Thursday, January 27, 2022

விந்தை கனவு - ௨

அது ஒரு மாலை வேளை.  அனேகமாக நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கம் காலகட்டம்.  நிக்கரும் இறுக்கமான சட்டையும் காக்கி நிக்கரும் போட்டுக்கொண்டு தெருவில் நண்பர்களோடு சேர்ந்து விளையாட வாசலை நோக்கி மிக அவசரமாக ஓடுகிறேன்.  ஓடி ஓடி வாசல் படியை நெருங்கிவிட்டேன்.  பொதுவாக இப்படி ஒரு தருணம் வந்தால் வாசற்படியிலிருந்து எம்பி கீழே குதிப்பேன்.  வாசற்படிக்கும் தெரு மண்ணுக்குமான அந்த சிறு இடைவெளியில் காற்றில் வேகமாகப் பறப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி தான்.  அன்றும் அப்படியே.  ஆனால் அன்று அந்த பறப்பதில் ஒரு சிறு வேறுபாடு.  பறத்தல் மட்டும் வேகம் குறைச்சலாக  இருந்தது. !!  புரியவில்லையா?  எனக்கும் அது புரியவில்லை.  திரைப்படங்களில் தானே இப்படி காட்டுவார்கள்.  சண்டைக்காட்சிகளில் ஒரு சில குறிப்பிட்ட அசைவுகள் மட்டும்  மெதுவான் நகர்வில் காட்டுவார்கள். அதுபோல.  நிகழ் வாழ்க்கையிலும் இந்தமாதிரி நடக்குமா.  ஓரிரு நொடிகளில் ஆயிரம் கேள்விகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன.  

சுற்றுமுற்றும் பார்த்தேன். தெருவில் நான் எதிர்பார்த்த நண்பர்களின் விளையாட்டு ஏதும் நடக்கவில்லை.  ஓரிரு என் அகவைப் பெண் பிள்ளைகள் மட்டும் பாவாடை சட்டை உடுத்திக்கொண்டு தட்டச்சு மாமா வீட்டு திண்ணையில் அமர்ந்து தட்டாங்கல் விளையாடிக்கொண்டிடுந்தார்கள்.  எழுந்து நின்றவன், எதுக்கும் ஒரு முறை துள்ளிப்பார்ப்போமே என நின்ற இடத்திலிருந்து எம்பி துள்ளுகிறேன்.  என்ன விந்தை!, துள்ளும் உயரத்திலிருந்து  மெதுவாக நகர்வில் கீழிறங்கினேன்.  நிலவில் தான் இப்படி நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். உள்ளத்துக்குள் கேள்விகளோடு மகிழ்ச்சி படபடப்பு கலந்த அச்சம்.  மீண்டுமொருமுறை ஆர்வத்தில் துள்ளுகிறேன். இம்முறை கீழே பாதி தூரம் மெதுவான நகர்வில் இறங்க்கிவரும்போதே, வெறுங்காற்றில் கால்களை எட்டி உதைக்கிறேன்.  என்ன விந்தை அங்கிருந்து இன்னும் மேலே எழும்பியிருக்கிறேன்.  இருமுறை காற்றில் கால்களால் உதைக்கிறேன்.  கிட்டத்தட்ட என்வீட்டு உப்பரிகை உயரத்துக்கு வந்துவிட்டேன்.  கீழே குனிந்து பார்த்தபோது மிக உயரத்தில் அந்தரத்தில் இருக்கிறேன் என்பதறிந்து உள்ளதினுள் குறுகுறு என்கிறது. உப்படிகையில் இருக்கும் மாடிக் கதவு திறந்து இருக்கிறது.  மாடியில் அப்பா எதோ தடிமனான நூலை படித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. "அப்பா புவியீர்ப்பு விசையில் எதோ பிரச்சனைப்பா" என கத்துகிறேன்.  அவர் காதுகளில் எட்டவில்லை என நினைக்கின். "அப்பா அப்பா" என கத்துகிறேன்.  

அதற்குள் கண்ணோரத்தில் கிழக்குப்பக்கம் எதோ என்னை ஈர்க்கிறது.  அந்த மாலை வேளையில் கிழக்கில் மஞ்சளும் கரும்சிவப்பும் கலந்த ஒரு வட்டவடிவ வெளிச்சம் வெகு தொலைவில் வளர்ந்து வருவதை காண்கிறேன்.  குளத்தங்கரை தென்னைமரங்கள் மறைப்பதால், கிட்டத்தட்ட நிலத்தருகில் மெது நகர்வில் கீழிறங்கி வந்துகொண்டிருக்கும் நான், அந்த வெளிச்சத்தை தெளிவாக காண, காற்றில் பலமுறை எட்டி உதைத்து, என் வீட்டு மாடியின் மொட்டோடு உயரத்துக்கு செல்கிறேன்.  
அதற்குள் அந்த வெளிச்சம் பன்மடங்காக கிழக்கு வானமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.  உச்சி முதல் பாதம் வரம் மயிர்கள் கூச்செரிந்து நின்றன.  அந்த வெளிச்சத்தின் வளர்ச்சி நினைப்பதற்கு மேலே இருக்கிறது.  தொலைவில் கிழக்கு வானமும் காற்றும் தரையும் எல்லாம் தீப்பிடித்து எரிவது போலுள்ளது. அந்த தீ நானிருக்கும் இடத்துக்கு வருவதற்கு இன்னும் ஓரிரு நிமிடங்களே இருப்பது போல் தோன்ற்யது அதன் வளர்ச்சி. 

தரை இறங்கியதும் "எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடுங்க" என்று கத்திக்கொண்டே, நான் என் வீட்டுக்குள் ஓடுகிறேன். மாடியை நோக்கி "அப்பா சீக்ரம் கீழ எறங்கி வா" என கத்துகிறேன். அம்மாவும் ஆச்சியும் உள்ளே முற்றத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.  அதற்குள் அப்பா கீழிறங்கி வந்து "என்ன டா" என்கிறார்.  "புவியீர்ப்பு விசைல எதோ பிரச்சனையாயிடுச்சு பா. கெழக்கத்தத்துக்கு அந்தப்பக்கம் தள்ளி எதோ பயங்கரமா தீ மாதிரி நம்ம தெருவ பாத்து வேகமா வருதுப்பா". "நீ அம்மா பாட்டி எல்லாரும் கொல்லப்பக்கம் பாத்து ஓடுங்க" என்றவாறே, வாசக்கதவை நோக்கி திரும்பிப்பார்க்கிறேன்.  தெருவில் வெளிச்சம் குன்றியது போல தெரிகிறது.  வாசலை போய் பார்க்கிறேன்.  ஒருசில பெரியவர்கள் வானத்தை காட்டி எதோ சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானும் வாசற்கதவை பிடித்தவாறே வானத்தை எட்டி அண்ணாது பார்க்கிறேன்.  வானம் மொத்தமும் தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது.

கிழக்கத்தம் முற்றிலுமாக கறுப்பாக மாறியிருக்கிறது.  காலுக்கடியில் தரைக்கடியில்  மலை பாம்புகள் ஊர்வதுபோல சிறிது நடுக்கம் உணர்கிறேன்.  திரும்பி வீட்டுக்குள் பார்த்தபோது அப்பா, அம்மாவையும் ஆச்சியையுமா கூட்டிக்கொண்டு எனைக்கானவில்லை என திருமிப்பார்த்து வாசலை நோக்கி "வாடா" என கத்துகிறார்.  நான் வீட்டுக்குள் ஓட்டமெடுக்கும் தருணத்தில், தட தட என இடி முழக்கம் போல பயங்கரமான இரைச்சலுடன் சிறிது தூரத்திலிருந்து கேட்க ஆரம்பிக்கிறது. 

என் ஓட்டத்தில் முற்றத்தை தாண்டிவிட்டேன்.   தட தட ஓசை மிக அதிகமாக பயங்கரமாக கேட்கவே, அங்கு இருக்கும் நிலையை பிடித்தவாறே திரும்பி வாசலை பார்க்கிறேன்.  தெருவில், கரும் புகை போன்ற ஒன்று மிக வேகமாக பல பொருட்களை வாரிச்சுருட்டிக்கொண்டு புயல் போல மேற்கு நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.  அடுத்த வினாடி என் கண்ணெதிரே, என் வீட்டு திண்ணை முழுவதும் பெயர்ந்து அந்த கரும்புகையோடு போகிறது.   தட தட காதுகளை அடைக்கும் வண்ணம் கேட்கிறது.  முன்னோக்கிப்பார்க்கிறேன், என் அப்பாவையும் அம்மாவையும் பாட்டியையும் காணவில்லை. கொல்லைப்பக்கமும் அந்த கரும்புகை வேகமாக பல மரம் செடிகளை வேரோடு பெயர்த்துக்கொண்டு இழுத்துச்சென்றுகொண்டிருக்கிறது

நான் அந்த நிலையை கெட்டியாக பிடித்துக்கொண்டே இருக்கிறேன். அடுத்த வினாடி, என் வீட்டு படுக்கை அறையும் மாடியும் சுக்கு நூறாக உடைந்து கரும்புகையுடன் போய்க்கொண்டிருக்கிறது. தட தட ஒசை இன்னும் கூடுதலாக காதை பிளக்கிறது.  மொத்த நிலமும் டப டப டப டப  என புல்லட் பைக் மாதிரி உதறுகிறது.  நான் நிற்கும் நிலையிலிருந்து (கதவு) இருபக்கமும் ஒரு அறையே மிச்சமுள்ள நிலையில்.

விழிக்கிறேன்... அதிகாலை 4:45..  என் இதையம் படபட என வேகமாக துடித்துக்கொண்டிருக்கிறது... நெஞ்செல்லாம், கழுத்தெல்லாம் வியர்த்திருக்கிறது.. ஒன்னுக்கு வேற முட்டிக்கொண்டிருக்கிறது...








No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...