தமிழ் செழிக்க
தமிழ் மொழியோடு தொடர்புகொண்ட, உருவாக்கிடும் திறனோடுள்ள விருப்பவேலைகளை, ஓய்வுழைகளை, பொழுதுபோக்குதனை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பண்புகள் என்னென்னவென்பதைக் காண்போம்.
௧} பரந்த உள்ளம்
பிறமொழிகளையும் பிறபண்பாடுகளையும் கற்று அவற்றிலுள்ள சிறப்புக்களைப் போற்றுதல். அவற்றிலுள்ள சிறப்புக்களை, தமிழின் "அடிப்படைக்கட்டமைப்பு சிதையாவண்ணம்', தமிழாக்கி தமிழை மேலும் வளமாக்கல்.
௨} தமிழில் தொழிநுட்ப அறிவுகளை ஆவணமாக்கல்
விக்கி போன்ற தளங்களில் தொழிநுட்பப்பக்கங்களானது, தமிழில் குறைவாகவே உள்ளன. அவற்றை வளமாகவும் தரமாகவும் பெருக்கிடல்.
௩} தமிழ்மொழி பயிற்றுவிப்புத் தளங்கள்
தமிழ் பெருவாரியாக புழக்கத்திலில்லாத இடங்களிலும் புழக்கத்திலிருக்கும் இடங்களிலும் இணையத்திலும், தமிழ்மொழியை பயிற்றுவிக்கும் மையங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. செந்தமிழையும் பேச்சுத்தமிழையும் எளிமையாக பயிற்றுவித்திடும் நிறுவனங்களை ஏராளமாக உருவாக்குதல்.
௪} கலைச்சொற்கள்
கலை மற்றும் தொழினுட்பம் தொடர்பான ஏராளமான சொற்கள் இன்றளவில் தமிழில் இல்லை, அல்லது அவ்வாறான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்துவோர் இல்லாமல் முடங்கிக்கிடக்கின்றன. உங்கள் கட்டுரைகளில் கலைச்சொற்களை பயன்படுத்துதல். உங்கள் தமிழறிவுக்கு எட்டியமட்டும் புதிய கலைச்சொற்களை உருவாக்கிட முனைதல்.
௫} எண்ணங்களையும் எழுத்துக்களையும் தூயதமிழில் ஆக்குதல்
பலருக்கு எழுத்துக்களில் மட்டுமல்ல எண்ணங்களிலும் பிறமொழிகள் கலந்துவிட்டிருக்கின்றன. முழுக்கவனமாக இருந்து அவற்றை வலுக்கட்டாயமாக களையெடுத்தல். பிறமொழி கலவா பேச்சுத் (கொச்சை) தமிழும் தூயதமிழே, என்பதை நினைவில் வைத்துக்கொள்க. எழுதும்பொதும் தமிழ் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி எழுதுதல்.
௬} வட்டார வழக்குகளைப் போற்றுதல்
உலகமெங்கும் வாழும் தமிழர்கள், அவரவர் வாழும் வட்டாரத்தின் தனித்தன்மைகொண்ட தோரணையோடே பேசுகின்றனர். ஒலியூடகங்களின் வரவானது வட்டாரத்தன்மைகளை சிதைப்பதாகவே உள்ளது. உங்கள் வட்டார வழக்கில் பயன்பாட்டிலிருந்த, பயன்பாட்டிலிருக்கும் சிறப்புக்களை உங்கள் படைப்புகளில் சேர்த்துக்கொள்ளுதல்.
௭} வணிகத்தமிழ்
பல அலுவலகங்களிலும் வணிகத்திலும் வங்கி போன்ற பயன்பாட்டிற்கும் இன்று ஆங்கிலம் மட்டுமே தொடர்பு மொழியாகவும் ஆவணமாக்கு மொழியாகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கெல்லாம் இயலுமோ, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம்/அப்போதெல்லாம் கூடுமானவரை தமிழைப் பயன்படுத்துதல்.
நன்றி
No comments:
Post a Comment