Monday, February 21, 2022

கருமை

கருமை

1977..

மாலை 4:10

அப்போது தான் மோர்க்கூழு பருகிவிட்டு தாத்தா மடியில் அமர்ந்திருந்தேன்.  தாத்தா உள்திண்ணையில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  எங்கள் எதிரே மச்சில் செல்லும் ஏணிப்படியின் வாசல் திண்டில் அப்பாமை பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.  நான் வாசலில் செல்வோரையும் அப்பாமையையும் மாறிமாறி பார்த்துகொண்டு புன்னகைத்தவாறே எதோ சொல்லிக்கொண்டிருந்தேன்.  என் உடலெல்லாம் ஒரே குட்டிக்யூரா வாசம். தாத்தா என் பின் தலையை அவ்வப்போது முத்தம் கொடுப்பதும் விரலால் நோண்டுவதுமாக இருந்தார்.  மாலை வெயிலில் தெருவெல்லாம் ஒரே மஞ்சளாக இருந்தது. 

4:15

அம்மா, கைகால்முகம் கழுவி தலைவாரி பவுடர் போட்டு போட்டுவைத்து கையில் வாரியலும் வாளியுமாக எங்ககளைக்கடந்து வாசற்திண்ணையை  நோக்கி சென்றார்.  அதேநேரத்தில்  மாலாக்காவும் கலாக்காவும் என் வீட்டுக்குள் துள்ளியவாறே வந்தனர்.  கலாக்கா கையில் ஒரு குழந்தை இருந்தது.  அக்குழந்தை உள்ளாடை மட்டும் தான் போட்டுக்கொண்டிருந்தது.  எனக்கு சிரிப்பாக வந்தது. மாலாக்கா, தாத்தா மடியிலிருந்து என்னை இருகைகளாலும் தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.  "பார்த்து தூக்குடீ கொழந்தைய கீழ போட்டுராதே" என அப்பாமை பதறினார்.  மதியான வெயில்பட்டுக் காய்ந்த வாசற் தரையில் அம்மா தண்ணீர் தெளித்ததால் ஏற்பட்ட மண் மணம் நாசிக்குள் நுழைந்து புல்லரிப்பை உண்டாக்கியது.  அப்போதுதான் அந்தைப் பார்த்தேன்.  எனக்கு உள்ளாடை கூட போட்டுவிட்டிருக்கவில்லை .  ரொம்ப வெட்கமாகிவிட்டது.  மாலாக்காவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான்.  என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு "ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." என்ற திரைப்படப் பாடலை பாடிக்கொண்டிருந்தாள்.  வாசலில் அம்மா கோலம் போடுவதை பார்த்துக்கொண்டிருந்த கலாக்கா, பாட்டைக்கேட்டு உள்திண்ணைக்கு வந்து அவளும் பாட ஆரம்பித்தாள்.  கலாக்கா கையில் இருந்த குழந்தையும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.  தாத்தாவுக்கு ஏனோ அக்காக்கள் பாடுவது பிடிக்கவில்லை போல, "போங்க போங்க வெளில போய் விளையாடுங்க" என்றார்.  

4:30

நாங்கள் எல்லாரும் பக்கத்து வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தோம்.  கலாக்கா கிழக்கே அற்றம் எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். மாலாக்கா இன்னும் பாடிக்கொண்டுதான் இருந்தாள்.  "ஓ.. ஒங்கம்மா திருசுட்டிப் பொட்டு வெக்ய மறந்துட்டாங்களே.." என என்னைப்பார்த்து கூறியவாறே தன் கண்களில் இட்டிருந்த கருமையை சுண்டு விரலால் சிறிது எடுத்து என் இடது கன்னத்தில் பொட்டு வைத்தாள். மாலாக்கா மீது பாண்ட்சு வாசம் வீசிற்று, தலைமுடிக்கு கருவேப்பிலை காய்ச்சிய வெளிச்செண்ணெய் தடவி படிய வாரி, சிகப்புப் பூபோட்ட பாவாடையேம் பச்சை நிறச் சட்டையும் அணிந்திருந்தாள்.  ஆனால் கலாக்கா பச்சை நிற பாவாடையும் வெள்ளைநிற சட்டையும் தலையில் பச்சை நிற இரிப்பனுடன் சற்று கலைந்த தலமுடியுடன் பள்ளிச்சீருடையிலேயே இருந்தாள் .

"மாலா..  பாருடீ பாருடீ கிழக்கே அத்தம் பாருடீ" என கலாக்கா எதையோ கையை நீட்டி காண்பித்தாள்.  நான் உற்றுப்பார்த்தேன்.  அதற்குள் இருவரும் எழுந்துநின்று "யேஏஏஏ.." என கையசைக்கலாயினர்.  தூரத்தில் மாட்டுக் குளத்தையும் தாண்டி தொடரி வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது தெளிவாகத் தேரிந்தது. மாலாக்கா தன்னால் இயன்ற அளவு எனானைத் தூக்கி தன் கையை நீட்டி தொடரியைக் காண்பித்தாளா. நானும் கையை அசைத்தேன். எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. இரு அக்காக்களும் "..அஞ்சு.. ஆறு.. ஏழு.." என தொடரிப் பெட்டிகளை எண்ணிக்கொண்டிருந்தனர்.  "கொழந்தைங்கள கீழ பொட்டுராதங்கடீ" என எதிர் வீட்டு பரவத மாமி கூறுவது கேட்டது.  தொடரி போன பின்பு "பதிணொண்ணு பெட்டிடீ..", "போடி.. பதிமூணு பெட்டி இருந்ததுடீ.." என இருவரும் பொய்ச்சண்டை பொட்டுக்கொண்டனர்..

4:45

"டீ கலா!, வாடி உள்ள, வந்ததும் வராத்ததுமா கொழந்தைய கொஞ்சிண்டிருக்கே" என்று  கையில் மாவரைத்த கையோடு காமாட்சி மாமி அவர்வீட்டு திண்ணை கழிக்கொலை பிடித்தவாறே சொன்னார்.  "உள்ளவந்து முகம் கழுவி பள்ளிச் சீருடைய மாத்துடி",  "காப்பி கலந்து வெச்சேனே குடிச்சியா".. என வரிசையாக கலாக்காவைப்பார்த்து அடுக்கிக்கொண்டேயிருதார் காமாட்சி மாமி.  "போடீ போ, அம்மாவோட குரல் மாறறதுக்குள்ள போயிரு" என்றாள் மாலாக்கா.  கலாக்கா எழுந்து அவர் வீட்டு வாசலுக்கு போகையில் "மொதல்ல கொழந்தைய அவவீட்ல கொண்டு கொடு. அவாள்ளாம் இன்னிக்கி சாயங்காலம் சுசீந்திரம் கோவிலுக்கு போகணும்னு சொல்லிண்டிருந்தா.. போ.. போ.." என்றாள் காமாட்சி மாமி.

5:00

பெருமாள் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது,  அம்மா வாசலில் வந்து எட்டிப்பார்த்தார். பின்பு திரும்பி எங்களைப்பார்த்து 

"என்ன பண்ணறான், கலா எங்கே?" . 

"தேமேன்னு தான் இருக்கான். பராக்கு பாத்துட்டு இருக்கன் மாமி. கலா பள்ளிச் சீருடை மாத்த போயிருக்கா".  

"அந்தக்கொழந்தை?".  

"சித்ராவோட அம்மாவும் பாட்டியும் சுசீந்திரம் கோவிலுக்கு போவாங்களாம்.  அவளக் கொண்டு விட்டுட்டா"

சிறிது தொலைவில் ஒரு சில அண்ணாக்கள் நிக்கர் அணிந்துகொண்டு பம்பரம் விளையாட ஆரம்பித்தனர்.  அப்போது இன்னொரு அக்கா அங்கு வந்து மாலாக்கவிடம் ஏதோ  பேசிக்கொண்டிருந்தாள், எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அனால் அந்த அக்க எங்களுக்கு முன்னால் நிற்பதால் எனக்கு பராக்கு பார்க்க முடியவில்லை.

அந்த நேரத்தில் "போங்கமா போங்க .. இங்கெல்லாம் நீங்க வரப்டாது.." என்று சத்தம் வரவே நாங்கள் எல்லாரும் கோவிலை நோக்கி திரும்பிப்பார்த்தோம்.  கோவில் பூசாரி கோவில் வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து சத்தம்போட்டு  சொல்லிக்கொண்டிருந்தார்.  அந்த பெண்ணின் கையிலும் ஒரு குழந்தை இருந்தது.

"என்ன சொன்னேள்.. யாரப்பாத்து கோவிலுக்குள்ள வரப்டாதுனு சொல்லறேள்".. என்று அந்த பெண் பெருங்குரலெடுத்து கத்தலானார்.

"பிராமணா யாரு சூத்தரா யாருனு வித்தியாசம் தெரியாம நீங்கள்ளாம் எதுக்கு  கோவில் குளிக்கறேள் .."

"கோவில் நடத்தற இலச்சணம் இப்பிடியாயிருந்ததுனா உள்ளருந்து பகவான் வெளிய ஒடீப்போயிருவார் "

"எங்காத்து புருசாளுக்கு மட்டும் இந்த விசயம் தெரிஞ்சிதுனா, ஒய், ஒம்ம நாக்கறுத்து ஊறுக்காய் போட்டுருவா ."

என்று சொல்லிவிட்டு விசும்பலானார், முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டார். பின்பு அப்படியே கோவில் வாசல் படியில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

நாங்கள்ளாம் சற்று பயத்துடனே பார்த்துக்கொண்டிருந்தோம்.  எல்லார் வீட்டு வாசலிலும் மக்கள் கூடிவிட்டனர்.  இன்னொரு அக்கா, மாலாக்காவைப்பார்த்து, "யாருடி அந்த மாமி. இதுக்கு முன்னாடி பாத்ததேயில்லையே".  என்னுடைய அம்மாவும் மாலாக்காவைப்பார்த்து அதே கேள்வியை கேட்டார்.  மாலாக்கா சிறிது யோசித்துவிட்டு, "அப்பா சொன்னார், பெரிய தெருவுல புதுசா யாரோ வந்துருக்கானு, அவாத்து மாமியா இருக்குமோ?, எனக்குந்தெரியல்ல மாமி" என்று உதட்டை பிதுக்கினாள்.  நானும் என் உதட்டை அதுமாதிரியே பிதுக்கி பார்த்துக்கொண்டேன்.

வெலவெலத்துப்போன பூசாரி, குரல் தாழ்த்தி, "மாமி மன்னிச்சிக்கோங்கோ.  ஒங்கள இதுக்கு முன்னாடி முன்னப்பின்ன பாத்ததில்ல"

"சொல்லறேன்னு தப்பா நெனச்சுக்காதேங்கோ, நீங்க கொஞ்சம் நெறம் மட்டா தெரியறதுனால பிராமணாள் இல்லையோனு நெனச்சுட்டேன், என்ன மன்னிச்சுக்கோங்கோ, என்ன மன்னிச்சுக்கோங்கோ" என்றார்.

மறுபடியும் எழுந்து நின்ற அந்த மாமி, ஆவேசமாய்,

"டேய், என்ன கறப்புங்கறையா.. ஆமாண்டா நான் கறப்பு தான்.. அதுக்காக கோவிலுக்கு வரும்போது ஒனக்காக பூணூல் எல்லாம் போட்டுண்டு வரமுடியாது, தெரிஞ்சுக்கோ"

"மாமீ, கொஞ்சம் மரியாதையா பேசுங்கோ, நான் ஒங்கள விட வயசுல பெரியவனாக்கும், இதுவும் கொவிலாக்கும், தெருவுல வேற எல்லாரும் பாக்கறா"

"ஒனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை. போம்மனாட்டிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல்லை"

"இது கோவில்னு நீ சொல்லித்தான் தெரியணம்னில்லை, எல்லாரும் பாக்கட்டுமே ஒன்னோட சந்தத்த"

"இப்போ போய் எங்காத்துக்காரர கூட்டிண்டு வரேன்.  அவர்ட்ட பேசிக்கோ. நன்னா கொடகொடயா குடுப்பார் வாங்கிக்கோ"

அதற்குள் அம்மங்கார் பகவதி மாமியும் இன்னும் சில மாமா மாமிகளும் கிடுகிடு என்று கொவிலுக்கருகில் சென்றுவிட்டார்கள்.  அம்மங்கார் மாமி, "கல்யாணி மாமி!, அவர் செஞ்சது மகா  தப்புத்தான், அவரும் மன்னிப்பு கேட்டுட்டார், நாங்களும் தெருக்காரா சார்பா மாப்பு கேட்டுக்கறோம். இனிமே இதுமாதிரி நடக்காது. 

பூசாரியைப்பார்த்து "என்ன ஓய், கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா"

கோவில் மாமாவின் முகம் கொவத்தாலும் அவமானத்தாலும் வியர்த்து சிவந்திருந்தது.

"வாங்கோ மாமி நாம எல்லாரும் கோவிலுக்கு போகலாம்", அழுது முகம் வீங்கியிருந்த கல்யாணி மாமியின் கண்களை துடைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றார் அம்மங்கார் பகவதி மாமி.

நான் மாலாக்காவின் கழுத்தை இறுக்க பிடித்துக்கொண்டிருந்தேன்.  பெரியதெரு கல்யாணி மாமி தன் வெண்கலக் குரலில் பூசாரியிடம் சண்டையிட்ட ஓசை என் காதுகளில் எதிரொலித்ததுக்கொண்டே இருந்தது.  மேலும், அம்மங்கார் பாகவதி மாமினா எனக்கு எப்பவுமே சற்று அச்சம் தான்.  வாட்டசாட்டமான உருவத்திலும் பதினெட்டு முழம் மடிசார் தமிழ்ப் புடவையிலுப் பெரிய மூக்குக்கண்ணாடியும் மூக்கின் இரு பக்கங்களிலும் இரு வைர மூக்குத்திகளுமாக எதிரே நிற்பவர்களை தன் உருட்டுப் பார்வையாலேயே வாயடைக்கச் செய்துவிடுவார்.

6:00

தீபாராதனை மணி கேட்டது, நாங்கள் எல்லாரும் கோவிலின் நேரே உடைந்து போயிருந்த தார்ச் சாலையில் போய் உம்மாச்சியை பார்த்தவாறே கும்பிட்டுக்கொண்டு நின்றோம்.

தீபாராதனை முடிந்ததும் மாலாக்கா என்னை அம்மாவிடம் கொடுத்துவிட்டாள், வீட்டுப்பாடங்கள் இருக்காம்.  அம்மா என்னை ஒக்கல்லேல தூக்கிக்கொண்டு வாசல் படியில் காலை தேய்த்தவாறே நடந்து சென்றபோது, கோவில் பக்கமாய் மீண்டும் திரும்பிப்பார்த்தேன்.  லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

கோவிலின் முன்னால்  தெருவுக்குள் வரும் இரு பெரும் படிகளின் மீது நின்றவாறே அப்பாமையும் காமாட்சி மாமியும் அம்மங்கார் பாகவதி மாமியுடன் எதோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர்.



No comments:

Post a Comment

அரங்கநாத எண்பா

இயற்றியது : ஆதிசங்கரர் தமிழாக்கம் : அடியேன்   பேரின்ப வடிவே பேரருள் வடிவே  பெருங் கதிர் ஒளிர்வு தரும் மறை சாறின் வடிவே  குளிர் நிலவின் வடிவே...