகணைக்காக எண்ணியவராகள் 4,3,2.. என வந்திருந்தனர்..
"சீக்கிரம் ஒண்ணுக்கிருந்திட்டு வண்டிக்குள்ள யாறுல" என்றாள் அம்மா
"யம்மா வரமாட்டேங்கி மா.. நீ இங்க வாமா" என கத்தினான் சிறுவன்.
உடனே அவர்கள் கூட வந்த திருமணகும்பல் இந்த பெண்ணிடம் "நீ போ. குழந்தையை நங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.
"இவனோட ரோதனை.." என சலித்துக்கொண்டே உறங்கும் குழந்தையை முன் இருக்கையில் இருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு படி இறங்கி சிறுவனை நோக்கிச் சென்றார்.
சிறுவன் அம்மாவின் காதுகளில் ஏதோ சொன்னான். ஊடனே அந்த பெண் அச்சிறுவனை மறைத்தவாறு நின்று எங்களைப்பார்த்து "நீங்களெல்லாம் பாக்கக்கூடாதாம். அப்டி பாத்ததுனாலத்தான் அவனுக்கு ஒண்ணுக்கு வரல்லையாம். எல்லாரும் கண்ண மூடிக்கங்க" என்றார் நகைத்தவாறே.
"பாம்.. பாம்.." எங்கள் பின்னால் வந்திருந்த இன்னொரு பேருந்து வழிவிடு என கத்தியது. உடனே நம் ஓட்டுனர் பேருந்தை "ர்ர்ர்.." என உயிர்ப்பித்தார்.
"அம்மா வண்டி எடுத்துட்டாங்க.. டிரைவர் வண்டிய எடுக்காதீங்க.. எங்க பாப்பா உள்ள இருக்கு" எனக் கத்தினான்..
வண்டியை சற்று ஓரமாக நிப்பாட்டிவிட்டு "ஏ யப்பா.. ஒன்னோட பாப்பாவ எங்கேயும் கொண்டுபோவல்லை. சீக்கிரம் மோண்டுட்டு வண்டீல ஏறு. " என்றார் ஓட்டுனர்.
சிறு மரத்துக்கு போதிய நீர் பாய்ச்சியபின்னர், தக்கலையை நோக்கிப் பயணித்தது பேருந்து.
"ஆத்திரத்த அடக்கினாலும் மூத்திரத்த அடக்கமுடியாது" என்கிற பள்ளிக்காலப் பழமொழிதான் நினைவுக்குவந்தது.
கொசுறு: அண்மைக்காலமாக பேருந்தில் அடிக்கடி பயணிக்கையில் ஒன்றை கவனிக்கிறேன். அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பயணம் இலவசம் என தமிழ்நாடு அரசு சட்டமிட்டபிறகு, பெண்கள் மிகுதியாக பயணிக்கின்றனர். முன்பெல்லாம் இவ்வளவு பெண்கள் கூட்டத்தை பார்க்கமுடியாது. தற்போதே ஆண்கள் இருக்கைகளிலும் அமர்ந்துவிடுகின்றர். வீட்டுக்கு உள்ளேயே அடைந்துகிடந்த பெண்களுக்கு இந்த இலவச பயணக் கட்டணத் திட்டமானது நல்லதொரு சமூக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.
No comments:
Post a Comment