யாரும் செல்வந்தர்களாக இருக்கலாம்..
Sunday, January 30, 2022
Saturday, January 29, 2022
மாடன்
மாடன்
தமிழக நிலப்பரப்பிலுள்ள கடவுள்களில் மிகவும் விந்தையான குலக்கடவுள், மாடன் அல்லது சுடலைமாடன் ஆகும். நான் பிறந்து வளந்த குமரிமாவட்டத்தில் திரும்பிய திசையிலெல்லாம் ஒரு சுடலை மாடன் கோவிலைக் காணலாம். குமரிமாவட்டம் மட்டுமல்லாது அண்மைப் பகுதிகளான நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, விருதுநகர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களிலிலும் மாடன் வழிபாடு உள்ளது. மாடன் கோவில் திருவிழாக்களை "கொடை" என்று அழைப்பது இங்குள்ள வழக்கம்.
எங்கள் குல மாடன்
எங்கள் குடும்பத்துக் குலக்கடவுளான நாகநாத மாடன், திருப்புடைமருதூரில் (நாறும்பூநாதர் கோவிலின் அருகே உள்ள தெருவில்) ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள சுவரில் இருந்தது. அதனை வழிபட்டுவந்த என் தந்தைவழி உறவினர் தற்போது இந்தியாவிலுள்ள பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் குடிபெயர்ந்துவிட்டனர். என் குடும்பத்தார் ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறை சென்றுவந்துகொண்டிருந்தனர். சிறு அகவைகளில் சில தடவை போய்வந்த ஊர் நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூர். ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசத்திற்கும் பங்குனி உத்திரத்துக்கும் அங்கு சென்று மாடனுக்கு பொங்கல் படையல் செய்து கொடை கொண்டாடுவது என்பது என் தந்தை வழி முன்னோர்களுக்கும் குடும்பத்தாருக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது. சென்னை, கோயமுத்தூர், கோட்டயம், கொல்லம், மும்பை போன்ற பல இடங்களிலிருந்து என் தந்தைவழி தொலைவுறவினர்கள் அங்கு வந்து கூடுவார்கள். என் தாத்தா அவர்களில் பலரை எங்களுக்கு அறிமுகம்செய்து வைப்பார். அனேகமாக வீரவநல்லூரில்தான் இரவுறங்குவோம். அடுத்தநாள் விடிகாலை பெண்களும் முதியவர்களும் சிற்றுந்தில் சென்றுவிடுவர். சிலர் மிதிவண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்புடைமருதூருக்குப் புறப்படுவர். பெரும்பாலும் எனக்கும் ஒரு முக்காவண்டி கிடைக்கும். எல்லாரும் பாட்டுப்பாடிக்கொண்டே மகிழ்ச்சியாக பொருநை ஆற்றங்கரையை ஒட்டிய சாலை வழியாக திருப்புடைமருதூரை நோக்கி ஓட்டுவோம். கோவிலின் ஆருகே உள்ள பொருநை ஆற்றில் மீன் கடிகளிடையே ஒரு அருமையாக குளியல். படையலுக்கு வருகிறோம் என முன்னமே மாடன் இருக்கும் வீட்டாருக்கு மடல் எழுதி விடுவதால் அவர்களும் ஒரிரு நாள்களுக்கு முன்னரே, கொல்லைபுறத்தை துப்புறவாக்கி, மழையில் கரைந்திருக்கும் மாடன் சிலைகளை மண் குழைத்துச் செம்மையாக பூசி, காய்ந்தபின் அதன்மீது சுண்ணாம்பும் குங்குமப்பச்சையுப் பூசி முன்னேற்பாடுகள் செய்து வைத்திருப்பர். என் குடும்பத்தாரும் ஊரார்களும் குளித்து துவைத்த ஆடைகளை உடுத்தி திருநீறிட்டு மாடன் கொல்லையில் கூடுவர். மாடனுக்கு கோடி வேட்டி கட்டிவிட்டு நிறைய பூமாலைகள் அணிவித்து, அனைத்து வகையான பழங்களையும் தூக்குகளில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து எடுத்துவந்த பலகாரங்களையும் சேர்த்துப் படைத்திருப்பர். முக்குட்டி வைத்து அதன்மேல் கனமான பெரிய மண்பானையில் இன்சுவைப் பொங்கல் பொங்கத்தொடங்குவர். அந்த நேரம் மாடனைப் புகழ்ந்து சில பாடல்களைப் பாடியவண்ணம் இருப்பர். பொங்கியபின் குலவையிட்டு மாடனுக்கு சூடம் காண்பிப்பர். பொங்கலை மாடனுக்குப் படைத்த பிறகு, வாழையிலையிட்டு அனைவரும் உணவருந்திவிட்டு பக்கத்தில் இருந்த அஞ்சலகத்தின் வாசலில் அமர்ந்து பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பசுமையான காட்சிகளும் நினைவுகளும் என் எண்ணத்தைவிட்டு என்றென்றும் அகலாது. திருப்புடைமருதூரானது எனது பூட்டன் போன்ற தந்தைவழி முன்னோர்கள் யாரேனும் வாழ்ந்த ஊராக இருக்கலாம். அவர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மண்ணால் மாடன் செய்து வழிபட்டிருக்கலாம். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என யாருக்கும் தெரியாது. அந்த மண் உருவத்தினை பற்பல ஆண்டுகள் பாதுகாத்துவந்துள்ளனர் என் முன்னோர் வழிவந்தோர். பொங்கல் படையல் முடிந்து அவரவர் ஊருக்கு எடுத்துச்செல்லும் திருநீறு மற்றும் குங்கும பொட்டலத்தை தங்கள் வீட்டு டப்பாக்களில் பாதுகாத்து, நோய், தேர்வு, பிறந்தநாள் ஆகியவற்றின்போது குலக்கடவுளை உளமாற கும்பிட்டு நெற்றியில் இட்டுவிடுவர்.
இதெல்லாம் இரண்டாண்டுகளுக்கு முன்போடு முடிந்துபோனது. ஆம், இன்று அம்மாடனை வழிபட யாரும் வருவதில்லை என அவ்வீட்டார்களே இடித்துவிட்டார்கள் என இரு ஆண்டுகளுக்குமுன் அங்கு சென்றபொது தெரிந்துகொண்டேன். என்னவோபோல இருந்தது. இதில் இறைபத்தி என்பதைவிட, என் முன்னோர்கன் தெரிந்தோதெரியாமலோ, அவர்கள் வழித்தோன்றல்களுக்கு அடையாளமாக இருக்கவேண்டி நட்டுவைத்த மண்சுவர் மாடன் தற்போது அங்கு இல்லாததுதான், இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத எனக்கும், உள்ளத்துள் சிறு நெருடல் ஏற்படக் காரணம்.
மாடன்கள் எத்தனை எத்தனை!!
குமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் பயணித்தபொது ஆங்காங்கு பல சுடலை மாடன் கோவில்கள் என் கண்ணில் படும். அவற்றின் ஒவ்வொன்றிலும் அம்மாடனது பெயர் குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெயரையும் படிக்கும்போது நமக்கு வியப்பை வரவழைக்கும். இந்த கோவில்களில் ஆண்டுதொறும் நடக்கும் பத்துநாள் கொடை விழாக்களில் இசைக்கப்படும் வில்லுப்பாட்டு போன்ற பாடலின் வாயிலாக அந்த மாடனின் கதையை விளக்கிப் பாடுவது வழக்கம். அதில் ஒவ்வொன்றிலும் அக்கோவிலிலுள்ள மாடன் பற்றியானதாக நம்பப்படும் கதைகளையும் அம்மாடனின் சிறப்புகளையும் சொல்லிப் பாடுவது வழக்கம். மாடன்கள் மொத்தம் இருபது அல்லது இருபத்து ஓரு வகைகள் என்றும் அறுபத்து ஓரு வகைகள் எனவும் பல வகையாக நம்பப்படுகிறது. அப்படியான பலவகை மாடன்களைப்பறி பார்ப்போம்.
இன்னும் எத்தனை எத்தனை மாடன்களோ... இவைபோக மாடத்தி, சுடலி, இசக்கி, பேச்சி என்ற பெண் கடவுள்களும் வழிபடப்படுகிறது.
கதைகள்
மாடன்களைச் சுற்றியுள்ள கதைகளும் பற்பல.
கதை - ௧
உமையாளின் மாகாளி அவதாரத்துக்குப் பிறகு ஞாலத்தில் மந்திர தந்திர சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது. இதை கவனித்த தேவர்கள் அயனிடமும், திருமாலிடமும் முறையிட்டனர். அவர்கள் சிவனிடம் சென்று "ஈசனே, ஞாலத்தில் கூடா இறப்பு அடைந்தவர்களின் தீய ஆவிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுமட்டுமன்றி மீண்டும் மந்திர சக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைக்கப்பட்ட உயிர்களை எப்படி காப்பது?" என்று கேட்டபோது, "மாந்த்ரீக ஆற்றல்களுக்கு முடிவு கட்டவும், தீய ஆவிகளின் கொட்டத்தை அடக்கவும், விரைவாக தீர்வு காண்போம்" என்று கூறிய சிவன், மந்திரக் கடவுளாக அவதாரம் எடுக்க முடிவு செய்தார். அதன் காரணமாக சிவன், 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார். அவர்கள் தான் சிவனின் இயக்கியர்களாக (சேவர்களாக) செயல்பட்டனர். மக்களை அச்சுறுத்திவந்த இயல்பாக இறக்காதவர்களில் ஆவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சுடலை வனத்திற்கு காவலாக மாடனாக வலம் வருகிறார். இதனால் சுடுகாட்டு பித்தன் என்று சிவனுக்கு ஒரு பெயர் உருவானது.
கதை - ௨
ஒரு முறை கைலாயத்தில் உமையாள், தன் பற்றர்களின் இசைக்கு தன்னையறியாமல் ஆடல் ஆடியவண்ணம் இருந்தார். இதை கண்ட சிவபெருமான், ஞாலத்தையே அடக்கி ஆளும் உமையவள் தன்னை அடக்கிக் கொள்ளாமல் இசைக்கு மயங்கி ஆடியதால் இசக்கி என்ற பெயரோடு மாந்தர் பிறவி எடுக்க வேண்டும் என்று சபித்தார். உடனே, உமையாள், நான் உங்களது உடலில் பாதியை பெற்றதன் காரணமாக எனக்கும் சக்தி உண்டென்பதை அறியாமல் சொள்களை விதைக்கிறீர்கள். அவ்வாறு நான் பிறவி எடுக்கும் போது, சுடலை வனத்தை காக்கும் மாடனாக தாங்கள் பிறவி எடுத்து சுட்ட பிணத்தையும் உண்ணும் பிறவியாக திரிய வேண்டும் என்று பதிலுக்கு சபித்தார் . அதன்படியே மாடன் அவதாரம் ஏற்பட்டு ஞாலத்து மக்களை தீயவைகளிடமிருந்து காக்கலானார் மாடன்.
கதை - ௩
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், ஞாலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். சிவபெருமான் இந்தப் பணியை செவ்வெனச் செய்து வருகிறாரா என்று பார்வதிக்கு சிறு ஐயம் எழுந்தது. அவர் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புக முடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள். தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் உமையாள், ஐயா!, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா? என்று கேட்டாள். சிவபெருமான், ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன ஐயம்? என்றார். இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. உமையாளுக்கு தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னுடைய மனைவியான நீ, என் பணியில் ஐயமடைந்து என்னைச் சோதிப்பதா? என்னைச் சோதித்த நீ காட்டுப் பேச்சியாக மாறி, காடுகளில் அலைந்து கொண்டிரு! என்று சாபமிட்டார். உமையாள் தன் செயலை பொறுத்தருளக் கோரி, சாப மீட்சி வேண்டினார். சிவபெருமான், காட்டுப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ, மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது, நானே உன்னை வந்து மீட்பேன் என்று சாப மீட்சி அளித்தார். உமையாள் காட்டுப்பேச்சியம்மனாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். உமையாள், ஐயா, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவ பெருமான், இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள். உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர் என்று வரமளித்து மறைந்தார். உமையாள், பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது. இதைப் பார்த்த உமையாள் மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். உமையாளும் அந்தக் குழந்தையுடன் கயிலாயம் திரும்பினார்.
சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால், அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். உமையாள் ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள். நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கயிலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது.
உமையாள் காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது, அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வருவது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்ததை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், பிணம் தின்ற இவன், இனி கயிலாயத்தில் இருக்க இயலாது. ஞாலம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார். இதைக் கேட்ட சுடலை மாடன், நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்? என்று கேட்டார்.
சுடலை மாடன், பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும் என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார். (நன்றி : http://mantrakali.blogspot.com/2017/08/blog-post_3.html )
கதை - ௪
செருக்கில் செயல்பட்ட, அயனின் மகனும் சிவனின் மாமனாருமான, தட்சனின் தலையை, கடுஞ்சினத்தால் சிவன் வீரபத்திரன் உருவில், கொய்தபின் தட்சன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து துடிதுடித்த அவனது மனைவி தாருகாவல்லி, சிவனிடம் அழுது முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள். அவளது அழுகுரலுக்கு இரங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்துவை, அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, தலை தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில் ஆட்டுத்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது). சிவனின் சினம் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். ஞாலம் சென்று மா சாத்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக என்று வரமளித்து அனுப்பி வைத்தார். தலையும் வாயூம் மாறிய கடவுள் என்பதாலும் மா சாத்தாவின் தளவாய்களுள்(தளபதி) ஒருவனாக திகழ்வதாலும் தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார். சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை வாங்கி தளவாய்மாடன் ஞாலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். (நன்றி : http://rajasabai.blogspot.com/2018/03/blog-post.html )
கதை - ௫
முருகன் பழநிக்குச் சென்று விட்டதும் உமையாளுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன தூண் அருகில் ஒரு விளக்கை ஏற்றுமாறும், ஆனால் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். அவ்வப்போது எரிந்து கொண்டு இருந்த விளக்கு மங்கத் துவங்க அதன் திரியை சிவபெருமான் பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அது உமையாளின் தொடையில் விழ அது ஒரு பெரிய சதைப் பிண்டமாயிற்று. ஆகவே உமை அந்த சதைப் பிண்டத்துக்கு உயிர் கொடுக்குமாறு அயனை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஒரு குழந்தை ஆக்கினார். அந்தக் குழந்தைக்கு சுடலை என்ற பெயர் வைத்தார்கள். அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து மயானத்தில் இருந்த உடல்களைத் உண்ணத் தொடங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பிவிடுமாறுக் கூறினார். ஆகவே உமையாள் அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள். பேச்சியுடன் ஞாலம் வந்தடைந்த சுடலை, மாடன் உருவில் மக்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
கதை - ௬ - ஐகோர்ட் மகாராசா
ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவர பக்தன். தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் கொடுத்தது என்று நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். சுடலையின் பெயரைக் கூறி யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார். தனக்கென்று ஒரு வீடும், சோறு போட சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார்.
(முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/06/blog-post_39.html )
கதை - ௭ - சப்பாணி மாடன்
நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த கோட்டியப்பன், ஒரு சலவைத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு மருத்துவச்சியாக திகழ்ந்தார். அப்பகுதியின் சிற்றரசன் பூதப்பாண்டியின் மனைவிக்கு காளியம்மாள் சிறப்பாகப் பிரசவம் பார்த்ததால், கோட்டியப்பன்-காளியம்மாள் தம்பதிக்கு ஊர் எல்லையில் குடிசை அமைத்து வசிக்கவும், துணி துவைக்க ஒரு குளத்தையும் சிற்றரசன் பட்டயம் போட்டுக் கொடுத்தார். அதற்கு நன்றிக் கடனாக தங்களுக்கு பிறந்த மகனுக்கு பூதப்பாண்டி என பெயரிட்டு வளர்த்தனர் தம்பதியர். (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/05/blog-post_71.html )
கதை - ௮ - அத்தி மாடன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தாய்விளை ஊரைச்சேர்ந்தவர் நீலமேகம். இவர் அந்த ஊரைச்சுற்றியுள்ள அங்கமங்கலம், அதிராமபுரம், ராஜபதி, மணத்தி, நல்லூர், மலவராயநத்தம் உள்ளிட்ட ஏழு ஊரில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களுக்கு துணி சலவை செய்யும் பணியை செய்து வந்தார்... (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2019/06/blog-post_468.html )
கதை - ௯ - ஒத்தப்பனை மாடன்
விஜயநாராயணத்தில் விவசாய நிலங்கள் அதிகம் வைத்திருந்த பேச்சிமுத்து ஒரு ஜோடி காளை மாடு வாங்க முடிவு செய்தார். அவரது உறவினர் விஜயநாராயணம் அருகேயுள்ள சங்கனாபுரம் சண்முகமும் ஒரு ஜோடி மாடு வாங்க நினைத்திருந்தார்... (முழுவதும் படிக்க: http://sirumalanchisudalaiandavar.blogspot.com/2018/05/blog-post_47.html )
கதை - ௧० - மாயாண்டிச் சுடலை மாடன்
ஆழ்வார்திருநகரிலுள்ள பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று அவ்வூர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்த மாலவன் பெருமாள் உத்தரவு கொடுக்கிறார்....(முழுவதும் படிக்க: https://m.dinakaran.com/article/news-detail/24502 )
கதை - ௧௧ - இருளப்ப மாடன்
கதை - ௧௨ - சங்கிலி மாடன்
கதை - ௧௩ - சீவலப்பேரி மாடன்
கதை - ௧௪ - மாயாண்டி சுடலை (கொட்டாரக்கரை)
கதை - ௧௫ - பன்றி மாடன்
கதை - ௧௬ - முப்புலி மாடன் அல்லது மாசானமுத்து மாடன்
கதை - ௧௭ - ஊசிக்காட்டு மாடன்
(வளரும்....)
Thursday, January 27, 2022
விந்தை கனவு - ௨
அது ஒரு மாலை வேளை. அனேகமாக நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கம் காலகட்டம். நிக்கரும் இறுக்கமான சட்டையும் காக்கி நிக்கரும் போட்டுக்கொண்டு தெருவில் நண்பர்களோடு சேர்ந்து விளையாட வாசலை நோக்கி மிக அவசரமாக ஓடுகிறேன். ஓடி ஓடி வாசல் படியை நெருங்கிவிட்டேன். பொதுவாக இப்படி ஒரு தருணம் வந்தால் வாசற்படியிலிருந்து எம்பி கீழே குதிப்பேன். வாசற்படிக்கும் தெரு மண்ணுக்குமான அந்த சிறு இடைவெளியில் காற்றில் வேகமாகப் பறப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி தான். அன்றும் அப்படியே. ஆனால் அன்று அந்த பறப்பதில் ஒரு சிறு வேறுபாடு. பறத்தல் மட்டும் வேகம் குறைச்சலாக இருந்தது. !! புரியவில்லையா? எனக்கும் அது புரியவில்லை. திரைப்படங்களில் தானே இப்படி காட்டுவார்கள். சண்டைக்காட்சிகளில் ஒரு சில குறிப்பிட்ட அசைவுகள் மட்டும் மெதுவான் நகர்வில் காட்டுவார்கள். அதுபோல. நிகழ் வாழ்க்கையிலும் இந்தமாதிரி நடக்குமா. ஓரிரு நொடிகளில் ஆயிரம் கேள்விகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன.
சுற்றுமுற்றும் பார்த்தேன். தெருவில் நான் எதிர்பார்த்த நண்பர்களின் விளையாட்டு ஏதும் நடக்கவில்லை. ஓரிரு என் அகவைப் பெண் பிள்ளைகள் மட்டும் பாவாடை சட்டை உடுத்திக்கொண்டு தட்டச்சு மாமா வீட்டு திண்ணையில் அமர்ந்து தட்டாங்கல் விளையாடிக்கொண்டிடுந்தார்கள். எழுந்து நின்றவன், எதுக்கும் ஒரு முறை துள்ளிப்பார்ப்போமே என நின்ற இடத்திலிருந்து எம்பி துள்ளுகிறேன். என்ன விந்தை!, துள்ளும் உயரத்திலிருந்து மெதுவாக நகர்வில் கீழிறங்கினேன். நிலவில் தான் இப்படி நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். உள்ளத்துக்குள் கேள்விகளோடு மகிழ்ச்சி படபடப்பு கலந்த அச்சம். மீண்டுமொருமுறை ஆர்வத்தில் துள்ளுகிறேன். இம்முறை கீழே பாதி தூரம் மெதுவான நகர்வில் இறங்க்கிவரும்போதே, வெறுங்காற்றில் கால்களை எட்டி உதைக்கிறேன். என்ன விந்தை அங்கிருந்து இன்னும் மேலே எழும்பியிருக்கிறேன். இருமுறை காற்றில் கால்களால் உதைக்கிறேன். கிட்டத்தட்ட என்வீட்டு உப்பரிகை உயரத்துக்கு வந்துவிட்டேன். கீழே குனிந்து பார்த்தபோது மிக உயரத்தில் அந்தரத்தில் இருக்கிறேன் என்பதறிந்து உள்ளதினுள் குறுகுறு என்கிறது. உப்படிகையில் இருக்கும் மாடிக் கதவு திறந்து இருக்கிறது. மாடியில் அப்பா எதோ தடிமனான நூலை படித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. "அப்பா புவியீர்ப்பு விசையில் எதோ பிரச்சனைப்பா" என கத்துகிறேன். அவர் காதுகளில் எட்டவில்லை என நினைக்கின். "அப்பா அப்பா" என கத்துகிறேன்.
Sunday, January 23, 2022
அ
அ
உலக மொழிகளின் எழுத்துக்களானவை இயற்கையாகவே மூவகையான குறியீடுகளால் உருவாக்கப்பட்டிருக்கும்..
௧} புள்ளி
௨} நேர்கோடு
௩} வளைகோடு
* நேர்கோடானது
. (அ) செங்குத்துக்கோடு
. (ஆ) குறுக்குக்கோடு
. (இ) சாய்கோடு
. என மூவகைப்படும்.
* வளைகோடானது
. (அ) ஆரம்
. (ஆ) வட்டம்/சுழி
. என இருவகைப்படும்.
எந்த ஒரு படத்தையும் எழுத்தையும் மேற்சொன்ன குறியீடுகளால் வரைந்துவிடலாம்.
தமிழின் முதல் எழுத்தான 'அ' என்பதானது "வட்டம்", "ஆரம்", "குறுக்குக்கோடு", "செங்குத்துக்கோடு" என நான்கு குறியீடுகளைக்கொண்டது. அந்த "செங்குத்துக்கோடு" தனை சற்று சரித்தெழுதி அதனை ஒரு "சாய்கோடாகவும்" ஆக்கலாம் (பலரும் அவ்வாறு எழுதுவர்). 'அ' மட்டும் எழுதிப்பழகிவிட்டால் போதும் உலகிலுள்ள 90% எழுத்துக்களையும் எளிதில் எழுதிப்பழகிவிடலாம்.
'இ'யும் எழுதிப்பழகிவிட்டால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், பர்மியம் போன்ற 5% உலக எழுத்துக்களையும் எளிதில் கற்றுவிடலாம்.
நுணுக்கமான புள்ளியுடன் கூடிய 'ஈ'யையும் எழுதிப்பழகிவிட்டால் மிச்சமிருக்கும் 5% உலக எழுத்துக்களும் நமக்கு எளிதிலும் எளிது..
இப்போது சொல்லுங்கள் எந்த மொழியின் எழுத்துக்கள் அறிவியல் நுணுக்கம் கொண்டது என்று...
- இலங்கை திரு செயராசு
கருத்து
ஒரு கருத்தின் உள் நின்று, அதில் இருக்கும் வழுக்களையும் அகருத்தின் வேரையும் கண்டறிவதென்பது, தலைகீழாக நின்றாலும் இயலாத ஒன்றாகும்.. அவைகளை செய்யவேண்டுமாயின், அக்கருத்தை விட்டு வெளியே வந்து அதற்கு சற்று அடிப்படை நிலையில் நின்று அதனை ஆராய முற்படவேண்டும்.. காட்டாக..
ஒரு உயிரியலாளரால் முதலுயிர் தொற்றத்தைப்பற்றியோ நோய்கள்பற்றியோ உயிரியல்வழியாக ஆழ்ந்த பதில் கூறிடமுடியாது.. அதற்கு அவர் வேதியியலுக்கு வந்தே ஆகவேண்டும்... அதுபோல, ஒரு வேதியியலாளருக்கு நீரியவளியும் உயிர்வளியும் இணைந்து! எவ்வாறு நீராகிறது என்று கூறிட, அவர் இயற்பியல் கூறுகளுக்கு வந்தே ஆகவேண்டும்... ஒரு எதிர்மின்னியைப்பறியான அறிதல்களுக்கு, எவரும் எதிர்பாராத, நிகழ்தகவு என்னும் கணக்கின் கூறுக்கு வந்தே ஆகவேண்டும்... கண்டிப்பாக நிகழ்தகவுக்கு அடிப்படை நிலை "நம்பிக்கை" அல்ல.. "இன்றுவரை" "கண்டுபிடிக்கப்படவில்லை".. அவ்வளவே..
நம்பிக்கைகளை திடமாக்கும் கல்விமுறை
"பகுத்தறிவால் ஆராயப்படாத நம்பிக்கைகளைக் கொண்ட மாந்தர்கள், முறைபடுத்தப்பட்ட கல்வியறிவு பெற்றால் அந்நம்பிக்கைகளினின்று விடுபட்டு தெளிவுற்று அறிவுத்தேடலை நொக்கிச் செல்வர்" என்று வெகுகாலம் கருதிவந்தனர்.. ஆனால், அதில் மீச்சிறிய விழுக்காடே ஈடேறுகிறது என்பது கீழ்க்காணும் தகவலிலிருந்து தெளிவாகிறது.. பெரும்பாலான முறைபடுத்தப்பட்ட கல்வியறிவூட்டு முறைகள், ஒருவரை நடுநிலையை நோக்கித் தள்ளவே முயற்சிக்கிறது.. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வியறிவினூடே சிலபல நம்பிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தக்கவைக்கிறது அ| விதைக்கவே செய்கிறது... ஆக, இவ்வகையாகவே பெரும்பாலாகக் கிடைக்கப்பெறும் கல்வியைக்கொண்டு, மாந்தர்கள், தத்தங்கள் நம்பிக்கைகளை அறிவியல்ரீதியாக புதுப்பிக்கவும் நியாயப்படுத்தவும், அந்தந்த காலத்தின் அறிவியல் முன்னேற்றத்தின் கனிகளைக்கொண்டு அந்நம்பிக்கைகளுக்கு புத்துயிரும் புதுநிறமும் பெருச்செலவிட்டு அளிக்க முற்படுகின்றனர் என்பது கண்கூடு....
வாய்ப்பு 20%
20% வாய்ப்பு
ஒரு செயல் நடந்திட கடவுளை வேண்டினால், அது பலித்திடுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு 20%. அதென்ன 20%?
வாய்ப்புகளின் ஐவகைகளையும் அவற்றிற்கான வாய்ப்புவிழுக்காட்டையும் கீழே பாருங்கள்:-
௧) வேண்டியபடி நடந்தது (எகா: எல்லா பாடங்களிலும் 100 மதிப்பெண்கள். ஆசிரியர் பாராட்டு. வீட்டில் பரிசு) - 20%
௨) ஓரளவு நடந்தது (எகா: போனமுறை பெற்ற மதிப்பெண்களைவிட கூடுதல். பக்கத்து இருக்கை மாணவர் சற்று உதட்டோரம் வளைத்தது) - 20%
௩) (மாற்றம்) எதுவும் நடக்கவில்லை (எகா: போனமுறை பெற்ற அதே மதிப்பெண்கள். வீட்டில் முறைப்பு) - 20%
௪) வேண்டியதற்கு சற்று எதிராக நடந்தது (எகா: போனமுறை பெற்ற மதிப்பெண்களை விட குறைவு. ஆசிரியர் முறைப்பு. வீட்டில் லேசாகத் திட்டு) - 20%
௫) வேண்டியதற்கு முற்றிலும் எதிராக நடந்தது (எகா: அத்தனை பாடங்களிலும் படு தோல்வி. ஆசிரியர் செம திட்டு. வீட்டில் தூக்கிப்போட்டு அடி) - 20%
எல்லாம் முழுக்கமுழுக்க நிகழ்தகவு (பிராபபிலிட்டி) தான்...
ஆக, நீக்கள் எதனை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளுங்கள் அல்லது வேண்டாமலேயேக்கூட இருங்கள்.. உங்களுக்கான "வாய்ப்பு" 20%..
'கெடும்' பற்றி வள்ளுவம்
"கெடும்" பற்றி வள்ளுவர்:
௧} "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்"செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டாலும் அழிவு உறுதி.
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவரின் குடும்பமானது, உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலைந்து திரியும்.
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவர், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவார்.
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்துவைத்திருப்பவருடைய செல்வம், எவருக்கும் பயனளிக்காமல் இல்லாமல் அழிந்துபோகும்.
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
பிறருடன் உள்ளங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவர் விரைவில் அழிவார்.
தன் செல்வத்தின் மதிப்பறிந்து அதற்கேற்ப வாழாதவரின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து, இல்லாமல் அழிந்துவிடும்.
தனது பொருளாதார நிலையை உணராது பிறர்க்குச் செய்யும் அளவில்லாத உதவிகளால் ஒருவரது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
எளியவராக காட்சியளிக்காமலும் ஆராய்ந்து நீதி முறை செய்யாதவராகவும் இருக்கும் மன்னர், தானே கெடுவார்.
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளர் தன் பதவியை விரைவில் இழப்பார்
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு, விரைவில் அழியும்.
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
முன்னமே அரண் செய்துகொள்ளாத மன்னர் போர் வந்த காலத்தில் அஞ்சியே அழிவார்.
பிறந்த குடிப்பெருமை ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
ஒருவர் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவரது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
முயற்சி செய்யாதவரை, உதவியாளராக வைத்துக்கொள்வது என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, பேர்க்களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவர், தன் உள்ளத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்
பாம்பென துணிச்சலுடன் நிற்கும் சிறுபடை முன், கடல் என வீரர்கள் எலியென அஞ்சி திரண்டிருந்தாலும், பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
உயர்ந்த கொள்கையில் உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
இல்லாதவரைக் கண்டபின் இருப்பதை மறைத்துக்கொள்ளும் நோய் கொண்டவர்களுக்கு, இல்லாமை எனும் நோய் தொற்றி அவர் செல்வம் மொத்தமாக அழியும்.
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.
தற்சமம், தற்பவம்
தற்சமம், தற்பவம் என்றால் என்ன?
கிரந்த எழுத்து உருவாகி அறுநூற்று ஆண்டுகள் கடந்து கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில், நன்னூல் எனும் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர், தற்சமம் (அதாவது, வேற்றுமொழிச் சொற்களை ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுவது) மற்றும் தற்பவம் (அதாவது, வேற்றுமொழிச் சொற்களை ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் அல்லது தமிழ் சொல்லாக்க இலக்கணப்படி எழுதுவது) எனப் பிரித்து இலக்கணம் வகுத்திருந்தார்.
சங்கதம், பாகதம், பாரசீகம், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தமிழிலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட, பிறமொழி ஒலிக்காக தமிழ் எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத, வேற்றுமொழிச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் பிறமொழிகளிலும் ஒன்றுக்கொன்று நிகரான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளாலான சொற்கள் இவை, என்பது இதன் கருத்து.
சங்கதம், பாகதம், பாரசீகம், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் மட்டும் உள்ள ஆனால் தமிழில் இல்லாத எழுத்தொலிகள் கொண்ட வேற்றுமொழிச் சொற்களில் உள்ள ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத வேற்றுமொழி ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இவை, என்பது கருத்து.
தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம், விமானம் போன்ற வடசொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம், சாமி, இலக்குவன், கிரந்தம், சன்னியாசி போன்ற வடசொற்களில் உள்ள சங்கத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.
[[http://thirutamil.blogspot.com/2008/05/4.html]]
குறிப்பு: தற்சமம், தற்பவம் ஆகிய இரு சொற்களுமே தற்பவச் சொற்களே. ஆம், இவ்விரு சொற்களும் சக்கதச் சொற்கள். அவை தத்சமம் மற்றும் தத்பவம் ஆகும்.
விந்தைக் கனவு - ௧
அது ஒரு தீபாவளி நாள். மதியம் மூன்று மணி இருக்கும். மீதம் இருக்கும் பிசிலிகளையும் புது காக்கி நிற நிக்கர் பாக்கட்டிலிலுக்கும் பத்துப் பதினைந்து ஓலை பட்டாசுகளையும் வாசல் படியில் உட்கார்ந்தவாறே வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறேன். வாசலின் முன்னே ஒரு நான்கைந்து தென்னை மரங்க்களோடு சிறு தோட்டம் இருக்கிறது. தோட்டத்தின் மறு முனையில் என் வீட்டுத்தோட்டத்தின் சுற்றுச் சுவரின் அழிக்கதவு வழியாக தெருவின் சாலை தெரிகிறது. தெருவில் பட்டாசு சத்தம் ஓய்ந்து காணப்படுகிறது. அனேகமாக மாலை ஐந்து மணிக்குத்தான் பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வேடிக்கத்துவங்குவார்கள் என்ற எண்ண ஓட்டம் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்போதே, "போருண்டா, வந்து சாப்பிடு, பாயாசமெல்லாம் இருங்கு" என்று தாழ்வாரத்திலிருந்து வரும் என் அம்மாவின் அழைப்பிற்கு என்னை அறியாமலே "அஞ்சுநிமிசம்மா!" என பதில் குரலெழுப்பி, அடுத்தடுத்த பிசிலியை கையில் எடுத்து ஊதுபத்தியில் பற்றவைத்து காற்றில் வீசி வெடித்துக்கொண்டிருக்கிறேன்.
தெரு முனையில் பட்டாசு சத்தம் மீண்டும் கேட்க தொடங்குகிறது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என யோசிக்கமுனைக்கும்போதே சரவெடி ஓசை மாதிரி தொடர்ச்சியாக ஆனால் சிறிது சிறிது இடைவெளியோடு கேட்க ஆரம்பிக்கிறது. யார் இவ்வளவு சின்ன சின்ன சரவெடி வைக்கிறார்கள், அம்பது சரம் கூட இருக்காது போலிருக்கே, என் உள்ளம் சரக்கணக்கு போடுகிறது. ஆர்வமிகுதியால் கையிலிருக்கும் பத்தியை வாசல் படி ஓரமாக வைத்துவிட்டு, தோட்டத்தின் வழியாக சுற்றுச்சுவர் வாசலை நோக்கி நடக்கிறேன்.
சுவர் அழிக்கதவை சர்ர் என்ற ஓசையுடன் திறந்து தெருக்கோடியை எட்டிப் பார்க்கிறேன். அங்கு யாரும் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்கவில்லை. தெரு முனையில் குறுக்கிடும் மற்றொரு சாலையில் சிலர் தாறுமாறாக லுங்கியை கையில்பிடித்தவாறு குறுக்குமறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வெடிச்சத்தமும் அந்த சாலையில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது.
சிறு குழப்பத்தோடு என்னதான் நடக்கிறது என்று பார்க்க தெருக்கோடியை நோக்கி நடக்கலாகிறேன். ஐந்தாறு அடிகள் எடுத்து வைத்ததும், என் தோள்பட்டைக்கும் காதுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் எதோ கல்போன்ற ஒன்று அதிவேகமாக விர்ர் என்று சென்றதாக உணர்கிறேன். டக்கென்று திரும்பிப்பாற்பதர்க்குள் சிறிது தொலைவிலிருக்கும் மின்கம்பத்தில் மோதி குப்பை புல்லில் அது விழுகிறது. அங்கு ஓடிச்சென்று குனிந்து பார்த்தால் அது ஒரு துப்பாக்கிக்குண்டு, ரவை.
அதிர்ச்சியில் எழுந்து தெருமுனையை பார்க்க நினைப்பதற்குள் மேலும் சில விர்ர்கள் தெருவை தாண்டி செல்வதாக உணர்கிறேன். ஓரளவு விபரீதத்தை உணர்த்து மீண்டும் என் வீட்டுச்ஸசுற்றுச்சுவர் அழிக்கதவை நோக்கி தெருமுனையை திரும்பித் திரும்பி பார்த்தவாறே வேகமாக ஓடுகிறேன். அதற்குள் தெருமுனை குறுக்கு சாலையில் ராணுவ உடை போன்ற ஒன்ற அணிந்த ஒருவன் கனமான துப்பாக்கி ஏந்தி சாலையின் மறு பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிடுப்பதை பார்க்கிறேன்.
வீட்டின் முன்னிருக்கும் தோட்டத்தை அடைந்துவிட்டேன். அங்கிருந்து மீண்டும் ஓட்டமெடுத்து பாதித்தொட்டம் வந்திருப்பேன், என் தலைக்குப்பின்னால் கடகட என ஒரு பழக்கப்பட்டதான ஒரு ஓசை கேட்க்கிறது. நின்று திரும்பிப்பார்க்கிறேன், ஒரு பெரிய எலிக்காப்டர் ஒன்று தெருவில் இறங்கிகொண்டிருக்கிறது. அதன் விசிறிகள் தென்னைமர ஓலையில் வேட்டுப்படுகிறதா எனக் லேகாகக் குனிந்து பார்த்தவாறே, ஒன்றும் புரியாமல் நிற்கிறேன்.
எலிக்காப்டர் தரை இறங்கியதுதான் தாமதம், உள்ளிருந்து ஒருசிலர் துப்பாக்கியும் கையுமாக சாதாரண பாண்டு சட்டை அணிந்து தெருவில் குதிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என் வீட்டு கேட்டுவாசலை நோக்கி ஓடி வருகிறான். அதைப்பார்த்த நான் மீண்டும் வீட்டை நோக்கி ஓட்டமேடுக்கிறேன். அதற்குள் அவன் அவன் என்னை விட வேகமாக ஓடி என் வீட்டுக்குள் போய்விட்டான். நான் வீட்டு வாசலை அடைவதற்குள், என் அப்பா அம்மா மற்றும் பலரோடு அவன் கரகரப்பான குரலில் இராணுவத்தோரணையில் எதோ மெல்லச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் என் அப்பாவோடு எதோ பேசியவாறே வெளியே வந்துகொண்டிருக்கிறான். என் அப்பாவும் அவன் சொல்வதை ஆமோதிக்கும் முகபாவத்தோடு வந்துகொண்டிருக்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எல்லாரும் எலிக்காப்டரினுள் எற்றப்பட்டுவிட்டோம். என் அப்பா மட்டும் இன்னும் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். எலிக்காப்டரின் விசிறி சுத்தும் ஓசையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்கவில்லை. எலிக்காப்டர் புறப்படத்தயாராகிறது. அதற்குள் அப்பா கதவருகே வந்து "நான் இங்கதான் இருக்கணும். இவங்களுக்கு மருத்துவ உதவி நறைய தேவைப்படும்போல. நீங்க கவலைப்படாம போங்க" என கூறி முடிப்பதற்குள் கதவுகள் டம்மெனச் சார்தப்பட, எலிக்காப்டர் மேலெழ ஆரம்பிக்கிறது. என் அம்மா என் கையை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். என் தாத்தாவும் பாட்டியும் பின்னிருக்கையின் ஓரத்தில் அமர்த்தப்பட்டிருப்பது ஓரக்கண்ணில் தெரிகிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை!
எலிக்காப்டர் அப்படியே செங்குத்தாக மேலெழுகிறது. பின்னர் சிறிது முன்னோக்கிச்சென்று பின்னர் வளைந்து ஒரு சாலையின் மேலாக பறக்கிறது. அந்த நெடுஞ்சாலையை எட்டிப்பார்க்கிறேன். வரிசையாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. கொஞ்சம் தூரம் சென்றதும் சாலையோரத்தில் ரயில் பாதையும் ஆரம்பிக்கிறது. அதில் நீளமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு ரயிலை பலர் மெனக்கெட்டு எரித்துக்கொண்டிருக்கிரார்கள்.
சிறிது நேரத்திலேயே எலிக்காப்டர் கீழிரங்கப்போவதாக வயிறுபிசைவதை உணர்கிறேன். அதே நெடுஞ்சாலையின் மீதே அது இறங்கிக்கொண்டிருக்கிறது போல உணர்கிறேன். அதனாலு கீழே நன்றாக உற்றுப்பார்க்கிறேன். சற்று பழைமையான பங்களா போன்ற கட்டிடம் ஒன்று தெரிகிறது. அதன் முகப்பு அரண்மனைகளின் முகப்பு போல இருக்கிறது. ஒரு சில வினாடிகளுக்குள் அந்த கட்டிடத்துக்கு முன்னிருக்கும் திடலிலேயே இறங்குகிறது. இறங்குபோது அக்கட்டிடத்தின் மேலிருக்கும் உடைபட்ட கூம்பு தான் முதலில் தெரிகிறது. அதை இன்னும் சிலர் கடப்பாரையால் உடத்துக்கொண்டிருக்கின்றனர். எங்களை அக்கட்டிடத்தை நோக்கி கூட்டிச்சென்றுகொண்டிருக்கிரார்கள். எனக்கு முன் செல்கிறவர்கள் சிறு வாயில் வழியாக உள்ளே போய்க்கொண்டிருக்கிறார்கள். நான் வாயிலின் அருகே சென்றதும் தான் அதை காண்கிறேன். அந்த வாயிலிலிருந்து படிகள் கீழ்நோக்கி செல்கிறன. வாயிலில் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை அணிந்த ஒரு முதியவர், உள்ளேவரும் எல்லாரையும் பார்த்து லேசாகச் சிரித்தவாறே "வரு வரு" என சொல்லிக்கிண்டிருக்கிறார்.
நான் அவரைப்பார்த்து "ஏன் இந்த அரண்மனையின் மேலே உள்ள கூம்பைச் சிலர் இடிக்கிறார்கள்?" எனக்கேட்கிறேன். அதற்க்கு அவர், "அரசாங்க இராணுவம் இடிந்த கட்டடங்களை மீண்டும் தாக்க மாட்டார்கள்". உடனே நான் "அரசாங்க இராணுவம் நம்மை ஏன் தாக்க வேண்டும்? ஏன் இந்த சண்டை நடக்கிறது?" என கேட்கிறேன். அவர் தலையிலிருந்து ததைப்பாகையை எடுத்தவாறே என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்முடியை அவர் விரல்களால் சற்று கலைத்துவிட்டு வேகமாகப் படியிறங்கி இரண்டுமூன்று மடிகள் முன்னே சென்றுவிட்டார்.
அந்த படிகள் அடித்தளத்தில் அமைந்திருக்கும் உள்விளையாட்டு மைதானம் போன்று இருந்த ஒரு பிரம்மாண்ட அரங்கத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது. அந்த அரங்கத்தில் மின் விளக்குகள் நாலா பக்கமும் போடப்பட்டுள்ளன. அதில் ஏன ஏற்கனவே ஒரு ஆயிரம் பேர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். சற்று தொலைவில் ஒருசிறு மேடையின் சுவரோரமாக வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒரு சாமியார் படத்தின்முன்பு ஒரு பேரிய கேரளக் குத்துவிளக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதை பார்த்து மலைத்துப்போயிருக்கும் நான், மீண்டும் அந்த முதியவரை அணுகிக் "நீங்களெல்லாம் யார்? நீங்கள் ஏன் எங்களை பாதுகாக்கவேண்டும்?" எனக் கேட்கிறேன்
அவர் ஒரு கண்டிப்பான குரலில் என்னைப்பார்த்து "நாங்கள் பாபா ராம்தேவின் ஆட்கள்"
திடுக்கிட்டு கண்விழிக்கிறேன்......................
தமிழ்ச்செல்வி
ஒரு புகழ்பெற்ற நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.
ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது.
அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ்ச்சொற்களை, புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன் புதுப் பட்டியைச்சேர்ந்த, தமிழ்ச்செல்வி என்பவர் அனுப்பி இருந்தார்.
அண்மையில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக்கு தலைமையேற்க சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அந்த பயணத்தின்போது அவரை எப்படியாவது பார்த்து உரையாடிட எண்ணி, தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவியாளர் மூலமாக அந்த வாசகரை பார்க்க ஏற்பாடு செய்தார்.
காலை 8 மணி. 60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார்.
நீதியரசர் அவர்கள், “தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைத்தது. உங்களுடைய மொழி அறிவை எத்தனையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் பார்க்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் ஏற்பாடு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடுதேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....
ஒரு ஆங்கில சொற்களுக்குக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் ஊரில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா?"
பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.
( அந்த 47 சொற்கள்...)
௧} ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்;
௨} அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்;
௩} அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்;
௪} கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.
மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்
“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனால் வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச்செல்வி. “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.
“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேரணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி.
தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், நூல்களையும் அன்பாய் ஏற்றுக்கொள்ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த பரிசு ஐயா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.
பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.
பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் அறிவுமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!
- பழ. அசோக்குமார் ( கூடல் நகர்)
விகடன் வாசகர் பக்க கட்டுரை
*****
கொசுறுச்செய்தி: அவர் பள்ளிக்குச் சென்று படித்தது 10 ஆவது வரை. அதன்பின் பெண் பிள்ளையைப் படிக்க வைத்தால் மாப்பிள்ளை கிடைக்கமாட்டார் என்று அவரது தந்தை கல்வியைத்தொடர அனுமதி தரவில்லை. ,உள்ளந்தளராத அம்மை, தையல் இயந்திரத்தின் வாயிலாக கிராமத்தினருக்குத் தைத்துத் தரும் ஆடைகளின் வழியான பணத்தைச் சேர்த்து மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்வான் கல்வித்திட்டத்துக்கு விண்ணப்பித்துச் சேர்ந்து, கிராமத்தில் இருந்து கொண்டே தமிழ்ப்புலவர் தகுதிக்கும் படித்தார்.
(அப்படி அனுமதிக்க மறுத்த அவரது தந்தையோ, அதே மதுரைத்தமிழ்ச்சங்கக் கல்வியில் 1940 களில் மாநிலத்தில் முதலாகத் தேறி பதக்கம் வென்றவர்).
தமிழ்ச்செல்வி அம்மையார் இயூட்யூப் விழியத்தில் இருக்கிறார்.
https://youtube.com/channel/UCrUa-ZFGCQpq8oi2Es2VxhA
ஓரெழுத்து ஒருசொல்
ஓரெழுத்து ஒருசொல்
அ - 8ன் குறியீடு, சிவன், திருமால், சுட்டு, எதிர்மறை, அசை, திப்பிலி.
ஆ - கறவை மாடு, ஆச்சாமரம், ஆன்மா, வரை, அற்பம், மறுப்பு, நினைவு, உடன்பாடு, நிந்தை, துன்பம், இரக்கம்.
இ - அண்மைச்சுட்டு, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.
ஈ -அம்பு, அழிவு, இந்திரவில், ஈ, குகை, கொசுகு ,தாமரையிதழ், திருமகள், நாமகள், தேன்வண்டு, தேனி, நரி, பாம்பு, பார்வதி, வண்டு
உ - 2க்கான குறியீடு போல, சிவபிரான், நான்முகன், உமையவள், சுட்டெழுத்து
ஊ - உணவு ,திங்கள், சிவன், ஊன், தசை, சதை
எ - 7க்கான குறியீடு போல
ஏ - இசை நிறைந்து நிற்கும் ஓர் இடச்சொல், எய்யுந்தொழில், குறிப்பு மொழி, சிவன், செலுத்துதல், மேல் நோக்குதல், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு
ஐ - அசைநிலை, அரசன், அழகு, கடவுள், கடுகு, குரு, கோழை, சிலேட்டுமம், சர்க்கரை, சவ்வீரம், கன்னி, சிவன், தண்ணீர் முட்டான் கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, நுண்மை, பருந்து, தந்தை, பெருநோய், யானைப்பாகன் அதட்டும் ஓசை, வியப்பு , ஐந்து எண்ணிக்கை, ஐயம், கணவன், பாசாணம்
ஒ - ஒழிவு
ஓ - மதகு நீர் தாங்கும் பலகை, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், வினா, எதிர்மறை, தெரிநிலை, பிரிநிலை, ஐயம், கொன்றை, நான்முகன், மகிழ்சிக்குறிப்பு
ஔ- நிலம், விழித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல், ஔவென்னேவல்
க - 1ஆன குறியீடு போல, அரசன், தீ, நான்முகன், ஒன்று என்னும் எண்ணின் குறி, ஆன்மா, உடல், கந்தர்வ சாதி, காமன், காறு, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், ஆனைமுகக் கடவுள், காந்தாரமாகிய கைக்கிளை இசையின் எழுத்து, அடிக்கும் மணி, எமன், திங்கள், உடல், நலம், சூனியச்சொல்,தலை, திரவியம், நனைதல், நீர், பறவை, ஒளி, பொருத்து,முகில், வல்லவன்.
கா - காத்தல், காவடி, காவெனேவல், சோலை, துலை, தோட்சுமை, தோட்டம், வர்த்தம், வலி, பாதுகாப்பு, பூஙாவனம், காவடித் தண்டு, துலாக்கோல், ஒரு நிறையளவு, பூ முதலியன இடும் பெட்டி, கலைமகள், நிறை, காப்பாற்று, விழிப்பாயிரு, காவல்செய்
கீ - கிளிக்குரல்
கு - குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை,நீக்கம், நிறம்
கூ - கூவென்னேவல், நிலம், பூமி
கோ - அரசன், அம்பு, வானம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண்,கிரணம், கோவென்னேவல், சந்திரன், சூரியன், திசை, கோமேதகயாகம், தேவருலகம், நீர், பசு, பூமி, பொறிமலை, தாய், மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம், சக்கரவர்த்தி, பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை, மலை, குசவன், சொல், இரசம், சாறு, இரங்கற் குறிப்பு, சுவர்க்கம், அரசியல், இரங்கல், தொடு, வெந்நீர், ஒழுங்காக்கு
கௌ - கிருத்தியம், கொள்ளு, தீங்கு, வாயாற் பற்று
ங - குறுணிக் குறி
ஙா - குழந்தையின் அழுகை ஒலியினைக் குறித்த சொல். இங்கா→இங்ஙா→ஙா
ஙே - ஆட்டின் ஒலிக்குறிப்பு
சா - சாவென்னேவல், இறத்தல், சோர்தல், சாதல்
சீ - அடக்கம், அலட்சியம், காந்தி, இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமீகரம், சம்பத்து, கலைமகள், சீயென்னேவல், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, சிறி,விடம், விந்து, புண்ணின் சீழ், சளி, சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி
சூ - விலங்குகளையோட்டும் குறிப்பு, வியப்புச்சொல், வாணவகை, சுளுந்து, நாயை ஓட்டும் ஒலிக்குறிப்பு
சே - அழிஞ்சில் மரம், இடபராசி,உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, சேரான் மரம், விலங்கேற்றின் பொது, வெறுப்புக்குறி, காளை, செங்கோட்டை, சேவென்னேவல்
சை - இகழ்சிக்குறிப்பு
சோ - அரண், உமை, வியப்புச்சொல்
ஞா - கட்டு , பொருந்து
த - குபேரன், நான்முகன்
தா- அழிவு, குற்றம், கேடு, கொடியவன், தாண்டுதல், தாவென்னேவல், பாய்தல், பகை, நான்முகன், வலி, வருத்தம், வியாழம், வலிமை, குறை, பரப்பு, நாசம், தண்டுகை, கொடு, பெறு, பகை
தீ - அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, தீயென்னேவல், நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம்
து -அசைத்தல், அனுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், துவ்வென்னேவல், நடத்தல், நிறைதல், பிரிவு, பிறவினை, வருத்தல், வளர்தல்
தூ - சீ-எனால் , சுத்தம், தசை, பகை, தூவென்னேவல், பற்றுக்கோடு, புள்ளிரகு, வெண்மை, தூய்மை, இகழ்சிக்குறிப்பு, வலிமை
தே - கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு
தை - தாளக்குறிப்பின் ஒன்று, ஒரு திங்கள், தைக்கத்தக்கவை, தையென்னேவல், பூசநாள், மகரராசி,அலங்காரம், மரக்கன்று
தோ - நாயை கூப்பிடும் ஒலிக்குறிப்பு
ந - இன்மைப் பொருள், எதிர்மறைப் பொருள்
நா - நான்கு எண்ணிக்கை, அயலார், அயல், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நாக்கு, நடு நாக்கு, பொலிவு, துலைநா, பூட்டின் தாள், நாதசுரத்தின் ஊதுவாய்
நி - இன்மை, அன்மை, அதிகம், சமீபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை,
நீ - நின்னை
நு - ஐயம், சங்கை, வினா, தியானம், தோணி,நிந்தை, நேரம், புகழ்
நூ - எள், யானை, ஆபரணம், நூவென்னேவல்
நே - அன்பு, அருள், நேயம்
நை - இகழ்சிக்குறிப்பு, நையென்னேவல்
நொ - துன்பம், நொவ்வென்னேவல், நோய், வருத்தம்,நொண்டி
நௌ - மரக்கலம், கோணி
ப - 1/20க்கான குறியீடு போல, காற்று, சாபம், பெருங்காற்று
பா -அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுப்பா, பஞ்சுநூல்,பரப்பு, பரவுதல்,பாட்டு, பாவென்னேவல், பிரபை, தூய்மை, காப்பு, தேர்தட்டு, கைமரம், பூனைக்காலி, பாம்பு
பி - அழகு
பீ - அச்சம்,மலம், தொண்டீ
பூ - அழகு, இடம், இந்துப்பு, விளைவுப்போகம் இருக்குதல், இலை, ஓமாக்கினி, ஒரு கண்ணோய், ஒரு நரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பூவென்னேவல், பொலிவு, மகளிர் பூப்பு, மலர், நிறம், புகர், பூத் தொழில், சேவலின் தலைச்சூடு, மென்மை
பே - நுரை,மேகம்,அச்சம், இல்லை
பை - அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பாம்பின் படம், பையென்னேவல், பொக்கணம், மந்தக்குணம், மெத்தனவு, இளமை, உடல்வலி, கொள்கலம், உடல் உள்ளுறுப்பு
போ - போவென்னேவல், அசைச்சொல்
ம - இயமன், ஒருமந்திரம், காலம், சந்திரன், சிவன் நஞ்சு, நேரம்
மா - அசைச்சொல்,அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, ஓரசைச்சொல், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,( குதிரை, பன்றி, யானை- இவற்றின் ஆண்), குதிரைப்பொது, சரசுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நச்சுக்கொடி, நிறம்,பரி, பிரபை, பெரிய, பெருமை, மகத்துவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, விலங்கின் பொது, வெறுப்பு
மீ - ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்
மூ - மூன்று எண்ணிக்கை, மூவென்னேவல், மூப்பு
மே - அன்பு, மேம்பாடு.
மை - அஞ்சனம், இருள், எழுதுமை, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடராசி, மையென்னேவல், வெள்ளாடு, தீவினை,மசி, மந்திரமை, வண்டிமை, களங்கம், பசுமை, பாவம், அழுக்கு, மலடு, இளமை,
மோ - மொத்தல், மோதென்னேவல்
ய - 10க்கான குறியீடு போல
யா - அசைச்சொல், ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், ஒருவகைமரம், அகலம்
ரு - 5க்கான குறியீடு போல
வ - 1/4க்கான குறியீடு போல
வா - வாவென்னேவல்
வி - அறிவு, அதிகம், இன்மை, நிச்சயம், பிரிவு, முகாந்திரம், வித்தியாசம், வெறுப்பு, ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசிம்பு, விசை
வீ - கருத்தரித்தல், கொல்லுதல், நீகம், பறவை, பூ, போதல், விரும்புதல், வீயென்னேவல், மகரந்தம்
வே - வேயென்னேவல், வேவு
வை - கூர்மை, புல், வைக்கோல், வையகம், வையென்னேவல்
வௌ - ஒலிக்குறிப்பு,கௌவுதல், கொள்ளை அடித்தல், வௌவென்னேவல்
ள -தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்.
பண்பு
உங்களது பண்பு என்பது, நீங்கள் தெரிந்தொ தெரியாமலோ, உடுத்திக்கொண்டிருக்கும் உடையாகும். இந்த உடையின் வடிவத்துக்கான காரணம் புறச்சூழலே ஆகும். இடம் பொருள் ஏவல் ஆகியவற்றுக்கு ஏற்றார்போல நீங்கள் பண்பு என்னும் உடையை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள்... சில உடைகளை வெகுநாட்கள் உடுத்தியிருந்ததால் அதனைக் கழற்றி வேறு உடையை மாற்றிட சற்று கடினமாக இருக்கும் எனும்போது, இடம்பொருளேவலுக்கு ஏற்ப தற்காலிகமாக வெறொரு உடையை அதன்மேல் பொர்த்திக்கொள்வீர்கள்..
எதுவானாலும் அனைத்தும் நரம்பியல் வேதிப்பொருள்களில் தோய்க்கப்பட்ட மாய உடைகள்... பண்பு...
உண்மைகள்
உண்மைகள்
உண்மை என்பது பலருக்கு பல வகை:
௧} உண்மையான உண்மையான.. உண்மை.. ( கணக்கு மட்டுமே...)
௨} தலைவரோ தலைவர்/அறிஞர்/சமயசொற்பொழிவாளர்/பட்டறிவு_நிறைய_உள்ளவர்/எழுத்தாளர் எனக் கருதப்படுபவரோ அகவையில் முதியவரோ இறந்த முது உறவோ, ஒன்றை சொல்லியிருப்பதால், அது உண்மை. (காட்டு: சுபாசு சந்திரபோசு சொன்னார், இயேசு சொன்னார், விவேகானந்தர் சொன்னார், காந்தி சொன்னார், கலாம் சொன்னார், என் தாத்தா சொன்னார்........)
௩} நூலில்/அச்சில் இருப்பதால் அது உண்மை (காட்டு: பாடநூலில் இந்தி தேசிய மொழி என்றும் அவுரங்கசீபு நல்லவர் எனவும் போட்டிருந்தது, இரசினியின் பனாமா வங்கிக்கணக்கில் 57 இலட்சம் கோடி டாலர் கணக்கு இருக்கிறது என்ற செய்தி தினக்கனி நாளிதழில் வந்திருந்தது, அன்னபறவையானது நீரை பிரித்து பாலைமட்டும் உண்ணும் என நாலடியாரில் 'எழுதப்பட்டுள்ளது', நிலவு இரண்டாகப்பிளந்து மீண்டும் ஒட்டப்பட்டது என குரானில் உள்ளது, கும்பகராணன் 6 திங்கள்கள் உறங்கினான் என்கிறது இராமாயணம் ...)
௪} பண்பாடு, (சமூக/சமய/அரசியல்) சட்டங்கள், கொள்கைகள், உள்ளுணர்வுகள், பட்டறிவு ஆகியவற்றின் விளைவான, "என்" நம்பிக்கைகளுக்கும் ஊகங்களுக்கும் ஒத்து வருபவை மட்டுமே உண்மை.
௫} உங்களைச் சுற்றியுள்ள, இயற்கை அனைத்திலும் உங்கள் புலன்களால், நேரடியாக நீங்கள் எவைகளை உணர முடிகிறதோ, அவை உண்மைகள். அவற்றோடு நேரடியாக தொடர்புபடுத்த இயலும் எந்த கருத்தும் செயலும் உண்மை. (காட்டு: 'அழகிய' மலர், மழை பெய்ததால் நான் உளம் மலர்ந்தேன்...)
௬} சமூகத்தில் ஒரு குழுவோ அல்லது மொத்த சமூகமோ அல்லது அதில் பெரும்பான்மையிரரோ, சான்றுகள் அடிப்படையிலோ (சமூக/சமய/அரசியல்) சட்டங்களின் அடிப்படையிலோ சூழ்நிலையின் அடிப்படையிலோ அப்போதைய உளப்போக்கின் அடிப்படையிலோ, உளமொத்த கருத்தோடு எடுக்கும் முடிவுகள் உண்மையானவை (காட்டு: தேர்தல் முடிவு, பஞ்சாயத்து முடிவு...)
௭} 'ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது என்பது எல்லா நேரங்களில்/இடங்களில் உண்மையாக இருக்கவேண்டும் என்பதல்ல. பல நேரங்களில்/இடங்களில் தனித்தனி உண்மைகளாகவோ தனித்தவைக்கொரு உண்மை எற்றும் கூட்டாக வேறு உண்மை என்றும் இருக்கும். "எல்லாவற்றுக்கும்" பொதுவான உண்மை என்ற ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. (காட்டு: உயிர்வளி+நீரியம் = நீர்....)
௮} காலத்தின்/சூழ்நிலையின்/பட்டறிவின்/அரசியலின் முதிர்ச்சியால் வெளிப்படுபவைகள் அனைத்தும் உண்மைகளே (காட்டு: 18ம் நூற்றாண்டுக்குப் பிறகு அறிவியல்/பொருளாதார அறிஞர்களின் கூற்றுக்கள்..)
௯} இன்று உண்மைகள் என நீங்கள் கருதுபவை எல்லாம் ஏற்கனவே பறபல பரிணாமத்துக்கு உட்பட்டவை. அவை இனியும் பரிணாமப்படும் (காட்டு: எழுத்துக்களின் வடிவமும் அவற்றுக்கான ஒலிகளும், உயிரினங்களின் உருவங்களும் பண்புகளும்... )
௰} (முழுமையான) உண்மை என்ற ஒன்று உண்மையில் கிடையாது. அத்தனையும் மாந்தர்களின் உள்ளதில் தோன்றும் மாயைகளே... மற்றெல்லாவற்றையும்போலவும் மாறிக்கொண்டே இருக்கும். தற்காலிகமானது... (காட்டு: காதல்,....)
௰௧} அறிவியல்ரீதியாக குறிப்பிட்ட விதிவரம்புக்கும் பட்டறிவுக்கும் கிடைக்கப்பெறும் தரவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பலரால் பலநேரங்களில் பல இடங்களில் பலதடவை மெய்பிக்கப்பட்ட உண்மைகள். ஆனால், இன்னும் அறிந்திராத விதிவரம்புகளைப் பொறுத்தவரை இது இன்னும் மெய்ப்பிக்கப்படாததாக இருக்கலாம். நாளை அவையும் ஆராயப்பட்டு பொய்யாகியே போகலாம். ஆதலால்,இந்தவகை உண்மையானது தொடர் தேடலுக்கும் தொடர் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆக, இவ்வுண்மை மாற்றத்துக்கு உட்பட்டது என்றாலும் ஒரு குறுகிய காலத்துக்கு இது உண்மையாகவே பொதுவாகக் கருதப்படும். (காட்டு: பெருவெடிப்புக் கொள்கை, நோய்க்கான மருந்துகள், ஈர்ப்புவிசை, பொருளாதார விதிகள், சட்டங்கள்...)
இன்னும் எத்தனை வகைகளான உண்மைகளோ...
உண்மைகள்.............
Friday, January 21, 2022
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்வது எப்படி? (அகேபஒம)
அவிபஒம(SQRRR)
௧ - அலசல்} ஒரு பாடத்திலுள்ள தலைப்புகள், துணைத் தலைப்புகள், படங்கள், பட்டியல்கள், சிறப்புக்குறிப்புகள், பகுதி-முடிவுரைகள் ஆகியவற்றை அலசி (Survey) தனியாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள். இதனைச் செய்ய மிகுந்த நேரம் தேவையில்லை. ஆனால் இது அந்த பாடத்தைப் பற்றியான ஒரு அடிப்படை உணர்வைக் கொடுத்துவிடும்..
௨ - வினவுதல்} நீங்கள் குறித்துவைத்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றைப்பற்றியும் குறைந்தது ஐந்து வினாக்களை (Question) எழுதிவைத்துக்கொள்ளுங்கள்..
௩ - படித்தல்} இனி பாடத்தை படியுங்கள் (Study). ஏற்கனவே நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு பதில்களைத் தருகிறதா என தேடிக்கொண்டவாறே பாருங்கள். படித்து முடித்தபின் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி வினாக்களுக்கும் நீங்கள் தற்போது படித்ததானது பதில்களைத் தந்திருக்கிறதா எனவும் பாருங்கள். இதில், பதில் கிட்டாத வினாக்களைக் குறித்துவைத்துக்கொண்டு அவற்றை பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ மற்ற கற்றறிந்தோர்களிடமோ கேட்டுத் தெளிவுபெறுங்கள்.
௪ - ஒப்பித்தல்} இக்கேள்விகளை எல்லாம், உங்கள் நலம்விரும்பிகளைக் கொண்டு, ஒவ்வொன்றாகக் கேட்கச்சொல்லி, அதற்கான பதில்களை உங்கள் நினைவுகளிலிருந்து ஒப்பியுங்கள் (Recite).
௫ - மறுசீராய்தல்} எல்லாம் முடிந்தபின் அப்பாடத்தை மீண்டும் ஒருமுறை வேகமாகப் படித்து, பாடத்தில் உள்ளவற்றுக்கும் தற்போது உங்கள் நினைவாற்றலில் உள்ளவற்றுக்கும் வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என மறுசீராய்வு (Review/Revision) செய்துகொள்ளுங்கள்.. இதனை ஓரிரு திங்கள்களுக்கு ஒருமுறையும் செய்திடுங்கள்..
Wednesday, January 19, 2022
நீரிழிவு++
+ - °
+ - °
பல ஐரோப்பிய மொழிகளில் பயன்பாட்டிலிருக்கும் டிக்ரீ எனும் சொல் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்த விக்கி பக்கம் வாயிலாகவே காணமுடிகிறது. அச்சொல்லின் வேர் ஆய்வையும் பார்த்துவிடுவோம்:
https://www.etymonline.com/word/degree
இதில் 'படிநிலை' என்ற பொருளில் பழங்காலங்களில் இச்சொல் பயன்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுளது. மேலும், 'டிக்ரீ (°)' என்பதானது, வெப்பத்தின்/சாய்வின்/கல்வியின்/மடங்கு-மதிப்பின்/தரத்தின்/துல்லியத்தின்/தீவிரத்தின்... ஏற்றயிறக்க கூறு/படிநிலை/பாகம் தனைக் குறிக்கிறது.
ஆக, 'கூறு' / 'படிநிலை' ஆகிய சொற்களையோ அதன் மருவலையோ அல்லது 'பாகம்' / 'பாகை' ஆகியவற்றையோ டிக்ரீக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். என்றாலும் 'பாகம்' என்பது சங்கத்திலிருந்து இறக்குமதியானதோ, என்றொரு ஐயம் எனக்குண்டு. என் ஐயப்பாட்டிற்காக என்னைத் திட்டுவொர் திட்டலாம், சங்க இலக்கியச் சான்றுகளோடு மெய்ப்பிப்போர்களுக்கு முன்னமே நன்றி.
அடுத்தது '+' & '-' குறிகளுக்கு வருவோம். '±25' என்றவாறு நாம் குறிப்பிடும் மதிப்பானது, அடிப்படையில் '0 ± 25' என்பதையே குறிக்கிறது. அதாவது, சுழியத்தைவிட 25 அலகுகள் 'நிறை'வான அல்லது 'குறை'வான மதிப்பு எனபது பொருள். ஆக '+' , '-' க்கு நிறை , குறை எனப்பயன்படுத்தலாம் என சிலர் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ளனர்.
இனி, அவைகளை சொல்லிக்கேட்க பாங்கோடு இருக்கிறதா எனப் பார்ப்போம்:-
-123.45 ---- குறை[மை!] நுற்றிஇருபத்துமூன்று புள்ளி நற்பத்தைந்து
[+]37.89°C ---- [நிறை[மை!]] முப்பத்தேழு புள்ளி எண்பத்தொன்பது கூறு/படி[நிலை]/பாகை செ[ல்சியசு]
-98.65°F ---- குறை[மை!] தொண்ணுற்றெட்டு புள்ளி அறுபத்தைந்து கூறு/படி[நிலை]/பாகை பா[ரன்கீட்]
[ ] - இவ்வடைப்புக்குறிக்குள் நான் இங்கு குறிப்பிட்டிருப்பவை விருப்பத்தெரிவுகளே.
நாடு <-> சமயம்
நாடு <-> சமயம்
நாட்டுக்கும் (தேசியம்) சமயத்துக்கும் (பக்தி) பெரிய வேறுபாடுகள் இல்லை..
௧} இரண்டிலும் வரையறுக்கப்பட்ட-மரியாதைகளை-கொடுக்கப்படவேண்டிய/வணங்கப்படவேண்டிய கொடிகள், சின்னங்கள், இதர அடையாளங்கள், பாடல்கள், மந்திரங்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.
௨} இரண்டிலும் வரலாற்றுக்/கற்பனைக் கதைகள், சட்ட நூல்கள், கதாநாயகர்கள் இருப்பர். இக்கதாநாயகர்களும் நூல்களும் பெரும்பாலும் வணக்கத்துக்கு உரியவைகளாகவே இருக்கும். இக்கதாநாயகர்கள், நாட்டையோ/சமயத்தையோ தோற்றிவித்தவர்களாகவோ அவைகளையும் அது சார்ந்த மக்களையும் எதிரிகளிடமிருந்து/நோய்களிடமிருந்து காப்பாற்றியவர்களாகவோ கற்பனைக் கதைகளில்வரும் பாத்திரங்களாகவோ இருப்பர்.
௩} மக்கள் எவ்வாறெல்லாம் வாழலாம், வாழவேண்டும், வாழக்கூடாது என்பவைகள்பற்றியான சட்டங்களையும் அச்சட்டங்களை மக்கள் பின்பற்றினால் என்னென்ன 'நன்மைகள்' என்பதையும் அவைகளை பின்பற்றாமலோ அதற்கு எதிராக வாழ்ந்தால் என்னென்ன 'தீமைகள்/தண்டனைகள்' என்பவைகளைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
௪} சிறப்புக்-கட்டிடங்கள் பெரும் பொருள் செலவில் எழுப்பப்பட்டிருக்கும். பல கட்டிடங்கள் ௸ கதாநாயகர்களுக்காக எழுப்பப்பட்டவை. அக்கட்டிடங்களுக்கு உள்ளே, குறித்த பொழுதுக்கு ஒருமுறை, பொதுமக்களோ பொதுமக்களில் சிறப்புத் தகுதிபெற்றவர்களோ கூடுவர். இக்கட்டிடங்கள் புனிதம் மிகுந்தவைகளாகக் கருதப்படும். இக்கூட்டங்களில் ௸ பாடல்கள், மந்திரங்கள் இசைக்கப்படும். அனேகமாக இக்கட்டிடங்கள் இருக்கும் ஊர்கள் சிறப்பு-ஊர்களாக மதிக்கப்படும்.
௫} ஆண்டுக்கு ஒரு முறையோ பல முறையோ பொதுமக்கள் அனைவரும் ௸ ஏதேனும் ஒரு அடையாளத்தின் விழாவைக் கொண்டாடுவர்.
௬} இரண்டும் தங்களை பாதுகாக்கும் எனவும் அதனால் அதன் இருப்பு கட்டாயம் தேவை எனவும் மக்கள் 'நம்புவர்'.
௭} இதில் [சில/முற்றிலும்] மாற்றுக்கருத்துகொண்ட பல குழுக்கள் இருப்பது உறுதி. இந்த இரு தரப்பினருக்கு இடையே உள்ளூற ஒரு அச்சமோ/புச்சமோ/வெறுப்போ/பகைமையோ இருப்பது உறுதி.
௮} இவை இரண்டின் இருப்போ பண்புகளோ நிலையானவை அல்வ. இவை, பொழுதுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பரிணாமத்துக்கும் ஏற்ற மாற்றங்களான இணைப்புக்கும் சேர்ப்புக்கும் இழப்புக்கும் அழிவுக்கும் உட்படுபவை.
௯} இவை இரண்டின் எந்த ஒரு பண்பும் அறிவியல் பின்புலம் கொண்டது அல்ல. இவைகள் குறிப்பிடும் சில வரலாற்று நிகழ்வுகள் உண்மை என்றாலும் அந்நிகழ்வுகளுக்கான காரணங்களை/வேர்களை ஆராய்ந்தால் அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்தவைகளாகவும் அறிவியலுக்குத் தொடர்பில்லாதவைகளாகவும் இருக்கும்.
மாந்தர் இனமானது, குழு/மந்தை எண்ணவோட்டம் கொண்டது. குழுக்களில், மேற்சொன்ன பண்புகள் இல்லாமல் இருக்கமுடியாது. இதை 'உணர்வது' இன்றியமையாததாகும். அதைவிடுத்து, இவைகள்மீது வைக்கப்படும் மிகையாக பற்றானது, மாந்தர் இனத்தை அழிவுக்கு இட்டுச்செல்பவை என்பது பட்டறிவு, கண்கூடு...
ஈரைப் பேனாக்கி
ஈரைப் பேனாக்கி
"ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி..." என்னும் பழமொழிக்கு ஏதேனும் உட்பொருள் உள்ளதா?
அண்மையில் திரு இலங்கை செயராசு ஐயா மிக அருமையாக நடத்திவரும் உயர்வள்ளுவம் எனும் திருக்குறள் விளக்கப்பாடக் காணொளிகள் ( https://youtube.com/playlist?list=PLVt1jaSbMS3uEFOnVWJ0J2UU19mDJoBYj ) சிலவற்றைக் கண்டுகொண்டிருந்தேன்.. அதில் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகரின் விரிவான விளக்கவுரைகளை எடுத்துரைத்து அவற்றை திரு செயராசு ஐயா நயம்பட விளக்குவதைக் கண்டு வியந்துகொண்டிருந்தேன்.. அப்போது, 'ஈரைப் பேனாக்கி..' என்ற பழமொழி எங்கிருந்தோ எதற்காகவோ என் நினைவுப்போக்கினுள் பளிச்சிட்டுச் சென்றது. உடனே, என் எண்ண ஓட்டம் அந்தப் பழமொழியை நோக்கிக் குவியத் தொடக்கியது.. 'பெருமாளை' வழிபடும் பரிமேலழகர், 'ஈர்' அடிக்குறள்களை, விரிவாக விளக்கியதுக்கும் இந்த பழமொழிக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமோ என எண்ணத் தோன்றிற்று. இருக்குமோ!?
அது தொடர்பாக இணையத்தில் சிறிது துழாவினேன். இப்பழமொழியின் பல பரிமாணங்களைக் காணப்பெற்றேன். அவற்றின் ஒன்றிப்பே இது:
"ஈரைப்/பொடுகைப் பேனாக்கி, பேனைப் [பெருச்சாளியாக்கி, பெருசாளியை [யானையாக்கி, யானையையை]] பெருமாளாக்கி நடுத்தெருவில் கொண்டுவிடுவது போல"பலர் "ஈறை" என எழுதியிருந்தார்கள். அந்தத்தேடலின் இடையே, திரு விசாலாட்சி என்பவர் விளக்கிவரும் சுவையான பழமொழிகளின் தொகுப்புக் காணொளிகளைக் காண நேர்ந்தது. அவை:-
தமிழா!, தமிழைக் காத்திடு!
தமிழா, தமிழைக் காத்திடு
திரு மகேசன் இராசநாதன் எனும் நியூசிலாந்தில் வாழும் தமிழார்வலர் எனக்கு அண்மையில் கீழ்காணும் மடலை அனுப்பியிருந்தார். அவர் எழுதிய "தமிழா, தமிழைக் காத்திடு" எனும் நூலை மணிமேகலைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ( அதற்கான பீடியெப்: https://noolaham.net/project/667/66654/66654.pdf ). தமிநாட்டுப் பயன்பாட்டுத் தமிழில் இத்தனை ஆங்கிலம் கலந்துள்ளதே என மிகக் கவலைப்படுகிறார்.
அவர் எழுதியதாவது:-
தமிழ் நாட்டில் தமிழின் நிலை
(மருத்துவக் கலாநிதி மகேசன் இராசநாதன்)
எமது உயிரினும் அரிய தமிழ் மொழி உலகின் ஒப்பற்ற செம்மொழி. அது காலத்தாலும், நெருப்பாலும்,வெள்ளத்தாலும்,அந்நியராலும் அழியாதது. இன்றைய உலகில் தமிழர் பல நாடுகளில் வாழ்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுவதில்லை. அது பெரும் வேதனையைத் தருகிறது. ஆனால், ஈழம், கனடா ஆகிய ஞாலத்தின் பல இடங்களில் நல்ல தமிழ் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தமிழின் நிலையை ஆராய்வோம். ஏழு கோடி தமிழர் வாழும் நாட்டில் தமிழ் ஒரு போதும் அழியாது. ஆனால் எப்படிப்பட்ட தமிழ் நிலைக்கும் என்பது தான் கேள்வி. இன்று தமிழகத்தில் இரு வகையான தமிழ் பேசப்பட்டு வருகிறது:-
௧} அலுவல் பயன்பாடுகளில் (செய்திகள் போன்றவை) நல்ல தமிழ் பேசப்பட்டு வருகிறது. இவற்றிலும் சில ஆங்கிலச் சொற்கள் கலந்து பயன்படுத்தப்படுகின்றன.
௨} கொச்சைத் தமிழ்: இது ஆங்கிலம் போன்ற பிறமொழிகள் கலந்த தமிழ். இதை இன்று தமிங்கிலம் என்று அழைக்கின்றனர். தேவையற்ற வகையில் பல ஆங்கிலச் சொற்களைக் கலந்து, சில தமிழ்ச் சொற்களைச் சேர்த்துப் பலர் கதைக்கிறார்கள். இது பெரும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதற்கு எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
௩} இனிப்புக்கு சுவீட் என்றும் நீருக்கு வாட்டர் என்றும் பாலுக்கு மில்க்கு என்றும் அரிசிக்கு ரைசு என்றும் இன்று தமிழ்நாட்டு நகரப்பகுதிகளில் பலர் சொல்கிறார்கள். இது தேவை தானா? இனிப்பு, பால், நீர், அரிசி போன்ற நல்ல தமிழ் சொற்கள் இருக்கும் போது இப்படி ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் நியாயமில்லை. இந்த நிலை நீடிக்குமானால் காலப் போக்கில் இனிப்பு, பால், நீர், அரிசி போன்ற சொற்கள் மறைந்துவிடும்.
௪} நன்றி என்னும் அருமையான சொல் இருக்க தாங்சு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அப்பாவை டாடி என்றும் அம்மாவை மம்மி என்றும் அழைக்கிறார்கள்.
அருமைப் பெற்றோரை இப்படி அழைக்கலாமா?
௫} பல தமிழ் இதழ்களும் வெளியீடுகளும் தமிங்கில நடையைப் பின்பற்றுகின்றன. இரு திங்கள்களுக்கு முன் ஒரு தமிழ் இதழில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் முப்பது ஆங்கிலச் சொற்களைக் காணக் கூடியதாயிருந்தது.
௬} அது மட்டுமல்ல, ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுகிறார்கள். காட்டாக "ப்ரீ டிரிங்ஸ்", "ப்ரீ டின்னர்", "லிவிங் டுகெதர்", "ஹவ் டு யு டு?". திடீரென இவை தோன்றும்போது அவற்றை படிக்கவே என்னவோபோல் இருக்கிறது.
௭} தொலைக் காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தமிழானது "இது தமிழ் தானா?" எனக் கேட்க வைக்கின்றது.
"சுபர் சிங்கர்" என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட நிகழ்ச்சியில் பாடகர்கள் வந்து அருமையான தமிழில் பாடுவார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து நடுவர்கள் சொல்வது பெரும் துன்பத்தை அளிக்கிறது. "வண்டர் புல் பெர்வாமன்ஸ். நல்லாப் பண்ணினீங்க. கிரேட் சிங்கிங்"
௮} பின்வரும் வசனஙகளானவை ஆங்கிலம் எவ்வளவு தூரம் தமிழை ஊடுருவிவிட்டது என்பதைக் காட்டுகின்றன. "நண்பர் ஒருவர் கார் ஆக்சிடெண்டில் சிக்கிக் கோமா நிலையில் சீரியசாகி ஹாஸ்பிட்டல் பெட்டில் கிடக்கிறார்", "காஷியர் காஷ் பெறும் இடம்".
மேற் கூறிய எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் கேட்டை எடுத்துக் காட்டுகின்றன.
நான் தமிழ் வெறியன் அல்ல, ஒரு தமிழார்வலன். எவரையும் புண்படுத்துவதற்காக நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. தமிழ் மேல் கொண்ட பற்றாலும் தமிழர் தமிழைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கவலையினாலும் எழுதுகிறேன். இதைப் பற்றித் தமிழகத்தில் உள்ள பலருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பியுள்ளேன். தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள், தமிழ் இதழ் ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் எனப் பலருக்குக் கடிதங்கள் அனுப்பியும் ஒரு சிலரே பதில் அனுப்பியுள்ளார்கள். இதைப்பற்றி ஒருவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆங்கிலம் கலந்த தமிழ் நடையை பலர் இயற்கையானதாகவே கருதுகிறார்கள் போலிருக்கிறது. ஒரு பேராசிரியர் பினவருமாறு பதில் எழுதியிருந்தார்:-
"உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது, நான் இதைப் பற்றிப் பலரிடம் கதைத்திருக்கிறேன். அவர்கள் எம்மைப் போன்ற சிலர் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறார்கள்".
புகழ் பெற்ற ஒரு கவிஞரின் மகனுக்கு எழுதியிருந்தேன். அவர் பல மின் அஞ்சல்கள் அனுப்பிய பின், "You don’t know how hard it is!!" என ஆங்கிலத்தில் பதில் அனுப்பியிருந்தார்.
இப்படித் தமிழகத்தில் ஆங்கிலம் களிநடனம் புரிகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. *தமிழ் சோறு போடாது* என்ற காரணத்தாலா, இப்படிப் புறக்கணிக்கப்படுகிறது? தமிழானது பல அறிவுகளைக் கொண்ட பல அறிவுகளை ஏற்கவல்ல திறன்கொண்ட மொழி, சிறந்த செம்மொழி என்பதை நாம் மறந்து விட்டோமா? தமிங்கில நடையானது தரப்படுத்தப்பட்டு விரைவில் அலுவல் தமிழையும் ஆட்கொண்டுவிடும் என்ற ஐயமும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன. தமிழ் கொச்சை மொழியாக மாறுவதைத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களா? செம்மொழி, செம்மொழி எனக் கூச்சல் போட்ட மக்களா, இப்படிச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெரும் உளத்துயரத்தை ஏற்படுத்துகிறது. பண்டைய காலங்களில் தமிழுக்குச் சங்கத ஊடுருவலால் ஆபத்து ஏற்பட்டது. பல சங்கதச் சொற்களைக் கலந்து தமிழைப் பேசும் நடையைப் புகுத்தினார்கள். இதை மணிப்பவழம் என அழைத்தார்கள். மறைக்காடு எனத் அழகாகத் தமிழகத்தில் அழைக்கப்பட்ட ஒரு ஊரின் பெயரை வேதாரண்யம் என மாற்றினார்கள். (மறை-வேதம்; காடு- ஆரண்யம்). மணிப்பிரவாளத்திறகு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் நல்ல வேளையாக மறைமலை அடிகள் போன்ற அறிஞர்கள் தோன்றித் தூய தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைக் காத்தார்கள். அதைப் போன்று இன்றும் ஆங்கிலத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நீக்கத் தூய தமிழ் இயக்கம் இயக்கம் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது எனது பணிவான கருத்து.
இன்னும் இரு செய்திகளையும் இங்கு கூற விரும்புகிறேன்:-
௧} இரு சீனர்கள் சந்தித்தால் சீன மொழியில் சரளமாகக் பேசிக்கொள்கிறார்கள். இப்படிப் பிற மொழிகள் பேசுபவர்கள் சந்தித்தால் தங்கள் மொழியிலேயே பேசிக்கொள்கிறார்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இரு படித்த தமிழர்கள் சந்தித்துக் கொண்டால், "Hello, how do you do??" என ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இரு தமிழர்கள் சந்தித்தால் தமது தாய்மொழியிலேயே பேசிட வேண்டும் என எல்லோரையும் வேண்டிக் கொள்கிறேன்.
௨} எமது பெயர்களை எழுதும் போது நல்ல தமிழ் எழுத்துகள் இருக்க ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். எ.கா: எம், என், எஸ். "முரளி மகாசிவம்" என்ற ஒரு பெயரை எடுத்துக் கொள்வோம். இதை எழுதும் போது எம்.மகாசிவம் என எழுதுகிறோம். இது தேவை தானா? மு.மகாசிவம் என எழுதுவதே சரியானது. அது மட்டுமல்ல, ஆங்கிலத்தில் முரளியென்றாலும், மாதவன் என்றாலும் மூசா என்றாலும் மகேசன் மோகனன் என்றாலும், எல்லாவற்றிற்கும் ‘எம்’ தான். ஆனால் எமது அருமைத் தமிழில் ஒவ்வொரு பெயருக்கும் சரியான எழுத்து இருக்கிறது. சிலர் ஒரு படி மேலே போய் ஆங்கில எழுத்தைத் தமது பெயருக்கு முன் எழுதுகிறார்கள். எ.கா: M.மகாசிவம். இதெல்லாம் தேவைதானா? 247 எழுத்துகள் கொண்ட தமிழ், 26 எழுத்துகளே கொண்ட ஆங்கிலத்தில் இருந்து எழுத்துகளைக் கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?
ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கடன் சொற்கள் இருப்பது வழக்கம். ஆனால், நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்க தேவையற்ற முறையில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தித் அருந்தமிழை அழித்துக் கொச்சை மொழியாக மாற்றுவது தான் பெருந்தவறு.
இதைப்பொறுத்தவரையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துத் தமிழைக் காக்குமாறு பணிவன்புடன் யாவரையும் வேண்டிக் கொள்கிறேன்:-
௧} தமிழர்கள் இருவர் பார்த்துக்கொள்ளும்போது போது தமிழில் உரையாட உறுதி பூணுங்கள்.
௨} நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள். காட்டாக: தாங்சுக்குப் பதிலாக நன்றி.
௩} நீங்கள் தமிழ் நாட்டுக்குப் போகும்போது தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் போன்றோரைச் பார்த்து தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுங்கள்.
௪} இந்தக் கட்டுரையைத் தமிழகத்தில் பல தமிழன்பர்களுக்கு அனுப்புங்கள்.
௫} தமிழார்வலர்கள், திரைப்பாடற் புலவர்கள், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் போன்ற தமிழன்பர்களைச் சந்தித்து இந்த விடயத்தில் ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்.
தமிழ் அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்பதை மறவாதீர்கள்.
தமிழா! தமிழா!, உன் உறக்கத்திலிருந்து விழித்திடு!
அமிழ்தினும் இனிய நமது மொழியைப் போற்றிடு!
ஆங்கிலமதில் கொண்ட மயக்கத்தை விட்டிடு!
பாங்குடைய நமது மொழியைக் காத்திடு!
மருத்துவக் கலாநிதி மகேசன் இராசநாதன்
அன்பு ஆச்சி
ஆசிலாசேம்
ஆசிலாசேம் ஒரு மிக மென்மையான கசாக் மொழிப்பாடல்...
இணைப்பாடல்கள்: https://www.youtube.com/results?search_query=%22Asil+ajem%22
இப்பாடலை, எனக்குத் தெரிந்த தமிழில் மொழிபெயர்த்து அந்த மெட்டுக்கு ஓரளவு ஒத்துவரும் கவிதை போல ஆக்கியுள்ளேன்
அன்பு ஆச்சி, அன்பு ஆச்சி...
உனை என்று பார்ப்பேன்..
ஒரு தாயாக ஆகியும்..
குழந்தைப்போல...
ஏங்கினேனே..
காட்டுக்குள்ளே உன்னை..
தொலைத்தேனோ என்..
உளம் தேடுதே..
பார்த்திடுவேனோ..
என் உளம் வாடுதே...
புல்வெளியில்..
குதித்தாடுங்குட்டிக்...
குதிரையானேன்..
உன்னிடமிருந்தேன்..
உன்னோடு சிரித்த..
என்னாலுன்முன்னே..
அழுவதற்கு கூச்சம்..
இனி உன்னை என்று..
பார்த்திடுவேனோ..
என் உளம் வாடுதே...
உன்னோடு சிரித்த..
என்னாலுன்முன்னே..
அழுவதற்கு கூச்சம்..
இனி உன்னை எங்கு..
பார்த்திடுவேனோ..
என் உளம் வாடுதே...
அன்பென்றால் என்னவென்று..
உன்னைப்பார்த்துத்தானே.. தெரிந்துகொண்டேன்..
தன்மானம் என்னவென்று..
உன்னைப்பார்த்துத்தானே.. அறிந்துகொண்டேன்..
உன்.. உயிரோ..
என் இதையத்துள்ளே..
பொதிந்துள்ளது..
பின்னிடும் சால்வையில்..
பிணைந்துள்ளது..
உன் உயிரோ..
என் இதையத்துள்ளே..
பொதிந்துள்ளது..
பின்னிடும் சால்வையில்..
பிணைந்துள்ளது..
பின்னிடும் சால்வையில்..
பிணைந்துள்ளது..
வட்டாரவழக்கைப் பாதுகாத்திடுங்கள்
வட்டாரவழக்கு
வட்டாரவழக்கு என்பது அந்தந்த மண்ணின் மரபையும் பண்பாட்டையும் சுமந்துவருவதாகும். இன்றய பேச்சுத்தமிழ் என்பது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் போன்ற ஊடகங்களிள் தொடர்ந்து பேசப்பட்டுவரும் ஆங்கிலம் மற்றும் உருது கலப்புமிக்க சென்னை வழக்கை நோக்கியே நகர்த்தப்படுகிறது.
தமிழ்மொழியானது காலங்காலந்தொட்டே மக்களால், வட்டாரவழக்குப் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் ஆகிய, இருவழக்குகளிலேயே தமிழர்களால் தொடர்ந்து வெற்றிகரமாகக் கையாளப்பட்டுவருகிறது. செந்தமிழ் என்பது எக்காலத்திலும் பரவலாகப் பொதுமக்களால் பேசுவதற்கு பயன்பட்டதில்லை. காலங்காலமாக இலக்கியங்கள் வாயிலாக செந்தமிழும் பேசுவதுவாயிலாக வட்டாரவழக்குத்தமிழும் உயிர்ப்போடே இருந்ததுவருகிறது. மேலும் பலவகை வட்டாரவழக்கானது செந்தமிழுக்கு தெடர்ந்து வளம் சேர்த்தவண்ணம் இருந்துள்ளது.
ஆனால் சென்னையை நடுவமாக அமைத்துக்கொண்ட ஊடக ஞாலத்தில், வடதமிழக வட்டார தமிழ் மட்டுமே பேசப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து கேட்கும் வளருந்தலைமுறையினர் தத்தங்கள் மரபுகளை சுமந்துவரும் வட்டார வழக்குத்தமிழை வெகு வேகமாக மறந்து, ஊடகத்தில் பேசப்பட்டுவரும் வழக்கை பேசத்தொடங்கியுள்ளனர். இது தமிழரிடையே இருக்கும் பன்மைத்தன்மை நிறைந்த மொழிவளத்திற்கும் தமிழுக்குமே நல்லதல்ல. செந்தமிழைப் போலவே வட்டாரவழக்கையும் வெகுவாக பாதுகாத்து உயிர்ப்போடு வைத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். வட்டாரவழக்கை பேணிகாப்பதால் தமிழானது வேறுவேறாகப் பிரிந்துவிடும் என்பது போன்ற கவலை தேவையற்றது.
கல்வியின் தரம்
கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில் நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...

-
அன்புத் தமிழர்களே!! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!! நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே ...
-
நம் உறவுகள்
-
தோடர் மொழி நீலமலைத்தொடரில் ஊட்டி அருகே வாழ்ந்துவரும் தோடர்களின் மொழியின் மேல் பற்பல மொழியியலாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப்போல எனக்கும் ஒர்...