Wednesday, January 19, 2022

தமிழா!, தமிழைக் காத்திடு!

 தமிழா, தமிழைக் காத்திடு

திரு மகேசன் இராசநாதன் எனும் நியூசிலாந்தில் வாழும் தமிழார்வலர் எனக்கு அண்மையில் கீழ்காணும் மடலை அனுப்பியிருந்தார். அவர் எழுதிய "தமிழா, தமிழைக் காத்திடு" எனும் நூலை மணிமேகலைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ( அதற்கான பீடியெப்: https://noolaham.net/project/667/66654/66654.pdf ).  தமிநாட்டுப் பயன்பாட்டுத் தமிழில் இத்தனை ஆங்கிலம் கலந்துள்ளதே என மிகக் கவலைப்படுகிறார்.

அவர் எழுதியதாவது:-
தமிழ் நாட்டில் தமிழின் நிலை
(மருத்துவக் கலாநிதி மகேசன் இராசநாதன்)

எமது உயிரினும் அரிய தமிழ் மொழி உலகின் ஒப்பற்ற செம்மொழி. அது காலத்தாலும், நெருப்பாலும்,வெள்ளத்தாலும்,அந்நியராலும் அழியாதது. இன்றைய உலகில் தமிழர் பல நாடுகளில் வாழ்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுவதில்லை. அது பெரும் வேதனையைத் தருகிறது. ஆனால், ஈழம், கனடா ஆகிய ஞாலத்தின் பல இடங்களில் நல்ல தமிழ் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தமிழின் நிலையை ஆராய்வோம். ஏழு கோடி தமிழர் வாழும் நாட்டில் தமிழ் ஒரு போதும் அழியாது. ஆனால் எப்படிப்பட்ட தமிழ் நிலைக்கும் என்பது தான் கேள்வி. இன்று தமிழகத்தில் இரு வகையான தமிழ் பேசப்பட்டு வருகிறது:-
௧} அலுவல் பயன்பாடுகளில் (செய்திகள் போன்றவை) நல்ல தமிழ் பேசப்பட்டு வருகிறது. இவற்றிலும் சில ஆங்கிலச் சொற்கள் கலந்து பயன்படுத்தப்படுகின்றன.
௨} கொச்சைத் தமிழ்: இது ஆங்கிலம் போன்ற பிறமொழிகள் கலந்த தமிழ். இதை இன்று தமிங்கிலம் என்று அழைக்கின்றனர். தேவையற்ற வகையில் பல ஆங்கிலச் சொற்களைக் கலந்து, சில தமிழ்ச் சொற்களைச் சேர்த்துப் பலர் கதைக்கிறார்கள். இது பெரும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதற்கு எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.                
௩} இனிப்புக்கு சுவீட் என்றும் நீருக்கு வாட்டர் என்றும் பாலுக்கு மில்க்கு என்றும் அரிசிக்கு ரைசு என்றும் இன்று தமிழ்நாட்டு நகரப்பகுதிகளில் பலர் சொல்கிறார்கள்.  இது தேவை தானா? இனிப்பு, பால், நீர், அரிசி போன்ற நல்ல தமிழ் சொற்கள் இருக்கும் போது இப்படி ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் நியாயமில்லை. இந்த நிலை நீடிக்குமானால் காலப் போக்கில் இனிப்பு, பால், நீர், அரிசி போன்ற சொற்கள் மறைந்துவிடும்.
௪} நன்றி என்னும் அருமையான சொல் இருக்க தாங்சு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அப்பாவை டாடி என்றும் அம்மாவை மம்மி என்றும் அழைக்கிறார்கள்.
அருமைப் பெற்றோரை இப்படி அழைக்கலாமா?
௫} பல தமிழ் இதழ்களும் வெளியீடுகளும் தமிங்கில நடையைப் பின்பற்றுகின்றன. இரு திங்கள்களுக்கு முன் ஒரு தமிழ் இதழில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் முப்பது ஆங்கிலச் சொற்களைக் காணக் கூடியதாயிருந்தது.
௬} அது மட்டுமல்ல, ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுகிறார்கள். காட்டாக "ப்ரீ டிரிங்ஸ்", "ப்ரீ டின்னர்", "லிவிங் டுகெதர்", "ஹவ் டு யு டு?". திடீரென இவை தோன்றும்போது அவற்றை படிக்கவே என்னவோபோல் இருக்கிறது.
௭} தொலைக் காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தமிழானது "இது தமிழ் தானா?" எனக் கேட்க வைக்கின்றது.
"சுபர் சிங்கர்"  என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட நிகழ்ச்சியில் பாடகர்கள் வந்து அருமையான தமிழில் பாடுவார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து நடுவர்கள் சொல்வது பெரும் துன்பத்தை அளிக்கிறது. "வண்டர் புல் பெர்வாமன்ஸ். நல்லாப் பண்ணினீங்க. கிரேட் சிங்கிங்"
௮} பின்வரும் வசனஙகளானவை ஆங்கிலம் எவ்வளவு தூரம் தமிழை ஊடுருவிவிட்டது என்பதைக் காட்டுகின்றன.  "நண்பர் ஒருவர் கார் ஆக்சிடெண்டில் சிக்கிக் கோமா நிலையில் சீரியசாகி ஹாஸ்பிட்டல் பெட்டில் கிடக்கிறார்", "காஷியர் காஷ் பெறும் இடம்".

மேற் கூறிய எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் கேட்டை எடுத்துக் காட்டுகின்றன.

நான் தமிழ் வெறியன் அல்ல, ஒரு தமிழார்வலன். எவரையும் புண்படுத்துவதற்காக நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. தமிழ் மேல் கொண்ட பற்றாலும் தமிழர் தமிழைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கவலையினாலும் எழுதுகிறேன். இதைப்  பற்றித் தமிழகத்தில் உள்ள பலருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பியுள்ளேன். தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள், தமிழ் இதழ் ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் எனப் பலருக்குக் கடிதங்கள் அனுப்பியும் ஒரு சிலரே பதில் அனுப்பியுள்ளார்கள். இதைப்பற்றி ஒருவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆங்கிலம் கலந்த தமிழ் நடையை பலர் இயற்கையானதாகவே கருதுகிறார்கள் போலிருக்கிறது. ஒரு பேராசிரியர் பினவருமாறு பதில் எழுதியிருந்தார்:-
"உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது, நான் இதைப் பற்றிப் பலரிடம் கதைத்திருக்கிறேன். அவர்கள் எம்மைப் போன்ற சிலர் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறார்கள்".
புகழ் பெற்ற ஒரு கவிஞரின் மகனுக்கு எழுதியிருந்தேன். அவர் பல மின் அஞ்சல்கள் அனுப்பிய பின், "You don’t know how hard it is!!" என ஆங்கிலத்தில் பதில் அனுப்பியிருந்தார்.

இப்படித் தமிழகத்தில் ஆங்கிலம் களிநடனம் புரிகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. *தமிழ் சோறு போடாது* என்ற காரணத்தாலா, இப்படிப் புறக்கணிக்கப்படுகிறது? தமிழானது பல அறிவுகளைக் கொண்ட பல அறிவுகளை ஏற்கவல்ல திறன்கொண்ட மொழி, சிறந்த செம்மொழி என்பதை நாம் மறந்து விட்டோமா? தமிங்கில நடையானது தரப்படுத்தப்பட்டு விரைவில் அலுவல் தமிழையும் ஆட்கொண்டுவிடும் என்ற ஐயமும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன. தமிழ் கொச்சை மொழியாக மாறுவதைத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களா? செம்மொழி, செம்மொழி எனக் கூச்சல் போட்ட மக்களா, இப்படிச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெரும் உளத்துயரத்தை ஏற்படுத்துகிறது.  பண்டைய காலங்களில் தமிழுக்குச் சங்கத ஊடுருவலால் ஆபத்து ஏற்பட்டது. பல சங்கதச் சொற்களைக் கலந்து தமிழைப் பேசும் நடையைப் புகுத்தினார்கள். இதை மணிப்பவழம் என அழைத்தார்கள். மறைக்காடு எனத் அழகாகத் தமிழகத்தில் அழைக்கப்பட்ட ஒரு ஊரின் பெயரை வேதாரண்யம் என மாற்றினார்கள். (மறை-வேதம்; காடு- ஆரண்யம்). மணிப்பிரவாளத்திறகு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் நல்ல வேளையாக மறைமலை அடிகள் போன்ற அறிஞர்கள் தோன்றித் தூய தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைக் காத்தார்கள். அதைப் போன்று இன்றும் ஆங்கிலத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நீக்கத் தூய தமிழ் இயக்கம் இயக்கம் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது எனது பணிவான கருத்து. 

இன்னும் இரு செய்திகளையும் இங்கு கூற விரும்புகிறேன்:-
௧} இரு சீனர்கள் சந்தித்தால் சீன மொழியில் சரளமாகக் பேசிக்கொள்கிறார்கள். இப்படிப் பிற மொழிகள் பேசுபவர்கள் சந்தித்தால் தங்கள் மொழியிலேயே பேசிக்கொள்கிறார்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இரு படித்த தமிழர்கள் சந்தித்துக் கொண்டால், "Hello, how do you do??" என ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இரு தமிழர்கள் சந்தித்தால் தமது தாய்மொழியிலேயே பேசிட வேண்டும் என எல்லோரையும் வேண்டிக் கொள்கிறேன்.
௨} எமது பெயர்களை எழுதும் போது நல்ல தமிழ் எழுத்துகள் இருக்க ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். எ.கா: எம், என், எஸ். "முரளி மகாசிவம்" என்ற ஒரு பெயரை எடுத்துக் கொள்வோம். இதை எழுதும் போது எம்.மகாசிவம் என எழுதுகிறோம். இது தேவை தானா?  மு.மகாசிவம் என எழுதுவதே சரியானது. அது மட்டுமல்ல, ஆங்கிலத்தில் முரளியென்றாலும், மாதவன் என்றாலும் மூசா என்றாலும் மகேசன்  மோகனன் என்றாலும், எல்லாவற்றிற்கும் ‘எம்’ தான். ஆனால் எமது அருமைத் தமிழில் ஒவ்வொரு பெயருக்கும் சரியான எழுத்து இருக்கிறது. சிலர் ஒரு படி மேலே போய் ஆங்கில எழுத்தைத் தமது பெயருக்கு முன் எழுதுகிறார்கள். எ.கா: M.மகாசிவம். இதெல்லாம் தேவைதானா? 247 எழுத்துகள் கொண்ட தமிழ், 26 எழுத்துகளே கொண்ட ஆங்கிலத்தில் இருந்து எழுத்துகளைக் கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?

ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கடன் சொற்கள் இருப்பது வழக்கம். ஆனால், நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்க தேவையற்ற முறையில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தித் அருந்தமிழை அழித்துக் கொச்சை மொழியாக மாற்றுவது தான் பெருந்தவறு.

இதைப்பொறுத்தவரையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துத் தமிழைக் காக்குமாறு பணிவன்புடன் யாவரையும் வேண்டிக் கொள்கிறேன்:-
௧} தமிழர்கள் இருவர் பார்த்துக்கொள்ளும்போது போது தமிழில் உரையாட உறுதி பூணுங்கள்.
௨} நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள். காட்டாக: தாங்சுக்குப் பதிலாக நன்றி.
௩} நீங்கள் தமிழ் நாட்டுக்குப் போகும்போது தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் போன்றோரைச் பார்த்து தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுங்கள்.
௪} இந்தக் கட்டுரையைத் தமிழகத்தில் பல தமிழன்பர்களுக்கு அனுப்புங்கள்.
௫} தமிழார்வலர்கள், திரைப்பாடற் புலவர்கள், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் போன்ற தமிழன்பர்களைச் சந்தித்து இந்த விடயத்தில் ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்.

தமிழ் அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

தமிழா! தமிழா!, உன் உறக்கத்திலிருந்து விழித்திடு!
அமிழ்தினும் இனிய நமது மொழியைப் போற்றிடு!
ஆங்கிலமதில் கொண்ட மயக்கத்தை விட்டிடு!
பாங்குடைய நமது மொழியைக் காத்திடு!

மருத்துவக் கலாநிதி மகேசன் இராசநாதன்

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...