Tuesday, February 22, 2022
ஒளியாடி நரம்பணு
Monday, February 14, 2022
கரிவண்டி
கரிவண்டி
1983ல் என் அத்தைமகள் கீதா அக்காவின் திருமணத்துக்காக முதன்முதலாக பாம்பே வரும்வழியில்தான் நிலக்கரியிலியங்கும் தொடரியுந்துகளை நிறைய பார்த்தேன்.. இவ்வகையான உந்துகளை எங்காவது பார்க்கும்போதெல்லாம் கூஊஊ.. கூஊஊஊ என கூச்சலிட்டுக்கோண்டே வந்தோம், நானும் எங்கள் கூடவே வந்த என் அத்தான் நாகுவும். பூனே மலை ஏற்றத்தில் இழுவிசைக்காக இரு கரியுந்துகளை தொடரியின் இரு முனைகளிலும் பூட்டியிருந்தார்கள். எனக்கும் நாகுவுக்கும் ஒரே மகிழ்ச்சி.. கம்பி சாளரத்தில் கன்னத்தை அழுத்தி முடிந்தவரை கரியந்தும் அதன் குபுகுபு புகையும் தெரிகிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தோம்.. எங்கள் இருவரின் முகத்திலும் ஒரே புகைக்கரி.. அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையே இல்லை... அதற்குமுன்பும் அதன்பிறகும் கரிவண்டியை நேரில் பார்க்கவில்லை.. ஏதொ ஒரு நிறுத்ததில் தண்டவாளம் அருகே கடந்த நிலக்கரிக்கட்டியை இறக்கி எடுத்தோம்.. யாரும் பார்க்கவில்லை.. கடப்பாவில் நின்றபோது தண்டவாளத்தினருகே குவிக்கப்பட்டுகிடந்த கடப்பா கற்களை எடுக்க இரண்டாவது முறையாக இறங்கியபோது எங்கள் இருவரையும் காணவில்லை எனத்தேடிவந்த அப்பா பார்த்துவிட்டார்.. இருவருக்கும் முதுகில் அடி வெளுத்துவிட்டார்...
Sunday, February 13, 2022
மொழி ஈனுமா?
மோழி ஈனுமா?
ஒரு மொழியியல் பார்வை.
தமிழும் பிற தென்னிந்திய மொழிகளும், தொலைவுறவு மொழிகளே. தாய்மகவுறவு கொண்டதல்ல.
தென்மொழிகளும் வடமொழிகளும் அடிப்படையில் எவ்வுறவும் கொண்டதல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று சொல் கடனாளிகள்.
தமிழ்தான் ஞாலத்து மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கூறுவதற்கும் சங்கதந்தான் ஞாலத்து மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கூறுவதற்கும் பெரிய வேறுபாடுகிடையாது. மொழியியலின் அடிப்படை அறியாது விடுத்திடும் கூற்று....
மொழி என்பது ஒரு பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சி இழை. அவ்வகையான தொடர்ச்சி இழைகளானவை, கிளை கொள்ளலாம், முற்றிலுமாக கவணிச் சிதறலாம், ஒன்றுக்கொன்று அருகாமையில் இணையாகப் பயணித்து ஒன்றுக்கொன்று கடனாளிகள் ஆகலாம், இரண்டறக்கலந்து ஓரிழை ஆகலாம், எண்ணுவொரற்று கருகிப்போகலாம், ஆர்வலர்களால் மீண்டும் உயிர்ப்பெறலாம்....... இந்தத் தொடர்ச்சியில் ஈனுறவு ஏற்படாது; மாறாக கிளையுறவும் ஒட்டுறவும் மட்டுமே உண்டு...
Saturday, February 5, 2022
நூலடை
நூலடை
"படீ கசப்சி பூக் லகி.. தோ மினிட்.." என்ற மேகி நூலடை விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.. "என்னடா இது, இதுகள் எதையோ புழுப்புழுவா எடுத்து திங்கறதுகள்" என கணபதி மாமா என்னிடம் கேட்டார். "சேமியா மாதிரி ஏதோ இருக்கு மாமா" என்று கீழுதட்டை பிதிக்கியவாறே சொன்னேன்.
கணபதி மாமா வீட்டுக்குள்ளே ஒரு சின்ன அம்மன் கோவில் இருந்தது. மாலைநேர இரண்டாம் பூசை முடித்து சூடம் காண்பித்து நடை சாத்திய பின்னர், அவர் தெரு குழந்தைகளுக்கு நெல் பொரி கொடுப்பார். அதுக்காகத்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன். மேலும் எங்கள் தெருவில் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய மூன்றாவது ஆள் கணபதி மாமா, வட்டிக்கடை வைத்திருந்தார். அது ஒரு டயனோரா கருப்பு வெள்ளை தொலைக்காட்ச்சிப் பெட்டி. புரியாத இந்தி மொழியில் ஒளிபரப்பிக் காண்பிக்கப்படும் கண்ட கருமாந்தரத்தையும் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த காலமது..மறுநாள் மதிய உணவு இடைவேளையில் நானும் இரமேசும் வேப்பமரத்தடியில் உணவு சம்படங்களோடு ஒதுங்கிக்கொண்டோம். சுற்றிலும் மஞ்சள் திறத்தில் வேப்பம் பழங்கள் குண்டுகுண்டாக அழகாக விழுந்துகிடந்தன. அவன் ஒருவழியாக பல்லால் கடித்து சம்படத்தை திறந்துகொண்டான். மேலே முட்டையூத்தப்பமும் அதற்கு கீழே நூலடையும் இருந்தன. என் சம்படம் எப்போதும்போல பக்கவாட்டில் ஒருசேர தட்டியவுடன் 'பொப்'பென்ற ஓசையுடன் திடந்துகொண்டது, தயிர்சாதமும் நெல்லிக்காய் ஊறுகாயும் அம்மா கொடுத்தனுப்பியிருந்தார்கள். நாங்கள் சாப்பிடலானோம். இரமேசின் அப்பாவும் அம்மாவும் வேறு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியில் உள்ளனர். என்னைப்போல அவனும் வீட்டிற்கு ஒரே பிள்ளையென்றாலும் பழக்கவழக்கத்தில் சற்று தெனாவட்டுத் தன்மையுடையவன். இரமேசின் வீடு எங்கள் பள்ளியின் பின்புறத்திலேயே இருந்தது. நான் பலமுறை அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அவனுக்கு தோழர்கள் பெரிதாக யாருமில்லை. வகுப்பிலும் பெரும்பாலும் என்னருகில் இருத்தப்பட்டதால், நான் தான் நெருங்கிய தோழன். அவன் வளர்த்துவரும் ஐந்தாறு மைனாக்களைப் பற்றியே எப்போழுதும் பேசுவான். அத்தனை மைனாக்களுக்கும் பில்லா, ரக்கா என இரசினி படப்பெயர்கள்.
"லே, இந்த மேகி எப்படி செய்வாங்கனு தெரியுமா?" என ஓர் ஆர்வத்தில் அவனிடம் கேட்டேன். "எனக்குத் தெரியாது மக்கா, அம்மா தான் இத பண்ணிட்டு வேகமா பள்ளிக்கூடத்துக்கு போயிட்டாங்க, அப்பா தான் எனக்கு சம்படத்துல எடுத்து வச்சார். நான் தான் எங்கப்பாட்ட ஒரு முட்டை-ஊத்தப்பம் போட்டுத்தரச்சொன்னேன்" என்று சொன்னவாறே "லே, ஓங்கீட்ல ஒங்கப்பா சமைப்பாரா?" என பரிதாபமாகக் கேட்டான். நான் விடவில்லை. "மேகி எந்த கடைல மக்கா கெடைக்கும்?" எனக்கேட்டேன். நாராயணன் கடைலயும் கணேசு கடைலயும் பார்த்திராத நினைவு. "அதுவா, வீட்டா மார்ட்னு கொளத்து பேருந்துநிலையத்துக்கு மேக்கால, அதாம்மக்கா பூங்காவுக்க பக்கமா அம்பாசிடரெல்லாம் வரிசையா நிக்குமே, அதுக்கு எதிரேதான் இந்த கடை இருக்கு. அங்கன இருந்துதான் அம்மா பள்ளிக்கூடம் விட்டு வரும்போது வாகிட்டு வரும்" என்றான்
டாண்.. டாண்.. டாண்.. நாளிறுதி மும்மணி அடித்தவுடன் சோல்னா பையை தலையில் மாட்டிக்கொண்டு 7Fஐ நோக்கி ஓடினேன். மூக்குறுஞ்சியவாறே தயாராய் இருந்தான், சூரி. சூரி, என் உயிர்த் தோழன், என்னைவிட ஓரிரு அகவை மூத்தவனென்றாலும், நாங்கள் ஒரே அலைவரிசைதாரர்கள். நான் அவனிடம் வீட்டா மார்ட் பற்றி சொன்னேன். இருவரும் பள்ளி முகப்புவாயிலை கடந்துகொண்டிருந்தோம். எதற்காகவோ திரும்பிப்பார்த்த சூரி, என் முதுகை பறாண்டி "அங்க பாருல" என கை காமித்தான். தொலைவில், முகில்முட்டி நின்றுகொண்டிருந்த மணிக்கூண்டு முதன்மை கட்டிடத்தின் கீழே உள்ள முகப்பு வளைவின் அருகில், பாக்கியநாதனும் வைரவல்லியும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். வைரவல்லியை அப்பள்ளியில் அறிந்திராதவர்களே கிடையாது என்பதற்கு இரு காரணங்கள். ஒன்று, வைரவல்லி, பாலின் வெண்மைகூட நிறம் மட்டுதான் எனச் சொல்லும் அளவுக்கு அப்படியொரு வெள்ளை நிறம். அந்த காலகட்டத்தில் தொண்ணூற்றொன்பது விழுக்காடு ஆண்கள் நிறைந்த அப்பள்ளியில் சுற்றித்திரிந்த ஐந்தாறு பெண்பிள்ளைகளிடையே இவள் ஒரு பளிங்குப்பதுமை!. இரண்டாவது, நல்ல உடல்வளம் மட்டுமல்லாது சிறந்த குரல்வளமும் கொண்டவள் ஆதலால், திங்கள்கிழமை பள்ளி முழு அணிவகுப்பில், நீராறும் கடலுடுத்த தொடங்கி, தாயின்-மணிக்கொடியும் பாடி செய செய செய செய செயகே வரை பாடுபவளும் இவளே. எனக்குத்தெரிந்தே ஐந்து பேர் இவளிடம் காதல்கடிதம் கொடுத்து மூக்குடைபட்டிருக்கிரார்கள். அதிலும் இலச்சுமணனின் மூக்குடைப்புக்கதை மகா பரிதாபம். அதை இலச்சுமணாயணம் என்ற பெயரில் ஒரு காப்பியமாகவே எழுதிவிடலாம். கொசுறு செய்தி என்னவென்றால் என்தெருவுக்கு அடுத்த தெருவில்தான் வைரவல்லியின் வீடு இருந்தது. அவளின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அத்தனைபேரும் எனக்கும் என் வீட்டாருக்கும் நன்கு பழக்கம். என்றாலும் வைரவல்லியிடம் நான் இதுவரை ஒரு சொல் கூட பேசியதில்லை. ஓரிருமுறை பதிலுக்கு 'இளித்திருக்கிறேன்'. மேலும், அந்தப் பெண் பிடிகொடுத்துப்பேசும் வகையல்ல என கேள்விப்பட்டிருக்கிறேன்.
கதைக்கு வருவோம், நானும் சூரியும் வீட்டா மார்ட்டுக்குள் நுழைந்தோம். அது ஒரு சிறிய கடையாகத்தான் இருந்தது. "மேகி நூலடை இருக்கா, என்ன வெல?" எனக்கேட்டேன். வழுக்கைத் தலையோடு இருந்த கடைக்காரன் ஒரு பொதியை உருவி மேசை மேல் வைத்து "ஒண்ணு அஞ்சு ரூவா" என்றார். நானும் சூரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். "வாங்கப்போறீங்களா தம்பீ?" என அவர் கேட்டுகொண்டிருக்கும்போதே நாங்கள் நடையை கட்டியிருந்தோம், எங்களிடம் உண்மையில் காசு இல்லை.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் நூலடை பற்றிச் சொன்னேன். தானும் அந்த விளம்பரம் எங்கோ பார்த்ததாகச் சொன்னார். ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு பொதி வாங்கி வரச்சொன்னார். நான் ஓடினேன். புறங்கால் பிடரி மயிரில் படும்படி தலைதெறிக்க ஓடினேன். அந்த விளம்பரம் மனக்கண்ணில் வந்து நாக்கில் உமிழ்நீர் கோர்த்தது. "வந்ததும் வராத்ததுமா சீருடை கூட மாத்தாம எங்க ஓடறான் இவன்" என ஆச்சி சொல்வதும், "டே குமார் பாத்து ஓடுடா பாத்து" என பக்கத்து வீட்டு போன்னு அத்தை சொல்வதும், செட்டியார் கடை அருகில் "டேய், எங்கடா ஓடற. எங்க வீட்டுக்கு வா, அப்பா முத்துட்தேட்டர் முறுக்கு சூடா வாங்கிட்டு வந்துருக்கார்" என கலாக்கா சொல்வதும், எல்லாருக்கும் ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு, பேயாக ஓடிக்கொண்டிருந்தேன். அடுத்த முப்பதேட்டாவது நிமிடம் மேகி நூலடைப் பொதி என் அம்மா கையில்.
"ஆமா.. வாங்கிட்டு வந்துட்டே. இத எப்படி செய்யறது" என அம்மா வினவ, "அந்த பொதீலயே போட்டுருப்பானாம்மா, கடக்காரன் சொன்னான்" என்றேன். "சரி.. நீ, போய் சீருடைய அவுத்துட்டு அந்த நீலநிற நிக்கர் போட்டுக்கோ. கைகால்மொகத்த சோப்புப்போட்டு கழுவு. ஒன் ஒடம்புல ஒரு மூட்டை செம்மண் இருக்கும் போலிருக்கே, மண்ணுல உருண்டையா? அதுக்குள்ள இத பண்ணிவெக்கிரேன்.." என்று சொன்னவாறே அடுக்களைக்குள் சென்றார்.
எதையும் கழுவாமல் கொல்லைப்பக்கத்தில் நான் நட்டிருந்த அந்திமந்தாரைச் செடியை பார்க்கச் சென்றுவிட்டேன். நிறைய பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் மீதமுள்ளவை மஞ்சள் நிறத்திலும் மாலை வேளையில் அழகாய் பூத்திருந்தன. ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துவந்து அவற்றுக்கு தெளித்தேன். கிழக்குப்பக்கது வீட்டு மதிலை எம்பிக்குதித்து எட்டிப்பார்த்தேன். அந்த வீடு வெகு காலமாய் பூட்டியே கிடந்ததால் அந்த கொல்லைப்பக்கம் முழுவதுமா புதர்மண்டி காடாகக் கிடந்தது. மேற்க்குப்பக்கத்து வீட்டுக் கொல்லைப்பக்கம் என் வீடுபோலில்லாமல் சுத்தமாக பெருக்கப்பட்டு, ஒரு முக்கில் ஓலைகளும், மட்டைகளும் சீராக அடுக்கப்பட்டிருந்தது. "பாம்படம் பாட்டியின் வேலையாகத்தான் இருக்கும்" என மனதில் நினைத்துக்கொண்டேன்.
"டேய் வாடா!" என அம்மா கூப்பிடுவது கேட்டது. கொல்லையை விட்டு முற்றம் வழியாக அடுக்களைக்குள் செல்லுவதற்கு முன்பாகவே ஏதோ ஒரு வாசம் மூக்கை துளைத்தது. "அதுல போட்டிருக்கர மாதிரியே பண்ணிட்டேன். நான் இன்னும் வாய்ல வெச்சுப் பாக்கல்லை. கோவிலுகுக்கெல்லாம் போணும். நீயாச்சு ஒன்னோட நூலடையாச்சு" என ஒரு இலுப்புச்செட்டிய காண்பித்தவாறே சொன்னார். நான் ஆப்பையை தொடப்போகும்பொது "தொட்டுராதே கொதிக்கும். கொஞ்சம் ஆறட்டும். பொறுமையா அப்பறம் சாப்டு".. "நான் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்" என்றவாறே ஆயத்தமானார். நான் அடுக்களையின் ஓரத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்து கொண்டேன்.
"என்னடா வீடம்புடும் ஏதோ நாத்தமா நாறுது" என்றவாரே என் ஆச்சி குவித்த மேலுதட்டால் மூக்கை மூடியவாறே சாய்ந்து சாய்ந்து வந்துகொண்டிருந்தார். நான் நூலடையின் பெருமைகளை ஆச்சியிடம் விளகலாம் என்பதற்கு முன்னாலே என் அம்மா, "அவன் ஏதோ மேகியாம் ஆசைப்பட்டு கடைலேருந்து வாங்கிட்டு வந்துருக்கான். இலுப்புசசெட்டில பண்ணிவெச்சிருக்கேன். தொட்டுராதேங்க. கொதிக்குது" என்றவாரே வாசலைநோக்கி நடந்துகொண்டிருந்தார். "என்னடா இது நாக்குபூச்சி நாக்குபூச்சியா இருக்கு. வாடை வேற கொடலப்பிடுங்குது.. உவெ... என்னடா இது" என வாந்தி எடுப்பதை போல நாக்கை துருத்திக் காண்பித்தார். "வெள்ளுள்ளி போட்டுருகானு நெனக்கிறேன், வெள்ளிக்கெழமையுமாதுமா, எங்கிருந்துடா இத வாங்கிண்டு வந்தே? என்ன கருமாந்தரமோ இது. பாக்கவே சகிக்கல்ல" என எனைப் பார்த்து ஏளனமாகவும் சிடுசிடுப்புடனும் கேட்டார். நான் எதுவும் பதில் பேசவில்லை. "வாயத்தொறந்து சொல்றானோப் பாரு. ஆமா எத்தன ரூவாய்? முப்பதா அம்பதா? ஒனக்கென்ன.. கொப்பன் ராத்திரி பகல் பாக்காம மாடா ஒழச்சு சம்பாதிக்கறான்.. நரிக்கு விளையாட்டு நண்டுக்கு பிராணாவசுத்தை" என தொடர்பே இல்லாத ஒரு பழமொழியை கூறிக்கொண்டு "இருக்கீங்களா!.. நீங்கதான் ஒங்க செல்லப் பேரனுக்கு ரூவாய் கொடுத்தேளா?" என்றவாறே முன் அறையில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த தாத்தாவை வம்பிழுக்க அவரை நோக்கி நடக்கலானார். "வாய தொறக்கறானா பாரு, உம்மகொட்டான் ஆட்டுமா" என ஆச்சி முணுமுணுப்பதும் என் காதில் விழுந்தது. ஆச்சியிடம் ஏட்டிக்கு போட்டி எதுத்து பேசக்கூடாதென்பது, போன வாரம் அவருக்கும் எனக்கும் எனக்கேற்பட்ட பழி சண்டைக்குப்பின்னர், என் அம்மாவிடம் எடுத்துக்கொண்ட சத்தியம். வம்பே வேண்டாம் என்று தான் நானும் இம்முறை பதில் பேசவேயில்லை.
நான் மெல்ல எழுந்து ஆப்பையை தொட்டுப்பார்த்தேன், கை தாங்கும் சூடில் தான் இருந்தது. ஒரு சிறிய தட்டை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் நூலடையை அதில் போட்டு மீண்டும் பலகையில் வந்தமர்தபோது "என்னடீ சொல்லறே, என்ன பேரன், என்ன ரூவாய், நான் யாருக்கும் எதுவும் குடுக்கல்லை.. போ போ.. கோவில்ல மணியடிச்சாச்சு, தீவாராதனை ஆகப்போகுது.. போ.. போ... என்னத் தொந்தரவு பண்ணாதே" என தாத்தா சலித்துக்கொண்டது என் காதில் விழுந்தது. நான் ஒரு தேக்கரண்டியால் ஒரு சுளை நூலடையை எடுத்து சூடாற ஊத்தி வாயில் போட்டுக்கொண்டேன். உண்மையிலேயே ஆச்சி சொன்னதுபோல் அதன் சுவை குமட்டிக்கொண்டுதான் வந்தது... ய்யே.. எனக்கு அதன் சுவை முற்றிலும் பிடிக்கவே இல்லை. மெல்ல தட்டத்திலிருந்த மிச்ச நூலடையை மீண்டும் இலுப்புசெட்டியில் கொட்டி, ஒரு பெரிய தட்டால் மூடிய பின்னர், தாத்தாவிடம் வந்து அமர்ந்துகொண்டேன். அவர் இன்னமும் ஏதோ மும்முரமாக ஒரு டயரியில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். என்னை இழுத்து தன் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக அமரவைத்துவிட்டு ஒரு புன்முறுவலோடே மீண்டும் எழுதுவதில் மும்முரமானார்.
"என்னடா எப்படி இருந்துது?" என்று மிதியடியில் காலை துடைத்தவாறே என் அம்மா கேட்டார். "நல்லா இல்லையா? ஒன்னோட மூஞ்சியே சொல்லுதே. நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் உனக்கு பழக்கமில்லாத்தது. பட்டை சோம்பு எல்லாம் போட்டுருப்பாங்க. அதுதான் ஒனக்கு பிடிக்கல்லை" என்று சிரித்துக்கொண்டு அடுக்களையை நோக்கி நடந்தார். நானும் பின்னால் சென்றேன். தன் சுண்டு விரலால் சிறிது எடுத்து அவர் நாக்கில் வைத்துக்கொண்டதும் அவர் முகமும் எட்டுகோணத்தில் போய்விட்டது. "இத இங்க யாரும் சாப்டமாட்டாங்க. நாகம்மையும் (வேலைக்காரி) சாப்புடுவாளோனு தெரியல்லை. ரெண்டாவது, நாளக்கி காலைல வரக்யும் இருக்காது, ஊசிப்போயிரும். son who temple salt flower needle gone" என்றவாறே என் மடையில் லேசாகக் கொட்டி என்னைப்பார்த்து "இந்த அசடு ஏமாந்து போச்சு..." என்று ஒரு நமுட்டுச் சிரிப்போடு சொன்னார். எனக்கு இரட்டிப்பு வருத்தம், ஒன்று, ஆசைப்பட்டது போலிலாத்தது, இரண்டு, அம்மாவுக்கு வேலை வைத்தது. இதுக்கெலாத்துக்கும் மேல, கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் ஆச்சி என் வாயக் கொடைவாளே! எப்படி அதச் சம்மாளிக்கது!?
:
அடுத்த முறை நான் நூலடை சாப்பிட்டது கலாக்கா திருமண வரவேர்ப்பில் தான். போதாததுக்கு என் வீட்டுக்கு ஒரு தூக்கு நிறைய நூலடையை கலாக்காவின் அம்மா கொடுத்து அனுப்பியிருந்தார்.
:
"நூலடையும் பாசுத்தாவும் பீடசாவும் பர்கரும் சாப்டகூடாது, ஏன்னா அது உடலுக்குக் கெடுதல்னு வகுப்பாசிரியை எசுத்தர்-லிடியா சொல்லிட்டாங்கமா", மழலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் குழந்தை...
Friday, February 4, 2022
தமிழ்ச் சின்னமும் அன்னையும்
தமிழ்ச் சின்னமும் அன்னையும்
பல சமயதினரும் தனித்த அடையாளங்கள் கொண்டோரும் ஓன்றிணைந்து வாழும் தமிழ்நாட்டின் மாநில அரசின் சின்னமானது ஒரு இந்துக் கோயிலின் கோபுரமாக உள்ளதே, என எனக்கு இந்த கேள்வி பலமுறை வந்ததுண்டு. ஒருசில பிற மாநில அரசுகளின் சின்னங்ககளைப் பார்த்தேன். அவர்கள் அந்தந்த மாநிலப்பகுதியை ஆண்ட கடைசி மன்னராட்சியின்போது பயன்படுத்தப்பட்ட அரசச் சின்னத்தையோ அதன் மருவலையோ பயன்படுத்துகின்றனர்.
தமிழ் மண்ணிற்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லை. ஒரு சில குறுநில மன்னர்களைத்தவிர மற்ற மொத்த இடத்தையும் கடைசியில் ஆண்டது பிரித்தானிய அரசு. ஆதலால் அதற்கு முன்பாக இருந்துவந்த தமிழ் பேசும் அரசுகளின் முத்திரைகளை பார்கலானேன்.
சேரன்:
வில்-அம்பு மற்றும் அங்குசமும் யானையும்
சோழன்:
புலி மற்றும் இருமீன்களும் காட்டுப் பன்றியும் ஆமையும் சொசுத்திக்கும் குத்து விளக்கும் வெண்கொற்றக்குடையூம் வெண்சாமரமும் கதிரவனூம். இந்த சின்னத்தில் கதிரவன் இல்லை என்றாலும் சோழ நாணயங்களில் எல்லாம் கதிரவன் இருந்ததன், காரணம் சோழர்கள் தங்களை கதிரவ வழித்தோன்றல்களாக கூறிக்கொண்டனர். நீங்கள் இங்கு காண்பது இராசராசனின் அரசுச்சின்னம். ஒருசில சோழச் சின்னங்களில் வில்லும்-அம்பும் சேர்ப்பட்டிருந்தன. புலியும் கதிரவனும் தான் அடிப்படை சின்னங்கள் என்றாலும், பாண்டிய நாட்டை சோழர்கள் ஆண்டபோது அவர்களது சின்னமான மீன்களையும், சேர நாட்டை ஆண்டபோது வில்லும் அம்பையும், சாளுக்கியர்களை ஆண்டபோது காட்டுப் பன்றியையும் தங்கள் சின்னத்தில் சேர்த்துக்கொண்டனர். இதே பழக்கம் பாண்டிய மற்றும் பல்லவ நாட்டு முத்திரையிலும் காணமுடிந்தது.
பாண்டியன்:
மீன் அ| இருமீன்கள் மற்றும் யானையும் சூலாயிதமும், பிறையும் விண்மீனும், இருமீன்களும்.
பல்லவன்:
காளை மற்றும் பாம்பும் பிறையும், சங்கு மற்றும் சொசுத்திகும் தாமரையும், இருமீன்களும். பல்லவன் அடிப்படையில் தெலுங்கு வடுகன், ஆரியம் போற்றுபவன் என்றாலும் காலப்போக்கில் தமிழை நிறையப் பேசியுள்ளான்.
காளபிரன்:
கன்னட வடுகனான `காளபிரன்` தமிழகத்தை ஆண்டது நானூறு ஆண்டுகள் என்றாலும் அவர்களது அரசாட்சியைப் பற்றி இன்றளவும் சொல்லிக்கொள்கிற அளவுக்கு சான்றுகள் ஏதும் பெரிதாகக் கிடைக்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய சின்னங்களும் கிடைக்கவில்லை. ஆனால் இவர்களது ஆட்சியில் தான் தமிழ் செழித்தோங்கிற்று என்றும் ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுங்காப்பியங்க்கள் திருக்குறள் போன்ற நூல்கள் இயற்றப்பட்டன என்றும் வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.
இதில் நாயக்கனையும், பாளையக்காரர்களையும் மதுரை சுல்தானையும் ஆற்காட்டு நவாபையும் தஞ்சை மராட்டியனையும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் சமசுத்தானத்தையும் இடாய்ச்சு, பிரஞ்சு மற்றும் பிரித்தானிய அரசுகளையும் நான் சேர்க்கவில்லை. என்றாலும் கூடுதலான ஆண்டுகள் ஆண்ட நாயக்கன் காளையையே சின்னமாகக் கொண்டிருந்தான்.
இப்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழகத்தின் பல அரசுகளினா சின்னங்களை ஒன்றிணைத்து ஒற்றைச் சின்னமாக உருவாக்கினால் அது எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கியத்தை இங்கே பாருங்கள்
அதாவது, மீனின் வால் மற்றும் வயிற்றுப்பகுதியுடன் காளையின் கொம்பு÷திமிலோடு கூடிய புலிமுகம் கொண்டு யானையின் துதிக்கையும் கொண்ட யாளி போன்ற ஒட்டு விலங்கானது, கையில் வில்லும் அம்பும் ஏந்தி, கதிரவன், விண்மீன், பிறைநிலா, சங்கு தாமரை, சொஸ்திக் மற்றும் அசோகனின் நான்குதலை சிங்கச் சின்னமும் புடைசூழ அமைந்தது.
பார்க்க நன்றாகவே இல்லை. என் வடிவமைப்பு சொதப்பிவிட்டது போலும்.
இதில் சொசுதிகம், சூலாயுதம், பாம்பு போன்ற மதச்சார்புடைய சின்னங்களை விட்டுவிட்டேன்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு இதே அடிப்படையில் தமிழ் அன்னையும் வடிவமைத்திட ஒரு எண்ணம் எழுந்தது. அதன்படி, காலாக மீன்வாலும் புலித்தலையும் கொணடு, நிற்கும் கடற்கன்னி (அல்லது கடறாடவன்), ஐந்திணை நிலங்கள் சூழ, ஒரு கையில் பூட்டிய வில்லம்பையும் மறுகையில் சங்கத்தமிழ், காப்பியங்கள், திருக்குறள் போன்ற ஏடுகள் ஆகிய தமிழர் அடையாளங்களை வைத்திருக்கும் தமிழன்னை என்ற என் எண்ணத்தை பேசுபுக் வாயிலாக வெளியிட்டு, இதனை யாரேனுப் படமாக வரைந்துதர இயலுமா என நண்பர்களிடையே வினவியிருந்தேன். இந்த என் எண்ணத்தை பென்சில் படம்வரைத்து அனுப்பியிருந்த என் பேசுபுக் நண்பர் திரு.சுகந்திக்கு மிக்க நன்றி.
மேலக் குமரித்தமிழ்ப் பழமொழிகள் (குழந்தைகளுக்கானதல்ல)
மேலக் குமரித்தமிழ்ப் பழமொழிகள்
(குழந்தைகளுக்கானதல்ல)
குமரிநாட்டின் மேற்குப்பகுதியான விளவங்கோடு-கல்குளம் வட்டத்து மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள் பலவற்றை ஒரு நகைச்சுவையான உரையாடல் போலத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் திரு செயமோகன்:-
இதில் வரும் பழமொழிகள்:-
௧} ஆனை கெடந்து சவிட்டு பெடுது, பின்னயில்லா ஆனைப்பிண்டம்?
௨} தீட்டத்தில அரி பெறக்குறவன்
௩} தொளவடைக்கு ஒரு தொளையானா தோசைக்கு ஆயிரம் தொள.
௪} குண்டி களுவின வெள்ளம் விளுந்து மொளச்சவன்.
௫} மார்த்தாண்டவர்மாவுக்கு கசாயம் போடுகதுக்கு கொட்டைய பிடுங்கி குடுத்தாண்ணாக்கும்
௬} மகாராசா இங்கிணதான் தாற அவுத்தாருண்ணு திண்ணையக் காட்டுவான்.
௭} நாயி மாதிரி ஒரெடத்தில தண்ணி குடிச்சு ஒம்பதெடத்தில மோளுதவன்லா?
௮} மச்சுல காஞ்ச மூத்த தேங்கால்லா? ஏது வெள்ளத்திலயும் மெதப்பான்
௯} பைசாய எண்ணிட்டு அதுக்க சிங்கத்தையுமில்லா எண்ணுகான்?
௧०} நிலாவெட்டத்தில நிரோத்து தைச்சு போடுத பய
௧௧} மலைத்தண்ணிக்கு மட்டுண்டா
௧௨} தவள சாடி பசுவுக்கு செனைன்னா கேக்கவனுக்கு மனசிலாவ வேண்டாமா?
௧௩} விதியத்தவன் வாறது பாத்தா, தெங்கு, மட்டையப் போடுது?
௧௪} ஏழு நீலி சேந்து கேறின அம்மன் கொண்டாடி மாதிரி
௧௫} ஆட்டுக்கு வாலும் கழுதைக்குக் கோலும்
௧௬} அவளுக்க வாயிலே ஒரு பிடி நெல்லு வாரியிட்டா பொரியாவும்
௧௭} கல்லு நிக்கா காலம் வரையில்லா, சொல்லு நிக்கும்
௧௮} எனக்க அம்மைக்க முலையில மூத்திரமாவே வந்தது?
௧௯} ஆனமேல கேறினா விட்டிலும் நெளிஞ்சுதான் இருக்கும்
௨०} ஒருபாடு நெளிஞ்ச மூங்கிலு பல்லக்கு தூக்கும்
௨௧} பல்லு நிரப்பு கொண்டுல்ல அழகு வாறது; சொல்லு நிரப்பு வேணும்
௨௨} நாய் பெற்ற எடமும் நாரி மூப்பெடுத்த எடமும் வெளங்குமா?
௨௩} கடுவனுக்கு மூத்திரம் அடியோடி பெட்டைக்கு மூத்திரம் பொறத்தோடி
௨௪} இஞ்சிக்காட்டில வெளைஞ்சா சீனிக்கெழங்கும் காந்தும்
௨௫} சுக்க காட்டிலும் சுக்கு காப்பி எரிக்கப்பிடாதுல்ல..!?
௨௬} செட்டி ஏட்டில குறிக்கது மாதிரியாக்கும்.
௨௭} எண்ணமறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுத மாதிரியாக்கும்
௨௮} ஊத்துல பிறந்த விராலுக்கு ஆறு என்னலே தெரியும்
௨௯} குளிக்கொளம் எவ்ளவு குண்டி கண்டிருக்கும்.
௩०} நாட்டு நாயை நாடறியாட்டாலும் நாயறியணும்ல?
௩௧} கெழக்கே கோட்டையில மொளை கொண்டு போனா ஒனக்கென்ன
௩௩} சக்கை கொழையும்போது சக்கைக்குருவும் கொழையாது
௩௪} குடுமியிலெ தீ பிடிச்சா பேனுக்கு கேடுண்ணு நெனைக்கப்பட்டவனாக்கும்
௩௫} எருமையிட்ட சாணி மாதிரி
௩௬} பூவில்லேண்ணா எலையிருக்கணும். எலையில்லேண்ணா முள்ளிருக்கணும்
௩௭} அவனவன் கொட்டைக்க கனம் அவனவனுக்குல்லா தெரியும்.
௩௮} வைக்கலப் போட்டு தீய அணக்கிற மாதிரி
௩௯} தீண்டாரி துடைச்ச துணி கணக்கா
௪०} செத்தவனை நெனைச்சு பத்து பத்தினி அழுதாண்ணு கதையா
௪௧} படை பயந்து பந்தளத்துக்கு போனா அங்கிண பந்தம் கெட்டிப்படை நிக்குது
௪௨} நாறப் பீயானாக்கூட அதையும் உருட்டிக்கிட்டுப் போறதுக்கு ஒரு சீவனை உண்டாக்கியிட்டுண்டு படச்சவன்.
௪௩} பாம்பு சட்டைய உருவிச்சுண்ணு பரமன் கோமணத்த உருவினான்னு சொன்ன கதையா
௪௪} ஆன குடுத்தாலும் ஆசை குடுக்கிலாமாலே?
௪௫} உனக்கம்மைக்கு ஒரு நெனைப்பு வந்திருந்தா நீ எனக்க பிள்ளையாக்கும்
௪௬} பனையோலையிலே நாயி மோண்ட கதையா
௪௭} நெறைஞ்ச ஆலமரத்துக்கு நெலமெல்லாம் வேருண்ணு சொன்ன மாதிரி
௪௮} நிலாவு கண்டு நாயி கொரைச்சா நிலாவுக்கு என்ன?
எங்கள் பொங்கல்
எங்கள் பொங்கல்
அத்தை நீங்கள் வருக!
அருமைத் தமிழ்நூல் தருக!
முழுதாய் அதனைப் கற்பேன்!
முன்னோர் வழியில் நிற்பேன்!
அன்பு மாமா வருவார்!
ஆடும் பொம்மை தருவார்!
கிட்டி பாண்டி ஆட்டம்!
அத்தனைபேரும் போட்டோம்!
தேதி தையைத் தொட்டால்!
அரபுப் பழங்கள் தருவார்!
அக்கா அண்ணா நானும்!
சந்தைக் கடை போவோம்!
நெட்டை கரும்பு வாங்கி!
கட்டாய் சுமந்து வருவோம்!
வெள்ளைச் சோறு பொங்கி!
வெல்லச் சோறும் பொங்கி!
அள்ளி நாங்கள் உண்போம்!
துள்ளி மகிழ்வு கொள்வோம்!
வேட்டிக் கட்டிய தம்பி!
வெட்டுக் கத்தியை நம்பி!
கருப்பன் போன வருவான்!
கரும்பை வெட்டித் தருவான்!
கவிஞர் முனைவர் திரு மு.இளங்கோவன் எழுதிய பாடலில் ( http://muelangovan.blogspot.com/2012/04/blog-post.html ) சிலபல பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றியமைத்துள்ளேன்....
Tuesday, February 1, 2022
தமிழ் - நாம்
ஆலமரத்தாண்டி
கண்ணுக்கு உணவு
கண்ணுக்கு உணவு
௧} உயிர்ச்சத்து A, C, E (வைட்டமின்)௨} ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்௩} உலுடெயின் (Lutein)௪} செக்சாந்தின் (zeaxanthin)௫} துத்தநாகம்௬} புரதம்
௧} கரும்பச்சை இலைகள் (கீரை, கறிவேப்பிலை, புரோகொலி)௨} பட்டாணி, பயிறு, பருப்பு, அவரை, மொச்சை, பீன்சு, அவகாடோ௩} முழு கூலம் (தானியம்), சூரியகாந்தி விதை௪} நாரத்தையினப் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு), பெரி பழங்கள்௫} கொட்டைகள் (பாதாம், பிஸ்தா, வால்னட்), ஆளிவிதை (Flax), ஆளிஎண்ணெய்௬} பலநிறங்கள் கொண்ட காய்கள், கனிகள், கிழங்குகள் (கேரட், சீனிக்கிழங்கு)
கல்வியின் தரம்
கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில் நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...

-
அன்புத் தமிழர்களே!! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!! நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே ...
-
நம் உறவுகள்
-
தோடர் மொழி நீலமலைத்தொடரில் ஊட்டி அருகே வாழ்ந்துவரும் தோடர்களின் மொழியின் மேல் பற்பல மொழியியலாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப்போல எனக்கும் ஒர்...