Sunday, January 23, 2022

உண்மைகள்

உண்மைகள்

உண்மை என்பது பலருக்கு பல வகை:

௧} உண்மையான உண்மையான.. உண்மை.. ( கணக்கு மட்டுமே...)

௨} தலைவரோ தலைவர்/அறிஞர்/சமயசொற்பொழிவாளர்/பட்டறிவு_நிறைய_உள்ளவர்/எழுத்தாளர் எனக் கருதப்படுபவரோ அகவையில் முதியவரோ  இறந்த முது உறவோ, ஒன்றை  சொல்லியிருப்பதால், அது உண்மை. (காட்டு: சுபாசு சந்திரபோசு சொன்னார், இயேசு சொன்னார், விவேகானந்தர் சொன்னார், காந்தி சொன்னார், கலாம் சொன்னார், என் தாத்தா சொன்னார்........)

௩} நூலில்/அச்சில் இருப்பதால் அது உண்மை (காட்டு: பாடநூலில் இந்தி தேசிய மொழி என்றும் அவுரங்கசீபு நல்லவர் எனவும் போட்டிருந்தது, இரசினியின்  பனாமா வங்கிக்கணக்கில் 57 இலட்சம் கோடி டாலர் கணக்கு இருக்கிறது என்ற செய்தி தினக்கனி நாளிதழில்  வந்திருந்தது, அன்னபறவையானது நீரை பிரித்து பாலைமட்டும் உண்ணும் என நாலடியாரில் 'எழுதப்பட்டுள்ளது', நிலவு இரண்டாகப்பிளந்து மீண்டும் ஒட்டப்பட்டது என குரானில் உள்ளது, கும்பகராணன் 6 திங்கள்கள் உறங்கினான் என்கிறது இராமாயணம் ...)

௪} பண்பாடு, (சமூக/சமய/அரசியல்) சட்டங்கள், கொள்கைகள், உள்ளுணர்வுகள், பட்டறிவு ஆகியவற்றின் விளைவான, "என்" நம்பிக்கைகளுக்கும் ஊகங்களுக்கும் ஒத்து வருபவை மட்டுமே உண்மை. 

௫} உங்களைச் சுற்றியுள்ள, இயற்கை அனைத்திலும் உங்கள் புலன்களால்,  நேரடியாக நீங்கள் எவைகளை உணர முடிகிறதோ, அவை உண்மைகள்.  அவற்றோடு நேரடியாக தொடர்புபடுத்த இயலும் எந்த கருத்தும் செயலும் உண்மை. (காட்டு: 'அழகிய' மலர், மழை பெய்ததால் நான் உளம் மலர்ந்தேன்...)

௬} சமூகத்தில் ஒரு குழுவோ அல்லது மொத்த சமூகமோ அல்லது அதில் பெரும்பான்மையிரரோ, சான்றுகள் அடிப்படையிலோ (சமூக/சமய/அரசியல்) சட்டங்களின் அடிப்படையிலோ சூழ்நிலையின் அடிப்படையிலோ அப்போதைய உளப்போக்கின் அடிப்படையிலோ, உளமொத்த கருத்தோடு எடுக்கும் முடிவுகள் உண்மையானவை (காட்டு: தேர்தல் முடிவு, பஞ்சாயத்து முடிவு...)

௭} 'ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது என்பது எல்லா நேரங்களில்/இடங்களில் உண்மையாக இருக்கவேண்டும் என்பதல்ல. பல நேரங்களில்/இடங்களில் தனித்தனி உண்மைகளாகவோ தனித்தவைக்கொரு உண்மை எற்றும் கூட்டாக வேறு உண்மை என்றும் இருக்கும். "எல்லாவற்றுக்கும்" பொதுவான உண்மை என்ற ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  (காட்டு: உயிர்வளி+நீரியம் = நீர்....) 

௮} காலத்தின்/சூழ்நிலையின்/பட்டறிவின்/அரசியலின் முதிர்ச்சியால் வெளிப்படுபவைகள் அனைத்தும் உண்மைகளே (காட்டு: 18ம் நூற்றாண்டுக்குப் பிறகு  அறிவியல்/பொருளாதார அறிஞர்களின் கூற்றுக்கள்..)

௯} இன்று உண்மைகள் என நீங்கள் கருதுபவை எல்லாம் ஏற்கனவே பறபல பரிணாமத்துக்கு உட்பட்டவை.  அவை இனியும் பரிணாமப்படும் (காட்டு: எழுத்துக்களின் வடிவமும் அவற்றுக்கான ஒலிகளும், உயிரினங்களின் உருவங்களும் பண்புகளும்... )

௰} (முழுமையான) உண்மை என்ற ஒன்று உண்மையில் கிடையாது.  அத்தனையும் மாந்தர்களின் உள்ளதில் தோன்றும் மாயைகளே... மற்றெல்லாவற்றையும்போலவும் மாறிக்கொண்டே இருக்கும். தற்காலிகமானது... (காட்டு: காதல்,....)

௰௧} அறிவியல்ரீதியாக குறிப்பிட்ட விதிவரம்புக்கும் பட்டறிவுக்கும் கிடைக்கப்பெறும் தரவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பலரால் பலநேரங்களில் பல இடங்களில் பலதடவை மெய்பிக்கப்பட்ட உண்மைகள்.  ஆனால், இன்னும் அறிந்திராத விதிவரம்புகளைப் பொறுத்தவரை இது இன்னும் மெய்ப்பிக்கப்படாததாக இருக்கலாம். நாளை அவையும் ஆராயப்பட்டு பொய்யாகியே போகலாம். ஆதலால்,இந்தவகை  உண்மையானது தொடர் தேடலுக்கும் தொடர் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆக, இவ்வுண்மை மாற்றத்துக்கு உட்பட்டது என்றாலும் ஒரு குறுகிய காலத்துக்கு இது உண்மையாகவே பொதுவாகக் கருதப்படும்.   (காட்டு: பெருவெடிப்புக் கொள்கை, நோய்க்கான மருந்துகள், ஈர்ப்புவிசை, பொருளாதார விதிகள், சட்டங்கள்...)

இன்னும் எத்தனை வகைகளான உண்மைகளோ...

உண்மைகள்.............

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...