பறளியாறு
குமரி மாவட்டமானது அருமையான ஆறுகளாலும் கால்வாய்களாலும் தூய்மையாக்கப்பட்டும் பாசனப்படுத்தப்பட்டும் செழிப்பாக்கப்பட்டும் வருகிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் அணைகள் மற்றும் பாசன வசதிகளால் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா உள்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றுகின்றன.
மகேந்திரகிரி மலையின் வடபகுதியில் தோவாளை அருகே ஓடையாக உற்பத்தியாகும் பறளியாறு கரடுமுரடான சரிவுகளில் வேகமாக ஓடி கீரிப்பாறை காடுகளின் அருகே மாசாறு, பாம்பாறு மற்றும் சித்தாறோடு இணந்து ஆறாகிறது. இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெருஞ்சாணி அணையில் மேலும் ஒரு ஆறான களிகேசமாறும் இணைகிறது. சிற்றாறு-பட்டணம் கால்வாயின் நீரைச்சுமந்து செல்லும் மாத்துர் தொட்டிப்பாலம் இதன் குறுக்கே அமைந்துள்ளது. பெருஞ்சாணி அணையானது மார்த்தாண்ட வர்மா ஸ்ரீசித்திரை திருநாள் பாலராம வர்மா ஆட்சிக் காலத்தில் 1953ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. திருவட்டாறு எனும் ஊரில் பறளியாறு கோதையாற்றுடன் ஒன்றிணைந்து, அங்கிருந்து அது தாமிரபரணியாறு (அ) குழித்துறையாறு என அழைக்கப்படுகிறது. புறநாநூறிலும் சிலப்பதிகாரத்திலும் இவ்வாறானது பஃறுளி ஆறு என கூறப்பட்டுள்ளது. பல் துளி என்ற இரு சொற்களின் தொகுப்பே பஃறுளியானது.
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" - (புறநாநூறு.9)
"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" - (சிலப்பதிகாரம்.11:19-20)
குறிப்பு:
நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றுக்கு பொருநை, சோழனாறு போன்ற பெயர்களும் குமரியில் ஓடும் தாமிரபரணி ஆற்றுக்கு குழித்துறையாறு, கோதையாறு, பறளியாறு போன்ற பெயர்களும் வெவ்வேறிடங்களில் வழங்குவது மக்களின் இடப்பெயர்ச்சிகளின்போது அவர்கள் புதிதாகக் குடியேறிய இடங்களில் தாங்கள் முன்பு வாழ்ந்த இடத்திலுள்ள ஊர்ப் பெயர்களையும் ஆறுகளின் பெயர்ககளையும் சூட்டும் மரபின் விளைவுதான். இதேபோலத்தான் அப்பகுதி மக்கள் தாங்கள் புதிதாகக் குடியேறிய பகுதியில் ஓடும் ஓர் ஆற்றுக்குத் தம் முன்னோர் வாழ்ந்த குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளியாற்றின் நினைவாக பஃறுளியாறு என்ற பெயரை இட்டிருக்கிறார்கள் என்ற கருத்தியலும் நிலவுகிறது.
பாம்பாறு
மகேந்திரகிரி மலையின் தென்பகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு, பெருஞ்சாணி அணைக்கு வரும் முன்பு கீரிப்பாறை காடுகளின் அருகே மாசாறு மற்றும் சித்தாறோடு இணைந்து பறளியாற்றை உருவாக்குகிறது.
மாசாறு
மகேந்திரகிரி மலையின் தென்பகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு, பெருஞ்சாணி அணைக்கு வரும் முன்பு கீரிப்பாறை காடுகளின் அருகே பாம்பாறு மற்றும் சித்தாறோடு இணைந்து பறளியாற்றை உருவாக்குகிறது.
சித்தாறு
மகேந்திரகிரி மலையின் தென்பகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு, பெருஞ்சாணி அணைக்கு வரும் முன்பு கீரிப்பாறை காடுகளின் அருகே மாசாறு மற்றும் பாம்பாறோடு இணைந்து பறளியாற்றை உருவாக்குகிறது.
காளிகேசமாறு
மகேந்திரகிரி மலையின் தென்பகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு, திருவரங்காட்டின் அருகே,பெருஞ்சாணி அணையில் பறளியாற்றோடு இணைகிறது.
கோதையாறு
மாவட்டத்தின் மிக அழகிய ஆறான இவ்வாறு, மகேந்திரகிரி மலையின் மேற்குப்பகுதியில் உள்ள முத்துக்குழி பீடபூமியில் உற்பத்தியாகிறது. இவ்வாறு திற்பரப்பு அருவியை உருவாக்குகிறது. மேல் கோதையாறு அணையும் பேச்சிப்பாறை அணையும் இவ்வாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. திருவட்டாறு எனும் ஊரில் கோதையாறு பறளியாற்றுடன் ஒன்றிணைந்து, அங்கிருந்தைு அது தாமிரபரணியாறு (அ) குழித்துறையாறு என அழைக்கப்படுகிறது.
சிற்றாறு-1
இவ்வாறு எட்டுக்காணி மற்றும் வண்டிப்பிலாவுக்கனி அருகே அமைந்துள்ள கல்மலைக் காட்டினில் உள்ள மலையில் உற்பத்தியாகிறது. இவ்வாற்றின் குறுக்கே சிற்றாறு-1 அணை ஒன்று உள்ளது. இது ஆலஞ்சோலை எனும் இடத்தில் கோதையாற்றுடன் இணைகிறது.
சிற்றாறு-2
இவ்வாறு எட்டுக்காணி மற்றும் வண்டிப்பிலாவுக்கனி அருகே அமைந்துள்ள கல்மலைக் காட்டினில் உள்ள மலையில் உற்பத்தியாகிறது. இவ்வாற்றின் குறுக்கே சிற்றாறு-2 அணை ஒன்று உள்ளது. இது திற்பரப்பு எனும் இடத்தில் கோதையாற்றுடன் இணைகிறது.
கள்ளாறு
மகேந்திரகிரி மலையின் வடபகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு கோதையாற்றுடன் பேச்சிப்பாறை அணையில் இணையும் ஒரு சிறு ஆறு. இது உற்பத்தியாகும் இடத்தின் மிக அருகே மேல் கோதையாறு ஆணை உள்ளது.
குட்டியாறு (அ) குற்றியாறு
மகேந்திரகிரி மலையின் வடபகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு கோதையாற்றுடன் பேச்சிப்பாறை அணையில் இணையும் ஒரு சிறு ஆறு. இது உற்பத்தியாகும் இடத்தின் மிக அருகே மேல் கோதையாறு ஆணை உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இணையும் முன்பு குட்டியாற்றின் குறுக்கேயும் குட்டியாறு அணை என்ற அணை கட்டப்பட்டுள்ளது.
முண்டையாறு
பேச்சிப்பாறை அணைக்கு வரும் முன்பே கோதையாற்றில் இணையும் ஒரு சிறு ஆறு.
மலையாறு
பேச்சிப்பாறை அணைக்கு வரும் முன்பே கோதையாற்றில் இணையும் ஒரு சிறு ஆறு.
தாமிரபரணியாறு (அ) குழித்துறையாறு
திருவட்டாறு எனும் ஊரில் கோதையாறு பறளியாற்றுடன் ஒன்றிணைந்து, அங்கிருந்து ஓடும் ஆறு தாமிரபரணியாறு (அ) குழித்துறையாறு என அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் செழிப்புக்கு முக்கிய நீராதாரம் இவ்வாறு ஆகும். இவ்வாற்றில் மேலும் கிழவியாறு, குற்றியாறு, சாத்தாறு ஆகியன இணைகின்றன. மொத்தம் சுமார் 64 கி.மீ நீளம் கொண்ட இவ்வாறு இரயுமன்துறை மற்றும் தேங்காய்பட்டினம் பகுதிகளில் அரபிக்கடலில் கலக்கிறது.
பாண்டியன் கால்வாய்
கி.பி. 900 ஆம் ஆண்டு பறளியாற்றின் குறுக்கே ராஜசிம்மன் எனும் பாண்டியன் மன்னனால் நாஞ்சில் நாட்டுப் பாசனத்திற்காக அணை (பாண்டியன் அணை) ஒன்று கட்டப்பட்டு பாண்டியன் கால்வாய் என இன்று அழைக்கப்பரும் ஒரு கால்வாய் வழியாக நீர் பழையாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்பாண்டியன் அணைக்கு தலை அணை என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆற்று நீரை இணைப்பதற்காக பண்டைத்தமிழன் எடுத்த அரிய முயற்சிக்கான சான்றாக இது அமைகிறது.
தோவாளை கால்வாய்
பாண்டியன் கால்வாயானது செல்லன்துருத்தி என்ற இடத்தில் தோவாளைக் கால்வாய், ரெகுலேட்டர் கால்வாய் என இரண்டாகப் பிரிகிறது. இதில் தோவாளை கால்வாய், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வரை செல்கிறது. இக்கால்வாய்க்கு கீழ்க்காணும் கிளை கால்வாய்களும் உள்ளன
௩. கிழக்கு மைனர் கிளை (3.208 கி.மீ.)
௪. மேற்கு கிளைக் கிளை (2.819 கி.மீ.)
௫. ராதாபுரம் கிளை (28 கீ.மீ.)
இரெகுலேட்டர் கால்வாய்
பாண்டியன் கால்வாயானது செல்லன்துருத்தி என்ற இடத்தில் தோவாளைக் கால்வாய், ரெகுலேட்டர் கால்வாய் என இரண்டாகப் பிரிகிறது. இதில் இரெகுலேட்டர் கால்வாயானது 1.60 கி.மீ. பாய்ந்து சுருளகோடு எனும் பகுதியில் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்று அனந்தானாறு கால்வாயாகும். மற்றொன்று பழையாறு உற்பத்தியாகும் இடத்தில் இணைக்கப்படுகிறது. செல்லன்துருத்தியிலிருந்து பழையாறு உற்பத்தியாகும் இடம் வரையிலான கால்வாய் பாதையே பழைய பாண்டியன் கால்வாயாகும்.
அனந்தனாறு கால்வாய்
இக்கால்வாய்க்கு கீழ்க்காணும் கிளை கால்வாய்களும் உள்ளன
௨. ஏ.கே. கிளை (5.97 கி.மீ.)
௩. கிருஷ்ணன்கோயில் கிளை (2.203 கி.மீ.)
௪. ஆசாரிபள்ளம் கிளை (6.49 கி.மீ.)
௫. கிழக்கு பிராதன கிளை (5.475 கி.மீ.)
௬. அத்திக்கடை கிளை (1.157 கீ.மீ.)
௭. கோட்டாறு கிளை (3.54 கி.மீ.)
௮. தெங்கம்புதூர் கிளை (3.50 கி.மீ.)
௯. காரவிளை கிளை (7.79 கி.மீ.)
௧०. கிருஷ்ணன் புதூர் கிளை (9.84 கி.மீ.)
௧௧. கோட்டாறு கிளை
பத்மநாபபுரம்-புத்தனாறு கால்வாய்
பறளியாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள புத்தன் அணை என்றும் அழைக்கப்படும் அணையானது பறளியாற்று நீரை பத்மநாபபுரம் பகுதிகளுக்கு திருப்புவதற்காக மார்த்தாண்ட வர்மா என்ற திருவிதாங்கூர் மன்னரால் 1750-களில் கட்டப்பட்டது. பாண்டியன் அணைக்கட்டு கால வெள்ளத்தில் தூர் நிறைந்தது. மேலும் பாண்டியன் கால்வாய் மூலம் நாஞ்சில் நாட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பாசனம் கிடைத்தது, எடநாடு பகுதிகளுக்கு பாசனம் கிடைக்கவில்லை. இதனால் பாண்டியன் அணைக்கு கீழே சுமார் 400 மீட்டர் தூரத்தில் புத்தன் அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து நீரை பத்மநாபபுரம் பகுதிக்கு எடுத்துச்செல்லும் வாய்க்காலே பத்மநாபபுரம்-புத்தனாறு கால்வாய். இது மொத்தம் 30 கி.மீ ஓடி 19 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்குப் பயன்படுகிறது. இக்கால்வாய்க்கு கீழ்க்காணும் கிளை கால்வாய்களும் உள்ளன.
௨. திருவிதாங்கோடு கிளை (25.77 கி.மீ.)
௩. கொடுப்பக்குழி கிளை
௪. இராஜாக்கமங்கலம் கிளை
௫. முட்டம் கிளை
௬. இரணியல் கிளை
௭. சென்னம்விளை கிளை
௮. திக்கணங்கோடு கிளை
௯. குளச்சல் கிளை
அருவிக்கரை கால்வாய்
அருவிக்கரை எனும் இடத்தில் பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து திருப்பிவிடப்பட்டதே இக்கால்வாய்.
சிற்றாறு-பட்டணம் கால்வாய்
சிற்றாறு-1 அணையிலிருந்து இக்கால்வாய் தொடங்கி 5 ஆவது கி.மீ. தூரத்தில் கோதையாறு இடது கரைக் கால்வாயில் இணைகிறது. பின்னர் 10.15 கி.மீ. தூரம் அதனுடன் இணைந்து பாய்ந்து குலசேகரம் அருகே அரியாம்பகோடு என்ற இடத்திலிருந்து தனியாகப் பிரிந்து செல்கிறது. பின்பு மாத்தூர் எனும் இடத்தில் ஒரு தொட்டிப்பாலம் வழியாக பறளியாற்றைக் கடக்கிறது. இது மொத்தம் 44 கி.மீ ஓடி 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்குப் பயன்படுகிறது. இக்கால்வாய்க்குகீழ்க்காணும் கிளை கால்வாய்களும் உள்ளன.
௨. கருங்கல் கிளை (5.96 கி.மீ.)
௩. தொடிவெட்டி கிளை (31.30 கி.மீ.)
௪. கீழ்குளம் கிளை (31.30 கி.மீ.)
௬. மாமூட்டுக்கடை கிளை
௭. மிலாடம் கிளை
௮. தேவிக்கோடு கிளை
௯. கீழ்க்குளம் கிளை
கோதையாறு இடது கரைக் கால்வாய்
கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து பிரியும் இக்கால்வாயானது, பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புத்தன் அணையில் இணைகிறது.
No comments:
Post a Comment