Saturday, January 29, 2022

மாடன்

மாடன்

தமிழக நிலப்பரப்பிலுள்ள கடவுள்களில் மிகவும் விந்தையான குலக்கடவுள், மாடன் அல்லது சுடலைமாடன் ஆகும்.  நான் பிறந்து வளந்த குமரிமாவட்டத்தில் திரும்பிய திசையிலெல்லாம் ஒரு சுடலை மாடன் கோவிலைக் காணலாம்.  குமரிமாவட்டம் மட்டுமல்லாது அண்மைப் பகுதிகளான நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, விருதுநகர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களிலிலும் மாடன் வழிபாடு உள்ளது.  மாடன் கோவில் திருவிழாக்களை "கொடை" என்று அழைப்பது இங்குள்ள வழக்கம்.

எங்கள் குல மாடன்

எங்கள் குடும்பத்துக் குலக்கடவுளான நாகநாத மாடன், திருப்புடைமருதூரில் (நாறும்பூநாதர் கோவிலின் அருகே உள்ள தெருவில்) ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள சுவரில் இருந்தது.  அதனை வழிபட்டுவந்த என் தந்தைவழி உறவினர் தற்போது இந்தியாவிலுள்ள பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் குடிபெயர்ந்துவிட்டனர். என் குடும்பத்தார் ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறை சென்றுவந்துகொண்டிருந்தனர்.  சிறு அகவைகளில் சில தடவை போய்வந்த ஊர் நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூர்.  ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசத்திற்கும் பங்குனி உத்திரத்துக்கும் அங்கு சென்று மாடனுக்கு பொங்கல் படையல் செய்து கொடை கொண்டாடுவது என்பது என் தந்தை வழி முன்னோர்களுக்கும் குடும்பத்தாருக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது. சென்னை, கோயமுத்தூர், கோட்டயம், கொல்லம், மும்பை போன்ற பல இடங்களிலிருந்து என் தந்தைவழி  தொலைவுறவினர்கள் அங்கு வந்து கூடுவார்கள்.  என் தாத்தா அவர்களில் பலரை எங்களுக்கு அறிமுகம்செய்து வைப்பார். அனேகமாக வீரவநல்லூரில்தான்  இரவுறங்குவோம். அடுத்தநாள் விடிகாலை பெண்களும் முதியவர்களும் சிற்றுந்தில் சென்றுவிடுவர். சிலர் மிதிவண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்புடைமருதூருக்குப் புறப்படுவர். பெரும்பாலும் எனக்கும் ஒரு முக்காவண்டி கிடைக்கும். எல்லாரும் பாட்டுப்பாடிக்கொண்டே மகிழ்ச்சியாக பொருநை ஆற்றங்கரையை ஒட்டிய சாலை வழியாக திருப்புடைமருதூரை நோக்கி ஓட்டுவோம். கோவிலின் ஆருகே உள்ள பொருநை ஆற்றில் மீன் கடிகளிடையே ஒரு அருமையாக குளியல்.  படையலுக்கு வருகிறோம் என முன்னமே மாடன் இருக்கும் வீட்டாருக்கு மடல் எழுதி விடுவதால் அவர்களும் ஒரிரு நாள்களுக்கு முன்னரே, கொல்லைபுறத்தை துப்புறவாக்கி, மழையில் கரைந்திருக்கும் மாடன் சிலைகளை மண் குழைத்துச் செம்மையாக பூசி, காய்ந்தபின் அதன்மீது சுண்ணாம்பும் குங்குமப்பச்சையுப் பூசி முன்னேற்பாடுகள் செய்து வைத்திருப்பர். என் குடும்பத்தாரும் ஊரார்களும் குளித்து துவைத்த ஆடைகளை உடுத்தி திருநீறிட்டு மாடன் கொல்லையில் கூடுவர்.  மாடனுக்கு கோடி வேட்டி கட்டிவிட்டு நிறைய பூமாலைகள் அணிவித்து, அனைத்து வகையான பழங்களையும் தூக்குகளில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து எடுத்துவந்த பலகாரங்களையும் சேர்த்துப் படைத்திருப்பர். முக்குட்டி வைத்து அதன்மேல் கனமான பெரிய மண்பானையில் இன்சுவைப் பொங்கல் பொங்கத்தொடங்குவர். அந்த நேரம் மாடனைப் புகழ்ந்து சில பாடல்களைப் பாடியவண்ணம் இருப்பர்.  பொங்கியபின் குலவையிட்டு மாடனுக்கு சூடம் காண்பிப்பர். பொங்கலை  மாடனுக்குப் படைத்த பிறகு, வாழையிலையிட்டு அனைவரும் உணவருந்திவிட்டு பக்கத்தில் இருந்த அஞ்சலகத்தின் வாசலில் அமர்ந்து பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.  அந்தப் பசுமையான காட்சிகளும் நினைவுகளும் என் எண்ணத்தைவிட்டு என்றென்றும் அகலாது. திருப்புடைமருதூரானது எனது பூட்டன் போன்ற தந்தைவழி முன்னோர்கள் யாரேனும் வாழ்ந்த ஊராக இருக்கலாம். அவர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மண்ணால் மாடன் செய்து வழிபட்டிருக்கலாம்.  அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என யாருக்கும் தெரியாது. அந்த மண் உருவத்தினை பற்பல ஆண்டுகள் பாதுகாத்துவந்துள்ளனர் என் முன்னோர் வழிவந்தோர். பொங்கல் படையல் முடிந்து அவரவர் ஊருக்கு எடுத்துச்செல்லும் திருநீறு மற்றும் குங்கும பொட்டலத்தை தங்கள் வீட்டு டப்பாக்களில் பாதுகாத்து, நோய், தேர்வு, பிறந்தநாள் ஆகியவற்றின்போது குலக்கடவுளை உளமாற கும்பிட்டு நெற்றியில் இட்டுவிடுவர். 

இதெல்லாம் இரண்டாண்டுகளுக்கு முன்போடு முடிந்துபோனது. ஆம், இன்று அம்மாடனை  வழிபட யாரும் வருவதில்லை என அவ்வீட்டார்களே இடித்துவிட்டார்கள் என இரு ஆண்டுகளுக்குமுன் அங்கு சென்றபொது தெரிந்துகொண்டேன்.  என்னவோபோல இருந்தது.   இதில் இறைபத்தி என்பதைவிட, என் முன்னோர்கன் தெரிந்தோதெரியாமலோ, அவர்கள் வழித்தோன்றல்களுக்கு அடையாளமாக இருக்கவேண்டி நட்டுவைத்த மண்சுவர் மாடன் தற்போது அங்கு இல்லாததுதான்,  இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத எனக்கும்,  உள்ளத்துள் சிறு நெருடல் ஏற்படக் காரணம். 

மாடன்கள் எத்தனை எத்தனை!!

குமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் பயணித்தபொது ஆங்காங்கு பல சுடலை மாடன் கோவில்கள் என் கண்ணில் படும்.  அவற்றின் ஒவ்வொன்றிலும் அம்மாடனது பெயர் குறிக்கப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு பெயரையும் படிக்கும்போது நமக்கு வியப்பை வரவழைக்கும்.  இந்த கோவில்களில் ஆண்டுதொறும் நடக்கும் பத்துநாள் கொடை விழாக்களில் இசைக்கப்படும் வில்லுப்பாட்டு போன்ற பாடலின் வாயிலாக அந்த மாடனின் கதையை விளக்கிப் பாடுவது வழக்கம்.  அதில் ஒவ்வொன்றிலும் அக்கோவிலிலுள்ள மாடன் பற்றியானதாக நம்பப்படும் கதைகளையும் அம்மாடனின் சிறப்புகளையும் சொல்லிப் பாடுவது வழக்கம்.  மாடன்கள் மொத்தம் இருபது அல்லது இருபத்து ஓரு வகைகள் என்றும் அறுபத்து ஓரு வகைகள் எனவும் பல வகையாக நம்பப்படுகிறது. அப்படியான பலவகை  மாடன்களைப்பறி  பார்ப்போம்.

அக்கினி மாடன்
அகழி மாடன்
அடிகட்டி மாடன்
அடுக்கு மாடன்
அடுப்படி மாடன்
அணைக்கரை மாடன்
அண்ணாவி மாடன்
அத்தி மாடன்
அரகுல மாடன்
அரசடி மாடன்
அரிமுத்து மாடன்
அருவா மாடன்
அரையடி மாடன்
அன்ன மாடன்
ஆகாச மாடன்
ஆண்டி மாடன்
ஆதி மாடன்
ஆலடி மாடன்
ஆவேச மாடன்
ஆற்றங்கரை மாடன்
ஆறுகுல மாடன்
இசக்கி மாடன்
இருளப்ப மாடன்
ஈன (முத்து) மாடன்
உடுக்கை மாடன்
உதிர மாடன்
உழு மாடன்
உறி மாடன்
ஊசிக்காட்டு/ஊய்க்காட்டு/ஊக்காட்டு மாடன்
எச மாடன்
ஏறு மாடன்
ஐகோர்ட் மகாராசா மாடன்
ஒட்டரைக்கொடிக்கார மாடன்
ஒட்டரைப்பதக்காரன் மாடன்
ஒத்தப்பனை மாடன்
ஒய்யார மாடன்
ஊர்காவலன்/ஒருகாவலன் மாடன்
ஒளிமுத்து மாடன்
ஒற்றைக் குடைக்கார மாடன்
ஒற்றைப் பந்தல்கார மாடன்
ஓங்கார மாடன்
ஓடைக்கரை மாடன்
கச மாடன்
கட்டையேறும்/கட்டேறும் பெருமாள் மாடன்
கண்ணாத்து சுடலை மாடன்
கத்தி மாடன்
கருங்கிடாக்கார மாடன்
கருவாட்டு மாடன்
கரையடி/கரடி மாடன்
கல்லடி மாடன்
கழு/கழுகு/களு மாடன்
கழுவுகுத்தி மாடன்
காட்டு மாடன்
கிணத்தடி மாடன்
குதிரை மாடன்
குழிதோண்டி மாடன்
குறவ மாடன்
குளக்கரை மாடன்
கொடிமரத்து மாடன்
கொம்பு மாடன்
கொழுக்கட்டை ஐயா மாடன்
கோட்டை மாடன்
கோனப்பனை மாடன்
கௌதல மாடன்
சங்கிலி மாடன்
சத்திராதி முண்டன் மாடன்
சந்தன மாடன்
சந்தையடி மாடன்
சப்பாணி மாடன்
சலிங்கல் மாடன்
சாமந்துறைப் பாண்டிய மாடன்
சிவ ஈனன் மாடன்
சிவ மாடன்
சிவனந்த பெருமாள் மாடன்
சீவலப்பேரி மாடன்
சுடலை (வீர) மாடன்
சுடுகாட்டு மாடன்
சுத்தவீர மாடன்
சுள்ளக்கரை மாடன்
செக்கடி மாடன்
செங்காதாத மாடன்
செங்கிடாக்கார மாடன்
தடிவீர மாடன்
தளவாய் மாடன்
துரும்பரை/குரும்பரை மாடன்
தூசி (முத்து) மாடன்
தூண்டில் (கச) மாடன்
தெப்பக்குளத்து மாடன்
தேரடி மாடன்
நட்டாத்து மாடன்
நடுக்காட்டு மாடன்
நல்ல மாடன்
நாகநாத மாடன்
நீராவி மாடன்
பச்சத்து மாடன்
பட்டணத்து மாடன்
பட்டாணி மாடன்
படித்துறை மாடன்
பன்றி மாடன்
பரல் உருட்டு மாடன்
பரன் மாடன்
பலவேசக்கார மாடன்
பறையடி மாடன்
பனையடி மாடன்
பிச்சிப்பூ மாடன்
பித்தாண்டி மாடன்
புல மாடன்
பூக்குழி மாடன்
பெரிய மாடன்
பேச்சி மாடன்
பேய் மாடன்
பொன் மாடன்
மஞ்சனச் செல்வ மாடன்
மடையடி மாடன்
மணிக்கட்டி மாடன்
மயான/மசான (முத்து/போற்றி) மாடன்
மருதமலை மாடன்
மாஞ்சோலை மாடன்
மாமத்தை மாடன்
மாயாண்டி மாடன்
முச்சந்தி மாடன்
முண்டன் மாடன்
முத்து மாடன்
முப்புலி/முப்பிலி மாடன்
மொட்டை மாடன்
வயக்கரை மாடன்
வண்டி மாடன்
வண்ணார மாடன்
வண்ணி மாடன்
வாழைமரத்தடி மாடன்
விடு மாடன்
வீரப்புலி மாடன்
வெள்ளாவி மாடன்
வெள்ளைச் சுடலை மாடன்
வேம்படிச் மாடன்

இன்னும் எத்தனை எத்தனை மாடன்களோ...  இவைபோக மாடத்தி, சுடலி, இசக்கி, பேச்சி என்ற பெண் கடவுள்களும்  வழிபடப்படுகிறது.

கதைகள்

மாடன்களைச் சுற்றியுள்ள கதைகளும் பற்பல.

கதை - ௧

உமையாளின் மாகாளி அவதாரத்துக்குப் பிறகு ஞாலத்தில் மந்திர தந்திர சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது. இதை கவனித்த தேவர்கள் அயனிடமும், திருமாலிடமும் முறையிட்டனர். அவர்கள் சிவனிடம் சென்று "ஈசனே, ஞாலத்தில் கூடா இறப்பு அடைந்தவர்களின் தீய ஆவிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுமட்டுமன்றி மீண்டும் மந்திர சக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைக்கப்பட்ட உயிர்களை எப்படி காப்பது?" என்று கேட்டபோது, "மாந்த்ரீக ஆற்றல்களுக்கு முடிவு கட்டவும், தீய ஆவிகளின் கொட்டத்தை அடக்கவும், விரைவாக தீர்வு காண்போம்" என்று கூறிய சிவன், மந்திரக் கடவுளாக அவதாரம் எடுக்க முடிவு செய்தார்.  அதன் காரணமாக சிவன், 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார். அவர்கள் தான் சிவனின் இயக்கியர்களாக (சேவர்களாக) செயல்பட்டனர்.  மக்களை அச்சுறுத்திவந்த இயல்பாக இறக்காதவர்களில் ஆவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சுடலை வனத்திற்கு காவலாக மாடனாக வலம் வருகிறார். இதனால் சுடுகாட்டு பித்தன் என்று சிவனுக்கு ஒரு பெயர் உருவானது. 

கதை - ௨

ஒரு முறை கைலாயத்தில் உமையாள், தன் பற்றர்களின் இசைக்கு தன்னையறியாமல் ஆடல் ஆடியவண்ணம் இருந்தார். இதை கண்ட சிவபெருமான், ஞாலத்தையே அடக்கி ஆளும் உமையவள் தன்னை அடக்கிக் கொள்ளாமல் இசைக்கு மயங்கி ஆடியதால் இசக்கி என்ற பெயரோடு மாந்தர் பிறவி எடுக்க வேண்டும் என்று சபித்தார். உடனே, உமையாள், நான் உங்களது உடலில் பாதியை பெற்றதன் காரணமாக எனக்கும் சக்தி உண்டென்பதை அறியாமல் சொள்களை விதைக்கிறீர்கள். அவ்வாறு நான் பிறவி எடுக்கும் போது, சுடலை வனத்தை காக்கும் மாடனாக தாங்கள் பிறவி எடுத்து சுட்ட பிணத்தையும் உண்ணும் பிறவியாக திரிய வேண்டும் என்று பதிலுக்கு சபித்தார் .  அதன்படியே மாடன் அவதாரம் ஏற்பட்டு ஞாலத்து மக்களை தீயவைகளிடமிருந்து காக்கலானார் மாடன்.

கதை - ௩

ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், ஞாலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். சிவபெருமான் இந்தப் பணியை செவ்வெனச் செய்து வருகிறாரா என்று பார்வதிக்கு சிறு ஐயம் எழுந்தது. அவர் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புக முடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள். தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் உமையாள், ஐயா!, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா? என்று கேட்டாள். சிவபெருமான், ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன ஐயம்? என்றார்.  இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. உமையாளுக்கு தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னுடைய மனைவியான நீ, என் பணியில் ஐயமடைந்து என்னைச் சோதிப்பதா? என்னைச் சோதித்த நீ காட்டுப் பேச்சியாக மாறி, காடுகளில் அலைந்து கொண்டிரு! என்று சாபமிட்டார். உமையாள் தன் செயலை பொறுத்தருளக் கோரி, சாப மீட்சி  வேண்டினார். சிவபெருமான், காட்டுப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ, மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது, நானே உன்னை வந்து மீட்பேன் என்று சாப மீட்சி  அளித்தார். உமையாள் காட்டுப்பேச்சியம்மனாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். உமையாள், ஐயா, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவ பெருமான், இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள்.  உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர் என்று வரமளித்து மறைந்தார். உமையாள், பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது. இதைப் பார்த்த உமையாள் மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். உமையாளும் அந்தக் குழந்தையுடன் கயிலாயம் திரும்பினார்.
சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால், அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். உமையாள் ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள். நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கயிலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது.
உமையாள் காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது, அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வருவது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்ததை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், பிணம் தின்ற இவன், இனி கயிலாயத்தில் இருக்க இயலாது. ஞாலம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார். இதைக் கேட்ட சுடலை மாடன், நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்? என்று கேட்டார்.
சுடலை மாடன், பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும் என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார். (நன்றி : http://mantrakali.blogspot.com/2017/08/blog-post_3.html )

கதை - ௪

செருக்கில் செயல்பட்ட, அயனின் மகனும் சிவனின் மாமனாருமான, தட்சனின் தலையை, கடுஞ்சினத்தால் சிவன் வீரபத்திரன் உருவில், கொய்தபின் தட்சன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து துடிதுடித்த அவனது  மனைவி தாருகாவல்லி, சிவனிடம் அழுது முறையிட்டாள்.   தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள்.  அவளது அழுகுரலுக்கு இரங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்துவை,  அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று  தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட  வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, தலை தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில்  ஆட்டுத்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது). சிவனின் சினம் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு  கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன்.  ஞாலம் சென்று மா சாத்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக  என்று வரமளித்து அனுப்பி வைத்தார்.  தலையும் வாயூம் மாறிய கடவுள் என்பதாலும் மா சாத்தாவின் தளவாய்களுள்(தளபதி) ஒருவனாக திகழ்வதாலும் தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார்.  சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை  வாங்கி தளவாய்மாடன் ஞாலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். (நன்றி : http://rajasabai.blogspot.com/2018/03/blog-post.html )

கதை - ௫

முருகன் பழநிக்குச் சென்று விட்டதும் உமையாளுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன தூண் அருகில் ஒரு விளக்கை ஏற்றுமாறும், ஆனால் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். அவ்வப்போது எரிந்து கொண்டு இருந்த விளக்கு மங்கத் துவங்க அதன் திரியை சிவபெருமான் பெரியதாக்கிக் கொண்டே இருந்தார்.  அப்போது அது உமையாளின் தொடையில் விழ அது ஒரு பெரிய சதைப் பிண்டமாயிற்று. ஆகவே உமை அந்த சதைப் பிண்டத்துக்கு உயிர் கொடுக்குமாறு அயனை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஒரு குழந்தை ஆக்கினார். அந்தக் குழந்தைக்கு சுடலை என்ற பெயர் வைத்தார்கள். அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து மயானத்தில் இருந்த உடல்களைத் உண்ணத் தொடங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பிவிடுமாறுக் கூறினார். ஆகவே உமையாள் அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.  பேச்சியுடன் ஞாலம் வந்தடைந்த சுடலை, மாடன் உருவில் மக்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

கதை - ௬ - ஐகோர்ட் மகாராசா

ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவர பக்தன். தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் கொடுத்தது என்று நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். சுடலையின் பெயரைக் கூறி யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார். தனக்கென்று ஒரு வீடும், சோறு போட சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார்.
(முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/06/blog-post_39.html )

கதை - ௭ - சப்பாணி மாடன்

நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த கோட்டியப்பன், ஒரு சலவைத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு மருத்துவச்சியாக திகழ்ந்தார். அப்பகுதியின் சிற்றரசன் பூதப்பாண்டியின் மனைவிக்கு காளியம்மாள் சிறப்பாகப் பிரசவம் பார்த்ததால், கோட்டியப்பன்-காளியம்மாள் தம்பதிக்கு ஊர் எல்லையில் குடிசை அமைத்து வசிக்கவும், துணி துவைக்க ஒரு குளத்தையும் சிற்றரசன் பட்டயம் போட்டுக் கொடுத்தார். அதற்கு நன்றிக் கடனாக தங்களுக்கு பிறந்த மகனுக்கு பூதப்பாண்டி என பெயரிட்டு வளர்த்தனர் தம்பதியர்.  (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/05/blog-post_71.html )

கதை - ௮ - அத்தி மாடன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தாய்விளை ஊரைச்சேர்ந்தவர் நீலமேகம். இவர் அந்த ஊரைச்சுற்றியுள்ள அங்கமங்கலம், அதிராமபுரம், ராஜபதி, மணத்தி, நல்லூர், மலவராயநத்தம் உள்ளிட்ட ஏழு ஊரில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களுக்கு துணி சலவை செய்யும் பணியை செய்து வந்தார்...  (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2019/06/blog-post_468.html )

கதை - ௯ - ஒத்தப்பனை மாடன்

விஜயநாராயணத்தில் விவசாய  நிலங்கள் அதிகம் வைத்திருந்த பேச்சிமுத்து ஒரு ஜோடி காளை மாடு வாங்க முடிவு செய்தார். அவரது உறவினர் விஜயநாராயணம் அருகேயுள்ள சங்கனாபுரம்  சண்முகமும் ஒரு ஜோடி மாடு வாங்க நினைத்திருந்தார்... (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/05/blog-post_47.html )

கதை - ௧० - மாயாண்டிச் சுடலை மாடன்

ஆழ்வார்திருநகரிலுள்ள பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று அவ்வூர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்த மாலவன் பெருமாள் உத்தரவு கொடுக்கிறார்....(முழுவதும் படிக்க: https://m.dinakaran.com/article/news-detail/24502 )

கதை - ௧௧ - இருளப்ப மாடன்

( கேட்க: https://youtu.be/MIqb3c1vjOg )

கதை - ௧௨ - சங்கிலி மாடன்

( கேட்க: https://youtu.be/YZkQJINIpvU )

கதை - ௧௩ - சீவலப்பேரி மாடன்

( கேட்க: https://youtu.be/V-72BYgI2_E )

கதை - ௧௪ - மாயாண்டி சுடலை (கொட்டாரக்கரை)

( கேட்க: https://youtu.be/FgysaJ_CTm0 )

கதை -  ௧௫ - பன்றி மாடன்

( கேட்க: https://youtu.be/om9D4wzWpQs )

கதை - ௧௬  - முப்புலி மாடன் அல்லது மாசானமுத்து மாடன்

( கேட்க: https://youtu.be/hV1py9sAjD0 )

கதை - ௧௭ - ஊசிக்காட்டு மாடன்

( கேட்க: https://youtu.be/C_FaiCJm_hE )

(வளரும்....)

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...