Monday, January 17, 2022

படிப்பாட்டு

படிப்பாட்டு



படிப்பாட்டு (சங்கதத்தில் "சோபான சங்கீதம்")  என்பது  ஒரு கேரளக் கலைவடிவமாகும்.  கேரளக் கோவில்களில் கருவறையின் வாயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் படிகளின் பக்கத்தில் நின்றுகொண்டு ஓதுவார் பாடுவதுபோலப் பாடிடும் இசைக்கலையாகும் இது.  இக்கலைஞர்கள் பாடிடும்போது இடக்கை (இடய்க்கா) எனும் உடுக்கை போன்றொரு தாளக்கருவியை கொட்டிக்கொண்டே பாடிடுவது வழக்கம். அதனால்தான் இதனை கொட்டிப்பாடி எனவும் அழைத்திடுவர்.  இவர்கள் பாடும் பாடல்கள் முற்காலத்தில் மலையாளத்திலும் தமிழிலும் இருந்தாலும் பிற்காலங்களில் சங்கதமும் மிகையாகச் சேர்க்கப்பட்டது.  தற்போது மலையாளத்திலும் சங்கதத்திலுமே பாடப்படுகிறது.  16-17ம் நூற்றாண்டுகளில் கட்டமைப்பு பெற்ற கருநாடக இசைவடிவமானது கேரத்திற்குள் வருவதற்கு முன்னர் உயிர்ப்பில் இருந்த இக்கலைவடிவத்தில், சில மெட்டமைப்புகள் (இராகம்) பயன்படுத்தப்பட்டது.  'சாமந்த மலகரி' எனப் பின்நாளில் அறியப்பட்ட இராகமே அவற்றுள் முதன்மையானது. படிப்பாடகர்களுக்கு தாளக்கருவியாக அமையும் இடக்கையானது தாளத்திற்காக மட்டுமல்லாது சுருதிக்காகவும் மெட்டுக்கள் இசைத்திடவும் பயன்படுகிறது.  கொட்டில் இருக்கும் இருபக்கத் தோலை இழுத்து கட்டப் பயன்பட்டிருக்கும் கயிற்றை விரல்களால் அழுத்திப்பற்றி இழுவையை கூட்டிக்குறைத்து, கட்டுப்படுத்தினால்  தோலின் இழுவையும் மாறும். அதனால் விரல்களின் அழுத்ததிற்கேற்ப கொட்டும்போது எழும் ஒலியின் அதிர்வும் மாறிடும்.  இந்த விரல் அழுத்தக்கட்டுப்பாட்டில் தேர்ச்சிபெற்றவர்களால் ஒரு முழுப்பாடலை இந்தத் தாளக்கருவியிலேயே இசைத்துவிடலாம்  (பார்க்க: 2வது காணொளியில் 8:20ல் இருந்து). சிவன் கோவில்களுக்கு உள்ளே மட்டும் முற்காலங்களில் இசைக்கப்பட்ட "சோபான சங்கீதம்", பின்நாட்களில் மற்ற வகை கோவில்களிலும் பாடத்தொடங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சாதியினயினருக்கே படிப்பாடல் பாடுவதற்கும் இடக்கை இசைப்பதற்கும் உரிமை இருந்த காலம் மாறி இன்று சாதிசமய வேறுபாடில்லாமல் கோவில்களுக்கு வெளியேயும் சமயம் சாராத மேடைகளிலும் தனியாகவும் பிற இசைகருவிகளுடனும் பல புதுமைகள் புகுத்தப்பட்டும்  இசைக்கப்படுகிறது.

கேட்க:-
௧) https://youtu.be/HO4NlWchpDQ
௨) https://youtu.be/kaozNblda54

Sunday, January 16, 2022

நாஞ்சில் நாட்டு உணவுகள்

"பதநீர் ஊற்றி செய்யப்படும் இன்சுவைப் பொங்கல்.. நாவை சப்பு கொட்ட வைக்கும் நாஞ்சில் நாட்டு உணவுப் பயணம்.." - அ.முத்துக்கிருஷ்ணன்

வங்கக்கடல், அரபிக்கடல், இந்துப்பெருங்கடல் ஆகிய இயற்கையின் பெரும் அலைகள் நாஞ்சில் நாட்டில் தான் ஒன்றிணைகிறது. ஞாலத்தின் மிக முக்கிய தளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பகுதி சங்ககாலத்தில் ஆய் நாட்டின் பகுதியாகவும், பின்னர் 17ம் நூற்றாண்டு வரை வேணாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும், அதன்பின்னர் திருவிதாங்கூர் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும், தற்போது தமிழ்நாட்டின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டமாகவும் திகழ்கிறது. நாஞ்சில் என்னும் சொல்லுக்கு ஏர்/கலப்பை என்று பொருள். ஆரல்வாய்மொழி நெருங்கி விட்டாலே தேங்காய் எண்ணெய் மணக்க தொடங்கிவிடும். தென்னை, பனை, வாழை, பரந்து விரிந்த நெல்வயல்கள் என திரும்பிய பக்கமெல்லாம் அடர் பச்சை நிறம் என இந்த நாஞ்சில் நாடு என்பது பொன் விளையும் நிலங்கள் கொண்டு, இயற்கையின் பெரும் கொடையான நில அமைப்பைக் கொண்டது. 

தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த படியாக நாஞ்சில் நாட்டில் நான்  உளுந்தின் வாசனையை, மீனின் மணத்தை, பதநீரின் அடர்குளுமையையும் முகர்ந்திருக்கிறேன். உளுந்தஞ்சோறும் மீனும் இந்த நிலத்தில் உழுது கிடக்கும் வேளான் தொழிலாளர்களின் உடல் வலுவை உறுதி செய்கிறது. உளுந்தங்காடி, உளுந்தங்களி, வெந்தயக்காடி, மரச்சீனிக்கிழங்குக் கறி என நாஞ்சில் நாட்டுச் சிற்றூர்ஙளின் உணவுகள் வியப்புக்குரியவை.

கேரளாவைப் போலவே நாகர்கோவில் பக்கம் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் பதிமுகம் உள்ளிட்ட பட்டைகள் வேர்கள் போட்ட சிவப்பு நிற நீரைத் தருவார்கள். சில வீடுகளில் தேன் கலந்த நீரையும் தருவது இங்கே வழக்கமாக உள்ளது. இங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மா மரம், ஐந்து அல்லது பத்து வாழை மரங்கள் நிற்கும்.   வீடுகளில் பெரிய சாடிகளில் மாம்பழத்தையும் வாழைப்பழங்களை வெட்டி தேனில் ஊற வைக்கும் வழக்கம் இங்கே உள்ளது.  சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு இதனைப் பரிமாறுவார்கள். 

பனை கூடுதலாக விளையும் நிலம் என்பதால் இங்கே கூழ்பதநீர், பயத்தம்கூழ் பதநீர், அண்டிப்பருப்புப் பதநீர், புளிப்பதநீர் எனப் பதநீரில் பல வகைகள் கிடைக்கும். பதநீர் ஊற்றிச் செய்யப்படுகிற இன்சுவைப் பொங்கலை நீங்கள் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டும். இந்த நிலம் முழுவதுமே 1960கள் வரை இனிப்பு என்றால் அது கருப்பட்டி தான்.  சைவ உணவின் செய்முறைகளில் நாஞ்சில் நாடு தேர்ச்சி பெற்றது. நாஞ்சில் நாட்டின் விருந்தில் வைக்கப்படும் பண்டங்கள் ஒவ்வொன்றும் தெளிவான தனித்த செய்முறைகள் கொண்டவை. புளிச்சேரி, எரிச்சேரி, ஓலன், தோரன், இஞ்சிக்கறி, அவியல், தீயல், கிச்சடி, இஞ்சிப் பச்சடி, உள்ளித்தீயல், இஞ்சிப்புளி, மிளகாய் பச்சடி, புளிக்கறி, பைனாப்பிள் புளிசேரி, புளி மிளகாய், வாழைக்காய்த் துவட்டல், சேனை வாழை எரிசேரி, கப்பா மசியல், சீமைச்சக்கை தொவரன், சீமைச்சக்கைத் தீயல், மரவள்ளிக்கிழங்குக் கூட்டு, நார்த்தங்காய்ப் பச்சடி, பச்சைச் சுண்டைக்காய் அவியல், மலபார் வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி,  சீமைச்சக்கை மசாலாக் கறி, பட்டாணி தேங்காய்ப்பால் கறி என இந்தப் பகுதியின் செய்முறைகள் குறித்து தனியே புத்தகம்தான் எழுத வேண்டும். மாங்காயில் பெரும் நிபுணர்கள் இவர்கள் என்பதால் இங்குள்ள மாம்பழக் காடி, மாம்பழப் புளிசேரி மிகுந்த சுவையாக இருக்கும். இங்கே மலைகளில் கிடக்கும் குடைக்காளானுக்கு அற்புதமாக ருசி உண்டு.

தமிழகம் முழுவதும் அவியல்போல் ஒன்றை நம் வீடுகளில் செய்தாலும் அதன் பிறப்பிடமான நாஞ்சில் நாட்டிற்குச் சென்று அதை சுவைத்தால் உள்ளத்தில் அமைதி பிறக்கும் உணர்வைப் பெறலாம். சேனை, வழுதலங்காய், புடலை, வாழைக்காய், பூசணிக்காய், தடியன்காய், வெள்ளரிக்காய், பலாக்கொட்டை, கேரட்டு, மாங்காய், முருங்கைக்காய் என்று அத்தனை காய்கறிகளையும் போட்டு தேங்காய் அரைத்து ஊற்றிய அவியலுக்கு ஈடு இணையில்லை.  முருங்கைக்காய் மாங்காய் அவியல், பாகற்காய் அவியல் கூடுதல் சிறப்பானவை, இதைச் சுவைக்கக் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். அவியல் தீயலில் நிபுணர்கள் இவர்கள் என இங்கே சாப்பிட்டதும் உணருவீர்கள். உளுந்தங்கஞ்சியும் சிறுபயறுக் கஞ்சியும் இங்குள்ள கிராமங்களின் முக்கிய உணவுகள், இவைகளுடன் தொடுகறியாக கானா சம்மந்தி, பொரிகடலை சம்மந்தி அரைத்து வைப்பார்கள். உழைக்கும் மக்கள் காடுகரைகளில் அமர்ந்து உண்ணும் உணவிது. இங்கு சம்பா நெல்லுச் சோறு போலவே மரவள்ளிக் கிழங்கும் முக்கிய உணவாக உள்ளது. அவித்த மரவள்ளிக்கிழங்கு அத்துடன் வெந்தயக் குழம்பு அல்லது மீன் குழம்பு வைத்து சாப்பிடுகிறார்கள்.

நேந்திரங்காய் என்கிற ஏத்தங்காய் இல்லாமல் இவர்களின் ஒரு நாள் என்பது நிறைவடையாது. நேந்திரங்காய் வற்றல், நேந்திரம்பழப் பாயாசம், பழம்பொறி, சர்க்கரை வரட்டி என பலவித அற்புதமான திண்பண்டங்கள் செய்கிறார்கள். வாழைக்காய் வறுவல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே நாகர்கோவிலில் அனைவரின் வீட்டிலும் சமையற் கட்டுக்கு அருகில் வீட்டின் கூரையில் இருந்து ஒரு வாழைத்தார் தொங்கும். அதே போல் நாகர்கோவிலில் ஒரு பெட்டிக்கடைக்கு நீங்கள் சென்றால் அங்கே குறைந்தபட்சம் 16 வகை வாழைத்தார்கள் தொங்கும். அதற்குக் குறைவான வகைகள் இருப்பின் அந்தக் கடையை யாரும் சீண்ட மாட்டார்கள்.  ஒரு வாழைப்பழக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் குமரி மாவட்டத்தில் மொத்தம் 15-16 வகையான வாழை இனங்கள் பயிரிடப்படுகின்றன என்றார் . அவை மட்டி, செம்மட்டி, பேயன், மொந்தன், இரசகதலி என்ற இரசுதாலி, துளுவன் என்ற பூவன், செந்துளுவன் என்ற செவ்வாழை, வெண்துளுவன் என்ற வெள்வாழை, நெய்த்துளுவன், மூன்று வகையான சிங்கன், மோரிசு என்ற பச்சை, பாளையங்கோடன், கற்பூரவல்லி, ஏத்தன் என்ற நேந்திரன், மலை வாழை, கடுவாழை என ஏராளமான வகைகள் எப்பொழுதும் இருக்கும்.

இங்குள்ள வீடுகளில் தேங்காய் தண்ணீரை சேமித்து வைப்பார்கள். அது புளித்து தென்னங்கள்ளாகவே மாறிவிடும், அதை ஊற்றி மாவை புளிக்க வைத்து சுடுகிற அப்பமும் அதன் மணமும் இதை எழுதும் போதே மூக்கைத் துளைக்கிறது. அப்பம்-கடலைக்கறி நாஞ்சில் நாடு, கேரளா முதல் இலங்கை வரை இந்த நிலங்களில் கோலோச்சும் உணவு. அப்பம் சாப்பிடும் போது அப்படியே முட்டை அப்பம், பாலாடையும் மறவாமல் கேட்டு வாங்குங்கள். அப்பம் போலவே பப்படமும் இல்லாமல் இங்கே எந்த விருந்து மேசையும் முழுமை அடையாது. நம்மூர் அப்பளம் நாஞ்சில் நாடு கேரளா பக்கம் செல்லும் போது சில வித்தியாசங்களுடன் பப்படம் என்று மாறிவிடுகிறது. கேரளாவில் கோழி பிரியாணிக்கும் அப்பளம் தருவார்கள் என்றால் நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள். அண்மையில் ஒரு வீட்டில் பப்படத்தை வைத்தே ஒரு தொடுகறி செய்திருந்தார்கள். பப்படத்தை பொரித்து எடுத்து அதை நொறுக்கி அதன் பின்னர் ஒரு செய்முறை, என்ன என்று கேட்டதற்கு பப்படம் துவரன் என்றார்கள். பப்படத்தில் இவர்கள் முனைவர் பட்டம் பெற்றுவிட்டார்கள் என்று மனதில் நினைத்தேன்.

என்ன ஆச்சு நாஞ்சில் நாட்டில் ஒரே சைவ வாடையாக இருக்கே என்ற உங்கள் கேள்வி எனக்கும் கேட்கிறது. மீனின்றி அமையாது உணவும் விருந்தும் என்பது நாஞ்சில் நாட்டில் எழுதப்படாத விதி. 2005ல் ஒரு திங்கள் முழுவதும் நாகர்கோவிலில் தங்கி இங்குள்ள கடற்கரைக் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுடன்  வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வேலையைச் செய்ய நான் ஒப்புக்கொண்டதற்கு மாணவர்களுடன் உரையாடுவதில் நான் விருப்பமாக இருந்தேன் என்பது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் மீனும், சிப்பியும், இறாலும் நண்டுகளும் தான். நகரங்களில் நான் வறுத்த மீனை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால் இங்கே குழம்பு மீனின் ருசியைத் தாண்ட முடியவில்லை. அதிலும் புளிமுளம், அவித்த கறி என்கிற இவர்களின் சிறப்பான செய்முறையை நீங்கள் ஒரு முறை சுவைக்க வேண்டும். அயிரை, சாலை, நெய்மேனி, குதிப்பு, பண்ணா, கொழுவுச்சாலை, கட்டா, விலைமீன், பாறை, சீலா என்கிற மீன்கள் பெயர்கள் எல்லாம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் போன்றவை. ஒரு நாளில் நூறு முறையாவது இந்த மீன்கள் பெயர்களை ஒரு மந்திரம் போல் சொல்லாமல் அதைப் பற்றி பேசாமல் இவர்களின் ஞாயிறு கடலுக்குள் செல்வதில்லை.

சிப்பி-மீன்களின் காலம் என்பது நவம்பர் முதல் செனவரி வரையானது.  இந்த காலம் தொடங்கி விட்டால் கடலோரக் கிராமங்களில் மகிழ்ச்சியின் அலைகள் கரைபுரண்டோடும். குளச்சல், கோடிமுனை, முட்டம், குறும்பனையில் கிடைக்கும் சிப்பிகள் பிரமாதமான சுவையுடன் இருக்கும். இரால் தோரன், இரால் முருங்கை இலை பொறியல், இரால் பிரியாணி, சிப்பி மீன் தோரன், நாஞ்சில் நண்டு குழம்புகள் என இங்கே கிடைக்கும் அசைவங்களும் தனித்த சுவை கொண்டவை. இதை எல்லாம் சமைக்கும் போது அவியலை விட்டு விடுவோமா என்ன இரால் மாங்காய் அவியல் என்னை இன்றும் நாகர்கோவில் நோக்கி அழைத்துக் கொண்டு தான் இருக்கிறது.  அதே போல் நாகர்கோவில் என்றாலே வாத்துக்கறி தான். இங்கே அசைவ உணவகங்களில் வாத்துக் கறி பலவித செய்முறைகளில் கிடைக்கும். நான் முதல் முதலில் 1994ல் நாகர்கோவில் சென்ற போது சாப்பிட்ட வாத்து முட்டை-தோசை இன்னும் நினைவில் உள்ளது. பெரிய ஊத்தாப்பம் அளவில் இருந்த அந்த முட்டை-தோசையிலேயே வயிறு நிறைந்தது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக  மாட்டிறைச்சியில் மிகையான செய்முறைகள் கிடைப்பது நாகர்கோவில் பகுதியில் தான்.  மாட்டுக்கறி வறுவல், இறைச்சிப் புட்டு, பொதி பரோட்டா, கார மாட்டுக்கறி, மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி கிளி பரோட்டா, உலர்த்திய மாட்டுக்கறி என செய்முறைகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆட்டிறைச்சியை சில இடங்களில் இங்கு சாப்பிட்டிருக்கிறேன், ஆனால் இந்தப் பகுதி மாட்டிறைச்சியின் செய்முறைகளுக்குத் தான் பெயர் பெற்றது. 

கன்னியாகுமரியும் நாகர்கோவிலும் தான் குமரி நாட்டில் முக்கிய நகரங்கள். கன்னியாகுமரி ஒரு சுற்றுலா நகரமாகவே முழுமையாக உருமாறி விட்டது. நாகர்கோவில் தான் வர்த்தக நகரம் என்பதால் இங்கே ஏராளமான உணவகங்கள் உள்ளன. சைவ உணவு என்றால் ஆரிய பவன், கெளரி சங்கர், மணி பவன் என்று இந்த உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். அசைவம் என்றால் எனது தேர்வு அழகர் செட்டிநாடு, மனோ ஹோட்டல், பிரபு ஹோட்டல், உஸ்தாத்ஸ், பானு சிக்கன் கார்னர், ஹோட்டல் விஜெய்ந்தா, கடப்புரம் ரெஸ்டாரண்ட், பிரண்ட்ஸ் பரோட்டா, ராயல் செப் பேமிலி ரெஸ்டாரண்ட் ஆகியவை. பாயாசம்  இல்லாமல் நாஞ்சில் நாட்டு விருந்து முடிவடையாது.  

நேந்திரம்பழப் பாயாசம்,  பலாப்பழம் பருப்புப் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், அடை பிரதமன், கருப்பட்டியில் செய்த பாயாசம், தினையரிசி பாயாசம், அவல் பாயாசம், இளநீர் பாயாசம் என பாயாசத்திலும் இவர்கள் பெரும் நிபுணர்கள்.  என் அனுபவத்தில் நாஞ்சில் நாட்டின் ஆக சுவையான உணவுகள் இங்குள்ள உணவகங்களின் உணவுப்  பட்டியலில் இடம்பெறுவதில்லை. நாஞ்சில் நாட்டின் உணவு வகைகள் ஏராளம் என்பதால் அதன் நுட்பங்கள் வீடுகளில் தான் செய்யப்படுகிறது. நாஞ்சில் நாட்டவர்களில் விருந்தோம்பலில் மகிழ வேண்டும் என்றால் ஒரு ஓணம் பண்டிக்கைக்கு நாஞ்சில் நாடு நோக்கிச் செல்லுங்கள்.

Credit: ABP நாடு

(வாட்சாப்பில் பகிர்வாக வந்த கட்டுரை)

Thursday, January 13, 2022

அவசரத் தொடர்பு எண்கள் (இந்தியா)

அவசரத் தொடர்பு எண்கள்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படும் இவ்வளவு எண்களை  நினைவில் வைத்துக்கொள்வது சற்று கடினம்தான்! 
1} நாடுதழுவிய அவசர எண் ==> 112 [பல நாடுகளிலும் பயன்படுகிறது]
1.1} மற்ற நாடுகளின் அவசர எண்கள் ==> 15, 17, 000, 100, 110, 111, 113, 117, 119, 191, 911, 999
2} காவல் ==> 100
2.1} நடுவண் கண்காணிப்பு ==> 1800-110-180 
3} தீ ==> 101
4} பெண்களுக்கு ==> 181, 1091, 1094
5} குழந்தைகளுக்கு ==> 1098, 1094
6} முதியவர்களுக்கு ==> 1091, 1291
7} பயணிகளுக்கு ==> 1363, 1913,  1800-111-363, 28460285, 25368538(தநா)
8} மருத்துவம்:
8.1} ஊர்தி ==> 202
8.2} சேவை ==> 108 (தநா + அசா,அபி,இரா,உகா,உபி,கரு,குச,கோ,மபி,மேகா)
8.3} வானூர்தி ==> 9540161344
8.4} எயிட்சு ==> 1097
8.5} உள்ளச்சோர்வு/தற்கொலை-எண்ணம் ==> 104, 8526565656
8.6} கொரோனா ==> 1075, 011-23978046, 044-29510500, 044-28593990 
8.7} குருதி வங்கி ==> 1910 
9} சாலை:
9.1} போக்குவரத்துக் காவல் ==> 103
9.2} விபத்து ==> 1073, 1033
10} தொடரி:
10.1} தகவல் ==> 139 [குறுஞ்செய்தி: SEAT <PNR#> <இருக்கை#> <உங்கள்-புகார்>] 
10.2} காவல் ==> 1322, 1512, 9962500500
10.3} விபத்து ==> 1072
11} பேரிடர் ==> 104, 1078, 011-26701728, 108, 1070, 1077, 9445869848(வாட்சாப்பு)
11.1} நிலநடுக்கம்/வெள்ளம் ==> 011-24363260 , 9711077372
12} எரிவளிக் கசிவு ==> 1716, 1906
13} கடலோரப் பாதுகாப்பு(தநா) ==> 1093
14} கல்விக்கூடம்:
14.1} தகவல் ==> 14417
14.2} பகடிவதை ==> 1800-1805-522
15} கணினி/கைபேசி/இணையம் வாயிலான (பண/பாலியல்) மோசடி/குற்றம் ==> 1930, 155620
16} சென்னை மாநகராட்சி:
16.1} புகார் ==> 1913
17} ஆதார் அட்டடை ==> 1800-300-1947
18} ஊழல் புகார் ==> 1800-222-021
19} கடவு அட்டை ==> 1800-2581-800
20} பான் அட்டை ==> 1800-180-1961
21} வருமான வரி:
21.1} பொது ==> 1800-4252-229
21.2} இணையப் பதிவு ==> 1800-3070-0025
21.3} வரி பதிவு ==> 1800-102-3738

Tuesday, January 11, 2022

கும்பாரி

கும்பாரி

குமரி மாவட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல் கும்பாரி.  

எனக்கு இரிக்யுவ கும்பாரிகள் பல தினுசு பாத்துக்கங்க.  அவனுவ ஒவ்வொருத்தன்டயும் நாம ஒவ்வொருமாரி பழகுவேம்.  அவனுவ தினுசுதினுசா இரிக்யதுக்கு, நாம அவனுவள்ட்ட பழகுற விதம்தான் காரணமோனு ஒரு ச்சந்தேகமும் எனக்குண்டு, கியாட்டியேளா! 

  • ஒருத்தன்ட்ட பணிவாப் பழகுவோம்.
  • இன்னொருத்தன்ட்ட நளி அடிச்சிட்டே இருப்போம். அவனும் போறவர ஒருத்தனையும் ஒருத்தியையும் விடமாட்டான்.. அத்தனபேரையும் பத்தி நமட்ட நமக்குமட்டும் கேக்கறமாரி கிழிகிழினு கிழிப்பான்..
  • செல கும்பாரிகள்ட்ட ஒக்காந்து ஒலகம் இடிஞ்சிவிழற விசயமெல்லாம் பியாசுவோம்.
  • இன்னொரு கும்பாரிட்ட எப்ப பேசினாலும் ஒரே சிரிப்புதான், கியாட்டீயளா.. சிரிச்சிச்சிரிச்சி நம்ம வயிறெல்லாம் வெந்துபோவும்..
  • இன்னொருந்தன்ட்ட எப்ப பியாசினாலும் ஒரே பொலப்பம். எதையாவது பத்தி பொலம்பித்தள்ளுவான்..  நாமளும் அத பொறுமையா கியேட்டிட்ருப்போம்..
  • செல கும்பாரிட்ட எதப்பேசினாலும் சுகிசிவௌம் மாரி ஒரே அறிவுரைகள பொழிச்சு தள்ளுவான்... இதச்செயாத அதச்செய்யாத அத அப்டி தின்னா கியான்சர் வரும் எயிட்சு வரும்ணிட்டு  அறிவுரகள திருப்பரப்பு அருவிமாரி கொட்டுவான்..

இந்த கும்பாரிகள் ஒவ்வொருத்தனும் ஒரு செங்கல் மாரியாக்கும்.  அவனுவள நமக்கேத்த விதத்ல ஒழுங்கா அடுக்கிவெச்சு சாந்து பூசினா நல்ல அழகான வீடு கெடைக்கும்.  அதுல நாம மகிழ்ச்சியா வாழலாம்..

நம்ம உடலும் உள்ளமும் நல்லமுறைல இரிக்யணுன்னா நமக்கு நெறைய கும்பாரிகளோட பழக்கம் வியாணுன்னி கிடாட்டர்க சொல்லுவாவ, கியேட்டீயளா..  ஒருத்தைன் எத்தன கும்பாரிகளோடத் ஊர்சுத்தித் திரியறானோ, அவனுக்கு கவலையும் இருக்காது ஒரு மயிரும் இருக்காது, அதுமாரி அவனுக்கு மூள சம்மந்தமா எந்த பிரச்சினையும் வராதுணி சொல்லுவாவியளே..

கும்பாரிகளேட சகவாசம் ஒங்களுக்க வயச ஒரு நுப்பது கொறச்சுருமாம்.. ஏதாவது நோயி வந்தாலும் அதோர தீவிரம் ஒரு ஐம்பது விழுக்காடு கொறவாத்தான் இருக்குமாம்.. 

ஒங்க வாழ்கைலயும் ஒங்களுக்கு நெறய கும்பாரிகளச் சேத்துக்கங்க..  அது சம்பாதிச்சி சேத்துவெக்யும் சொத்தவிடப் பெரிசாக்கும், கியேட்டீயளா...




Friday, January 7, 2022

உங்கள் நாடு பற்றி என்ன தெரியும்?

உங்கள் நாட்டைப் பற்றி கீழுள்ளவற்றிலிருந்து ஓர் ஐந்து கேள்விகளுக்காவது சரியான விடை உங்களுக்குத் தெரியுமா...

௧} உங்கள் நாட்டின் இன்றைய மக்கள் தொகை என்ன?

௨} அது 2050ம் ஆண்டில் என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?

௩} உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காடு மக்கள், தங்களுக்கே முழு உரிமைகொண்ட வீட்டில் வாழ்கிறார்கள்? 

௪} உங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)  மக்களின் உடல்நலத்துக்காக எத்தனை விழுக்காடு  செலவிடப்படுகிறது?

௫} உங்கள் நாட்டின் மொத்தத் தனியாள் சொத்துகளில் எத்தனை விழுக்காடு,  செல்வத்தில் கடைநிலையில் உள்ள 70% மக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது? 

௬} உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காடினர் சட்டப்படி சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர் ?

௭} 'திருமணத்துக்கு முன்பு  உடலுறவு வைத்துக் கொள்வது' பற்றி கணிப்பெடுத்தால், உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காட்டினர் அதனை அறமற்ற செயல் என்று கருதுவார்கள், என கணிக்கின்றீர்கள்? 

௮} அதுபோல, 'கருக்கலைப்பு ஓர் அறமற்ற செயல்' என்று  உங்கள் நாட்டின் எத்தனை விழுக்காட்டினர் கருதுவார்கள் என நீங்கள் கணிக்கின்றீர்கள்? 

௯} அதுபோல, 'ஒருபாற் சேர்க்கை தவறானது' என்று  உங்கள் நாட்டின் எத்தனை விழுக்காட்டினர் கருதுவார்கள் என நீங்கள் கணிக்கின்றீர்கள்?  

கூகிளையோ வேறு எந்தத் தரவுகளையும் தேடாமல் உங்களுக்கு நினைவில் இருப்பதை மட்டும் எழுதவும்.

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்த பின்னால் கூகிளில் தேடி உங்கள் விடைக்கும் சரியான விடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கணிக்கவும். அதுதான் உங்கள் அறியாமை அளவீடு.


இஞ்சேரா

சிலபல ஆண்டுகளுக்கு முன் பணி நிமித்தமாக சான்-பிரான்சிசுக்கோவுக்கு  சென்றிருந்தபொது,  அங்குள்ள ஒரு "எரித்திரியா" நாட்டு உணவகத்தில் "இஞ்சேரா" எனும் ஆப்பம் போன்றொரு உணவு கிடைக்கும் என்றும் அது மிகவும் சுவையாக இருக்குமேன்ரும் எனது அத்தையின் மகன் சொன்னான்.  அவன் கூறிய விளக்கத்திலிருந்தே என் நாக்கில் ஒரு சிற்றாறு ஓட ஆரம்பித்துவிட்டது.

ஞாயிறானது பகல் முழுதும் அனலொளியை உமிழ்ந்துவிட்டு மாலையில் ஊர்முழுக்க மஞ்சள் வெயில் பரப்பியிருந்த வேளையில் மிகவும்  செங்குத்தான சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த அந்த சிறிய  எரித்திரிய உணவகத்துக்குச் சென்றிருந்தோம். அது சாயலில் நம் ஊரிலுள்ள ஆந்திரா உணவகம் போன்றொரு தோற்றத்திலேயே இருந்தது.   

கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில்  இருந்து  பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சண்டையிட்டுப் பிரிந்து விடுதலை அடைந்த சிறிய நாடு எரித்திரியா.  என்றாலும் எத்தியோப்பியா, சோமாலியா, எரித்திரியா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட  ஒரேமாதிரியான பண்பாடு தான் புழக்கத்தில் உள்ளது, உணவு முறை உட்பட.  அப்படி ஒரு உணவு தான் இந்த "இஞ்சேரா".

மெலிந்த உடல்வாக்கு உள்ள எரித்திரியக்  கறுப்பினத்தவர்கள்தான் அந்த உணவகத்தில் முதலாளியாகவும் வேலையாட்களாகவும் இருந்தனர். எதோ ஒரு புரியாத ஆபிரிக்க மொழி நாட்டுப்புற  பாடலும் மெல்லிதாக ஒலிக்கவிட்டிருந்தார்கள்.

"இஞ்சேரா"வுக்கு வருவோம்.  நம்மில் எத்தனைபேருக்கு இது பழக்கப்பட்ட உணவு என தெரியவில்லை.  எனக்கு அது முதல் அனுபவம் என்பதால், மேலும் எழுதுகிறேன்.  டேப்(teff) எனும் தினை போன்றொரு ஆபிரிக்கச் சிறுகூலத்தின் மாவிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.  ஆப்பமாவு செய்வதுபோல் ஓரிரு நாட்கள் முன்பே தண்ணீரில் நன்கு கரைத்து புளிக்கும் வரை ஊறவைத்த   டேப் மாவுக் கரைசலை மிகப்பெரிய சுடும்  தோசைக்கல்லில் ஊற்றி மூடிவைத்து  (ஆப்பம் செய்வது போலவே)  இஞ்சேரா வெந்தவுடன் அதனை சுருட்டி எடுத்து பெரிய தட்டத்தில் பரிமாறி உங்களுக்கு பிடித்தமான எந்த கூட்டு/கறிகளுடனும் சேர்த்து வாயில் போட்டால்,  அமுதத்தின் சுவையும் இதுதானோ என எண்ணத்தொன்றும்.

சுருக்கத்தில், நம்ம ஊர் தோசை, ஆப்பம் போன்ற ஒரு உணவு.  ஆனால் நம் அரிசி உளுந்து கோதுமை போன்ற சுவை இல்லாமல் ஊறவைத்து புளிக்கவைக்கப்பட்ட டேப் கலக்கலான ஒரு சுவையை இஞ்சேராவிற்கு  கொடுக்கிறது.

அதனால் ஞெலுவர்களே,  ஏதோ ஒரு பேரூரில் எத்தியோப்பியா, சோமாலியா, எரித்திரியா போன்ற எந்த ஒரு நாட்டின் உணவகத்தை நீங்கள் காண நேர்ந்தால்  அங்கு "இஞ்சேரா" கிடைக்குமானால் சுவைக்காமல் வந்துவிடாதீர்கள்.

  

'ஞ' பழக்கத்திலாக்குவோம்

'ஞ' பழக்கத்திலாக்குவோம்

ஞஞ்ஞை - போதை; மயக்கம்; மையல்; உளத்தடுமாற்றம் - "நங்கையைக்கண்டதும் ஞஞ்ஞையடைந்தேன்"

ஞண்டு - நண்டு

ஞப்தி° - அறிவு

ஞமலி; ஞாளி; ஞெள்ளை - நாய்

ஞமன்° - எமன், தராசு

ஞயம் - நயம்

ஞரல்[வு] - முழக்கம்; சங்கொலி, இனிமை, நயம்

ஞ[ல]வல் - மின்மினிப்பூச்சி

ஞறா, ஞறு - அகவல் ஒலி

ஞாங்கர் - பக்கம், கரை முன், வேல், மேல் இடம், இனி, அங்கு

ஞாஞ்சில் - கலப்பை, மதில் உறுப்பு

ஞாட்பு - போர்; வலிமை; கூட்டம்; படை

ஞாத்தல் - பொருத்துதல்; கட்டுதல்

ஞாதா° - அறிகிறவன்

ஞாதி° - பங்காளி; சுற்றம்

ஞாதுரு° = அறிகிறவன், அறிவு

ஞாண் - கயிறு, வில், நாண்

ஞாபகம்° - நினைவு

ஞாபதம்° - போதித்தல்

ஞாய் - தாய்

ஞாயில் - கோட்டைச்சுவர் மீது இருக்கும் வீரர்கள் மறைந்திருந்து அம்புகளை/குண்டுகளை ஏவும் ஏவறை.

ஞாயிறு - கதிரவன் - சூரியன் எனக்கூறுவதற்குப் பதிலாக ஞாயிறு எனக் கூறிப்பழகலாம்.

ஞாலம் - பார்; புவி; உலகம்

ஞாலுதல் - சாய்தல், முழங்கல், தொங்குதல்

ஞாழ் = யாழ்

ஞாழல் - குங்குமமரம், வைரம், கோங்கு மரம், புலி நகக் கொன்றை

ஞாளம் = தண்டு

ஞாளி = கள், நாய்

ஞாற்சி, ஞாற்று - தொங்கல்; தொங்குகை; தொங்கியநிலை - "என் மடிக்கணினி தீடீரென்று ஞாற்சிவிட்டது" - ஞால்: தொங்கு

ஞாறுதல் - தோன்றுதல், மணம் வீசுதல்

ஞான்று - பொழுது; நாள். 

ஞான்றை - காலம்

ஞிமிர் - (வண்டு எழுப்பும்) ஒலி

ஞிமிறு - வண்டினம்; தேனி

ஞெகிழ்தல் - கழல்தல்; தளர்தல்; அலைதல்; மலர்தல்; உருகுதல்; இளகுதல்

ஞெகிழம் - சிலம்பு

ஞெகிழி - பிலாசுடிக்; சிலம்பு, சிலம்பொலி; தீப்பந்தம்; கொள்ளிக்கட்டை; தீ; விறகு

ஞெண்டு - நண்டு

ஞெண்டுகம் - [பெரு]வாகை மரம்

ஞெண்டுதல் - கிண்டுதல்

ஞெமலி - ஞாயிறிலிருந்து 79 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இலியோ விண்மீன் குழாமுள் பளிச்சென ஒளிரும் மகம்/இரெகுலுசு விண்மீன்.

ஞெமல் - சருகு, அலைந்து திரி, உலாவு

ஞெமி[டு], ஞமு - கசக்கு; நெரி; நெருக்கு; ஒடி; அழுத்து; அமிழ்த்து; அழுந்து; அமுக்கு; வருத்து

ஞெமர்தல் - பரத்தல்

ஞெமலுதல் - திரிதல், அலைதல், உலாவுதல்

ஞெமி - மறை

ஞெமிர்தல் - பரத்தல், நிறைதல், தங்குதல், முற்றுதல்

ஞெமிர்த்தல் - ஒடித்தல், முறிதல்

ஞெமுங்குதல் - அமுங்குதல்

ஞெமை - மரவகை

ஞெப்தி° - நினைவு

ஞெரல் - விரைவு, ஒலி

ஞெரேலெனல் - வேகக்குறிப்பு, அச்சக்குறிப்பு, ஒலிக்குறிப்பு, தண்மைக்குறிப்பு

ஞெரி - பழ ஓடு, பானை ஓடு, முறிந்த துண்டு

ஞெலிதல் - கடைதல்; குடைதல்; தீக்கடைதல்; நெருப்பைக் கிண்டுதல்; உரசுதல்

ஞெலுவல் - இறத்தல்

ஞெலுவர் - நண்பர்

ஞெள் - உடன்பாடு, பள்ளம், ஓட்டை, ஒலி, தெரு, சொர்வு, குற்றம், மேன்மை, விரைவு, மிகுதி, சண்டை

ஞெளிர் - (வயிறு போன்ற உடலின் உள்ளுப்புகளாலோ, கம்பி இசைக்கருவிகளிலோ எழும்) உள்ளொலி

ஞெளிர்தல்; ஞெறித்தல் - குரலை உயர்த்தி பேசுதல்

ஞேயம் - நட்பு

ஞொள்குதல்; ஞொள்கல்; ஞெரேலெனல் - தளர்தல்; மெலித்தல்; (வலு) குறைத்தல்; இளைத்தல்; சோம்புதல்; குலைதல்; அஞ்சுதல்; அஞ்சி நடுங்குதல்

மொழிமுதலாக 'ஞ' வரிசை எழுத்துகள் கொண்ட சொற்களை நாம் அன்றாடம் பயன்படுத்துவதே இல்லை எனலாம்.  மேலே பட்டியலிலுள்ள முப்பத்துமூன்று சொற்களில் உங்கள் உள்ளத்தை கவர்ந்தவைகளை குறித்துவைத்துக்கொண்டு ஞெலுவர்களிடமும் ஞாதிகளிடமும் ஞான்றுதோறும் தக்க தருணம் நோக்கி விளையாட்டாகவும் களிப்பாகவும் பயன்படுத்தி அறிமுகப்படுத்துங்கள். ஏதோ, நம்மால் முடிந்தது!!!

குறிப்பு: [°] இட்ட சொற்கள் வடமொழிச் சொற்களாக இருக்கலாம்



அரங்கநாத எண்பா

இயற்றியது : ஆதிசங்கரர் தமிழாக்கம் : அடியேன்   பேரின்ப வடிவே பேரருள் வடிவே  பெருங் கதிர் ஒளிர்வு தரும் மறை சாறின் வடிவே  குளிர் நிலவின் வடிவே...