நூலடை
"படீ கசப்சி பூக் லகி.. தோ மினிட்.." என்ற மேகி நூலடை விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.. "என்னடா இது, இதுகள் எதையோ புழுப்புழுவா எடுத்து திங்கறதுகள்" என கணபதி மாமா என்னிடம் கேட்டார். "சேமியா மாதிரி ஏதோ இருக்கு மாமா" என்று கீழுதட்டை பிதிக்கியவாறே சொன்னேன்.
கணபதி மாமா வீட்டுக்குள்ளே ஒரு சின்ன அம்மன் கோவில் இருந்தது. மாலைநேர இரண்டாம் பூசை முடித்து சூடம் காண்பித்து நடை சாத்திய பின்னர், அவர் தெரு குழந்தைகளுக்கு நெல் பொரி கொடுப்பார். அதுக்காகத்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன். மேலும் எங்கள் தெருவில் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய மூன்றாவது ஆள் கணபதி மாமா, வட்டிக்கடை வைத்திருந்தார். அது ஒரு டயனோரா கருப்பு வெள்ளை தொலைக்காட்ச்சிப் பெட்டி. புரியாத இந்தி மொழியில் ஒளிபரப்பிக் காண்பிக்கப்படும் கண்ட கருமாந்தரத்தையும் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த காலமது..மறுநாள் மதிய உணவு இடைவேளையில் நானும் இரமேசும் வேப்பமரத்தடியில் உணவு சம்படங்களோடு ஒதுங்கிக்கொண்டோம். சுற்றிலும் மஞ்சள் திறத்தில் வேப்பம் பழங்கள் குண்டுகுண்டாக அழகாக விழுந்துகிடந்தன. அவன் ஒருவழியாக பல்லால் கடித்து சம்படத்தை திறந்துகொண்டான். மேலே முட்டையூத்தப்பமும் அதற்கு கீழே நூலடையும் இருந்தன. என் சம்படம் எப்போதும்போல பக்கவாட்டில் ஒருசேர தட்டியவுடன் 'பொப்'பென்ற ஓசையுடன் திடந்துகொண்டது, தயிர்சாதமும் நெல்லிக்காய் ஊறுகாயும் அம்மா கொடுத்தனுப்பியிருந்தார்கள். நாங்கள் சாப்பிடலானோம். இரமேசின் அப்பாவும் அம்மாவும் வேறு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியில் உள்ளனர். என்னைப்போல அவனும் வீட்டிற்கு ஒரே பிள்ளையென்றாலும் பழக்கவழக்கத்தில் சற்று தெனாவட்டுத் தன்மையுடையவன். இரமேசின் வீடு எங்கள் பள்ளியின் பின்புறத்திலேயே இருந்தது. நான் பலமுறை அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அவனுக்கு தோழர்கள் பெரிதாக யாருமில்லை. வகுப்பிலும் பெரும்பாலும் என்னருகில் இருத்தப்பட்டதால், நான் தான் நெருங்கிய தோழன். அவன் வளர்த்துவரும் ஐந்தாறு மைனாக்களைப் பற்றியே எப்போழுதும் பேசுவான். அத்தனை மைனாக்களுக்கும் பில்லா, ரக்கா என இரசினி படப்பெயர்கள்.
"லே, இந்த மேகி எப்படி செய்வாங்கனு தெரியுமா?" என ஓர் ஆர்வத்தில் அவனிடம் கேட்டேன். "எனக்குத் தெரியாது மக்கா, அம்மா தான் இத பண்ணிட்டு வேகமா பள்ளிக்கூடத்துக்கு போயிட்டாங்க, அப்பா தான் எனக்கு சம்படத்துல எடுத்து வச்சார். நான் தான் எங்கப்பாட்ட ஒரு முட்டை-ஊத்தப்பம் போட்டுத்தரச்சொன்னேன்" என்று சொன்னவாறே "லே, ஓங்கீட்ல ஒங்கப்பா சமைப்பாரா?" என பரிதாபமாகக் கேட்டான். நான் விடவில்லை. "மேகி எந்த கடைல மக்கா கெடைக்கும்?" எனக்கேட்டேன். நாராயணன் கடைலயும் கணேசு கடைலயும் பார்த்திராத நினைவு. "அதுவா, வீட்டா மார்ட்னு கொளத்து பேருந்துநிலையத்துக்கு மேக்கால, அதாம்மக்கா பூங்காவுக்க பக்கமா அம்பாசிடரெல்லாம் வரிசையா நிக்குமே, அதுக்கு எதிரேதான் இந்த கடை இருக்கு. அங்கன இருந்துதான் அம்மா பள்ளிக்கூடம் விட்டு வரும்போது வாகிட்டு வரும்" என்றான்
டாண்.. டாண்.. டாண்.. நாளிறுதி மும்மணி அடித்தவுடன் சோல்னா பையை தலையில் மாட்டிக்கொண்டு 7Fஐ நோக்கி ஓடினேன். மூக்குறுஞ்சியவாறே தயாராய் இருந்தான், சூரி. சூரி, என் உயிர்த் தோழன், என்னைவிட ஓரிரு அகவை மூத்தவனென்றாலும், நாங்கள் ஒரே அலைவரிசைதாரர்கள். நான் அவனிடம் வீட்டா மார்ட் பற்றி சொன்னேன். இருவரும் பள்ளி முகப்புவாயிலை கடந்துகொண்டிருந்தோம். எதற்காகவோ திரும்பிப்பார்த்த சூரி, என் முதுகை பறாண்டி "அங்க பாருல" என கை காமித்தான். தொலைவில், முகில்முட்டி நின்றுகொண்டிருந்த மணிக்கூண்டு முதன்மை கட்டிடத்தின் கீழே உள்ள முகப்பு வளைவின் அருகில், பாக்கியநாதனும் வைரவல்லியும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். வைரவல்லியை அப்பள்ளியில் அறிந்திராதவர்களே கிடையாது என்பதற்கு இரு காரணங்கள். ஒன்று, வைரவல்லி, பாலின் வெண்மைகூட நிறம் மட்டுதான் எனச் சொல்லும் அளவுக்கு அப்படியொரு வெள்ளை நிறம். அந்த காலகட்டத்தில் தொண்ணூற்றொன்பது விழுக்காடு ஆண்கள் நிறைந்த அப்பள்ளியில் சுற்றித்திரிந்த ஐந்தாறு பெண்பிள்ளைகளிடையே இவள் ஒரு பளிங்குப்பதுமை!. இரண்டாவது, நல்ல உடல்வளம் மட்டுமல்லாது சிறந்த குரல்வளமும் கொண்டவள் ஆதலால், திங்கள்கிழமை பள்ளி முழு அணிவகுப்பில், நீராறும் கடலுடுத்த தொடங்கி, தாயின்-மணிக்கொடியும் பாடி செய செய செய செய செயகே வரை பாடுபவளும் இவளே. எனக்குத்தெரிந்தே ஐந்து பேர் இவளிடம் காதல்கடிதம் கொடுத்து மூக்குடைபட்டிருக்கிரார்கள். அதிலும் இலச்சுமணனின் மூக்குடைப்புக்கதை மகா பரிதாபம். அதை இலச்சுமணாயணம் என்ற பெயரில் ஒரு காப்பியமாகவே எழுதிவிடலாம். கொசுறு செய்தி என்னவென்றால் என்தெருவுக்கு அடுத்த தெருவில்தான் வைரவல்லியின் வீடு இருந்தது. அவளின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அத்தனைபேரும் எனக்கும் என் வீட்டாருக்கும் நன்கு பழக்கம். என்றாலும் வைரவல்லியிடம் நான் இதுவரை ஒரு சொல் கூட பேசியதில்லை. ஓரிருமுறை பதிலுக்கு 'இளித்திருக்கிறேன்'. மேலும், அந்தப் பெண் பிடிகொடுத்துப்பேசும் வகையல்ல என கேள்விப்பட்டிருக்கிறேன்.
கதைக்கு வருவோம், நானும் சூரியும் வீட்டா மார்ட்டுக்குள் நுழைந்தோம். அது ஒரு சிறிய கடையாகத்தான் இருந்தது. "மேகி நூலடை இருக்கா, என்ன வெல?" எனக்கேட்டேன். வழுக்கைத் தலையோடு இருந்த கடைக்காரன் ஒரு பொதியை உருவி மேசை மேல் வைத்து "ஒண்ணு அஞ்சு ரூவா" என்றார். நானும் சூரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். "வாங்கப்போறீங்களா தம்பீ?" என அவர் கேட்டுகொண்டிருக்கும்போதே நாங்கள் நடையை கட்டியிருந்தோம், எங்களிடம் உண்மையில் காசு இல்லை.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் நூலடை பற்றிச் சொன்னேன். தானும் அந்த விளம்பரம் எங்கோ பார்த்ததாகச் சொன்னார். ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு பொதி வாங்கி வரச்சொன்னார். நான் ஓடினேன். புறங்கால் பிடரி மயிரில் படும்படி தலைதெறிக்க ஓடினேன். அந்த விளம்பரம் மனக்கண்ணில் வந்து நாக்கில் உமிழ்நீர் கோர்த்தது. "வந்ததும் வராத்ததுமா சீருடை கூட மாத்தாம எங்க ஓடறான் இவன்" என ஆச்சி சொல்வதும், "டே குமார் பாத்து ஓடுடா பாத்து" என பக்கத்து வீட்டு போன்னு அத்தை சொல்வதும், செட்டியார் கடை அருகில் "டேய், எங்கடா ஓடற. எங்க வீட்டுக்கு வா, அப்பா முத்துட்தேட்டர் முறுக்கு சூடா வாங்கிட்டு வந்துருக்கார்" என கலாக்கா சொல்வதும், எல்லாருக்கும் ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு, பேயாக ஓடிக்கொண்டிருந்தேன். அடுத்த முப்பதேட்டாவது நிமிடம் மேகி நூலடைப் பொதி என் அம்மா கையில்.
"ஆமா.. வாங்கிட்டு வந்துட்டே. இத எப்படி செய்யறது" என அம்மா வினவ, "அந்த பொதீலயே போட்டுருப்பானாம்மா, கடக்காரன் சொன்னான்" என்றேன். "சரி.. நீ, போய் சீருடைய அவுத்துட்டு அந்த நீலநிற நிக்கர் போட்டுக்கோ. கைகால்மொகத்த சோப்புப்போட்டு கழுவு. ஒன் ஒடம்புல ஒரு மூட்டை செம்மண் இருக்கும் போலிருக்கே, மண்ணுல உருண்டையா? அதுக்குள்ள இத பண்ணிவெக்கிரேன்.." என்று சொன்னவாறே அடுக்களைக்குள் சென்றார்.
எதையும் கழுவாமல் கொல்லைப்பக்கத்தில் நான் நட்டிருந்த அந்திமந்தாரைச் செடியை பார்க்கச் சென்றுவிட்டேன். நிறைய பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மீதமுள்ளவை மஞ்சள் நிறத்திலும் மாலை வேளையில் அழகாய் பூத்திருந்தன. ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துவந்து அவற்றுக்கு தெளித்தேன். கிழக்குப்பக்கது வீட்டு மதிலை எம்பிக்குதித்து எட்டிப்பார்த்தேன். அந்த வீடு வெகு காலமாய் பூட்டியே கிடந்ததால் அந்த கொல்லைப்பக்கம் முழுவதுமா புதர்மண்டி காடாகக் கிடந்தது. மேற்க்குப்பக்கத்து வீட்டுக் கொல்லைப்பக்கம் என் வீடுபோலில்லாமல் சுத்தமாக பெருக்கப்பட்டு, ஒரு முக்கில் ஓலைகளும், மட்டைகளும் சீராக அடுக்கப்பட்டிருந்தது. "பாம்படம் பாட்டியின் வேலையாகத்தான் இருக்கும்" என மனதில் நினைத்துக்கொண்டேன்.
"டேய் வாடா!" என அம்மா கூப்பிடுவது கேட்டது. கொல்லையை விட்டு முற்றம் வழியாக அடுக்களைக்குள் செல்லுவதற்கு முன்பாகவே ஏதோ ஒரு வாசம் மூக்கை துளைத்தது. "அதுல போட்டிருக்கர மாதிரியே பண்ணிட்டேன். நான் இன்னும் வாய்ல வெச்சுப் பாக்கல்லை. கோவிலுகுக்கெல்லாம் போணும். நீயாச்சு ஒன்னோட நூலடையாச்சு" என ஒரு இலுப்புச்செட்டிய காண்பித்தவாறே சொன்னார். நான் ஆப்பையை தொடப்போகும்பொது "தொட்டுராதே கொதிக்கும். கொஞ்சம் ஆறட்டும். பொறுமையா அப்பறம் சாப்டு".. "நான் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்" என்றவாறே ஆயத்தமானார். நான் அடுக்களையின் ஓரத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்து கொண்டேன்.
"என்னடா வீடம்புடும் ஏதோ நாத்தமா நாறுது" என்றவாரே என் ஆச்சி குவித்த மேலுதட்டால் மூக்கை மூடியவாறே சாய்ந்து சாய்ந்து வந்துகொண்டிருந்தார். நான் நூலடையின் பெருமைகளை ஆச்சியிடம் விளகலாம் என்பதற்கு முன்னாலே என் அம்மா, "அவன் ஏதோ மேகியாம் ஆசைப்பட்டு கடைலேருந்து வாங்கிட்டு வந்துருக்கான். இலுப்புசசெட்டில பண்ணிவெச்சிருக்கேன். தொட்டுராதேங்க. கொதிக்குது" என்றவாரே வாசலைநோக்கி நடந்துகொண்டிருந்தார். "என்னடா இது நாக்குபூச்சி நாக்குபூச்சியா இருக்கு. வாடை வேற கொடலப்பிடுங்குது.. உவெ... என்னடா இது" என வாந்தி எடுப்பதை போல நாக்கை துருத்திக் காண்பித்தார். "வெள்ளுள்ளி போட்டுருகானு நெனக்கிறேன், வெள்ளிக்கெழமையுமாதுமா, எங்கிருந்துடா இத வாங்கிண்டு வந்தே? என்ன கருமாந்தரமோ இது. பாக்கவே சகிக்கல்ல" என எனைப் பார்த்து ஏளனமாகவும் சிடுசிடுப்புடனும் கேட்டார். நான் எதுவும் பதில் பேசவில்லை. "வாயத்தொறந்து சொல்றானோப் பாரு. ஆமா எத்தன ரூவாய்? முப்பதா அம்பதா? ஒனக்கென்ன.. கொப்பன் ராத்திரி பகல் பாக்காம மாடா ஒழச்சு சம்பாதிக்கறான்.. நரிக்கு விளையாட்டு நண்டுக்கு பிராணாவசுத்தை" என தொடர்பே இல்லாத ஒரு பழமொழியை கூறிக்கொண்டு "இருக்கீங்களா!.. நீங்கதான் ஒங்க செல்லப் பேரனுக்கு ரூவாய் கொடுத்தேளா?" என்றவாறே முன் அறையில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த தாத்தாவை வம்பிழுக்க அவரை நோக்கி நடக்கலானார். "வாய தொறக்கறானா பாரு, உம்மகொட்டான் ஆட்டுமா" என ஆச்சி முணுமுணுப்பதும் என் காதில் விழுந்தது. ஆச்சியிடம் ஏட்டிக்கு போட்டி எதுத்து பேசக்கூடாதென்பது, போன வாரம் அவருக்கும் எனக்கும் எனக்கேற்பட்ட பழி சண்டைக்குப்பின்னர், என் அம்மாவிடம் எடுத்துக்கொண்ட சத்தியம். வம்பே வேண்டாம் என்று தான் நானும் இம்முறை பதில் பேசவேயில்லை.
நான் மெல்ல எழுந்து ஆப்பையை தொட்டுப்பார்த்தேன், கை தாங்கும் சூடில் தான் இருந்தது. ஒரு சிறிய தட்டை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் நூலடையை அதில் போட்டு மீண்டும் பலகையில் வந்தமர்தபோது "என்னடீ சொல்லறே, என்ன பேரன், என்ன ரூவாய், நான் யாருக்கும் எதுவும் குடுக்கல்லை.. போ போ.. கோவில்ல மணியடிச்சாச்சு, தீவாராதனை ஆகப்போகுது.. போ.. போ... என்னத் தொந்தரவு பண்ணாதே" என தாத்தா சலித்துக்கொண்டது என் காதில் விழுந்தது. நான் ஒரு தேக்கரண்டியால் ஒரு சுளை நூலடையை எடுத்து சூடாற ஊத்தி வாயில் போட்டுக்கொண்டேன். உண்மையிலேயே ஆச்சி சொன்னதுபோல் அதன் சுவை குமட்டிக்கொண்டுதான் வந்தது... ய்யே.. எனக்கு அதன் சுவை முற்றிலும் பிடிக்கவே இல்லை. மெல்ல தட்டத்திலிருந்த மிச்ச நூலடையை மீண்டும் இலுப்புசெட்டியில் கொட்டி, ஒரு பெரிய தட்டால் மூடிய பின்னர், தாத்தாவிடம் வந்து அமர்ந்துகொண்டேன். அவர் இன்னமும் ஏதோ மும்முரமாக ஒரு டயரியில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். என்னை இழுத்து தன் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக அமரவைத்துவிட்டு ஒரு புன்முறுவலோடே மீண்டும் எழுதுவதில் மும்முரமானார்.
"என்னடா எப்படி இருந்துது?" என்று மிதியடியில் காலை துடைத்தவாறே என் அம்மா கேட்டார். "நல்லா இல்லையா? ஒன்னோட மூஞ்சியே சொல்லுதே. நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் உனக்கு பழக்கமில்லாத்தது. பட்டை சோம்பு எல்லாம் போட்டுருப்பாங்க. அதுதான் ஒனக்கு பிடிக்கல்லை" என்று சிரித்துக்கொண்டு அடுக்களையை நோக்கி நடந்தார். நானும் பின்னால் சென்றேன். தன் சுண்டு விரலால் சிறிது எடுத்து அவர் நாக்கில் வைத்துக்கொண்டதும் அவர் முகமும் எட்டுகோணத்தில் போய்விட்டது. "இத இங்க யாரும் சாப்டமாட்டாங்க. நாகம்மையும் (வேலைக்காரி) சாப்புடுவாளோனு தெரியல்லை. ரெண்டாவது, நாளக்கி காலைல வரக்யும் இருக்காது, ஊசிப்போயிரும். son who temple salt flower needle gone" என்றவாறே என் மடையில் லேசாகக் கொட்டி என்னைப்பார்த்து "இந்த அசடு ஏமாந்து போச்சு..." என்று ஒரு நமுட்டுச் சிரிப்போடு சொன்னார். எனக்கு இரட்டிப்பு வருத்தம், ஒன்று, ஆசைப்பட்டது போலிலாத்தது, இரண்டு, அம்மாவுக்கு வேலை வைத்தது. இதுக்கெலாத்துக்கும் மேல, கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் ஆச்சி என் வாயக் கொடைவாளே! எப்படி அதச் சம்மாளிக்கது!?
:
அடுத்த முறை நான் நூலடை சாப்பிட்டது கலாக்கா திருமண வரவேர்ப்பில் தான். போதாததுக்கு என் வீட்டுக்கு ஒரு தூக்கு நிறைய நூலடையை கலாக்காவின் அம்மா கொடுத்து அனுப்பியிருந்தார்.
:
"நூலடையும் பாசுத்தாவும் பீடசாவும் பர்கரும் சாப்டகூடாது, ஏன்னா அது உடலுக்குக் கெடுதல்னு வகுப்பாசிரியை எசுத்தர்-லிடியா சொல்லிட்டாங்கமா", மழலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் குழந்தை...
No comments:
Post a Comment