Wednesday, January 19, 2022

நாடு <-> சமயம்

நாடு <-> சமயம்

நாட்டுக்கும் (தேசியம்) சமயத்துக்கும் (பக்தி) பெரிய வேறுபாடுகள் இல்லை..

௧} இரண்டிலும் வரையறுக்கப்பட்ட-மரியாதைகளை-கொடுக்கப்படவேண்டிய/வணங்கப்படவேண்டிய  கொடிகள், சின்னங்கள், இதர அடையாளங்கள், பாடல்கள், மந்திரங்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும். 

௨} இரண்டிலும் வரலாற்றுக்/கற்பனைக்  கதைகள், சட்ட நூல்கள்,  கதாநாயகர்கள் இருப்பர்.  இக்கதாநாயகர்களும் நூல்களும் பெரும்பாலும் வணக்கத்துக்கு உரியவைகளாகவே இருக்கும். இக்கதாநாயகர்கள், நாட்டையோ/சமயத்தையோ தோற்றிவித்தவர்களாகவோ   அவைகளையும் அது சார்ந்த மக்களையும் எதிரிகளிடமிருந்து/நோய்களிடமிருந்து காப்பாற்றியவர்களாகவோ  கற்பனைக் கதைகளில்வரும் பாத்திரங்களாகவோ இருப்பர்.

௩} மக்கள் எவ்வாறெல்லாம் வாழலாம், வாழவேண்டும், வாழக்கூடாது என்பவைகள்பற்றியான சட்டங்களையும் அச்சட்டங்களை மக்கள் பின்பற்றினால் என்னென்ன 'நன்மைகள்' என்பதையும் அவைகளை பின்பற்றாமலோ அதற்கு எதிராக வாழ்ந்தால் என்னென்ன 'தீமைகள்/தண்டனைகள்' என்பவைகளைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

௪} சிறப்புக்-கட்டிடங்கள் பெரும் பொருள் செலவில் எழுப்பப்பட்டிருக்கும்.  பல கட்டிடங்கள் ௸ கதாநாயகர்களுக்காக எழுப்பப்பட்டவை. அக்கட்டிடங்களுக்கு உள்ளே, குறித்த பொழுதுக்கு ஒருமுறை, பொதுமக்களோ பொதுமக்களில் சிறப்புத் தகுதிபெற்றவர்களோ கூடுவர். இக்கட்டிடங்கள் புனிதம் மிகுந்தவைகளாகக் கருதப்படும்.   இக்கூட்டங்களில் ௸ பாடல்கள், மந்திரங்கள் இசைக்கப்படும். அனேகமாக இக்கட்டிடங்கள் இருக்கும் ஊர்கள் சிறப்பு-ஊர்களாக மதிக்கப்படும்.

௫} ஆண்டுக்கு ஒரு முறையோ பல முறையோ பொதுமக்கள் அனைவரும் ௸ ஏதேனும் ஒரு அடையாளத்தின் விழாவைக் கொண்டாடுவர். 

 ௬} இரண்டும் தங்களை பாதுகாக்கும் எனவும் அதனால் அதன் இருப்பு கட்டாயம் தேவை எனவும் மக்கள்  'நம்புவர்'.

௭} இதில் [சில/முற்றிலும்] மாற்றுக்கருத்துகொண்ட பல குழுக்கள் இருப்பது உறுதி.  இந்த இரு தரப்பினருக்கு இடையே உள்ளூற ஒரு அச்சமோ/புச்சமோ/வெறுப்போ/பகைமையோ இருப்பது உறுதி.

௮} இவை இரண்டின் இருப்போ பண்புகளோ  நிலையானவை அல்வ.  இவை, பொழுதுக்கும்  சுற்றுச்சூழலுக்கும் பரிணாமத்துக்கும் ஏற்ற மாற்றங்களான இணைப்புக்கும் சேர்ப்புக்கும் இழப்புக்கும் அழிவுக்கும் உட்படுபவை. 

௯} இவை இரண்டின் எந்த ஒரு பண்பும் அறிவியல் பின்புலம் கொண்டது அல்ல.  இவைகள் குறிப்பிடும் சில வரலாற்று நிகழ்வுகள் உண்மை என்றாலும் அந்நிகழ்வுகளுக்கான காரணங்களை/வேர்களை ஆராய்ந்தால் அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்தவைகளாகவும் அறிவியலுக்குத் தொடர்பில்லாதவைகளாகவும் இருக்கும்.

மாந்தர் இனமானது, குழு/மந்தை எண்ணவோட்டம் கொண்டது.  குழுக்களில், மேற்சொன்ன பண்புகள் இல்லாமல் இருக்கமுடியாது. இதை 'உணர்வது' இன்றியமையாததாகும். அதைவிடுத்து, இவைகள்மீது வைக்கப்படும் மிகையாக பற்றானது, மாந்தர் இனத்தை அழிவுக்கு இட்டுச்செல்பவை என்பது பட்டறிவு, கண்கூடு...

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...