இயற்றியது : ஆதிசங்கரர்
தமிழாக்கம் : அடியேன்பேரின்ப வடிவே பேரருள் வடிவே
பெருங் கதிர் ஒளிர்வு தரும் மறை சாறின் வடிவே
குளிர் நிலவின் வடிவே ஆகூழின் வடிவே
அரங்கனின் வடிவிலென் உளமகிழ்கிறதே
காவிரியின் கரையில் கருணை மழை பொழிவில்
மந்தார அடியில் மகத்தான களிப்பில்
அகிலத்து அரக்கரை அடியோடு அழிக்கும்
அரங்கனின் ஆடலில் உளமகிழ்கிறதே
அலைமகள் அருகே அகிலமகள் அருகே
நம்மிதயத் தாமரையின் இளங்கதிரின் அருகே
அருள் கோடையின் அருகே அற நிறைவின் அருகே
அரங்கனின் அருகே என் உளம் மகிழ்கிறதே
அனைத்துக்கும் இறைவன் அனைவர்க்கும் இறைவன்
அயனுக்கும் இறைவன் ஆயர்க்கும் இறைவன்
தேவர்க்கும் இறைவன் அடியார்க்கும் இறைவன்
அரங்கனே இறைவனென் உளமகிழ்கிறதே
ஈசனுக்குப் பெருங்கோ நேசகர்க்குப் பெருங்கோ
வானவர்க்குப் பெருங்கோ வைகுந்தப் பெருங்கோ
பெரும்புள்ளின் பெருங்கோ அனைத்துலகப் பெருங்கோ
அரங்கனே பெருங்கோ உளமகிழ்கிறதே
பாற்கடல்மேல் உறக்கம் முழுமையா நுறக்கம்
அருட்கொடையின் உறக்கம் அகிலமகிழ் உறக்கம்
பலவளங்கள் போழியும் சிறந்ததொரு உறக்கம்
அரங்கனின் உறக்கத்தில் உளமகிழ்கிறதே
அழகான ஓய்வே எசோதைமடி ஓய்வே
பாம்பின்மீ தோய்வே முளரிமீ தோய்வே
திருமகள் மடியில் இளைப்பாறி மகிழும்
அரங்கனின் ஓய்விலென் உளமகிழ்கிறதே
இதுவேநம் அரங்கம் திருமாலின் அரங்கம்
இங்கியற்கை எய்தால் நமக்கில்லை நரகம்
தாமரை காலுடன் அரவமீ துறங்கும்
திருவரங்க வாழும் பேரிறையைப் பணிவோம்
சங்கரர் அருளிய இவ்வெண் பாக்களை
அதிகாலை எழுந்து பற்றுடன் இசைத்தால்
கவலைகள் நீங்கும் நினைப்பவை நிகழும்
அரங்கனின் அருளால் வீடுபே றடைவோம்